ADDED : ஏப் 06, 2018 03:29 PM

வாழ்க்கையில் எல்லா வசதியையும் அடைந்து விட்டதாக நினைக்கிறோம். ஆனால், 'நிம்மதி' என்ற ஒன்று விடுபட்டதை பலரும் உணர்வதே இல்லை.
'சொந்தமாக கார் வாங்கி, பயணம் செய்ய வேண்டும். மற்றவர் அதைப் பார்த்து வாய் பிளந்து நிற்க வேண்டும்.' என ஆசைப்பட்ட ஒருவர், அப்படியே வாங்கி, மனைவி குழந்தைகளுடன் சுற்றி வந்தார். சில மாதம் சென்றதும், 'என் பக்கத்து வீட்டுக்காரன் படகுக்காரில் மிதந்து செல்கிறான் தெரியுமா? என் காரும் இருக்கிறதே ஏதோ பேருக்கு...' என பெருமூச்சு விட ஆரம்பித்தார்.
தாயுமானவர் சொல்கிறார்,
'ஆசைக்கோர் அளவு இல்லை!
அகிலம் எல்லாம் கட்டி ஆளினும்
கடல் மீதில் ஆணை செய்யவே நினைவர்'
'உலகம் முழுவதையும் உனக்கே சொந்தம்' என்று பட்டா போட்டு கொடுத்தாலும், 'கடலில் எனக்கு உரிமை இல்லையே...' என்று கவலைப்படுவானாம்.
ஒரு பொருளை அடையும் வரையில் தான் மனதிற்கு அந்த பொருளின் மீது ஆசை இருக்கும். பின், வேறு ஒரு பொருளுக்கு ஆசைப்பட்டு அலையும் இந்த பொல்லாத மனம்!
ஆகவே, 'இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்' இலக்கணத்தை கற்றுக் கொள்ளுங்கள்.
போகும் பாதையில் கல், முள், மேடு, பள்ளம் இல்லாமல், பஞ்சுமெத்தை போல் இருக்க வேண்டும் என விரும்பினால், பாதை முழுவதும் சீர்திருத்த முடியுமா என்ன? அதற்கு ஒரு காலணி அணிந்தாலே பிரச்னை தீரும் அல்லவா! அதே மாதிரி, ஒவ்வொருவரும் மனதிற்கு 'திருப்தி' என்னும் அணிகலனை அணிந்தால் போதும். வாழ்வில் வசந்தம் வீசும்!
இந்த காலத்தில் தனிமனித வாழ்வின் தரம் உயர்ந்ததாக சொல்கிறார்கள் உண்மையா?
'டிவி', பிரிட்ஜ், கம்ப்யூட்டர், பைக், கார், வீடு இவையெல்லாம் கிடைத்து விட்டால் போதுமா?
காஞ்சி மகா சுவாமிகள் சொல்வதை கேளுங்கள்,
'வாழ்க்கை தரம் என்பது வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தேவைகளை அதிகமாக்கி அவற்றிற்காக அல்லும், பகலும் அலைந்து கொண்டிருப்பதில் நிம்மதி, ஆரோக்கியத்தை இழக்கிறார்கள். மேல்நாட்டுக்காரர்கள் போல், ஆடம்பர வாழ்விற்கு பறக்கிறோம். அதன் உச்சிக்குப் போன அவர்களோ, சலிப்பு ஏற்பட்டு நம்முடைய பக்தி, யோகாசனம், வேதாந்தத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்தும் நாம் அறிவு பெறவில்லை என்றால் நமக்கு அதிர்ஷ்டக்குறைவே'.
தேவை கருதி பொருள் வாங்க வேண்டுமே தவிர, ஆடம்பரத்திற்கு வாங்கி அவஸ்தை படக்கூடாது.
'அவசியம் இல்லாத பொருட்களை வாங்குபவன் வறுமையை விலை கொடுத்து வாங்குகிறான்' என்கிறது பழமொழி ஒன்று.
துறவி ஒருவரை சந்தித்து ஆசி பெறச் சென்றான் ஒருவன். ஆசிரமத்திற்குள் நுழைந்து, ''குருநாதரே'' என்று குரல் கொடுத்தான்.
தரையில் படுத்திருந்த துறவி எழுந்தபடி, ''வா'' என வரவேற்றார்.
கட்டில், மேஜை, மின்விசிறி என் எந்தவித சாமான்களும் அவர் அறையில் இல்லை.
சில புத்தகங்களும், தண்ணீர் பானையும் தான் கண்ணில் பட்டது.
அவன் கேட்டான், ''உங்கள் அறையில் எந்த பொருளும் இல்லையே... ஏன்?''
''உன்னிடமும் தான் எதுவும் இல்லை'' என்றார் துறவி.
''நான் உங்களிடம் ஆசி பெற ஒரு விருந்தினராக தானே வந்துள்ளேன், எனக்கு எதற்கு பொருட்கள்?''
துறவி சிரித்தபடி,''நானும் உலகிற்கு ஒரு விருந்தினராக தான் வந்துள்ளேன்.'' என்றார். வந்தவன் தலைகுனிந்தான்.
அர்த்தம் பொதிந்த துறவியின் வார்த்தையை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
'உண்பது நாழி! உடுப்பது நான்கு முழம்' என்ற அவ்வைப்பாட்டி அடுத்த வரியில் என்ன சொல்கிறாள் தெரியுமா?
'எண்பது கோடி நினைந்து எண்ணுவன'
-- தொடரும்
அலைபேசி: 98411 69590
திருப்புகழ் மதிவண்ணன்