
பீஷ்மர் மாளிகை முன் கிருஷ்ணனும், திரவுபதியும் வந்த ரதம் நின்றது.
மாளிகை வாயிலின் முதல்படியை தொட்டு கண்களில் ஒத்திக் கொண்டாள் திரவுபதி. அதற்கு கிருஷ்ணன், ''பீஷ்மர் மாளிகையின் வாசற்படிக்கு கூட வந்தனமா'' என கேட்டான்.
''ஆம் அண்ணா.. இந்த படிகளில் பிதாமகர் பாதங்கள் பட்டிருக்கும்?'' என கிருஷ்ணனை வியக்கச் செய்தாள் பாஞ்சாலி.
'உன் மனோபாவம் உயர்வானது..' என்ற கிருஷ்ணன் 'பாஞ்சாலி உன் முகத்தை மறைத்துக் கொள். நீ யாரென்று யாருக்கும் தெரியக் கூடாது..' என கூற திரவுபதியும் மூடிக் கொண்டே, ''ஏன் அண்ணா இப்படி?' என கேட்டாள்.
''தெரிந்து கொள்ளத்தானே போகிறாய்?'' என்றபடி மாளிகையினுள் சென்றனர்.
எதிர்வந்த சில தாதியர்களிடம், ''ஆச்சார்யார் விழித்து விட்டாரா?'' என கேட்டார்.
ஒரு மூத்த தாதி, ''தங்கள் வருகைக்காக காத்திருக்கிறார். இதோ போய் செய்தியை கூறி தங்களை வரவேற்க ஏற்பாடு செய்கிறோம்'' என பேச்சில் பதட்டம் காட்டினாள்.
'வேண்டாம்.. வேண்டாம்.. ஆச்சார்யாரை பதட்டப்பட வைக்க வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். வரவேற்பறையில் தானே இருக்கிறார்?'
'ஆம் பிரபு.. ஆனாலும் தங்களை நாங்கள் இப்படி எதிர்கொள்வது பிழையாகி விடாதா?'
'சரியும், பிழையும் என் வரையில் ஒன்றே.. உங்கள் பணிகளை செய்யுங்கள். ஆச்சார்யார் முன் எதிர்பாராமல் சென்று அவரை திக்குமுக்காட வைக்க வேண்டும்,'' என்ற கிருஷ்ணனை தாதிகள் வியப்போடு பார்த்தனர்.
தொடர்ந்து நடந்த கிருஷ்ணன் ஒரு கணம் நின்றான்.
'என்னண்ணா?'
''பாஞ்சாலி உன் கொலுசுகளை கழற்றுகிறாயா?''
''உத்தரவு அண்ணா''
திரவுபதி கொலுசை கழற்ற முற்பட்டாள். அதன் திருகு விடுபட மறுத்தது.
''என்னாயிற்று?''
'கழற்ற வரவில்லை..'
'அப்படியா.. எங்கே நிமிரு, நான் முயன்று பார்க்கிறேன்.' என்று கிருஷ்ணன் மண்டியிட்டு குனிந்து அவள் பாதங்களை நோக்கி கைகளை கொண்டு சென்றான்.
திரவுபதி துணுக்குற்றவளாய், ''அண்ணா வேண்டாம்..'' என பின் சென்றாள்.
''ஏன் பாஞ்சாலி .. நேரமாகிறது பார்...''
''அண்ணா..! நீங்கள் என் பாதங்களைத் தொடுவதா? என்ன கொடுமை.. நுண்ணுயிர் முதல் பேருயிர் வரை அடைய வேண்டிய பாதங்கள் கொண்டவர், இப்பாவியின் பாதங்களை தீண்டுவதா...? அந்த பாவத்தை எப்படி தொலைப்பேன்?'' என்றாள் திரவுபதி.
கிருஷ்ணன் புன்னகையோடு, ''எந்தச் செயலிலும் காரணமே காரியத்தை தீர்மானிக்கிறது பாஞ்சாலி. இங்கே நான் உன் பக்தியின் நாயகனல்ல... உங்களுக்கு உதவ வந்திருக்கும் மானுட யாதவன்!'' என்றான்.
திரவுபதியிடம் பிரமிப்பு.
'இந்த யாதவன் ஒரு கர்மவீரன்! கர்மவீரனுக்கு கடமையே அழகு. உன் பாதக்குறடும் சரி, கொலுசும் சரி... சப்தமெழுப்பக் கூடாது என்பது என் கணக்கு. அதற்கு மேல் இங்கே நானும், நீயும் சிந்திக்க தேவையில்லை. இவ்வளவு கூறியும் உன் மனம் சமாதானமடையவில்லை என்றால் ''சர்வம் கிருஷ்ணார்ப்பணம்'' என உனக்கேற்பட்ட பதட்டம் முதல் சகலத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்து விடு. மலர்களை மட்டுமல்ல... இவைகளையும் நான் ஏற்பவனே! பின் நீ நிர்மலமாகி விடுவாய். சரி தானே?' என்ற கிருஷ்ணன்
திரவுபதியின் கொலுசுகளை கழற்றி விட்டு, வரவேற்பறை சென்றான்.
''ஆச்சார்யாரே...'' என குரல் கொடுத்தான்..
பீஷ்மர் திரும்பினார்.
''கிருஷ்ணா.. மாதவா.. கோபி..'' என்று வேகமாய் முன்வந்து அவனது கரங்களை பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டார்.
''என்ன ஆச்சரியமூட்டும் விஜயம்... இப்படியா வரவேற்புக்கு ஆளாகாமல் பூனை போல் வந்து நிற்பாய்?'' என்றார் பீஷ்மர்.
'எல்லாம் காரணமாகத் தான்..' என பின்னால் திரும்பி திரவுபதியை பார்த்து 'என்ன இது மரம் போல் நின்று கொண்டு..
பிதாமகர் போன்ற பெரியோர்களை பார்த்த மாத்திரத்தில் காலில் விழ வேண்டாமா?' என்றான் அதட்டலாய்.
அடுத்த நொடி முகத்தை மூடிய நிலையில் முன் வந்து பீஷ்மரின் பாதங்களை வணங்கினாள்.
'ஆச்சார்யாரே.. ஆசீர்வதியுங்கள். விலைமதிப்பே இல்லாத உங்களின் ஆசீர்வாதத்திற்காகவே இவளை வலிந்து அழைத்து வந்தேன். யுத்தத்தில் நான் ஆயுதம் எடுத்துப் போராட போவதில்லை. எனக்கேதும் ஆகிவிடுமோ என்கிற அச்சம் இவளுக்கு. உங்கள் ஆசிகளே இவளுக்கு தெளிவையும் தைரியத்தையும் தர வேண்டும்.' என்றான்.
ஆச்சார்யாரிடம் பதட்டம்.
'தாயே எழுந்திரு.. தீர்க்க சுமங்கலியாக திகழ்வாய். என் போன்றவர்களே கிருஷ்ணன் கருணையால் ஜீவித்துக் கிடக்கும்போது, உனக்கு ஏன் பதட்டம்? இருப்பினும் சொல்கிறேன்.. நான் சத்யவிரதன் என்பது உண்மையானால் என் வாக்கும் பலிக்கட்டும். நீ தீர்க்க சுமங்கலியாக திகழ்வாய்... எழுந்திரு,'' என்றார்.
திரவுபதியும் நிமிர்ந்தாள். முகத்திரை விலகி அவள் முகம் தெரியவே, பீஷ்மரிடம் திகைப்பு.
'திரவுபதி நீயா?' என்றார் காற்றுக் குரலில்...
'ஆம் பிதாமகரே... உங்கள் ஆசிகளால் மனம் குளிர்ந்து விட்டது. யுத்த முகாந்திரமுள்ள வேளையில் உங்களின் ஆசி கிட்டாமல் போய் விடுமோ என கலங்கிஇருந்தேன். ஆனால் அண்ணா, அதற்கு நான் பொறுப்பு என அழைத்து வந்து ஆசியையும் பெற்றுத்தந்து விட்டார்... அண்ணா உங்களுக்கும் என் நன்றிகள்..'' என்றாள்
திரவுபதி. அடுத்த நொடியே பீஷ்மர் முகத்தில் ஒரு அர்த்தப் பொதியுள்ள புன்னகை.
'கிருஷ்ணா.. ஏதோ ஜாலம் புரியப் போகிறாய் என என் உள்ளுணர்வு சொல்லியது. பாண்டவர்களுடன் நீ இருப்பதால் அவர்கள் காப்பாற்றப் படுவதும் உறுதி என்றும் நம்பினேன். என் உள்ளுணர்வும் சரி, நம்பிக்கையும் சரி, வீண் போகவில்லை. திரவுபதியை ஆசீர்வதித்ததால் பாண்டவர்களை நான் எதிர்த்துக் கொல்ல, வழி இல்லாதபடி செய்து விட்டாயே... என் வாயைக் கொண்டே என் கைகளை கட்டி விட்டாயே.. உன்னை 'மாயாவி... மாயாவி' என்பான் துரியோதனன். அதை என்னிடமும் நிரூபித்து விட்டாயே?' என்ற பீஷ்மரை ''வைரத்தை வைரத்தால் தானே அறுக்க முடியும் ஆச்சார்யாரே'' என்றான் கிருஷ்ணனும்!
- தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்