ADDED : ஏப் 13, 2018 11:31 AM

கிருஷ்ணன் 'சிகண்டி' என்று சொன்ன மாத்திரத்தில் பாண்டவர்கள் ஐவரிடமும் அதிர்வு. சிகண்டி பற்றி அவர்கள் நன்றாகவே அறிவார்கள். சிகண்டி அவர்கள் வரையில் யாரோ அல்ல. அவர்களின் மைத்துனன்!
திரவுபதியின் தந்தையான துருபதனுக்கு மகளாய் பிறந்து சிகண்டினி எனும் பெயரோடு வளர்ந்தவள்! அம்பையாய் இருந்த போது பீஷ்மரை அழிப்பதற்காக முருகன் மேல் கடும்தவம் புரிந்திருந்தாள். அந்த தவத்தின் பயனாக முருகப்பெருமான் ஒரு தேவதாமரை மாலையை தந்து இதை அணியும் ஆடவனால் பீஷ்மரைக் கொல்ல முடியும் எனும் வரம் தந்து மறைந்தான். ஆனால் அந்த மாலையை அணிந்து பீஷ்மரை வதம் செய்ய எவரும் முன்வரவில்லை. இறுதியாக அந்த மாலையை துருபதன் அரண்மனை வாயிலின் மாடத்து யானைச்சிற்பம் மேல் எறிந்திருந்தாள் அம்பை. அந்த மாலை சிகண்டினியாக பிறந்த நிலையில் ஒரு நாள் அவள் கழுத்தில் விழுந்து சிகண்டினிக்கு பீஷ்மரை கொல்லும் சக்தி இருப்பதைச் சொல்லாமல் சொல்லி விட்டது.
இதை அறிந்த துருபதன் சிகண்டினியிடம் நீ தயவு செய்து என்னை விட்டு சென்று விடு. நீ இங்கே இருந்தால் பீஷ்மரால் யுத்தம் ஏற்பட்டு இந்த நாடே அழிய நேரும் என்றான்.
சிகண்டினியும் விலகிச் சென்றாள்.
அப்படிச் சென்றவள் பின்னாளில் ஒரு கந்தர்வனால் ஆணாக மாறினாள். இதனால் சிகண்டினி 'சிகண்டி' ஆனான்! ஆணான நிலையில் திரும்ப துருபதனை காண வரவும், சிகண்டியை ஏற்றுக் கொண்டான். சிகண்டிக்கு பின் உள்ள வரலாறு இது!
இதன்படி முருகன் அளித்த மாலையை அணிந்த காரணத்தால் சிகண்டிக்கு பீஷ்மரை வீழ்த்தும் ஆற்றல் உண்டு. அதே சமயம் சிகண்டி பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய வகையில் ஒரு அரவாணியை ஒத்தவள் என்பதால் பீஷ்மரும் எதிர்த்துப் போராட மாட்டார்.
எனவே பீஷ்மர் ஆயுதம் ஏந்தாத நிலையில், சிகண்டி எதிர் நின்றால் வெற்றி சிகண்டிக்குத் தானே?
கிருஷ்ணன் சிகண்டியின் வரலாற்றைக் கூறி பீஷ்மரை கொல்ல ஒரு வழியாக சிகண்டி இருப்பதைக் கூறவும் பாண்டவர்களிடம் திகைப்பு.
அர்ஜூனனிடம் மட்டும் ஒரு கேள்வி. ''கிருஷ்ணா உன்னை நான் ஒன்று கேட்கட்டுமா?''
''தாராளமாக கேள்!''
''உனக்கு பீஷ்மர் மேல் கருணையில்லையா?''
அது கேட்டு சிரித்த கிருஷ்ணன், ''மிகுந்த கருணையிருப்பதால் தான் சிகண்டி பற்றி எல்லாம் கூறினேன். இந்த யுத்தம் பீஷ்மர் என்னை அடைவதற்கான ஒரு குறுக்கு வழி அர்ஜூனா...'' என்றான்.
கிருஷ்ணன் கூறியது அர்ஜூனனுக்கு அப்போது புரியவில்லை. மறுநாள் நடைபெற்ற பத்தாம் நாள் போரில் சிகண்டி எதிர்வரவும் பீஷ்மருக்கு புரிந்து விட்டது.
அடுத்தடுத்து சிகண்டி போட்ட பாணங்கள் அவரை நிலைகுலைய வைக்க, அர்ஜூனன் அரை மனதாய் அவரது ஆயுதத்தை தன் பாணத்தால் முறித்தான். சிகண்டியின் பாணங்கள் அடுத்தடுத்து மார்பைத் தாக்கவும் பீஷ்மர் எனும் ஒரு மாவீரரின் உடல் அந்த போர்க்
களத்தில் தடுமாறி கீழே விழத் தொடங்கியது.
புழுதி படிந்த ரத்த ஆறு ஓடும் போர்க்களத்தில் ஆயிரமாயிரம் பிணங்களோடு ஒரு பிணமாய் பீஷ்மர் விழுவதை விரும்பாத அர்ஜூனன் அவர் விழப்போன இடத்தில் சரபாணம் தொடுத்து ஒரு அம்புப் படுக்கையை உருவாக்கிட, அதன்மேல் தான் பீஷ்மரின் உடல் விழுந்தது. இருப்பினும் தலை தாழ்ந்திருப்பது கண்டு பீஷ்மரே அர்ஜூனனிடம் ''அர்ஜூனா என் தலையைப் பார்'' என்றார். உடனேயே புரிந்து கொண்டு தலைக்கு சில பாணங்களை சற்று உயரமாய் தலையணை போல் அர்ஜூனன் போட்டிட அவர் தலை, நிமிர்ந்த நிலையில் பாண்டவ சேனையைப் பார்த்தது.
உடம்பிலிருந்து குருதி பெருகி வழிந்து மண்ணில் ஓடிய போதும் அவர் முகத்தில் புன்முறுவல் குன்றவில்லை. அர்ஜூனன் அவர் காலடியில் மண்டியிட்டவனாக தலைகுனிந்து கண்ணீர் சிந்தினான்.
பாண்டவர்களில் மற்றவரும் அங்கு வந்தனர்.
இதற்கிடையில் இந்த செய்தி துரியோதனனின் காதிற்கு எட்டியது.
அவனுக்கு தன் உயிரே போனது போல் இருந்தது. நிலை குலைந்த அவனை அப்போது கர்ணனால் மட்டுமே துாக்கி நிறுத்த முடிந்தது.
''கவலைப்படாதே நண்பா! நான் இருக்கிறேன்... இரண்டில் ஒன்று பார்த்து விடுகிறேன்'' என்கிற கர்ணனின் ஆறுதல் மொழிகள் தான் துரியோதனனை அப்போதைக்கு தாங்கிப் பிடித்தன.
போர்க்களத்தில் அம்புப்படுக்கையில் கிடக்கும் பீஷ்மர் உத்தராயண காலம் வரும் வரை உயிரை விட்டு விடாது தன் வைராக்யப் பிடியில் வைத்திருக்கத் தீர்மானித்தார். தட்சிணாயண காலம் என்பது சூரியன் தென்திசையில் இருந்து வடதிசையில் பயணிக்கும் காலம். அதோடு தென்திசை என்பது எமனுக்கான திசை. உத்தமர்கள் எமன் வந்து அழைத்துச் செல்ல இடமின்றி தாங்களாக எமனுலகு செல்வர். இது போல பல காரணங்கள். உத்தராயணம் என்பது குபேரனுக்குரிய வடதிசையை தொடக்கம் கொள்ளும் காலம். அப்படிப்பட்ட உத்தராயண காலத்திற்கு நிறைய நாட்கள் இன்னும் இருந்தன. மார்கழி 7ம் நாள் அம்புப்படுக்கையில் வீழ்ந்த பீஷ்மர், மாசி வளர்பிறையில் வரும் 11ம் நாள் வரை, அதாவது 48 நாட்கள் உயிர்ப்பிணமாக அம்புப் படுக்கையில் கிடந்து மாசி வளர்பிறை 12ம் நாள் உத்தராயணத்தில் முக்தியை அடைந்ததாக சான்றுகள் கூறுகின்றன.
இக்காலத்தை அஷ்ட பஞ்ச சதம் என்பர்! அதாவது பீஷ்மர் மொத்தமாக 58 நாள் போர்க்களத்திலேயே கிடந்தார். ஆனால் யுத்தம் என்னவோ 18 நாட்களில் முடிந்து விட்டது.
முன்னதாக பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடப்பதைக் காண துரியோதனன் உள்ளிட்ட சகலரும் களத்திற்கு வந்தனர். துரியோதனனை பீஷ்மர் அர்த்தபுஷ்டியுடன் ஒரு பார்வை பார்த்தார்.
'நான் சொன்னபடியே என் உயிரை கொடுத்து துரோகி இல்லை என்று காட்டிவிட்டேன்.. என் சக்திக்கு நீங்கள் அத்தனை பேரும் அழித்திராத அளவுக்கு எதிரிகளையும் அழித்தேன். நானாக என் வீரக்குறைவால் இப்படி நிகழவில்லை. என் கொள்கையே என்னை சாய்த்து இங்கே படுக்க வைத்து விட்டது. உனக்காக போரிட்டேன்; எனக்காக உயிரை விடப் போகிறேன்' என்று கண்களாலேயே பேசினார்.
துரியோதனனுக்கு அதைப் புரிந்து கொள்ளுமளவு பொறுமை இல்லை. எனவே காலைத் தொட்டு வணங்கி விட்டு, திரும்பிச் சென்று விட்டான். அவன் விலகவும் பீஷ்மர் அர்ஜூனனை அழைத்தார். ஓடி வந்தவனிடம் ''தாகமாய் இருக்கிறது அர்ஜூனா'' என்றார். அதைக் கேட்டு கவுரவ கூட்டத்தை சேர்ந்தவர்கள் ஓடிப்போய் பால், பழரசம் என்று எடுத்து வந்தனர். அவைகளை மறுத்தவர் ''அர்ஜூனா நான் என் தாயால் தாகம் தணிய விரும்புகிறேன்'' என்ற நொடியே கங்கா மாதாவை மனதில் நினைந்து அர்ஜூனன் பாணம் ஒன்றை விட்டான்! பாணம்பட்ட இடத்தில் கங்கை பொங்கினாள். பீறிட்டவளாக பீஷ்மரின் முகத்தில் விழுந்து, திறந்த வாயின் உட்புகுந்து தாகம் தீர்த்தாள்.
இதையெல்லாம் கிருஷ்ணன் தொலைவில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருக்க, ஒரு அதிசயம் போல கர்ணன் அவரை தேடி வந்தான். இதுநாள் வரையில் அவர்கள் இருவருக்கும் ஏழாம் பொருத்தமாகத் தான் இருந்து வந்தது. இந்த யுத்த காலத்தில் கூட 'பீஷ்மர் களத்தில் இருக்கும் வரை நான் களம் காண மாட்டேன்' என்று உறுதி எடுத்திருந்தவன், பீஷ்மர் மரணப்படுக்கையில் கிடப்பது தெரிந்தும், தன் பிறப்பின் ரகசியம் தெரிந்து விட்டதாலும் துடிப்போடு ஓடி வந்து பீஷ்மரின் கால்களைத் தொட்டு வணங்கினான்.
பீஷ்மர் கண்களாலேயே அருகில் அழைத்தார். சென்றான்.
''கர்ணா... என் காலம் முடியப் போகிறது. அறிந்தே நீயும் வந்திருக்கிறாய்! எனக்கு உன் மேல் எப்போதும் வருத்தங்கள் இருந்தது கிடையாது. அதை இப்போதுள்ள நிலையில் உன்னால் உணர முடியும் என்று கருதுகிறேன்'' என்றார்.
கர்ணன் கண்ணீரோடு அதை அங்கீகரித்தான். ''கர்ணா உனக்கு நான் ஒரு நல்லது சொல்வேன்; நீ கேட்க வேண்டும்'' என்றவரிடம் ''சொல்லுங்கள்... பிதாமகரே செய்ய சித்தமாக இருக்கிறேன்'' என்றான்.
''போதும் இந்த யுத்தம். என்னோடு இது முடிவுக்கு வரட்டும். நீ போரிடாதே... உன்னால் பாண்டவர்களை வெல்ல முடியாது. அவர்களும் உனக்கு எதிரிகள் அல்லர்... உன் சகோதரர்கள் அவர்கள்'' என்ற பீஷ்மரின்
கண்ணீரைத் துடைத்தபடி பார்த்த கர்ணன் ''அறிவேன் பிதாமகரே... நன்கறிவேன். ஆனால், இவ்விஷயத்தில் நான் உங்கள் பேச்சின் படி நடக்கப் போவதில்லை. உங்கள் கொள்கைப்படியே நடக்கப்போகிறேன்'' என்றான்.
புரிந்து கொண்ட பீஷ்மர் அந்நிலையிலும் சிரித்தார்.
''என்னை மன்னியுங்கள்'' என்றவன் ''தர்மத்திற்கு புறம்பாக மட்டும் நிச்சயம் போர்புரிய மாட்டேன்'' என்றான்.
தொலைவில் இருந்து பார்ப்பது தெரியாமல் பார்த்துக் கொண்டே இருந்தான் கிருஷ்ணன்!
- தொடரும்
இந்திரா சவுந்திரராஜன்