ADDED : பிப் 20, 2018 10:56 AM

ஆறறிவு பெற்ற நம்மை 'உயர்திணை' என்றும், ஐந்தறிவு உயிரினங்களை 'அஃறிணை' என்றும் முறைப்படுத்தியுள்ளனர் முன்னோர்.
உயர்திணை என்று மனிதர்களை வகைப்படுத்தும் போது மற்ற உயிரினங்களை 'தாழ்திணை' என்று குறிப்பிடாமல் 'அது அல்லாத திணை' என்ற அர்த்தத்தில் 'அஃறிணை' என்றே அழைத்தனர். மற்ற உயிரினங்களின் மனம் நோகும்படி 'தாழ்ந்தவை' என்று பெயர் சூட்ட தயங்கினர்.
'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்' என்று சங்கத்தமிழும்,
'அரம்போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கட்பண்பு இல்லாதவர்'
என்று வள்ளுவர் வாய்மொழியும் கூறுகின்றன.
கல்வியில் சிறந்து இருந்தாலும், பணக்காரக் குடும்பத்து பிள்ளையாகப் பிறந்து, செல்வத்தில் சிறந்திருந்தாலும், தனக்கு கீழே பலர் பணிபுரிய தொழிலதிபர் என பதவியில் உயர்ந்து விளங்கினாலும் பணிவு, அன்பு, பொறுமை, மனிதநேயம், இரக்கம், மன்னிக்கும் குணம் போன்ற பண்பு நலன்கள் இல்லையேல், அவனை ஒரு மானிடனாகவே மதிக்க முடியாது.
'ஆசை, கோபம், களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்!
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்!'
என்று அற்புதமாக சொற்பதம் தொடுத்துள்ளார். கவியரசர் கண்ணதாசன்.
விரைவாக வளர்ந்து செல்லும் இந்த விஞ்ஞான யுகத்தில் பலருக்கு வாழ்க்கை வசதிகள் பெருகி விட்டன. பொருளாதார சுதந்திரமும் பொலிய தொடங்கி விட்டது. ஆனால், குடும்ப உறுப்பினர்களோடு கலந்துபேசி மகிழ்வதும், அவர்களுக்கு உதவிகள் செய்து உறுதுணையாக விளங்கும் பண்பாடும் அறவே பட்டு போய்விட்டது. வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையரையே புறக்கணிக்கும் பண்பாட்டுச் சிதைவு பெருகிவிட்டது.
புறநானுாற்றுப் புலவரான பிசிராந்தையார் என்பவர் முதிய வயதை எட்டியும், அவரது முடி கூட நரைக்கவில்லை. 'கரிய கேசத்தோடு நீங்கள் இந்த தள்ளாத வயதிலும் காட்சி அளிப்பது எப்படி' என்று கேட்டதற்கு,
'யாண்டு பல ஆக, நரை இல ஆகுதல்யாங்கு ஆகியர் என வினவுதிராயின்... என்று தொடங்கும் பாடலில் பதில் கூறுகிறார்.
மாண்பு பொருந்திய மனைவி, புதல்வர்கள், குறிப்பறியும் பணியாட்கள், அறநெறி மாறாத அரசன், கல்வி, கேள்விகளால் சிறந்து பண்பாட்டில் ஒளிரும் சான்றோர் ஆகியோர் சூழப்பெற்றவனாக உள்ளதால், முகத்தில் சுருக்கங்களோ, முடியில் நரையோ அறவே இல்லை என்கிறார்.
இக்காலச் சூழலில் இளமையிலேயே பலர் நரைத்த முடியோடு, குழி விழுந்த கண்ணோடு, பிரகாசமற்ற முகத்தோடு வலம் வருகிறார்கள். அக்காலத்திய கேள்வியை இப்போதைய இளைஞர்களை நோக்கி, மாற்றி கேட்க வேண்டும் என்கிறார் புதுக்கவிஞர் ஒருவர்.
மாண்பு இல்லாத சுற்றம், சுரண்டிடும் அரசு, சூழ்ச்சி நண்பர்கள், கடுஞ்சொல் மேலாளர், தறுதலை மக்கள் என பண்பாடற்றவர்கள் சமூகத்தில் வாழ்வதால் தான், இப்படிப்பட்ட அவலநிலை என்றே பதில் வரும்.
பண்பாளர்கள் வாய்க்காத ஒரு நாடு, பன்முக வளர்ச்சி பெற்றிருந்தாலும், அது விலங்குகள் சுற்றி திரியும் காட்டிற்கு சமானமே என்கின்றனர் ஞானிகள்.
'அருட்பிரகாச ராமலிங்க அடிகள் இந்த அவனியில் எதற்காக அவதரித்தார்?' என்று யாரேனும் கேட்டால், அதற்கான பதிலை தன் அருட்பா பாடல் ஒன்றில் அவரே பதிவு செய்துள்ளார்.
'இக்காலத்திய மக்கள் வெளிப்பார்வைக்கு பளபளப்பாகவும், படாடோபமாகவும் அற்புதமாகவும் காட்சி அளிக்கின்றனர்! ஆனால் அவர்கள் மனம் முழுவதும் மாசு மண்டி கிடக்கிறது. வெளியே அற்புதமாகவும், உள்ளே அற்பமாகவும் விளங்கும் அவர்களை திருத்தி ஆட்கொள்வதற்காகவே பூவுலகில் என் பிறப்பு' என்கிறார் அடிகள்.
'அகத்தே கருத்து புறத்தே
வெளுத்திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்தி அவரை
சன்மார்க்க சங்கம் அடைவித்திட
அவரும் இகத்தே பரத்தைப் பெற்று
மகிழ்ந்திடுதற்கு என்றே என்னை இந்த
யுகத்தே இறைவர் வருவிக்க பெற்றேன்!
அருளை உற்றேனே!' என பாடுகிறார்.
இவ்வாறு மனித நாகரிகமே பண்பாட்டின் பரிணாமம் என்று உபதேசித்த பிறகும், அத்தகைய மேலான வளர்ச்சியை எட்டாமல், விலங்குகள் போல், நம்மவர்கள் வாழ்வதில் பொருள் என்ன இருக்கிறது!
இக்காலத்தில் காதலி ஒருத்தி, தான் கரம் பற்றப் போகும் ஆண்மகனை எப்படி அழைக்கிறார் பாருங்கள்,
'அழகிய அசுரா! அழகிய அசுரா!'
வாலிபனும் அந்த வனிதையை எப்படி
கூப்பிடுகிறான் என்று அறிந்து கொள்வோமா?
'அழகான ராட்சசியே!'
இரண்டு அழைப்புகளுமே தற்கால திரைப்பாடலின் பல்லவி தான்! 'ஜோடிப் பொருத்தம்' என்னவோ ஒரு வகையில் சரி தான்!
வெளியே பார்ப்பதற்கு இருவருமே அழகு தான்! ஆனால் உள்ளேயோ அசுர குணங்கள்!
கைப்பிடித்தால் இல்லற வாழ்க்கை இனிதே நடக்குமா, என்று இருவருக்குமே சந்தேகம் தான்!
இப்படிப்பட்ட பல்லவிகள் இனியும் தொடராதிருக்க, மனிதர்களாகிய நாம் பண்புகளால் பளிச்சிடுவோம்!
அன்பு, பழி பாவங்களுக்கு அஞ்சுதல், மனிதநேயம், உண்மை, கருணை, தொண்டு போன்ற நல்ல குணங்கள் பெற்று வாழ்வில் சிறப்படைவோம்.
தொடரும்
அலைபேசி: 98411 69590
திருப்புகழ் மதிவண்ணன்