ADDED : ஜூன் 14, 2018 10:56 AM

அர்ஜூனன் யோசிப்பதைக் கண்ட கிருஷ்ணன், ''அர்ஜூனா... நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என்று செயலாற்றிடு. அது போதும்'' என்று அர்ஜூனனை திசை மாற்றினான்.
''எனக்கென்னவோ இரவு பகல் பாராமல் போரிட்டாலே நாம் வெற்றி பெற முடியும் என்று தோன்றுகிறது'' என்றான் பீமன்.
''சண்டை என்று வந்தபின் இரவாவது, பகலாவது? யுத்த விதிகளும் பல தருணங்களில் மீறப்பட்டு விட்டது. எனவே நாம் எப்படி வேண்டுமானால் போரிடலாம்'' என்ற நகுலனின் கருத்தை தொடர்ந்து இரவிலும் சண்டையிடுவது என்று தீர்மானித்தனர்.இரவிலும் சண்டை தொடரும் என்பதை தர்மன் களத்தில் அறிவிக்கச் செய்தான். பீமனே அறிவித்தான்.
''ஏ வீரக்கூட்டமே! இரவும், பகலுமாக போரிட்டால் மட்டுமே வெற்றியை பெற முடியும். இதை கவுரவக் கூட்டத்துக்கு உரத்த குரலில் சொல்லுங்கள். எதற்காக இந்தப் போர் தொடங்க பெற்றதோ, அதை அடையும் வரை யாருக்கும் ஓய்வு ஒழிவில்லை'' என்னும் வீரமுழக்கம் கவுரவர்களையும் கட்டிப் போட்டது.
துரியோதனன் இது குறித்து துரோணர், கர்ணனிடம் பேசினான்.
''ஆச்சார்யாரே... பாண்டவர்கள் தரப்பில் ஒரு புது எழுச்சி தெரிகிறது! நாம் ஒரு அபிமன்யுவைத் தான் அழித்தோம். அவர்களோ, பிதாமகரில் தொடங்கி ஜெயத்ரதன் வரை வந்து விட்டனர். இனி இரவிலும் யுத்தம் என்றால் அது எப்படி? இருண்ட களத்தில் மறைந்திருந்து தாக்குதல் நடத்தினால் எப்படி எதிர்கொள்வது?'' என்று துரியோதனன் கேட்டிட துரோணரும் பதில் கூறத் தொடங்கினார்.
''துரியோதனா! வீரர்களை விரைவாக களைப்படையச் செய்யவே இந்த உத்தியை பாண்டவர்கள் பயன்படுத்த விரும்புகின்றனர். இதற்காக நீ கவலைப்படாதே. என் ஒட்டுமொத்த வித்தையை நான் காட்டும் தருணம் வந்து விட்டது. சில பாணங்களும், அதன் தாக்கங்களும் மிகவே கொடியவை. ஒரு அந்தணனாக நான் அதைப் பயன்படுத்த விரும்பியதுமில்லை. அதே சமயம் நமக்கு ஒரு அழிவு உறுதி எனும் போது நான் அதை பயன்படுத்தாமல் இருக்க முடியாது'' என்று துரோணர் அர்ஜூனனை மனதில் வைத்தே பேசினார்.
துரியோதனனையும் துரோணர் பேச்சு ஆறுதல் படுத்தியது. அப்படியே கர்ணனை பார்த்து, ''நண்பா... ஆச்சார்யாரையும் உன்னையும் நம்பியே நான் இருக்கிறேன்'' என்றான் துரியோதனன்!
மறுநாள் பகல் பொழுதில் யுத்த வேளையில் துரோணர் தன் முழு வீரத்தையும் காட்டத் தொடங்கினார். அஸ்திர பிரயோகங்கள் எவ்வளவு உண்டோ அவ்வளவையும் அன்று போர்க்களம் கண்டது. வருண பிரயோகம், வாயு பிரயோகம், அக்னி பிரயோகம், தண்ட பிரயோகம், தாண்டவ பிரயோகம், ஊழி பிரயோகம் என்று அவரது தனுராயுதம் விடுத்த பாணங்கள் குருஷேத்திர களத்தையே கலக்கியது. பாண்டவர் தரப்பில் வீரர்கள் கணக்கின்றி இறந்தனர்.
அதை ஆங்காங்கே இருந்தபடி கவனித்த பாண்டவர்கள் மலைக்கத் தொடங்கினர்.
அர்ஜூனனும் பதிலடி கொடுத்தான். ஆனால் அவனுக்கு சரியாக துரோணர் பதிலடி கொடுத்தது மட்டுமல்ல, தர்மனின் ரதத்தின் அச்சை ஒடித்து, ரதக்கொடியை அறுத்து தர்மன் தரையில் விழுந்து புரளும்படிச் செய்த துரோணர், தர்மனுடைய மார்புக்கே குறி வைத்தார். அர்ஜூனன் அதற்கான பாணத்தை இடை மறித்து தடுத்த நிலையில், தர்மன் பீமனின் ரதத்தில் ஏறிக்கொண்டான். இருவரும் கிருஷ்ணனை பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்.
அர்ஜூன ரதத்தில் அமர்ந்திருந்த கிருஷ்ணன்,''அர்ஜூனா... பிதாமகரைப் போலத்தான் துரோணரும்! போரிட்டு இவரை வெல்ல முடியாது. உன் மைத்துனன் இதற்காகவே பிறந்தவன். அவனை முன் நிறுத்துவோம்...'' என்றான்.
அதற்கேற்ப திரவுபதியோடு வேள்வித்தீயில் துரோணரை வெல்ல வேண்டும் என்றே பிறப்பிக்கப்பட்ட திருஷ்டத்துய்மன் துரோணரை சப்தமிட்டு தன் பக்கம் திருப்ப முயன்றான்.
''ஏ அந்தணா... உன் வீரத்தை என்னிடம் காட்டு'' என்று கொக்கரித்தான். தன்னை அந்தணன் என்று அந்த களத்தில் திருஷ்டத்துய்மன் அழைத்ததிலேயே துரோணரிடம் பாதி உற்சாகம் போய்விட்டது.
அதே சமயம் பீமன், தர்மனை தன் அருகில் அழைத்து, ''நான் சொல்லப் போவதை கவனமாக கேளுங்கள். ஆச்சார்யாரை திருஷ்டத்துய்மனாலும் போரிட்டு வெல்ல முடியாது. இப்போது வீரத்துக்கும் இங்கே இடம் கிடையாது. விவேகத்தாலும் தந்திரத்தாலும் மட்டுமே அவரை வெல்ல முடியும்'' என்றான் கிருஷ்ணன்.
அப்போது ஆங்காங்கே துரியோதனன் முதலானவர்கள் போரிட்டபடி தான் இருந்தனர். துரோணர் பாண்டவ வீரர்களின் ஒரு பாகத்தையே அழித்ததை கண்ணாரக் கண்டதில் துரியோதனனுக்கும் உற்சாகம் ஏற்பட்டிருந்தது.
''இன்று போல் இரு தினங்கள் நடந்தால் போதும் பாண்டவப் படை அழிந்து விடும்'' என்று கொக்கரித்தபடி இருந்தான். அப்படி அதற்கு நடுவில் தான் கிருஷ்ணன் தர்மனிடம் வேகமாக,''தர்மா... ஆச்சார்யாரை அவர் கையில் தனுராயுதம் உள்ளவரை வெல்ல முடியாது. அது அவர் கையில் இல்லாத போதே வெல்ல முடியும், கொல்லவும் முடியும்''
''அதனால் என்ன கிருஷ்ணா! அர்ஜூனனால் அவரது தனுசை முறிக்க இயலுமே?''
''இயலும் என்றால் தான் எப்போதோ முறித்திருப்பானே?''
''அவர் அறிந்த சகலமும் என் தம்பியும் அறிவான் அல்லவா?''
''எந்த குருவும் தன்னையே அழிக்கும் ஒரு வழிமுறையை எந்த சீடனுக்கும் கற்பிக்க மாட்டார் தர்மா...''
''சரி இப்போது என்ன தான் செய்வது?''
''நான் முன்பு சொன்னது போல் வீரம் மட்டுமல்ல நம் வழி... கொஞ்சம் தந்திரமும் வேண்டும்.''
''எது தந்திரம்?''
''எதைச் செய்தால் துரோணர் நிலை குலைவாரோ அதுவே தந்திரம்...''
''அதை எப்படிச் செய்வது?''
''வைரத்தை வைரத்தால் அறுப்பது போல், பாலகனான அபிமன்யுவை நிராயுதபாணியாக்கி கொன்ற அதே வழியில் போய் தான்...''
''புரியவில்லை எனக்கு...''
''போகப்போக புரியும் பார்... பீமா இந்த களத்தில் அதோ தெரிகிறது பார் ஒரு யானை...''
''அதற்கென்ன கிருஷ்ணா...''
''அதன் பெயர் அஸ்வத்தாமன். துரோணர் தன் மகன் நிமித்தம் அந்த யானைக்கு, துரோணர் மேல் பற்றுள்ள யானைப்படைத் தலைவன் சூட்டிய பெயர் அது.''
''இப்போது எதற்கு இந்த விளக்கம்...?''
''அந்த அஸ்வத்தாமனை உன் கதாயுதத்தால் முதலில் கொல். பின் துரோணர் அருகே சென்று அஸ்வத்தாமனை கொன்றேன் என்று மட்டும் சொல்... போதும்...''
''புரிகிறது. இப்போதே கொல்கிறேன்.'' என்று பீமனும் கதாயுதத்துடன் சென்றான். அதன் விதியை முடித்து வீழ்த்தினான்.
கிருஷ்ணன் சொன்னது போலவே துரோணர் ரதம் அருகே சென்று ''அஸ்வத்தாமனை கொன்று விட்டேன்... அஸ்வத்தாமனை கொன்று விட்டேன்...'' என்று கொக்கரித்தான்.
துரோணர் விக்கித்துப்போய் பீமனைப் பார்த்தார். அவர் உடம்பு நடுங்கியது.
கிருஷ்ணன் தர்மனிடம், ''தர்மா... துரோணர் நீ உறுதிப்படுத்தினாலே நம்புவார். வேடிக்கை பார்...'' என்றிட துரோணர் வில்லை தோள் மாற்றியவராய், ''இருக்காது... சாத்தியமே இல்லை... பொய்'' என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்ள, தர்மன் கச்சிதமாய் பீமன் அருகில் வந்தான். தர்மனைக் காணவும் துரோணரிடம் ஒரு ஆவேசம்.
''தர்மா... பீமன் சொல்வது உண்மையா? உலகமே எதிர்த்தாலும் வாய்மை தவறாதவன் நீ என்பதை நானறிவேன். அந்த வாய்மை மேல் நின்று சொல். அஸ்வத்தாமன் கொல்லப்பட்டானா?'' என்று கேட்க தர்மனும், ''நான் பார்க்க அஸ்வத்தாமன் என்கிற யானை கொல்லப்பட்டது நிஜம்'' என்றான்.
தர்மன் யானை என்று சொன்ன இடத்தில் சப்தம் குறைந்து போக, அந்த நேரத்தில் கிருஷ்ணனும் துரோணரின் காதில் விழாதபடி சங்கெடுத்து ஊதினார். துரோணரும் அந்த தந்திரத்தை அறியாதவராக வில்லை நழுவ விட்டு, புத்திரபாசத்துக்கு ஆளாகி நிலைகுலைந்தார். அதைக் கண்ட பீமன், ''வேண்டும் அந்தணரே வேண்டும்... உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்'' என்று அடக்கி வைத்திருந்த அவர் மீதான அபிப்ராயங்களை சொல்லத் தொடங்கினான்!
- தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்