sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஜெயித்துக் காட்டுவோம்! (8)

/

ஜெயித்துக் காட்டுவோம்! (8)

ஜெயித்துக் காட்டுவோம்! (8)

ஜெயித்துக் காட்டுவோம்! (8)


ADDED : நவ 03, 2017 09:50 AM

Google News

ADDED : நவ 03, 2017 09:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரந்த கடலை பார்த்து ரசிக்க திசையெங்கும் இருந்து வருகிறது மக்கள் கூட்டம்.

வளைந்தும் நெளிந்தும், விழுந்தும் எழுந்தும், வந்துபோகும் அலைகள் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

இதையும் விட ஆச்சர்யம் நம் அனைவர்க்குள்ளேயும் அடங்கியிருக்கிறது.

ஆம்! நொடிக்கு நொடி ஆயிரத்திற்கும் அதிகமான எண்ண அலைகள், நம் இதயக்கடலில் எழுந்து கொண்டே அல்லவா இருக்கிறது?

'கையளவே தான் இதயம் வைத்தான்

கடல் போலே அதில் ஆசை வைத்தான்!'

'ஆயிரம் வாசல் இதயம்! அதில்

ஆயிரம் எண்ணங்கள் உதயம்!'

என்று பாடுகிறாரே கண்ணதாசன். அலைபாயும் எண்ணத்தை பல திசைகளிலும் சிதற விடாமல் ஒருமுகப்படுத்தினால் ஆற்றல் அபரிமிதமாக வெளிப்படும். 'ஒன்றி இருந்து நினைமின்கள்' என்று தேவாரம் ஒருமுகப்பட்ட மனதுடன் வழிபடுவதன் சிறப்பை உணர்த்துகின்றது.

ஆன்மாக்கள் லயிக்கும் இடம் ஆலயம்.

ஆனால், அங்கு...

'அந்த பெண் என்ன புடவை அணிந்திருக்கிறாள்?'

'அலைபேசியில் அவர் என்ன பேசுகிறார்?'

'பிரகாரத்தில் என்ன பிரசாதம் வழங்குகிறார்கள்?'

'கோபுர வாசலில் விட்டு வந்த செருப்பு காணாமல் போகுமோ?'

என்று பல சிந்தனைகள் மனதில் உருவாக ஆலய வழிபாட்டில் நாம் ஈடுபட முடியுமா?

இப்படி வணங்கினால் இறைவன் எப்படி வரம் தருவான்?

'அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்

ஆலய வழிபாடில்லை!' என்கிறார் கண்ணதாசன்.

ஒருமைப்பட்ட மனதுடன் கடவுளை வழிபட வேண்டும் என்கின்றனர் ஞானிகள்.

நிறைய துவாரங்கள் உள்ள நீர்த்தொட்டியில் தண்ணீர் பிடிக்கும் போது, ஒவ்வொரு துவாரம் வழியாகவும் சிறிதளவே தண்ணீர் வரும். ஆனால், தொட்டியில் ஒரு துவாரம் மட்டும் இருக்க, மற்றதை அடைத்தால் அருவி போல தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அது போலத் தான் மனம் சிதறாமல், குறிக்கோளில் உறுதியாக ஈடுபட்டால் வாழ்வில் நாம் ஜெயிப்பது நிச்சயம்.

திருப்புகழில் அருணகிரிநாதர்,

'திடம் இலி

நல்திறம் இலி

அற்புதமான செயல் இலி!' என்று பாடுகின்றார்.

ஒன்றை திடமாகப் பற்றுவது திறமை. அதன் மூலமாகத் தான் மனிதன் செயலாற்ற முடியும்.

பத்து நாள் ஒன்றைப் பற்றுவது.

பதினோராம் நாள் வேறொன்றோடு சுற்றுவது என்றிருந்தால், 'ஆற்றில் ஒரு கால்; சேற்றில் ஒரு கால்' என அல்லல் படவேண்டியது தான்.

மகான் ராமகிருஷ்ணரிடம் ஒருவன் சென்றான்.

'ஐயா.... புதிதாக நிலம் வாங்கினேன்.

தண்ணீருக்காக கிணறு தோண்டினேன். ஆனால், ஊற்று தென்படவில்லை. என்ன செய்யலாம்?'

'குருநாதரிடம் விளக்கம் கேட்க மேலான விஷயங்கள் எத்தனையோ இருக்கும் போது இப்படியா விவஸ்தை இல்லாமல் கேட்பது?' என்று மற்றவர்கள் கோபம் கொண்டனர். ஆனால் ராமகிருஷ்ணர்,

'நிலத்தில் எந்த மூலையில் கிணறு வெட்டினாய்?'என்று கேட்டார்.

'சாமி.... கிழக்கு மூலையில் ஐந்து அடி, பின் அதன் எதிர்ப்புறத்தில் ஆறு அடி, பின் தெற்கு மூலையில் ஏழு அடி தோண்டினேன். மூன்றிலும் தண்ணீர் வரவில்லை' என்றான் வந்தவன்.

'ஐந்தடி, ஆறடி, ஏழடி என மூன்றிலும் செய்த முயற்சியை ஒரே இடத்தில் பதினெட்டு அடியாக தோண்டியிருந்தால் தண்ணீர் வந்திருக்குமே' என்றார்.

அடுத்த விநாடியே எல்லாம் நடக்க வேண்டும் என்னும் பேராசை, அவசர புத்தி தான் மனிதனின் திட நம்பிக்கையை திசை திருப்புகின்றன.

சாதனையாளர்களின் வரலாற்றை புரட்டினால், தோல்வியில் கலங்காமை, விடாமுயற்சி, ஒருமுகப்பட்ட மனம் என்பதை உணரலாம்.

'ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது!' என நாளும் நம்பிக்கையுடன் மின்சார பல்பு கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் எடிசன்.

பரிசோதனைகளை நிகழ்த்தினார்.

'புதிய கண்டுபிடிப்பு' என்பது அவ்வளவு எளிதான விஷயமா?

3000 முறை சோதனையில் ஈடுபட்டும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் தான் வெற்றி கிடைத்தது.

அந்த நேரத்தில் பத்திரிகை ஆசிரியர் ஒருவர், 'இப்போது முயற்சியில் வெற்றி பெற்று மின்விளக்கை கண்டுபிடித்து விட்டீர்கள்; ஆனாலும் மூவாயிரம் முறை தோல்வி அடைந்தீர்களே...''

எழுச்சியுடன் எடிசன், ''மூவாயிரம் வழிகளில் பல்பு செயல்படாது என்பதை அறிந்து கொண்டேனே தவிர, அவற்றை தோல்வி என்று சொல்ல முடியாது'' என்றார்.

இதையே,

'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்'

என்று தீர்மானமாக சொல்கிறார் திருவள்ளுவர்.

தொடரும்

திருப்புகழ் மதிவண்ணன்

அலைபேசி: 98411 69590






      Dinamalar
      Follow us