sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கிருஷ்ணஜாலம் - 2 (31)

/

கிருஷ்ணஜாலம் - 2 (31)

கிருஷ்ணஜாலம் - 2 (31)

கிருஷ்ணஜாலம் - 2 (31)


ADDED : மே 16, 2018 03:19 PM

Google News

ADDED : மே 16, 2018 03:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துரியோதனின் கைக்கும் காலுக்கும் குறிவைக்கச் சொன்ன கிருஷ்ணனை, ஆச்சர்யமாக பார்த்த அர்ஜூனனுக்கு அப்போது தான் புரிந்தது, மற்றபாகங்களை கவசம் மூடிக் கொண்டிருப்பது!

அர்ஜூனன் தாமதிக்காமல் கை நகங்களுக்கும், கால் நகங்களுக்கும் குறி வைத்தான். துரியோதனன் இதை துளியும் எதிர்பார்க்கவில்லை. அவன் கைகால் நகங்கள் மேல் ஊசி போல் மெலிந்த அம்புகள் சீற்றமாய் ஏறவும், துரியோதனன் எகிறிக் குதித்து ரதத்தில் இருந்து இறங்கி அர்ஜூன பாணம் படாத படி மறைவாக நின்று கொண்டதோடு, துச்சாதனனின் தேர்ச்சாரதியை அருகில் அழைத்து, அந்த ரதத்தில் ஏறிக் கொண்டு போர்க்களத்தை விட்டு நழுவத் தொடங்கினான்.

இதை எதிர்பார்த்த கிருஷ்ணன், ''அர்ஜூனா...ஜெயத்ரதன் வதமே இன்று நம்முடைய இலக்கு'' என்றான். கிருஷ்ணனின் கூற்றைத் தொடர்ந்து அவர்களது ரதம் அந்த யுத்த களத்தில் 'எங்கே ஜெயத்ரதன்?' என்ற தேடலோடு ஓடத் தொடங்கியது.

மறுபுறம் தர்மனை வசப்படுத்தும் முயற்சியில் துரோணர் தோற்றுப் போயிருந்தார். தர்மன் துரோணருக்கு வசப்படாமல் தப்பி, தன் போர்க்குடிலுக்கு திரும்பிய நிலையில், பீமன் உள்ளிட்ட தன் சகோதரர்களை அழைத்து பதட்டத்துடன் பேசத் தொடங்கினான்.

''சகோதரர்களே! துரியோதனாதியர் யுத்த விதிகளை பேருக்கு பின்பற்றுகின்றனர். என்னை யுத்த களத்தில் கொல்ல வாய்ப்பிருந்தும் கொல்லாது கைது செய்ய விழைகின்றனர். அவ்வாறு நான் அவர்கள் வசமாகிவிட்டால், உங்களால் துணிந்து போர் செய்ய இயலாது போய்விடும். அப்போது உங்களை சுலபமாக வென்று விடலாம் என்பது துரியோதனன் திட்டம்'' என்றான்.

''அவனிடம் நேர்மையான யுத்தத்தை நாமும் எதிர்பார்க்க முடியாது. அவனுக்கு அவன் போக்கில் போய் பாடம் புகட்டுவோம்'' என்றான் நகுலன்.

''அதெல்லாம் பிறகு... இப்போது என் கவலை அர்ஜூனன் பற்றியதே... களத்தில் அர்ஜூனன் எங்கிருக்கிறான், எப்படி இருக்கிறான் என்பதே தெரியவில்லை. சூரிய அஸ்தமனமும் சிறிது நேரத்தில் நடக்க உள்ளது. அர்ஜூனன் அதற்குள் ஜெயத்ரதனை கொல்லாவிட்டால், அர்ஜூனன் தீப்பாய வேண்டும்'' என்றார் தர்மன்.

''அண்ணா... கவலை வேண்டாம்! அர்ஜூனனோடு கிருஷ்ணன் இருக்கிறான்.''

''எனக்கும் கிருஷ்ணனே நம்பிக்கை. இருந்தாலும் பீமா... நீ அர்ஜூனனுக்கு உதவும் பொருட்டு உடனே புறப்படு. அவன் எங்கிருந்தாலும் அவனை எதிர்ப்பவர்களோடு போரிடு. அப்போது தான் தன் சபதத்தை நிறைவேற்ற அர்ஜூனனுக்கும் வசதியாக இருக்கும்'' என்ற தர்மனின் விருப்பம் பீமனை போர்க்களத்திற்குள் திரும்பச் செல்ல வைத்தது. அனுமக்கொடி பறக்கும் ரதத்தில் பீமன், கதாயுதம் ஏந்திய நிலையில் களத்துக்குள் நுழைந்த விதமே எதிரிகளைக் கலங்கடித்தது.

பீமப்பிரவேசம் கண்ட துரோணர் அவனைத் தடுக்க முனைந்தார். பீமன் அர்ஜூனன் போல் குரு வந்தனம் செய்து தயக்கம் காட்டவில்லை.

''என்ன ஆச்சாரியாரே... உங்கள் மாணவனாய் நான் குழைந்து போய் நிற்பேன் என்று எதிர்பார்த்தீரா? இது போர்க்களம், குருகுலமில்லை. நீங்களும் எங்கள் ஆச்சார்யர் இல்லை. அநீதிக்கு துணைபோய்விட்ட ஆச்சர்யம் நீங்கள். எனவே என்னிடம் துதியை எதிர்பார்க்காதீர்கள். இந்த கதையை எதிர் பாருங்கள்'' என்று கதாயுதத்தை சுழற்றி எறிந்தான். அது துரோணரின் ரதத்தை சுக்கு நுாறாக்கிட, குதிரைகள் தெறித்து ஓடிட, புழுதியில் விழுந்தார் துரோணர். துரோணர் விழுந்ததைக் கண்ட கர்ணன், தன் பல்வேறு போர் முனைப்புக்கு நடுவே துரோணரை மீட்டு தன் ரதத்திலும் ஏற்றினான்.

பீமன் இம்முறை கதாயுதத்தை கர்ணனை நோக்கிச் செலுத்திட, கர்ணன் மார்பில் மேல் மோதிய அது அவனை குப்புறச் சாய்த்தது. இது தான் தருணம் என்று அவர்களைக் கடந்து ரதத்தை செலுத்தினான் சாத்யகி.

பீமன் பார்வை பரந்த போர்க்களத்தில் எங்கிருக்கிறான் ஜெயத்ரதன் என்று தான் தேடியது. ஏனென்றால், அங்கே தான் அர்ஜூனனும் கிருஷ்ணனும் இருப்பார்கள். பீமன் இப்படி அர்ஜூனனுக்கு உதவி புரிவதற்காக செல்வதைக் கண்ட கர்ணன் தன்னை மீண்டும் தயார்ப்படுத்திக் கொண்டு பீமனை துரத்தத் தொடங்கினான்.

துரோணருக்கோ வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டது என்பது புரிந்தது.

ஜெயத்ரதன் படை வீரர்கள் நடுவே கோழை போல் ஒளிந்திருந்தான். சூரிய அஸ்தமனம் வரை இப்படியே வீரர்களோடு வீரராய் இருந்துவிட்டால் போதும். அஸ்தமனமான நொடியே ஆவேசமாக வெளிப்பட்டு அர்ஜூனனை இரண்டில் ஒன்று பார்த்துவிட எண்ணியிருந்தான். அதற்கு தோதாக துச்சாதனன் புதல்வர்கள் அவனைச் சுற்றி அரண் போல நின்று பேருக்கு போர் செய்தபடி இருந்தனர். அவனது மகாரதர்களும் காவலுக்கு நின்றனர். களத்தில் ரதங்களைப் பார்த்துப் பார்த்து செலுத்திய கிருஷ்ணன் ஓரிடத்தில் ரதத்தை நிறுத்தினான். ரதப்புரவிகள் களைத்து நுரை கக்கத் தொடங்கியிருந்தன.

''என்ன கிருஷ்ணா, ரதத்தை நிறுத்திவிட்டாய்?''

''புரவிகளைப் பார்... தாகத்தால் தவிக்கின்றன.''

''களத்தில் நீர் வாவிக்கு ஏது இடம்... களத்தை விட்டுச் சென்றாலே நீர் அருந்தலாம்.''

''வழிகாண முடியாத இடத்திலும் வழியை காண முடிந்தவனே ஆயகலைகள் பயின்றவன்; அதிலும் நீ இந்திரலோகத்திலேயே பயின்றவன்.''

கிருஷ்ணன் அப்படிச் சொன்ன மறுநொடி பீஷ்மருக்காக, கங்கையை வரவழைத்த வருணாஸ்த்ரம் நினைவுக்கு வந்து, அடுத்தநொடி ரதம் நின்ற இடத்துக்கு அருகில் பூமியை துளையிடும் பாதாளவேதி எனும் பாணத்தை விடுத்தான். ஊற்று பீறிட்டு அங்கே ஒரு வாவி உருவாகத் தொடங்கியது.

இதை எல்லாம் தொலைவில் இருந்து பார்ப்பது தெரியாமல் பார்த்தபடி இருந்தான் ஜெயத்ரதன். அப்படி அவன் பார்ப்பதை கிருஷ்ணனும் பார்த்தான். அப்படியே வானத்தை பார்த்தான். சூரியன் அஸ்தமன வானில் இறுதிக்கட்டத்தில் இருந்தான்.

ஒரு நாழிகை நேரமே இருந்தது.

குதிரைகள் நீர் அருந்தி இளைப்பாறத் தொடங்கிவிட்டிருந்தன. கிருஷ்ணன் அர்ஜூனனிடம் கட்டளையிடத் தொடங்கினான்.

''அர்ஜூனா... நாம் தேடி அலையும் ஜெயத்ரதன் பேடி போல் களத்துக்குள் நம்மை எதிர்க்கும் துணிவின்றி ஒளிந்துள்ளான். அஸ்தமனமாகும் வரை ஒளிந்திருப்பது தான் அவன் திட்டம். இது யுத்த விதியை மீறிய ஒரு செயல். இவ்வேளையில் இவனுடைய வதத்தின் பொருட்டு, இவன் போன பாதையில் நாம் போவதிலும் பிழையில்லை.

தன்னை ஒளித்துக் கொண்டவனுக்காக நான் விண்ணில் உள்ள சூரியனை என் சக்ராயுதத்தின் பின்னால் ஒளியச் செய்கிறேன். ஜெயத்ரதனும் அஸ்த மனமானதாக கருதி வெளியே வருவான். அப்போது அவசரப்பட்டு அவன் மேல் பாணத்தை போட்டு விடாதே.

இவ்வேளையில் அவன் தந்தை விருத்தஷத்திரன் என்பவன் பற்றி நீ அறிய வேண்டியது அவசியம். அந்த விருத்தஷத்திரன் இப்போது இந்த சமந்தபஞ்சகத்தின் (குருஷேத்திரம்) எல்லைக்கு அப்பால் உள்ள வனத்தில் தவம் செய்தபடி இருக்கிறான். இவன் ஜெயத் ரதனைப் பெற்றெடுத்த போதே நிமித்திகம் மூலமாக, போர்க்களத்தில் ஜெயத்ரதன் தலை துண்டுபட்டு மரணிப்பான் என்று அறிந்து கொண்டுவிட்டான். அவ்வாறு அறிந்த கணமே தன் தவசக்தியால், 'அப்படி என் மகன் தலையை எவன் துண்டிக்கிறானோ, எங்கு துண்டிக்கிறானோ அங்கு தலை விழுந்து சுக்கு நுாறாக சிதறும். அப்படி வெடித்துச் சிதறும் போது பாணம் போட்டவனும் மடிவதாக' என்று சபித்துவிட்டான். எனவே இந்த யுத்த களத்தில் அவன் தலை விழுந்தால் அவ்வளவு தான்!'' என்றிட அர்ஜூனன் திகைத்துப் போய் பார்த்து பின், ''அந்த தலையை நான் இந்த களத்துக்கு வெளியில் விழும்படி செய்கிறேன் கிருஷ்ணா...'' என்றான்.

''அது தான் வழி.. அதே சமயம் அதனால் ஒரு பயனுமில்லை. அழிவை விரும்பிய விருத்தஷத்திரன் மடியிலேயே விழச்செய். வினை வினையாலே அணையட்டும்'' என்ற கிருஷ்ணன் தன் சக்ராயுதத்தை விண்ணுக்கு அனுப்பி மேற்கு திசையில் அஸ்தமனத்துக்கு தயாரானபடி இருந்த சூரியன் முன் நிறுத்திட போர்க்களம் முழுக்க இருள் சூழத் தொடங்கியது. ஜெயத்ரதனும் உற்சாகமாக வெளிப்பட்டான்!

- தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us