sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஜெயித்து காட்டுவோம்! (30)

/

ஜெயித்து காட்டுவோம்! (30)

ஜெயித்து காட்டுவோம்! (30)

ஜெயித்து காட்டுவோம்! (30)


ADDED : ஏப் 18, 2018 11:44 AM

Google News

ADDED : ஏப் 18, 2018 11:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! இந்த சந்தர்ப்பம் மீண்டும் வராது! பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்று வணிக நிறுவனங்கள் விளம்பரம் செய்வதை பார்த்திருப்போம்.

ஆனால், நாம் பெற்றுள்ள மனிதப்பிறவியும் அப்படிப்பட்டது தானே!

பூமியில் நாம் வாழும் வாழ்க்கை மீண்டும் பெற முடியாத ஒன்று!

இதை உணர்ந்தும், வாழ்வில் சாதித்துக் காட்டுவோர் அதிகம் இல்லை!

திரும்பப் பெற முடியாத வாழ்நாளை ஒவ்வொருவரும், பயனுள்ள வகையில் செலவிட வேண்டும்.

தேவை இல்லாத பொழுதுபோக்குகள், களியாட்டங்கள், அநாவசியமான அரட்டைக் கச்சேரிகள், அதிகப்படியான துாக்கம், சோம்பேறித்தனம் என்று ஆயுள் காலத்தை நாமே அழித்துக் கொள்ளலாமா?

'சிக்கனம்' என்பது பணத்தைப் பொறுத்தது மட்டும் அல்ல. காலத்தையும் சிக்கனமாக பயன்படுத்துபவனே ஜெயித்துக்காட்டுவோர் பட்டியலில் இடம் பெற முடியும்.

புகழ்பெற்ற அறிஞர் ஒருவர், வரவேற்பறையில் நாற்காலியில் அமர்ந்தபடி செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரைக் காண மூன்று அன்பர்கள் வந்தனர். அன்போடு வரவேற்ற அறிஞர், நாற்காலியில் இருந்து எழுந்தார்.

நால்வரும் நின்றபடி பேசிக் கொண்டிருந்த போது வந்தவரில் ஒருவர், 'உட்கார்ந்து பேசலாமே...' என்றார்.

அறிஞர் பதிலளித்தார், 'ஒரே ஒரு நாற்காலி தான் வீட்டில் இருக்கிறது. எனக்கு அது போதும். முக்கியமான நபர் வந்தால் அவரை மட்டும் உட்கார வைத்து, நான் நின்றபடி பேசுவேன். சோபா, கட்டில் இருந்தால் வருபவர்கள் அதிகமாகப் பேசி பொன்னான எந்நேரத்தை வீணாக்குவார்களே!'

வினாடி நேரத்தையும் வீணாக்காமல் வேலை செய்து கொண்டிருந்தால் ஓய்வு என்பது தேவையே இல்லையா என்று சிலர் கேட்கலாம்.

ஓய்வு என்றால் என்ன தெரியுமா?

அயராது உழைப்பவர் வேலையை நிறுத்தி விட்டு, அவருக்கு ஈடுபாடு உள்ள வேறு பணியோடு தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். நெடுநேரம் துாங்குவதும், நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பதும் 'ஓய்வு' என்று தவறாக எண்ணுகிறோம்.

ஆகாரம் அரை, நித்திரை கால் என்கிறார் வள்ளலார். அரை வயிற்றுக்கு உணவு எடுத்துக் கொண்டால் போதும். துாக்கம் ஒருநாளில் ஏழு மணி நேரம் போதும். மிதமிஞ்சிய உணவு, மிதமிஞ்சிய துாக்கத்தால் சோம்பல் குணம் அதிகமாகும்.

'சோம்பல் என்பது தனக்குத் தானே கட்டிக் கொள்ளும் தற்காலிக கல்லறை என்கிறது'

ஒரு மேல்நாட்டு பழமொழி.

'நல்ல பொழுதை எல்லாம் துாங்கிக் கழித்தவர்கள்

நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் - சிலர்

அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்து விட்டு

அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்

விழித்துக் கொண்டோர் எல்லாம்

பிழைத்துக் கொண்டார் - இங்கு

குறட்டை விட்டோர் எல்லாம்

கோட்டை விட்டார்'

என பாடியிருக்கிறார் பட்டுக்கோட்டையார்.

விஞ்ஞானி பி.சி.ராய் பேட்டி ஒன்றில், 'திட்டம் வகுத்துக் கொண்டு அதன்படி நடக்காத சோம்பேறிகளுக்கு, அவசியமான செயல்களுக்கு மட்டுமல்ல; அன்றாடக் கடமைகளுக்கே நேரம் கிடைப்பதில்லை. ஆனால் சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கோ, நேரம் கிடைக்கவில்லையே என்ற பிரச்னை ஏற்படுவதில்லை. எனக்கு இப்போது அறுபது வயது. ஆனால், இப்போது தான் அதிக உற்சாகத்துடன் இருக்கிறேன். தேசியப்பணி, சுதேசி பிரசாரம், பொது நிகழ்ச்சிகள் என பங்கேற்று இரண்டு லட்சம் மைல்கள் பயணம் செய்துள்ளேன். இரண்டுமுறை ஐரோப்பா சென்றுள்ளேன். இத்தனைக்கும் மத்தியில் என் அறிவியல் ஆய்விற்கு மட்டும் எந்தத் தடங்கலும் ஏற்பட வில்லை. என் விடுமுறை நாட்களைக் குறைத்துக் கொண்டு விஞ்ஞான ஆராய்ச்சியை தொடர்ந்தேன்.

'சாந்துணையும் கல்லாதவாறு' என்கிறார் திருவள்ளுவர். இறக்கும் வரை ஒருவன் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே அவர் தரும் செய்தி.

புகழ் பெற்ற செல்வந்தர் ராக்பெல்லர் ஒருமுறை விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் அமர்ந்த இளைஞர் கேட்டார்.

'இவ்வளவு வயதான பிறகும் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியம் என்ன? எண்ணற்ற நிறுவனங்கள் உங்களுக்கு உள்ளன. எத்தனையோ அதிகாரிகள் நீங்கள் உத்தரவிடும் பணிகளை செய்ய இருக்கின்றனர். ஓய்வெடுத்துக் கொள்ளலாமே...'

இதற்கு ராக்பெல்லர், 'இப்போது இந்த விமானம் உயரத்தில் இருக்கிறது என்பதற்காக இன்ஜினை அணைத்து விடலாமா என்ன? முயற்சியை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து உழைப்பது வருமானத்திற்கு மட்டுமல்ல; மனநிறைவிற்கும் மகிழ்ச்சிக்கும் தான்' என்றார்.

'மரணம் என்பது என்ன?' என்று கேட்ட ஒரு மாணவனுக்கு அப்துல்கலாம் அற்புதமாக பதிலளித்தார். 'மூச்சு நின்று விடுவதல்ல மரணம்; முயற்சி நின்று விடுவதே மரணம்.'

தனக்குத் தானே சுற்றியபடி, சூரியனையும் சுற்றும் இந்த பூமி நமக்கெல்லாம் வழங்குகிற பாடம் 'இறுதி வரை இயங்கிக் கொண்டே இரு'

-- முற்றும்

அலைபேசி: 90031 48231

- திருப்புகழ் மதிவண்ணன்






      Dinamalar
      Follow us