
ஒருபுறம் அஸ்தமன வானம். மறுபுறம் கொக்கரிப்போடு ஜெயத்ரதன். அவன் முன் அவனுக்காக உயிரை விடத் தயாராய் நிற்கும் ஆறு மகாரதர்கள்.
போர்க்களத்திலும் உற்சாகக் கூக்குரல்!
அர்ஜூனனே, வெளிப்பட்ட மகாரதர்கள் மேல் முதலில் சஷ்டாஸ்த்ரங்களை ஏவ, அவர்கள் நிலைகுலைந்து விழுந்திட, கிருஷ்ணனும் சக்ராயுதத்தை விலக்கிட மீண்டும் களமெங்கும் சூரியனின் வெளிச்சம். ஜெயத்ரதன் அதைப் பார்த்து பேதலித்த அந்த நொடிகளில் அர்ஜூன பாணம் அவன் சிரத்தை கொய்வதற்காக புறப்பட்டு விட்டது!
பாய்ந்து சென்ற அந்த பாணம் ஜெயத்ரதன் கழுத்தைத் தைத்து அப்படியே அதை சுமந்து கொண்டு அந்த போர்க்களத்துக்கு வெளியே உள்ள பஞ்சக வனத்தில் தவம் செய்து கொண்டிருந்த அவன் தந்தையான விருத்தஷத்ரன் மடிமேல் தான் போய் விழுந்தது.
விழுந்த நொடியே வெடித்து சிதறியதில் தந்தை, மகன் இருவரும் சின்னா பின்னமானார்கள். ஜெயத்ரதனின் வதத்தோடு அன்றைய போரும் முடிவுக்கு வந்தது.
அர்ஜூனன் தன் சபதத்தில் ஜெயித்து விட்டான்! உடனிருக்கும் கிருஷ்ணனின் உத்தமத் துணை அவனை வெற்றிவீரனாக ஆக்கிவிட்டது!
ஜெயத்ரதன் தலை கொய்யப்பட்டு விண்ணில் பறந்ததை கண்ட கவுரவ சேனை அப்படியே வாயடைத்துப் போனது.
விண்ணில் பறந்த அந்த தலையை களத்தில் இருந்த துரோணரும் கண்டு நாணித் தலை குனிந்தார்.
பீமன் ஆர்ப்பரித்தான்! ஓடிவந்து அர்ஜூனனை துாக்கி தட்டாமாலை சுற்றுவது போல் சுற்றினான். பின் வெற்றிச் சங்கையும் முழங்கினான்.
வெற்றிச் சங்கொலி தர்மன் காதுகளில் விழவும் தான் தர்மனுக்கு பதட்டம் அடங்கியது. நகுல, சகாதேவர்கள் பூரிப்புடன் ''அண்ணா இது அர்ஜூனனின் வெற்றி முழக்கமே! சபதத்தில் அர்ஜூனன் வென்று விட்டான்...'' என்றனர்.
போர்க்குடில்!
உயிரிருந்தும் பிணம் போல் தான் தெரிந்தான் துரியோதனன். ஜெயத்ரதன் மரணத்தை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.
'எல்லாம் அந்த கிருஷ்ணனின் வேலை! சூரியனிடமே அவன் மாயாஜாலம் புரிந்து நம் கண்ணை எல்லாம் கட்டிவிட்டான்'' என்றான் சகுனி.
அப்போது கர்ணனும் அங்கு சோர்வுடன் வந்து நின்றான். ''கர்ணா... துரோணரை நம்பி மோசம் போய்விட்டோம். எனது இப்போதைய ஒரே நம்பிக்கை நீ மட்டுமே...'' என்று துக்கத்துடன் பேசினான் துரியோதனன்.
''இல்லை துரியோதனா! துரோணரை குறை சொல்லாதே... அர்ஜூனனும், கிருஷ்ணனும் தந்திரங்களையும் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். எல்லாம் ஒரு பாடம். அடுத்து என்ன செய்வது என்று சிந்திப்போம்'' என்றான்.
''ஒரே சிந்தனை தான் கர்ணா... நம் தரப்பில் ஜெயத்ரதனைக் கொன்றதற்கு பாண்டவர் தரப்பில் ஒரு உயிரை கொன்றே தீர வேண்டும்.''
''அது என்ன ஒரு உயிர்... பாண்டவர்கள் அனைவரையும் கொல்ல வேண்டும் என்பது தானே நம் இலக்கு...'' என்று சகுனி துாண்டிவிட்டான்.
''மாமா... நான் கூறுவதைப் புரிந்து கொள்ளுங்கள். அவ்வளவு பேரும் மரித்தாக வேண்டும் என்பது கணக்கு. ஆனால், ஒருவரை கொன்றே தீர வேண்டும் என்பது முதல் இலக்கு. எப்படி 24 மணி நேரத்தில் ஜெயத்ரதனை கொல்வதாக அர்ஜூனன் சபதம் செய்து கொன்றானோ அதே போல் அடுத்த 24 மணி நேரத்திற்குள் பாண்டவர் தரப்பில் ஒருவர் இறந்தே தீர வேண்டும்''
துரியோதனன் கட்டளைக்குரலை கேட்ட கர்ணன், ''நண்பா... நாளைய யுத்தத்தில் உன் விருப்பத்தை ஈடேற்றுவேன். அப்படி நான் செய்யாவிட்டால் நீ உன் கதாயுதத்தால் என்னை அடித்தே கொன்று விடு... போதுமா?'' என்று கர்ணன் சொன்னதும் துரியோதனனும் கர்ணனை இது போதும் நண்பா என்று கட்டித் தழுவிக் கொண்டான்!
போர்க்களத்தின் ஒரு பகுதியில் தனக்கான போர்க்குடிலுக்கு வெளியே சோகமான முகத்தோடு அமர்ந்திருந்தான் கடோத்கஜன். அவன் கையில் அபிமன்யுவின் கவச ஆடை இருந்தது. அதைப் பார்த்து அவன் கண்களில் கண்ணீர்ப் பெருக்கு.
''சகோதரா! உன்னை இந்த யுத்தத்தில் இழக்க வேண்டி வரும் என்று நான் கற்பனை கூட செய்யவில்லை. உன்னைப் போலவே நானும் வீரமரணம் அடைவதையே விரும்புகிறேன். உன்னை சொர்க்கத்தில் சந்திக்க துடிக்கிறேன்'' என்று மனதுக்குள் பேசிக் கொண்டிருந்தவன் அங்கே யாரோ வரும் சப்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.
கிருஷ்ணபிரபு!
''ப்ரபோ... தாங்களா... வந்தனாதி வந்தனங்கள்! வாருங்கள் வாருங்கள்...''
''என்ன கடோத்கஜா... அபிமன்யுவின் பிரிவு உன்னைப் பெரிதும் பாதித்து விட்டது போல் தெரிகிறதே?''
''ஆம் பிரபு... எனக்கு இணை அவன் தானே? எத்தனை பாடுபட்டு அவனுக்கும், உத்தரைக்கும் திருமணம் செய்வித்தோம்? இப்போது அவளையும் தவிக்கவிட்டு சென்று விட்டானே?''
''இது போன்ற கேள்விக்கெல்லாம் போர்க்களத்தில் இடமில்லை என்பது உனக்கு தெரியாதா?''
''அபிமன்யு வரையில் தர்மப்படி நடந்திருந்தால் அல்லவா ஆறுதல் கொள்ள...?''
''தர்மமோ அதர்மமோ அபிமன்யு பெயர் காலகாலத்துக்கும் வாழும்.''
''அவனும் வாழ்ந்திருந்தால் இன்னமும் நன்றாகயிருக்குமே?''
''நாளைய கவுரவ சேனை உன்னைக்கூட வஞ்சகமாய் கொல்லலாம். தயாராயிரு...''
''பிரபோ...''
''என்ன கடோத்கஜா...''
''எச்சரிக்கிறீர்களா...இல்லை வழியனுப்புகிறீர்களா?'' கடோத்கஜன் கச்சிதமாய் கேட்டான்.
''கடோத்கஜா.. நாளைய யுத்தம் மிக கோரமாய் இருக்கும் என்பதால் எச்சரிக்கவே வந்தேன். இன்று ஜெயத்ரதனைக் கொன்று விட்டதால் கவுரவ சேனைக் குமுறிக் கொண்டிருக்கிறது.''
''குமுறட்டும், நன்றாக குமுறட்டும்... நாளை நான் யார் என்று காட்டுகிறேன். என் சகோதரனைக் கொன்ற பாவிகளை சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டு மறுவேலை பார்க்கிறேன்.''
''இந்த வைராக்யத்தை தளர விட்டுவிடாதே''
''நல்லது பிரபு... உங்கள் ஆசிகளையும் வேண்டுகிறேன்.''
''நான் எப்போதும் உன்னுடன் இருப்பதாக எண்ணிக்கொள்.'' என்ற கிருஷ்ணன் அருகே வந்து கடோத்கஜனின் கிரீடமில்லாத தலையின் மீது கைவைத்து 'உனக்கு என் நல்லாசிகள்!' என்றான்.
மறுநாள்!
கவச ஆடைகளுடன் எல்லோரும் களம் காணப் புறப்பட்ட நிலையில் கர்ணனிடம் ஒரு தனித்த ஆவேசம். அப்போது அங்கு வந்த சகுனி, ''கர்ணா...இன்று நீ உன் வசம் வைத்திருக்கும் விசேஷமான அஸ்திரங்களை பிரயோகப்படுத்த வேண்டும்'' என்றான்.
''தேவைக்கேற்ப பயன்படுத்துவேன் மாமா...'' என்ற கர்ணனிடம், ''சொல்வதைச் சொல்லிவிட்டேன். பார்த்துக்கொள்...'' என்று மீண்டும் ஒரு துாண்டுதல் நிகழ்த்தினான் சகுனி. கர்ணனும் அதற்கேற்ப வைஜெயந்தி எனும் பிரம்மாஸ்திரத்துக்கு இணையான அஸ்திரத்தை ஞாபகமாய் எடுத்துக் கொண்டான்.
மறுபுறும் பாண்டவர் களத்தில் கடோத்கஜன், கர்ணன் போலவே ஒரு தீவிரத்துடன் களத்தில் இறங்கியிருந்தான். அதை கிருஷ்ணனும் அர்ஜூனனுக்கான களத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
பார்த்துக் கொண்டிருந்தவன் ரதத்தைவிட்டு இறங்கி கடோத்கஜனை நெருங்கி,
''கடோத்கஜா... நீ மாயையின் வல்லுனன். ஜாலங்களில் வித்தகன். இன்று களத்தில் உன் மாயையை காட்டு. கவுரவ சேனையை சிதற அடி'' என்று கூறிவிட்டு வந்தான். அதைக்கண்ட அர்ஜூனன் கிருஷ்ணனிடம் ''கிருஷ்ணா... கடோத்கஜனிடம் அப்படி என்ன கூறினாய்?'' என்று கேட்கவும் புன்னகைத்த கிருஷ்ணன், ''இன்று கடோத்கஜனும் உன் மகன் அபிமன்யு போல் ஒரு வரலாறு படைக்கப் போகிறான்'' என்றான்.
அந்த நொடியே அர்ஜூனனிடம் அதிர்வு!
- தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்