ADDED : ஜூன் 29, 2018 11:53 AM

கிருஷ்ணனின் ஆறுதலான பேச்சைத் தொடர்ந்து தர்மன் சற்று சமாதானம் கொண்டான். அர்ஜூனனுக்கோ தலையற்ற முண்டமாகக் கிடந்த துரோணரின் உடலும், உருண்டு ஒரு பந்துபோல் தொலைவில் கிடந்த அவர் முகமும் அவன் கண்களில் கண்ணீரைப் பெருக்கின.
''கிருஷ்ணா ஆச்சார்யரை வெல்ல இதுவா வழி? இப்படி எல்லாமா வெற்றியை அடைவது? '' என்று அழுதான்.
பீமன் அதைக் கேட்டு கோபம் கொண்டான்.
''தம்பி... கண்ணீரும் வெதும்பலும் சாமான்யர்களின் ஆயுதங்கள். உன் மகனை விதியை மீறிக் கொன்றதில் ஆச்சார்யாரும் ஒருவர். எனவே இவர் பொருட்டு எவ்வளவு வேண்டுமானாலும் நாம் விதிகளை மீறலாம்'' என்றான்.
அதன்பின் அர்ஜூனனும் சமாதானம் கொண்டான்.
''இனி கர்ணன் மட்டும் தான் எச்சம். அவனையும் அழித்து விட்டால் யுத்தம் முடிந்து விடும். துரியோதனனும் நேருக்கு நேர் நின்று போரிட்டாக வேண்டும்...'' என்று பீமன் தொடரவும் கிருஷ்ணன் புன்னகையுடன் பார்த்தான்.
அப்படி கிருஷ்ணன் பார்த்தாலே அதன் பொருளே வேறு என்று தான் எல்லோருக்கும் தெரியுமே?
''மாதவா... உன் புன்னகைக்கான காரணத்தை கூறிவிடு...'' என்றான் பீமன்.
''பீமா... இடையில் இன்னும் ஒருவன் இருக்க அடுத்து கர்ணன் என்று தவறாக முடிவு செய்து விட்டாயே...''
''இன்னும் ஒருவனா... யார் அது?''
''இந்த போர்க்களத்தில் உண்மையில் இறந்தது யானை தான். யானையின் பெயர் கொண்டவனல்ல...''
''ஓ... அஸ்வத்தாமனா?''
''அவனே தான்... தந்தையை மிஞ்சிய வீரன் அஸ்வத்தாமன்! அதிலும் இப்போது அவன் பெயரால் ஆச்சார்யார் கொல்லப்பட்டதால் கொந்தளிப்போடு இருப்பான்... இது தான் சாக்கு என்று துரியோதனனும், சகுனியும் அவனை துாண்டி விட்டபடி இருப்பார்கள். அவன் ஆக்ரோஷமாய் வந்தால் நான் உட்பட அனைவரும் சாம்பல் தான்...!'' - கிருஷ்ணன் சொன்ன விதமே கிலி மூட்டியது.
''கிருஷ்ணா... நீயா இப்படி சொல்கிறாய்? அஸ்வத்தாமன் அத்தனை பெரிய வீரனா?''
''அவன் வசம் உள்ள நாராயண அஸ்திரம் ஒன்று போதுமே?''
''அடடா... இதை நானும் கூட மறந்தேனே...''
தர்மன் தளரத் தொடங்க, ''கிருஷ்ணா... நீயே இந்த தருணத்திலும் எங்களைக் காப்பாற்ற வேண்டும்'' என்றான் பீமன்.
கிருஷ்ணன் ஆமோதிப்போடு புன்னகைத்தான்!
துரியோதனன் இடிந்து போய் அமர்ந்திருக்கும் நிலையில், சகுனியும் குமைந்தபடி இருக்க அவர்கள் எதிரில் அஸ்வத்தாமன் அனலாய் கொதித்தான்.
'' என் தந்தையை அநியாயமாக கொன்ற பாண்டவர்களை நிர்மூலமாக்கிவிட்டே தண்ணீர் கூட அருந்துவேன்'' என்று சபதம் செய்தான்.
''அற்புதம்! இந்த ஆவேசம் தான் இப்போது தேவை. நல்ல வேளையாக நாராயணாஸ்த்ரம் உன்வசம் உள்ளது. அதைப் பயன்படுத்த இது தான் சரியான தருணம். உன் தந்தையின் உடல், சிரம் ஒட்ட வைக்கப்பட்ட நிலையில் ஈம காரியத்தின் பொருட்டு பாதுகாக்கப்படும். அது நீ யுத்தத்தில் பாண்டவர்களை அழித்துவிட்டு வரும் வரை காத்திருக்கட்டும்'' என்ற சகுனி முன் அவர்கள் சகலரையும் வணங்கிய அஸ்வத்தாமன், ''துரியோதனா... நான் திரும்பும் போது பாண்டவர்கள் எவரும் உயிருடன் இருக்க மாட்டார்கள். அப்படி அவர்கள் இருக்க நேர்ந்தால் நான் தோற்றவன் ஆவேன். அப்படி தோற்க நேர்ந்தால் நான் ஆயுதம் ஏந்தவோ, போரிடவோ மாட்டேன் இது சத்தியம்.'' என்று ஆவேசத்தோடு சொல்லிவிட்டு புறப்பட்ட அஸ்வத்தாமனின் பேச்சில் துரியோதனனுக்கும் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது!
விடிந்து விட்டது!
அந்த யுத்த களம் தனது யுத்த நாட்களில் பதினைந்தாவது நாளை சந்தித்த நிலையில் களத்துக்குள் ஆவேசமாக வந்து நின்றான் அஸ்வத்தாமன்!
எதிர் திசையில் எதிர்பார்த்துக் காத்திருந்தது பாண்டவப் படை. குறிப்பாக துரோணரை வெட்டிக் கொன்ற திருஷ்டத்துய்மனை கிருஷ்ணன் முன் நிறுத்தியிருந்தான். அவன் அருகில் அடாத ஆத்திரத்தோடு பீமன்.
அஸ்வத்தாமன் கொக்கரிக்கத் தொடங்கினான். ''கோழைப் பாண்டவர்களே! என் தந்தையை என் பெயரால் ஏமாற்றிய துரோகிகளே... இன்றோடு உங்கள் அத்தனை பேரின் கதையும் முடியப் போகிறது. அநியாயமாக என் தந்தையை கொன்ற உங்களை என் நாராயணாஸ்த்ரம் சாம்பலாக்கப் போவதை காணுங்கள்...'' என்றபடியே விண்ணில் ஏவினான். முதலில் ஒற்றை அஸ்த்ரமாக புறப்பட்ட அந்த பாணம் விண்ணில் நுாறு ஆயிரம் பத்தாயிரம் என்று விரிவடைந்தது.
பாண்டவர்கள் திகைத்து நிற்க கிருஷ்ணன் பதட்டமின்றி, ''அனைவரும் ஆயுதங்களை கீழே போடுங்கள். ரதத்தில் இருப்பவர்கள் ரதத்தை விட்டு இறங்கி நிராயுதபாணியாக கீழே நில்லுங்கள். இவ்வாறு செய்வது நாராயணாஸ்த்ரத்துக்கு நாம் செலுத்தும் வந்தனம் போன்றதாகும். தன்னை வணங்கிடும் நிராயுதபாணியை நாராயணாஸ்த்ரமும் ஏதும் செய்யாது'' என்று முழங்கியதோடு ரதத்தை விட்டு அவனும் இறங்கினான்! அதைப் பார்த்த பாண்டவ வீரர்களும், ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வணங்கினர். .
போர்க்களமே கருகி சாம்பல் மேடாகப் போகிறது என்ற கற்பனையில் இருந்த துரியோதனன் தனக்கான இடத்தில் இருந்து நடப்பதைப் பார்த்து அதிர்ந்தான். விண்ணில் விரிவடைந்த அத்தனை அஸ்திரங்களும் சீறிப் பாயாமல் அப்படியே துவண்டு விழுந்தன.
''அந்த கிருஷ்ணன் ஏதோ தந்திரம் செய்து நாராயணாஸ்த்ரத்தை மறித்து விட்டான். அஸ்வத்தாமா விடாதே... திரும்பவும் அதை ஏவு...'' என்ற துரியோதனனின் குரல் காற்றில் கலந்து மறைந்து போனது.
நாராயணாஸ்த்ரத்தை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்கிற விதி துரியோதனனுக்கு தெரிய வரவும் நிலை குலைந்தான். இந்த வேளை அர்ஜூனன் அஸ்வத்தாமன் சீண்டத் தொடங்கினான்.
''அஸ்வத்தாமா... உன்னைக் கொண்டு துரியோதனன் எங்களை வெல்லப் பார்க்கலாம். உன் பெயரைக் கொண்டு நாங்கள் முற்பட்டால் அது தவறோ? எங்களைக் கோழைகள் என்றாயே... கோழைகளை எதிர்க்க எதற்கு வரசித்தியான நாராயணாஸ்த்ரம்? சாதாரண அஸ்த்ரங்கள் போதாதா? நான் சாதாரண அஸ்த்ரங்களோடு தயாராக இருக்கிறேன். நீ அசலான வீரன் என்றால் எனக்கு இணையாக போரிடு. இயலாவிட்டால் ஓடி விடு'' என்று அர்ஜூனன் பாணம் போட, அஸ்வத்தாமனும் வேறு வழியின்றி எதிர்க்க முற்பட்டான். ஆனால் அர்ஜூனனின் தொடர் பாணங்களை அஸ்வத்தாமனால் எதிர் கொள்ள முடியவில்லை. அவனது வில்லையே அர்ஜூன பாணம் முறித்துப் போட்டது. நிலை குலைந்த அஸ்வத்தாமன் தன் சபதப்படியே போர்க்களத்தை விட்டு விலகத் தொடங்கினான்.
''எங்கள் குருவான உன் தந்தைக்கு ஈமக்கடன் செய்யவும், உங்கள் முன்னோர்கள் விண்ணகத்தில் தவிக்கக் கூடாது என்பதற்காகவும் உன்னை நான் உயிரோடு விடுகிறேன். இது கூட உன் தந்தைக்கு நாங்கள் செய்யும் அஞ்சலி போன்றது தான்... போய் துரியோதனனிடம் சொல்'' என்று அர்ஜூனன் சொன்ன சொற்கள் துரியோதனனை அடைந்த போது அவனுக்கு ஈயத்தைக் காய்ச்சி காதில் விட்டது போல் இருந்தது.
அவனது இறுதி நம்பிக்கையாக அங்கே இருந்தவன் கர்ணன் மட்டுமே!
கர்ணனும் 'நானிருக்கிறேன் துரியோதனா... கவலைப் படாதே...'' என்பது போல் துரியோதனனுக்கு ஆறுதல் அளித்தான்!
பதினைந்தாம் நாள் யுத்தமும் முடிந்து பதினாறாம் நாள் காலைப் பொழுது புலரத் தொடங்கியது!
- தொடரும்
- இந்திரா சவுந்தர்ராஜன்