ADDED : நவ 28, 2017 04:00 PM

'பழம் நழுவி பாலில் விழுந்தால் போதாது, அதுவும் நழுவி வாயில் விழ வேண்டும்'
என நினைக்கும் சோம்பேறிகள் அதிகமாகி விட்டனர்.
'மரத்திலிருந்து விழுகின்ற பழம், புவியீர்ப்பு விசையால் தான் பூமியை வந்தடைகிறது' என்பதே நியூட்டனின் கூற்று.
ஆனால், 'மந்திரத்தால் மாம்பழம் விழும்' என எண்ணுவது பெரிய மடமை!
உழைக்காமலேயே உச்சியை அடைய வேண்டும். இலவசமாக அனைத்தையும் பெற்று பரவசமாக வாழவேண்டும்.
அலுங்காமல், குலுங்காமல், வாடாமல், வதங்காமல் வாழ்க்கையில் மேலான நிலையை அடைய வேண்டும் என்கிற மனோபாவம் கொண்டவர்கள் கட்டாயம் அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஆபத்துகளையும், துன்பங்களையும் எதிர் கொள்ளாமல் அதிர்ஷ்டத்தால் வெற்றி பெற்றவர் என்று, ஒப்புக்காக கூட ஒருவரை நாம் சுட்டிக்காட்ட முடியாது.
ஜெயித்தவர்களிடம் கேட்டுப் பார்த்தால் தான் தெரியும். அவர்கள் பட்ட காயங்களும், வலிகளும், விழுந்த இடங்களும், எழுந்த அனுபவங்களும்.
'வெண்ணெய் திரண்டு வரும்போது, தாழி உடைந்தது போல்' எனும் பழமொழியை கேட்டிருப்போம்.
பலகாலம் போராடி வெற்றிக்கனி கையில் விழும் போது விபரீதம் நேர்ந்து விட்டால், பாடுபட்டது அத்தனையும் பாழாய்ப் போனதே என்று பலரும் மூலையில் முடங்கி விடுவர்.
ஆனால், அப்படியான சோதனைகள் வந்தும் சோர்ந்து போகாமல் சாதித்துக் காட்டினார் ஒருவர். அவர் சாதனை நமக்கு எல்லாம் ஒரு போதனை. தாமஸ் ஆல்வா எடிசன்! இந்த பெயர் தெரியாத ஆள் இருக்கவே முடியாது.
அவர் மட்டும் அப்படி ஒரு சாதனையை படைக்காமல் போயிருந்தால் இந்த உலகமே இருளில் தான் இருந்திருக்கும்.
ஆம். மின்சார பல்பை கண்டுபிடித்த மேதை அவர். தனக்கான தடைக்கற்கள் அத்தனையையும் படிக்கற்களாய் மாற்றிய மாபெரும் சாமர்த்தியர். பிரம்மாண்டமான ஆய்வுக்கூடம் அமைத்து அல்லும் பகலும் ஆய்வில் ஈடுபட்டார். ஒரு நாளைக்கு 18 மணிநேரம் பரிசோதனை முயற்சிகளில் மூழ்கியிருப்பார்.
ஒரு நாள் வீட்டில் ஓய்வில் இருந்த நேரம். ஒரு செய்தி இடிபோலத் தாக்கியது.
'ஆய்வுக் கூடம் தீப்பற்றி எரிகிறது' என்கிற செய்தி கேட்டு, அவரது மனைவியும் மகனும் நிலைகுலைந்தனர். அது சாம்பல் குவியலாக காட்சியளித்தது.
எடிசன் அனைவரையும் சமாதானப்படுத்தினார்.
''எரிந்தது எரிந்து விட்டது. கவலைப்படுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. ஆய்வுக்கூடத்தை நவீனப்படுத்த வேண்டும் என்று சில நாட்களாகவே நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அதற்கான வாய்ப்பாக இந்த விபத்தை எடுத்துக் கொள்கிறேன்,'' என்றபடி புதிய ஆய்வுக்கூடத்திற்கான வரைபடத்தை தயார் செய்தார்.
மெய்ஞானியின் பக்குவத்தோடு அந்த விஞ்ஞானி நடந்து கொண்ட விதம், சாம்பலானாலும் பீனிக்ஸ் பறவையைப் போல் எழுந்து நாம் சாதிக்க வேண்டும் என்பதையே போதிக்கிறது.
துன்பம் நெருங்கி வந்த போதும் நாம் சோர்ந்து விடல் ஆகாது பாப்பா! அன்பு மிகுந்த தெய்வம் உண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா! என்கிறார் மகாகவி பாரதியார்.
'என் வாழ்வில் பிரச்னைகளே பிரவேசிக்க கூடாது. நான் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளும் எந்தவித தடையும் இன்றி நிறைவேறி விட வேண்டும். என் பிரார்த்தனைகளை ஈடேற்று, உனக்கு பாலாபிஷேகம் செய்கிறேன்' இவ்வாறெல்லாம் சன்னதி முன் வேண்டிக் கொள்பவர்கள் பக்குவம் அடையாத பக்தர்களே. வர்த்தக ரீதியிலா வேண்டுதல் நடத்துவது?
ஞானி ஒருவர் சொன்னார், 'பிரச்னைகள் பெரிது என்று கடவுளிடம் சொல்லாதே. என் கடவுள் பெரியவர் என்று பிரச்னைகளிடம் போய் சொல்.'' ஆம். எத்தனை அருளாளர், சான்றோர்களின் வாழ்க்கைகளை படித்திருக்கிறோம்.
நாயன்மார் சரித்திரமான பெரிய புராணத்தை புரட்டி பாருங்கள். சிவபக்தியில் சிறிதும் வழுவாதவர்கள். அவர்களுக்கு சோதனைகள் பல கொடுத்த பிறகு தான், காட்சி கொடுத்தார் சிவன்.
''வெற்றியை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் போது வீழ்ச்சிகள் வருவது ஏன் தெரியுமா? நம்மை பக்குவப்படுத்தவும் மென்மேலும் பாடங்களை கற்பிக்கவும் தான்,'' என்கிறார்கள் அனுபவசாலிகள்.
பொங்கி எழும் நெருப்பில் புரட்டி புரட்டி எடுத்த பின்பு தானே பொன்னை 'புடம் போட்ட தங்கம்' என புகழ்கிறோம்.
அப்படி, துன்பம் வருத்த வருத்தத்தான் வாழ்வு ஒளிவீசும் என்கிறார் வள்ளுவர்.
'சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோக்கிற் பவர்க்கு'
நம் உடலிலும், விக்ரகங்களின் திருமேனியிலும் மின்னுகின்ற தங்கங்கள் எல்லாம் தணலில் தகித்து அக்னிப் பிரவேசம் அனுபவித்தவை தான்.
'சோதனை மேல் சோதனை போதுமடா சாமி' என்று புலம்புவதை விடுத்து 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை' என்று சங்கநாதம் செய்வோம்! சாதனை வீரர்களாக ஜெயித்துக் காட்டுவோம்!
- தொடரும்
அலைபேசி: 98411 69590
திருப்புகழ் மதிவண்ணன்