sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கிருஷ்ணஜாலம் -2 (29)

/

கிருஷ்ணஜாலம் -2 (29)

கிருஷ்ணஜாலம் -2 (29)

கிருஷ்ணஜாலம் -2 (29)


ADDED : மே 04, 2018 02:55 PM

Google News

ADDED : மே 04, 2018 02:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அபிமன்யுவின் மரணம் பாண்டவர்களை நிலைகுலையச் செய்து விட்டது.

அபிமன்யு மனைவி உத்தரை சிலை போலாகி விட்டாள். கவுரவர்களோ கொண்டாடிக் கொண்டிருந்தனர். துரோணாச்சாரியாரை துரியோதனன் துாண்டி விட்டதன் விளைவு, அது அபிமன்யுவை அறுவடை செய்து விட்டது.

நிச்சயம் இந்த துக்கம் அர்ஜூனனை செயலிழக்கச் செய்து விடும். இனி அவனால் இதுநாள் வரையில் போரிட்டது போல் போரிட முடியாது. சோகத்திலேயே கொடிய சோகம் புத்திரசோகம். அது வசிஷ்டரையே தற்கொலைக்கு துாண்டியது. அர்ஜூனனைத் தானா விட்டு வைக்கும்?

துரியோதனனும், சகுனியும் இப்படித்தான் கணக்குப் போட்டனர். அது ஓரளவு உண்மையும் கூட என்பது போல் அர்ஜூனனும் நடந்து கொண்டான். போர்க்களத்தில் தென்பகுதியில் சம்சப்தர்களோடு மோதியவன் களத்தில் இருந்து திரும்பிய நிலையில் அபிமன்யுவை பிணமாய் கண்டதும் அப்படியே மயங்கி விட்டான்.

கண் விழித்தவன் கிருஷ்ணனிடம் ஓடி வந்து குமுறத் தொடங்கினான்.

''கிருஷ்ணா... இது என்ன நியாயம்? அபிமன்யு இப்போது தான் வாழத் தொடங்கி உள்ளான். அதற்குள் அவன் விதி முடிந்து விட்டதே? என் மகன் இந்த மண்ணில் தொடர்ந்து வாழ்ந்தால் என்னாகி விடும்? உதிக்கின்ற சூரியன் தான் உதிக்காமல் போய் விடுவானா? இல்லை சமுத்திரங்கள் பொங்கி ஜலப்பிரளயம் உருவாகி விடுமா? என்னவாகும்?அந்த எமனுக்கு எதற்கு என் மகனின் உயிர்?'' அர்ஜூனன் வெடித்துக் கதறினான்.

''இதற்கு தான் யுத்தமே வேண்டாம் என்றேன்... ஆனால் உபதேசம் எனும் பெயரில் என்னை நீ யுத்தக்காரனாக்கி விட்டாய்? என்னை மாற்றிய உன்னால் என் மகனின் விதியை மாற்ற முடியவில்லையே?''

கிருஷ்ணனோ அர்ஜூனனின் குமுறலுக்கு மவுனமாக இருந்தான்.

''வாய் திறந்து பேசு கிருஷ்ணா... இந்தப் போரில் இனி நான் வெற்றி பெறப் போவதாகவே இருக்கட்டும். அந்த வெற்றியை என்னால் அனுபவிக்க முடியுமா? எங்கு திரும்பினாலும் அபிமன்யுவின் முகம் தானே தெரியும்? என் அபிமன்யு திரும்ப வருவானா?''

அர்ஜூனன் உரத்த குரலில் கேட்டதோடு கிருஷ்ணனின் தோள்களைப் பிடித்து உலுக்கவும் செய்தான். அதைக்கண்ட தர்மன், பீமன், நகுலன், சகாதேவன் என்கிற நால்வரும் கூட அர்ஜூனனை தடுக்க இயலாதவர்களாய் அழுத வண்ணமிருந்தனர்.

இவர்களே இப்படி என்றால் குந்தி, சுபத்ரை, திரவுபதி, உத்தரை இவர்களின் நிலையை வார்த்தைகளால் கூறத் தேவையே இல்லை.

அர்ஜூனனிடம் பிள்ளைப்பாசம் ஒரு கட்டத்தில் வாளை எடுத்து அவன் சிரத்தை வெட்டிக் கொள்ளத் துாண்டியது. அதற்கு அவன் முனைந்த போது, கிருஷ்ணன் ஒரு விநாடி அவன் கண்களுக்கு அவனிடம் சத்தியம் பெற்ற அந்தணரின் வடிவத்தைக் காட்டி, அர்ஜூனனுக்கு ஞாபகப்படுத்தினார். அவனும் அப்படியே ஒடுங்கிப் போய் ''கிருஷ்ணா... அன்று அந்தணர் ஒருவர் தன் மகனின் இறப்பு கண்டு தீயில் பாய முயன்றதெல்லாம் கூட உன் நாடகம் தானா?'' என்று கேட்டான். கிருஷ்ணனிடம் அதே மவுனம்.

''எத்தனை கல் நெஞ்சம் உனக்கு? என் மகனின் மரணம், உனக்கு அப்போதே தெரிந்திருக்கிறது. தெரிந்திருந்தும் என்னைத் தான் கட்டிப் போட்டிருக்கிறாய்... போர்க்களத்தில் அபிமன்யுவை காப்பாற்ற என்னை வழிநடத்தவில்லை. இது எத்தனை பெரிய துரோகம்?''

அபிமன்யு பாசத்துடிப்பில் கிருஷ்ணனை துரோகி என்றும் சொல்லாமல் சொல்ல, கிருஷ்ணனிடம் அப்போதும் சலனமில்லை.

''வாயைத் திறந்து பேசு கிருஷ்ணா... அபிமன்யு உன் புதல்வனாக இருந்திருந்தால் இப்படி நடந்து கொண்டிருப்பாயா?'' என்று ஆக்ரோஷமாக கேட்டவன் முன் மவுனம் கலைத்து மெல்லச் சிரித்தான் கிருஷ்ணன்.

''புன்னகை... மாயப்புன்னகை... உன்னால் மட்டுமே முடிந்த மாயப்புன்னகை... எப்படி கிருஷ்ணா இந்நிலையிலும் புன்னகைக்க உன்னால் முடிகிறது?''

கிருஷ்ணன் மெல்ல வாய் மலர்ந்தான்,

''நான் முன்பே கூறியுள்ளேன். புன்னகைக்க காலம் தேவையில்லை காரணம் போதுமானதென்று?''

''இங்கே அபிமன்யுவின் மரணம் நீ புன்னகைக்க காரணமா? துக்கத்தில் ஒருவனால் புன்னகைக்க முடியுமா?''

''கர்ம வீரர்கள் போர்க்கள மரணங்களை துக்கத்தோடு சேர்ப்பதில்லை அர்ஜூனா. உன் மகன் வீரமரணம் அடைந்துள்ளான் இப்போது வீர சொர்க்கத்திலும் இருக்கிறான்.''

''இது என்ன பேச்சு? எங்களைப் பிரிந்து எங்கிருந்தாலும் அதை, அவன் நரகமாகவே கருதுவான். இங்கே நாங்கள் துடிப்பது போல் அவனும் துடித்துக் கொண்டிருப்பான்.''

''அப்படியா?''

''என்ன அப்படியா? எங்கள் பற்று பாசம் பற்றி நீ அறியாதவனா?''

''நன்றாக அறிவேன். நீ தான் பாசத்தில் வழுக்கியதால் பல உண்மைகளை அறியவில்லை.''

''அப்படி எதை நான் அறியவில்லை.''

''பிறப்பவர் ஒரு நாள் இறந்தாக வேண்டும்... ஒரு எல்லைக்குட்பட்டது தானே உயிர்களின் வாழ்வு?''

''மறுக்கவில்லை. அதற்கொரு வயது உள்ளதே? இப்படி பதினாறு வயது பாலகனுக்கு எல்லாம் மரணம் வரும்?''

''வரும் என்று தெரிந்தே புகுவது தானே போர்க்களம்?''

''கிருஷ்ணா சாதுர்யமாக பேசி என் வாயை அடைக்க முனையாதே. என் உடம்பெல்லாம் துடிக்கிறது... என் மகன் எங்களைப் பிரிந்து எங்களை விட பெரிய துயரத்தில் இருப்பான். அவன் ஆத்மா சாந்தியின்றி அலைந்து கொண்டிருக்கும்.''

''அப்படியா?''

''இப்படி எதுவும் தெரியாதவன் போல் திரும்ப திரும்ப கேட்காதே. உன்னை கெஞ்சிக் கேட்கிறேன். நீயே பரமபுருஷன் என்பது உண்மையானால், உன்னில் இருந்தே சகலமும் தோன்றியது சத்தியமானால், என் மகனின் ஆத்மாவை என் கண்களுக்கு காட்டு, நான் முதலில் அவனிடம் மன்னிப்பு கோர வேண்டும்.''

''பிதற்றாதே அர்ஜூனா... பாசமும் பந்தமும் உயிர் பிரியும் வரை தான். உடம்பை விட்டு உயிர் பிரிந்தபின் அது தன் கர்மத்திற்கேற்ப செயல்படும்.''

''அப்படியானால் பிரிந்தவர் பொருட்டு நிகழ்த்தப்படும் அபர காரியங்கள் அர்த்தமற்றவையா?''

''அது நீ வாழும் நாளில் நலமாய் வாழ துணை செய்யும். போன உயிருக்கும் உனது அளிப்பாய் போய்ச்சேரும். நாம் எதைக் கொடுக்கிறோமோ அது தான் நமக்கு திரும்ப வருகிறது. அப்படிப் பார்த்தால் அபரகாரியங்கள் ஒரு வகையில் நமக்கு நாம் செய்து கொள்பவை...''

''போதும் கிருஷ்ணா... உன்னோடு பேச என்னால் இயலாது. எனக்கு என் மகனின் ஆத்மாவை காட்டமாட்டாயா?'' அர்ஜூனன் கெஞ்சினான்.

''எப்போது உனக்கு நான் நண்பனாகிப் போனேனோ...? அப்படியே குந்திமாதா வழி உறவும் உருவானதோ அப்போதே நீ கிருஷ்ண சம்பந்தன் ஆகி விட்டாய். என்னை சேர்ந்தவர்களுக்கு ஞானமளிப்பது என் செயல்களிலும் ஒன்று.அதன் அடிப்படையில் உன் விருப்பத்தை நான் நிறைவேற்றுகிறேன். நீ காணப்போகும் காட்சி உனக்கு தெளிவை உருவாக்கட்டும்.'' என்றபடியே அர்ஜூனனின் சிரம் மேல் தன் கரம் வைத்தான் கிருஷ்ணன்.

அடுத்த நொடி அர்ஜூனன் அபிமன்யு அருகில் இருக்க, அபிமன்யுவோ சொர்க்கத்தில் மது அருந்திக் கொண்டு கணிகையின் நடனத்தை ரசித்தபடி இருந்தான். அர்ஜூனனைப் பார்த்தும் அவனிடம் எந்த பாசத்துடிப்புமில்லை! 'அப்பா இங்கே எப்படி வந்தீர்கள்?' என்கிற கேள்வியுமில்லை.

'மகனே அபிமன்யு...' என்கிற அர்ஜூனனின் குரலும் அவன் காதில் விழவில்லை. அருகில் சென்று தோளைத் தொடவும் ஏறிட்ட அபிமன்யு ''யார் நீ?'' என்று கேட்டான். அர்ஜூனனிடம் திகைப்பு.

''என்னைத் தெரியவில்லை?'' என்று திடுக்கிட்டான்.

''உன்னை எனக்கு எப்படி தெரியும்? நானே இப்போது தான் இங்கு வந்திருக்கிறேன். எவ்வளவு காலம் இங்கே இருப்பேன் என்பதும் தெரியாது. இதில் நீ வந்து இப்படி கேட்டால், என்ன சொல்ல முடியும் என்னால்? விலகிச்செல்... நான் நடனத்தை ரசிக்க வேண்டும்.'' என்ற அபிமன்யு அந்த நொடியே அர்ஜூனனின் ஞானக்கண்களை திறந்து விட்டான்.

பூவுலகின் எந்தவிதமான துன்பங்களும் இல்லாத ஒருவனாய் தான் அபிமன்யுவும் காட்சி தந்தான். இவன் பாசத்தால் துடிதுடித்தபடி இருப்பான் என்று கருதியது எத்தனை மடமை?

'ஒருவர் வாழ்வை இன்னொருவர் வாழ இயலாது... அவரவர் வாழ்வையே அவரவரே வாழ இயலும்... பாசமும், பந்தமும் வாழும் நாளுக்கு தான்... போகும் நாளுக்கும், பூமிக்கு அப்பாலும் அதற்கு இடமே கிடையாது. இதுவே உயிர்களின் இயற்கை நியதி.'

அர்ஜூனன் புரிந்து கொள்ள, கிருஷ்ணனும் சிரசிலிருந்து கரத்தை விலக்கிவிட எழுந்து நின்ற அர்ஜூனன் முகத்தில் ஒரு அபார தெளிவு!

- தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us