ADDED : ஜூன் 08, 2018 04:11 PM

அமைதி அமைதி என்றபடியே அங்கே வியாச மகரிஷி வந்து கொண்டிருந்தார்.
வியாசரைக் கண்டதும் பாண்டவர்களோடு கூடி எல்லோரும் அவரை வணங்கினர்.
கிருஷ்ணனும் வியாசரை வணங்கினான்.
''மகரிஷிக்கு என் மகாவந்தனங்கள்'' என்றான். வியாசருக்கா அதற்கு பொருள் தெரியாது?
''வந்தனத்துக்குரியவரின் வந்தனங்கள் நான் பெற்ற பெரும்பேறாகும். யுகங்கள் உள்ள அளவும் பேசப்பட இருக்கிற ஒரு யுத்தம் தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதில் என் பங்கும் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு தான் நான் யுத்த வேளையில் வந்தேன்'' என்றார் வியாச மகரிஷி.
''மகரிஷி பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துங்கள். உங்களைப் போன்றவர்கள் வாழ்த்தால் கிடைக்க வேண்டிய வெற்றி வேகமாய் கிடைக்கட்டும்'' என்று கிருஷ்ணன் வியாசரை ஊக்கப்படுத்தினான்.
''கண்ணா... எப்போது நீ பாண்டவர்களுக்கு உற்ற தோழனாக ஆனாயோ அப்போதே உறுதியாகி விட்டது வெற்றி. என் தீர்க்கமும் அதிகபட்சம் ஐந்து தினங்களில் வெற்றி உங்கள் வசமாகும் என்று கருதுகிறது'' என்றார் வியாசர்.
''மகரிஷியின் வார்த்தைகள் எங்களுக்குள் பெரும் நம்பிக்கையை அளிக்கின்றன. ஆயினும் விலைமதிப்பில்லாத உயிர்களை பறிகொடுத்து விட்டோம். அர்ஜூனன் தன் மகன் அபிமன்யுவை இழந்தான், பீமனோ தன் மகன் கடோத்கஜனை இழந்து விட்டான். வாழவேண்டிய இளம்தளிர்களை பலி கொடுத்தா நாங்கள் வெற்றியை பெறுவது?''என்ற தர்மனின் குரலில் வியாசர் ஒருவகை ஆவேசத்தை முதல் தடவையாக கண்டார்.
''தர்மா... உன்னைக் காண்கையில் எனக்கு வியப்பாக உள்ளது. உன் தரப்பில் இழந்த இரண்டு உயிர்களைப் பெரிதாக கருதும் நீ களத்தில் இறந்த ஆயிரக்கணக்கான வீரர்களையும் எண்ணிப்பார். உன் சோகம் மிகச் சிறிதாகி விடும். யுத்தம் என்று வந்தாலே இழப்புகள் தவிர்க்க முடியாதவையே... இது உனக்கு தெரியாதா? உங்கள் தரப்பில் பலியான இருவரும் காலகாலத்துக்கும் பேசப்படுவார்கள். ஆனால் கவுரவர்களில் துரியோதனனையும், துச்சாதனனையும் கடந்து எவரையும் யாரும் நினைவில் கொள்ள மாட்டார்கள்.
வாழ்வது என்பது இருவிதம். ஆயுள் இருப்பதால் வாழ்வது ஒருவிதம், சிறிது காலம் வாழ்ந்தாலும் உலகத்தின் ஆயுள் உள்ளவரை பெயர் வாழ்வது இன்னொரு விதம். உங்கள் பிள்ளைகள் அற்ப வாழ்வில் சிக்கவில்லை. அதை எண்ணி மகிழ்ச்சி கொள்!
இனி தான் போரில் முக்கிய தருணங்கள் உள்ளன. அந்த தருணங்களை சாதுர்யமாகவும், சத்தியத்தோடும் கடந்து வெற்றியை அடையுங்கள். களத்தில் நான் இல்லாவிட்டாலும். என் கவனம் இங்கே தான் இருக்கும்'' என்ற வியாசரின் விளக்கத்தை கேட்ட கிருஷ்ணன், ''ஆம் மகரிஷி! நீங்கள் இந்தப் போரில் உங்கள் கவனத்தை கொண்டிருப்பது ஒரு சிறந்த விஷயம். அதர்மத்துக்கும், தர்மத்துக்குமான இந்த யுத்தத்தை உற்று கவனித்து காலகாலத்துக்கும் பிறர் அறியும்படி ஒரு காவியத்தையே கூட படைக்க நேரிடலாம். காலத்தின் கணக்கை யாரறிவார்?'' என்று பொடிவைத்துச் சொன்னதை பணிவோடு கேட்டுக்கொண்ட வியாசர், ''கிருஷ்ணா.. முக்காலமும் அறிந்த நீ ஒரு கருத்தைச் சொல்வது போல் கட்டளையே இட்டு விட்டாய். நான் பாக்கியசாலி. என்னையும் காலம் மறந்து விடக்கூடாது என்பது உன் திருஉள்ளம் போலும்'' என்றவர் அனைவரையும் வாழ்த்தி விடைபெற்றார்.
வியாசரின் வருகை கடோத்கஜன் இழப்புக்கு ஒரு நல்ல ஆறுதலாக அமைந்து விட்டது. புது உற்சாகம் ஏற்பட, ''அர்ஜூனா... கர்ணனுக்கு நீ பாடம் புகட்டியே தீரவேண்டும். அதே சமயம் என்னைப் பிடித்துவிட துடிக்கும் துரோணருக்கு நான் பாடம் கற்பிக்கிறேன். நம் முன் தெரிபவர்கள் இவர்கள் இருவர் தான்! இவர்கள் இருக்கும் நம்பிக்கையில் தான் துரியோதனன் இன்னமும் ஆடிக் கொண்டிருக்கிறான்.'' என்று தர்மன் கூற, ''சரியாக சொன்னாய் சகோதரா... உன் குறி துரோணர் என்றால் என் குறி துரியோதனன்... துரியோதனன் என் கரத்தினால் தான் மாள வேண்டும்'' என்றான் பீமன்.
கிருஷ்ணன் சிரித்தான்!
''கிருஷ்ணா நீ சிரித்தாலே சிக்கல் தான். நாங்கள் இப்படி எங்களுக்குள் திட்டம் தீட்டிக்கொள்வதில் எதாவது தவறிருக்கிறதா? இல்லை இயலாத ஒன்றை நாங்கள் எண்ணுகிறோமா?'' கச்சிதமாய் கேட்டான் அர்ஜூனன்.
''இப்படி குறி வைப்பதில் தவறில்லை. அதே சமயம் அதை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்பது முக்கியமல்லவா?''
''போர்க்களத்தில் வில்லும், வாளும் தான் பேசும். இதில் எப்படி என்கிற கேள்விக்கே இடமில்லையே?''
''அப்படியானால் இந்த ஆயுதங்களால் துரோணரை வீழ்த்தி விட முடியுமா?''
கிருஷ்ணன் கேட்ட விதமே முடியாதுஎன்று கூறி விட்டதை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.
''கிருஷ்ணா... துரோணரை எப்படி வெல்வது என்று நீயே கூறு?'' என்று சரணாகதி செய்தான் தர்மன்.
''அதை இப்போது கூற இயலாது தர்மா... களத்தில் அவர் எப்படி செயல்படுகிறார் என்று பார்த்து முடிவு செய்வோம்...''
''அதற்கு அவகாசம் இருக்குமா?''
''நிச்சயம் கிடைக்கும்...'' என்று கிருஷ்ணன் உறுதிபடக் கூறினான். அப்படியே திருஷ்டத்துய்மனைப் பார்த்தான்.
ஒதுங்கி ஒரு ஓரமாய் தன் சகோதரி திரவுபதியோடு நின்றிருந்தவனை அருகிலும் அழைத்தான்.
''என்ன கிருஷ்ணா?''
''துரோணர் பற்றி தேவையே இன்றி தர்மன் சிந்திக்கிறான். ஆனால் நீ தான் சிந்திக்கவேண்டும். உன் தந்தைக்கும், துரோணருக்குமான பகையும் அதன் விளைவான யுத்தமும் தோல்வியும் கடந்தகால வரலாறு... அந்த தோல்வியின் எதிரொலியில் துரோணரை வெற்றி கொள்ளப் பிறந்தவர்களே நீயும், உன் சகோதரி திரவுபதியும், இதெல்லாம் ஞாபகத்தில் உள்ளதா திருஷ்டத்துய்மா?'' என்று திருப்பிக் கேட்டான் கிருஷ்ணன்.
''அதை நான் எப்படி மறப்பேன் கிருஷ்ணா...?'' என்ற திருஷ்டத்துய்மன் தோளைத் தட்டிய கிருஷ்ணன், ''துரோணரை பொறுத்தவரையில் நீ தான் எமன். ஆனால் அவரை நேர் நின்று வெல்ல முடியாது... அபிமன்யுவை அராஜகமாய் வதைத்தது போல நாமும் செயலாற்றினால் தான் இயலும்'' என்றிட எல்லோரிடமும் திகைப்பு.
''கிருஷ்ணா என்ன சொல்கிறாய் நீ?''
''நான் இன்னமும் முழுவதுமாக எதையும் கூறவில்லையே?''
''விரைவாகக் கூறு''
''உங்கள் பிள்ளைகளைக் கொன்று சோகத்தை அளித்த துரோணருக்கு அவர் பிள்ளையாலேயே தோல்வியை ஏற்படுத்த இயலும்''
''அஸ்வத்தாமனாலா?''
''ஆம்...''
''இது என்ன விந்தை... பிள்ளை எங்காவது தந்தையைக் கொல்வானா?''
''இங்கே கொன்றாக வேண்டும் பீமா''
''அது எப்படிச் சாத்தியம்?''
''சாத்தியப்படுத்தினாலே வெற்றி...''
''இது ஏதோ தந்திரம் என்று மட்டும் புரிகிறது. ஆனால் எப்படி என்று புரியவில்லையே?''
''களத்தில் செயல்படும்போது புரியும்''
கிருஷ்ணனின் முத்தாய்ப்பான பதில் அர்ஜூனனைக் கூட ஆச்சரியப்படுத்தி அது எப்படி என்று யோசிக்க வைத்தது!
- தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்