sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கிருஷ்ணஜாலம் - 2 (23)

/

கிருஷ்ணஜாலம் - 2 (23)

கிருஷ்ணஜாலம் - 2 (23)

கிருஷ்ணஜாலம் - 2 (23)


ADDED : மார் 23, 2018 09:16 AM

Google News

ADDED : மார் 23, 2018 09:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீதாபதேசம் முடிந்தது. யுத்தமும் தொடங்கியது!

முதல் நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள் என ஒவ்வொரு நாளும் யுத்தத்தில் பலப்பல காட்சிகள்!

இந்த யுத்தத்தின் போக்கையும், முடிவையும் அறிந்து வைத்திருப்பவன் கிருஷ்ணன் ஒருவனே! இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு நாடகத்தை எழுதி, இயக்கி தானும் ஒரு பாத்திரமாக நடிப்பது போல், யுத்தத்தில் கிருஷ்ணனின் பங்கு இருந்தது.

பாண்டவர் தரப்பில் அர்ஜூனனும், கவுரவர் தரப்பில் பீஷ்மரும் மட்டுமே நிகரற்றவர்கள். மற்றவர்களுக்கெல்லாம் ஏதோ ஒரு வகையில் அவரவருக்கேற்ப முடிவுகள் காத்திருந்தன.

இந்த யுத்தத்தில் ஒரு நாள் கவுரவர் கை ஓங்கினால், மறுநாளே பாண்டவர் கை ஓங்கியது. இப்படி மாறி மாறித் தொடர்ந்த யுத்தத்தின் 9ம் நாள் வரை பெரிய திருப்பங்களோ, இழப்போ இல்லை.

'கிரவுஞ்ச வியூகம், கருட வியூகம், பிறைச்சந்திர வியூகம், மகர வியூகம், சுயோன வியூகம், வஜ்ர வியூகம், கூர்ம வியூகம், காடக வியூகம்,' என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வியூகங்கள்! இதில் இந்த 9 நாட்களில் வீர சொர்க்கம் அடைந்தோர் இரு தரப்பிலும் பொதுவான வீரர்களே!

பாண்டவர் தரப்பில் அர்ஜூனனுக்கும் நாக கன்னியான உலுாபிக்கும் பிறந்த அரவான் எட்டாம் நாள் போரில் இறந்தான். அதே போல் பாண்டவர் தரப்பில் விராட புத்திரர்களான உத்தரன், சுவேதன் முதல்நாள் போரிலேயே இறந்து விட்டனர்.

கவுரவர்கள் தரப்பில் துரியோதனனின் உடன் பிறந்த நுாறு சகோதரர்களும் தினம்தோறும் சிலர் என்ற கணக்கில் உயிரை விட்டனர். சல்லியனுக்கு பெரும் காயம் ஏற்பட்டது. சல்லியனின் படைச்சாரதியும் கொல்லப்பட்டார்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் கவுரவருக்கு சேதம் அதிகமாக இருந்தது. இது துரியோதனனை வருத்தத்திற்கும் கோபத்திற்கும் ஆளாக்கியது. பீஷ்மர் அவனுக்கு துரோகம் இழைப்பது போல தோன்றியது. அதற்கேற்ப பீஷ்மரும் பாண்டவ சேனையை மட்டுமே சேதப்படுத்தினார். திரவுபதிக்கு அளித்த வாக்கிற்காக பாண்டவர்கள் மேல் அவர் தீவிரமாக போர் நடத்த விரும்பவில்லை. எனவே துரியோதனன் பீஷ்மரிடம் சென்று குமுற தொடங்கினான்.

''பிதாமகரே! நீங்கள் வெற்றி பெற வேண்டும் என யுத்தம் நிகழ்த்துவது போல் தெரியவில்லை. பாண்டவர்கள் மேல் பரிவோடு, பெயருக்கு எனக்காக போரிடுவது போல் போரிடுகிறீர்கள். இதற்கு நீங்கள் போரிடாமல் இருப்பதே மேல்...'' என்று நேரடியாக தெரிவித்தான்.

''துரியோதனா! நான் உனக்கு துரோகம் நினைக்கவில்லை. அதே சமயம் நீ கூறுவதில் கொஞ்சம் உண்மையும் உள்ளது. நான் பாண்டவர்கள் ஐவரை என் எதிரியாக கருதவில்லை. கருதவும் முடியாது, மற்றபடி அந்த ஐவர் நீங்கலாக, மற்றவரை அழிக்கவே முற்படுகிறேன். அதே சமயம் அர்ஜூனன் தன் வீரத்தால் அழிவை தொடர்ந்து தடுத்தும், குறைத்தும் வருகிறான். அவனுக்கு உற்ற துணையாக கிருஷ்ணனும் அவர்களோடு இருக்கிறார். எனவே நீ நினைப்பது போல் அவர்களை அழிப்பது சுலபமல்ல.

இப்போது கூட கெட்டு விடவில்லை. இந்த யுத்தம் நடந்த வரை போதும். பாண்டவர்கள் கேட்கும் நாடுகளை தந்து சமரசம் செய்து கொள். நீயும் மீதமுள்ளோரும் நீடூழி வாழலாம்'' என்றார் பீஷ்மர்.

பீஷ்மரின் அறிவுரை துரியோதனனை மேலும் கோபப்படுத்தியது. துளியும் சமாதானப் படுத்தவில்லை.

''பெரியவரே! இப்படி பேச எப்படி உங்களால் முடிகிறது? போரில் வெல்ல முடியாதவர் பேசும் பேச்சா இது? இது தானா நீங்கள் எனக்கு செய்யும் உதவி? உங்களுக்கு இது நாள் வரை நான் ஆதரவளித்த நன்றி, துளியும் இல்லாமல் போய் விட்டதே! இதற்கு நீங்கள் சாவது எவ்வளவோ மேல்..'' என்று பேசக் கூடாத அந்தப் பேச்சு பீஷ்மரை நிலைகுலையச் செய்தது.

எவ்வளவு தான் ஆறு நிறைய தண்ணீர் ஓடினாலும் நாயானது நக்கித்தான் குடிக்கும்... துரியோதனனும் அப்படித்தான்! எவ்வளவுதான் நல்லது சொன்னாலும் அதை எச்சில்படுத்த அவனால் மட்டுமே முடியும்.

பீஷ்மர் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார் .

''துரியோதனா! நீ திட்டுவதோ, மட்டுப்படுத்துவதோ என்னை பெரிதாக பாதிக்காது. ஆனால் நான் ஒரு துரோகி என்பது போல எப்போது பேசத் தொடங்கி விட்டாயோ, அப்போதே இறந்தவனாகி விட்டேன். இப்போது சொல்கிறேன் கேட்டுக்கொள் இந்த களத்தில் நான் என் உயிரை விட்டாவது, நீ சொன்னதை பொய் என ஆக்குவேன். அண்டிப் பிழைப்பவர்க்கெல்லாம் பாடமாக விளங்குவேன்'' என்றார்.

துரியோதனனுக்கும், பீஷ்மருக்கும் இடையே நடந்த இந்த வாதப்பிரதிவாதம் பாண்டவரிடமும் எதிரொலித்தது. குறிப்பாக பீமனிடம்...

''பிதாமகர் தன்னை மாய்த்துக் கொண்டாவது துரியோதனன் கருத்தை பொய்யாக்குவேன் என்று கூறியுள்ளார். அதே சமயம் அவர் நம் மீது பாணம் போடாத நிலையில் நம்மாலும் அவர் மேல் பாணம் போட இயலாது. இப்படி ஒரு நிலையில் அவர் வீறு கொண்டு எழுந்திருப்பது நிச்சயம் நம் படையை பெரிதும் பலவீனப்படுத்தி சிதற அடித்து விடும். இந்த யுத்தகளத்தில் இப்படி ஒரு வினோத நிலையை நான் எதிர்பார்க்கவில்லை...'' என்றான்.

''ஆம்.. பிதாமகர் ஒரு முடிவுக்கு வந்து விட்டார். துரியோதனன் அவரை எதுவும் பேச இயலாதபடி நம் படையை மொத்தமாக அழிப்பார் என்றே நானும் கருதுகிறேன்'' என்றான் நகுலன்.

''போதும் இந்த யுத்தம். இத்தோடு நிறுத்திகொள்வோம். பிதாமகரை துரியோதனன் தவறாக பேச காரணமும் நாமே! நம் மேல் உள்ள பாசம் பற்று பிதாமகரை தடுமாற செய்கிறது. அவ்வளவு பெரியவர் தன் உயிரைக் கொடுத்தாவது துரியோதனனிடம் தன்னை நிரூபிக்கக் காரணமும் நாமே...! அந்த பெரியவரை பலி கொடுத்து, நாம் வெற்றி பெற்றால் அது ஒரு வெற்றியா என்ன?'' என்று தர்மன் புலம்பினான். அர்ஜூனனும் சகாதேவனும் தங்கள் பங்குக்கு வாய் திறக்க முயன்ற போது கிருஷ்ணன் சிரித்தான். அப்படியே அவர்கள் அமைதியாகி விட்டனர்.

''கிருஷ்ணா... இந்த வேளையிலும் புன்னகையா? எப்படி முடிகிறது உன்னால்...?'' என்று கோபித்தான் பீமன்.

''கர்ம வீரர்களுக்கு புன்னகைக்க காலம் தேவையில்லை பீமா; காரணம் இருந்தால் போதும்...'' என்றான் கிருஷ்ணன்.

''புன்னகைக்கும் அளவுக்கு இங்கு எதுவும் நடக்கவில்லையே?''

''லட்சக்கணக்கான வீரர்களை பலி கொடுத்திருக்கும் நிலையில் வெற்றி, தோல்வியின்றி யுத்தம் வேண்டாம் என்றால் சிரிக்கத் தோன்றாதா பீமா?

அப்படியே நீங்கள் வேண்டாமென்றால் விட்டு விடுவானா துரியோதனன்? பிதாமகர் வெல்ல முடியாத வீரராக இருந்து என்ன பயன்? துரியோதனனை தன் வசப்படுத்த முடியாதவராக தானே அவர் இருக்கிறார்? அவனை பொறுத்த வரையில் அவர் எப்போதோ தோற்று விட்டவர் என்பது இன்னுமா புரியவில்லை.

உங்களைத் தவிர, உங்கள் படையை அவர் அழிக்கப் போவது உறுதி என்று எப்போது தெரிந்ததோ, அப்போதே அவரை அழித்தால் மட்டுமே இந்த போரில் வெற்றி பெற முடியும் என்பது புரியவில்லையா?

தன்னை பலி கொடுத்தாவது என எப்போது சொல்லி விட்டாரோ அப்போதே அவர் நமக்கு சேதி சொல்லி விட்டார் என்பது கூடவா உங்களுக்கு புரியவில்லை?

அர்ஜூனா! முதல் நாளன்று யுத்தம் தொடங்கும் முன்பே உனக்கு நான் எவ்வளவோ சொன்னேனே? அதெல்லாம் உன் காதோடு உள்ளதா? இல்லை காற்றோடு போனதா?'' கிருஷ்ணன் அடுத்தடுத்து கேட்ட கேள்விகள் பாண்டவர்களை யோசிக்க வைத்தன!

- தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us