sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கிருஷ்ணஜாலம் - 2 (21)

/

கிருஷ்ணஜாலம் - 2 (21)

கிருஷ்ணஜாலம் - 2 (21)

கிருஷ்ணஜாலம் - 2 (21)


ADDED : மார் 09, 2018 11:49 AM

Google News

ADDED : மார் 09, 2018 11:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போர்க்களம்!

கிழக்கு நோக்கி பாண்டவர் படை... எதிரில் மேற்கு நோக்கிய நிலையில் கவுரவர் படை! கவுரவ படையின் ரதங்களில் ஐந்து பனை மரங்களுடன் கூடிய நட்சத்திரங்கள் கொண்ட கொடிகள் பறந்தபடி இருக்க, அனுமக் கொடியோடு பாண்டவர் படை வஜ்ரவியூகம் வகுத்து நின்றது. திருஷ்டத்துய்மன் கவச உடையோடு முன் நிற்க, அடுத்த ரதத்தில் பீமனும் நிற்க, தர்மன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் முதலானோரும் அவரவர் ரதங்களில் அமர்ந்திருக்க, அர்ஜூன ரதத்தில் அமர்ந்திருந்த கிருஷ்ணன், சங்கு முழங்க காத்திருந்தான்.

எதிரில் கவச ஆடையோடு பிதாமகர் பீஷ்மர். அருகில் துரோணாச்சாரியார். மறுபுறம் யானை மேல் துரியோதனன். அவர்களை எல்லாம் கண்ட அர்ஜூனனுக்குள் வீரம் எழுவதற்கு பதிலாக பாச உணர்வு எழுந்தது தான் விந்தை!

குறிப்பாக பீஷ்மர் இளம் வயதில் அர்ஜூனன் மீது கொண்ட பேரன்பு, மனதிற்குள் காட்சியாக விரிந்தது. சிறுவயதில் கீழே விழுந்து அடிபட்ட போது, பீஷ்மர் தன் பட்டு வஸ்திரத்தை கிழித்து கட்டி மருத்துவக் குடில் வரை துாக்கி வந்து பச்சிலை கட்டு போட்டது நினைவுக்கு வந்தது. அர்ஜூனன் எல்லோரிடமும் அன்பை உணர்ந்திருந்தாலும், பீஷ்மரிடம் தான் பேரன்பை உணர்ந்தான். அது மட்டுமா? அவரே ராஜசூய யாகம் நடைபெற்ற போது கிருஷ்ணனின் பிரதாபத்தை பாண்டவர்களுக்கு எடுத்துச் சொன்னவர்.

''கிருஷ்ணனை சாமான்யனாக கருதுபவர்கள் பாவிகள். அவன் பரமாத்மா என உணர்ந்தவர்கள் புண்ணிய ஆத்மாக்கள்'' என பாண்டவர்களிடம் சொன்னவர் பீஷ்மர் தான்.அப்படிப்பட்டவர் முதுமையை பொருட்படுத்தாமல் துரியோதனனுக்காக போர் புரிய வந்திருக்கிறார் என்றால் அவர் எத்தனை மகத்தானவர்?

இவருக்கு எதிராகவா வில்லை எடுப்பது? என கலங்கிய நிலையில், அடுத்து துரோணரை அர்ஜூனன் பார்த்தான்.

கவச உடையில் கம்பீரமாக காட்சி தந்தார் துரோணர். 'என் மாணவர்களிலேயே தலைசிறந்த ஒருவன் எக்காலத்திலும் இருக்க முடியும் என்றால் அது அர்ஜூனன் தான்' என்று பல தருணங்களில் கூறியவர். வித்தைகளை அக்கறையாக அர்ஜூனனுக்கு போதித்தவர்.

குருவை இப்படியா எதிர்த்து நிற்பது?

அர்ஜூனனின் குழப்பம் அதிகரித்தது. அர்ஜூனன் பார்வை அடுத்தடுத்து நின்ற துரியோதனாதியர்கள் மேல் சென்றது. அவ்வளவு பேருமே சகோதரர்கள். ஒரு கொடியில் பூத்த மலர்கள். ஆனாலும் வேர் என்பது அனைவருக்கும் ஒன்றே...!

இவர்கள் ரத்த சம்பந்தம் இல்லாத மூன்றாம் மனிதர்கள் அல்ல. அவர்கள் கூட அர்ஜூனனை விரோதியாக நினைக்கலாம்; ஆனால் உறவினன் இல்லை என கூறி விட முடியாது. அப்படிப்பட்ட உறவினர்களோடு யுத்தமா?

அர்ஜூனன் வில்லை கீழே போட்டு, அம்பறாத்துாளியையும் கழற்ற முயன்றான்.

கிருஷ்ணனுக்கு அவனது நிலைமை புரிந்தது!

''என்ன அர்ஜூனா... எதிரிகள் படை உன் மனதை கலக்கி விட்டதா?'' என்று பேச்சை ஆரம்பித்தான் கிருஷ்ணன்.

''ஆம் கண்ணா...'' என்ற அவன் குரலில் உயிரேயில்லை.

''அவர்களை வெல்ல முடியாது என கலங்குகிறாயா... இல்லை, வேறு காரணங்களா?''

''கண்ணா... வெற்றி, தோல்வி குறித்தெல்லாம் நான் சிந்திக்கவில்லை...''

''போர்க்களத்தில் வெற்றி, தோல்வி பற்றி சிந்திக்காமல் வேறு எதை சிந்தித்தாய்?''

''என்னை நன்கறிந்த உனக்கு கூட என் கலக்கம் பற்றி சொன்னால் தான் புரியுமா?''

''இது மனம் விட்டு உரையாட ஏற்ற இடமல்ல அர்ஜூனா... போர்க்களம்! இன்னும் சில நாழிகைகளில் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் யுத்த பேரிகை முழங்க போகிறது. இப்போது நீ செயலற்று நிற்பது சரியல்ல...''

''நான் என்ன செய்வேன்... எதிரில் நிற்பவர்களை எதிரிகளாக கருத முடியவில்லையே...?''

''ஆனால் அவர்கள் உன்னை எதிரியாக தான் பார்க்கிறார்கள். அது போதும் நீ அவர்களை எதிர்த்திட...''

''இல்லை...பீஷ்மர் என்னை ஒருக்காலும் எதிரியாக எண்ணியதில்லை. அப்படித்தான் குருவான துரோணரும்! அஸ்வத்தாமனும் கூட எனக்கு நண்பனே... இவர்களை கொன்று பெறும் வெற்றியும் ஒரு வெற்றியா? நினைக்கவே மனம் குமுறுகிறது...''

''தெளிவற்றவனே.... எதை எப்போது நினைக்க வேண்டும் என்று உனக்கு தெரியாமல் போனதே! இந்திரலோகம் சென்று அறுபத்தி நான்கு வித்தைகளை கற்றும் பயனுமில்லை என்பது போல் இருக்கிறது உன் பேச்சும் செயலும்....''

''கண்ணா.... நீயா இப்படி சொல்கிறாய்?''

''நான் சொல்லாமல் யார் சொல்வர்? பாடுகளால் தான் பக்குவம் வருகிறது. அந்த பக்குவமே ஞானத்துக்கு மனிதனை நகர்த்துகிறது. முற்றான அந்த ஞானம் மனிதனை இருவிதமாக செயல்பட வைக்கும். ஒன்று அசைவற்ற தவத்தில் ஆழ்த்தும்.

இன்னொன்றோ நிகரில்லாத அசைவை அதாவது உன்னதமான வாழ்வை வாழ சொல்லும்.

நீ தனியொருவனாக இருந்தால் தவத்தில் மூழ்கி ராஜரிஷியாக ஆகலாம். ஆனால் கடமைகள் கொண்ட வீரன் நீ... உன் முன்னால் ஆற்ற வேண்டிய கடமைகள் அணிவகுத்து நிற்கின்றன. கூந்தலை முடியாத திரவுபதி, யோகி போல வாழும் குந்திமாதா என கவுரவர்களால் பாதிக்கப்பட்ட பலரும் உன்னை நம்பியே உள்ளனர்.

சுருக்கமாக சொன்னால் தர்மம் தன் சக்தியை, உன்னை கொண்டே நிரூபிக்க காத்திருக்கிறது.

இப்போது நீ தர்மத்தின் துாதுவன்! அது புரியாமல் பாச பந்த மயக்கத்தில் ஆழ்வது என்பது உனக்கு புகழையோ, மதிப்பையோ தராது. மாறாக, அதர்மத்துக்கு தான் அது பெரும் சாதகமாக முடியும்.''

''புரிகிறது கண்ணா... ஆனாலும் இந்த தர்மம் இப்படியா சோதிக்க வேண்டும். எல்லாம் எதற்காக? பாழாய் போன மண்ணுக்காக தானே... வேண்டாம் கண்ணா... வேண்டாம்! கோடானு கோடி உயிர்கள் வாழும் இந்த மண்ணில் நானும் என் குடும்பத்தவரும் வாழ வழியா இல்லை...

எங்காவது போய் எப்படியாவது வாழ்ந்து விட்டுப் போகிறோம். இந்த யுத்தம், இதனால் மடியும் உயிர்கள் என்று உன்னதமானவர்களை பலிகொடுத்து வெற்றியை அடைய நான் விரும்பவில்லை..''

அர்ஜூனன் மனம் போர்க்களத்தை விட்டு விலகுவதில் குறியாக இருந்தது. கிருஷ்ணன் இது தர்மயுத்தம் என கூறியும் துணிவு வரவில்லை.

பாசபந்த மாயை அவனை ஆக்கிரமித்திருந்தது. அதை எப்படி விலக்குவது என்று கிருஷ்ணனுக்கா தெரியாது?

''பைத்தியக்காரா... நீ காணும் இந்த உலகம், இதிலுள்ள கோடானு கோடி உயிர்கள் என எல்லாம் மாயை! இதை உணர துப்பில்லாமல் போய்விட்டதே...?''

என கிருஷ்ணன் ஆரம்பித்தான். இதுவே கீதையின் துவக்கம்!

- தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us