ADDED : டிச 22, 2017 10:56 AM

'இரவு முழுவதும் விழித்து, சிரமப்பட்டு படித்தும் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை. என் முயற்சி எல்லாம் வீணாகிவிட்டது' என புலம்பிக் கொண்டிருந்தான் ஒரு மாணவன்.
ஆனால், இன்னொரு மாணவனோ, 'தேர்வுக்கு முதல் நாள் நன்றாக துாங்கினேன். பாடங்களை திட்டமிட்டு படித்தேன். என்னை, நானே தயார் செய்து கொண்டு விட்டதால், பதட்டமின்றி எழுதி முதல் மாணவனாக வந்தேன்,' என்றான்.
எதையும் முறையாக திட்டமிட்டு செய்தால், பாதி வெற்றியை முன்கூட்டியே பெற்று விட்டோம் என அர்த்தம். இனி மீதி வெற்றியை எளிமையாக அடைந்து விடலாம்.
ஆம். திட்டமிடப்பட்ட படிநிலை வளர்ச்சி எப்பணியிலும் பூரணமான வெற்றியை கட்டாயம் பெற்றுத் தரும்.
அரும்பு, மொட்டாகி, மலராகி, காயாகி, கனியாகிய பின், நம் கைகளை வந்தடைவது தானே இயற்கை நமக்கு கற்பிக்கும் பாடம்.
அவ்வப்போது முடிக்க வேண்டிய காரியங்களை, ஆறப்போடாமல் முறைப்படி அந்தந்த கால அளவைக்குள் முடித்து விடுவதை ஒவ்வொருவரும் வழக்கமாக கொள்ள வேண்டும்.
காலம் மட்டுமே கடவுள் நமக்கு வழங்கியிருக்கும் சொத்து. இந்த சொத்து தானாகவே செலவழிந்து கொண்டிருக்கும். யாராலும் சேர்த்து வைக்க முடியாது. காலம் உள்ள போதே அனைவரும் அதை தனக்கு உரியபடி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இளமை போன பின்பு அவ்வாலிப வயதை மீண்டும் வரவழைக்க முடியுமா என்ன?
இளைய பாரதத்தினரை திட்டமிட்டு செயலாற்ற அழைக்கின்றார் பாரதியார்,
'காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு!
மாலை முழுதும் விளையாட்டு - என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா!'
நேர நிர்வாகமே திட்டமிடுதலில் பெரும்பங்கு வகிக்கிறது.
குடும்பம், கலாசாலை, அலுவலகம், அரசாங்கம் அனைத்தும் நல்ல முறையில் இயங்கி புகழ் பெறுவதற்கும், ஒவ்வொரு தனிமனிதரின் லட்சியமும் ஈடேறி சரித்திரம் படைப்பதற்கும் திட்டமிடுதல் மிகஅவசியம்.
நெப்போலியனின் வெற்றிகள் அனைத்தும் அவரது நேர நிர்வாகத்திற்கு கிடைத்த பரிசுகளே.
ஒருமுறை அவர் தன்னுடைய தளபதிகளை உற்சாகப்படுத்தும் விதமாக, விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் உணவு கூடத்தில் கூட வேண்டும் என கட்டளை இட்டார்.
ஆனால், அந்த நிகழ்விற்கு தளபதிகள் சற்று தாமதமாக வந்தனர். 'தாமதம்' என்பதை தவறியும் செய்யாத நெப்போலியன், உரிய நேரத்திற்குள் உணவை முடித்திருந்தார்.
தாமதமாக வந்தவர்களை நோக்கி, 'தளபதிகளே... சாப்பிடும் நேரம் முடிந்து, இப்போது வேலை செய்யும் நேரம் தொடங்கி விட்டது. புறப்படுங்கள். வினாடி கூட வீணாக்காமல் செயலில் ஈடுபடுவோம்,'' என்றார்.
தீர்மானித்த திட்டங்கள் திசை மாறிப் போனால், அவமானங்கள் தான் நமக்கு வெகுமானங்கள் ஆகும்!
அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு, பின் அரிசியை களைவதும், காய்கறிகள் நறுக்கு வதுமாக இருந்தால் சரியான நேரத்தில் சமையல் ஆகுமா? சிலிண்டர் வாயு தானே வீணாகும்.
திட்டமிடாது செய்யும் பணிகளில் கால விரயம் தான் ஆகுமே ஒழிய, வெற்றியை எவரும் பெற முடியாது.
இளம் வயதிலேயே கல்வியை நாம் சரிவர கற்க வேண்டும். வாலிப வயதிலேயே வாழ்க்கைத் துணையை பெற்றிட வேண்டும். நடுத்தர வயதிலேயே மழலைச் செல்வம் கண்டிட வேண்டும். பொன் விழா ஆண்டிற்குள்ளே பொன், பொருள் சேர்த்திட வேண்டும்.
இப்படி திட்டமிட்ட வாழ்வின் சிறப்புகளை நம் முன்னோர்கள் சொல்லியிருப்பதை நாம் கேட்டிருப்போம்.
'ஈரெட்டில் கல்லாத கல்வி
மூவெட்டில் காணாத திருமணம்
நாலெட்டில் பெறாத குழந்தை
ஐந்தெட்டில் சேர்க்காத செல்வம்' என ஒரு
வரையறைக்குள் விளங்க வேண்டும் நம் வாழ்க்கை.
பொருட் செல்வம் பெற்று இப்பூவுலக வாழ்வில் சிறப்பதற்கு, திட்டமிட்டு செயலாற்றுவது போலவே அருட்செல்வம் பெற்று கடவுளின் திருவடியை அடைவதற்கும் திட்டமிடல் வேண்டும், என்கின்றனர் ஞானிகள்.
உயிர் பிரிகின்ற நேரத்தில் கடவுளின் திருநாமத்தை உச்சரித்தால் உதவுமா ?
தொந்தி சரிய, மயிர் வெளிற, நிறை தந்தம் அசைய, முதுகு வளைய, இதழ் தொங்க, ஒரு கை; தடி மேல் வர... சரீரம் சரிந்து விழும் அந்த நேரத்தில் சர்வேஸ்வரனை நினைப்பதால் பலன் என்ன? 'அதற்காக கடவுளின் மூல மந்திரத்தை இளமையிலிருந்தே சொல்லி வருகிறேன்' என்கிறார் பெரியாழ்வார்.
'எய்ப்பு எனைவந்து நலியும்போது அங்கு
ஏதும் உன்னை நான் நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரவணை அரங்கத்துப் பள்ளியானே!'
திட்டம் போட்டு செயல் புரிந்தால் இவ்வுலக வாழ்விலும், அவ்வுலக முக்தியிலும் நாம் ஜெயிப்பது நிச்சயம்!
தொடரும்
அலைபேசி: 98411 69590
திருப்புகழ் மணிவண்ணன்