ADDED : மார் 23, 2018 09:40 AM

'பலர் முன்னிலையில் தகாத வார்த்தைகள் பேசி என்னை அவமானப்படுத்திய அவனை நான் சும்மா விடப் போவதில்லை!' என்று கோபத்தில் கொந்தளித்தார் ஒருவர்,
நண்பர்கள் அவரை சமாதானப்படுத்தி, 'ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு' என்பது தங்களுக்கு தெரியாதா? அவன் செய்த தப்பை நீங்களும் செய்யலாமா? பொறுத்துக் கொள்ளுங்கள். இரண்டொரு நாளில் அவனே வருத்தம் தெரிவிப்பான்'என்றனர்.
மனதில் எழும் சிறு பேதம் கூட பெரிய கலவரமாக மாற காரணமே, மன்னிக்கும் குணம், பொறுமை என்பதே இல்லாமல் போனது தான்.
'மன்னிக்கும் குணம் தேவ குணம்'
'பொறுமை கடலினும் பெரிது'
போன்ற பொன் மொழிகளை மேற்கோளாக பார்க்க முடிகிறதே தவிர, அவற்றை மேற் கொள்பவர்களை பார்ப்பது அரிதாகி விட்டது.
'கண்ணை பிடுங்குபவர்களின் கண்ணை பறிப்பதுவே ஏற்ற வழி' என வாழ ஆரம்பித்தால் உலகமே குருடாகி விடும் என்கிறார் அறிஞர் ஒருவர்.
பழிக்குப்பழி என்ற முறையில் அவமானப்படுத்தியவரை நீங்கள் தண்டித்தால், அப்போதைக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி வரும். ஆனால் பெருந்தன்மையுடன் மன்னித்தால் நிரந்தர மகிழ்ச்சியும், புகழும் நீடிக்கும் என்கிறார் திருவள்ளுவர்.
'ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்'
'நேர்மறைச் சிந்தனைகள்' என்னும் புத்தகம் எழுதி புகழ் பெற்ற மேனாட்டு அறிஞர் 'நாரமன் வின்சென்ட் பில்'லிடம் அவரது நண்பர் சொன்னார். 'ஒருவர் என்னிடம் வாக்குவாதம் செய்து மோசமான வார்த்தைகளால் உள்ளத்தை காயப்படுத்தி விட்டார்.'என்றார்.
'காயம் ஆற உடனே மருந்து இட்டுக் கொள்ளுங்கள்.'என்றார் நார்மன். 'அந்த மருந்தை நீங்களே சொல்லுங்கள்...' என்று கேட்டார் நண்பர்.
'உங்களை காயப்படுத்தியவரின் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். அதுவே 'வன்ம உணர்ச்சியை' வளராமல், தடுக்கும் மருந்து'' என்றார்.
'இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு' என நமக்கு வழிகாட்டுகிறார் வள்ளுவர்.
புத்தர் ஒரு கிராமத்தின் வழியாக சென்ற போது, எதிரில் வந்த சிலர் தகாத வார்த்தைகளால் திட்டினர்.
புன்னகை பூத்த புத்தர், 'உங்களிடம் ஒன்று கேட்கிறேன், நீங்கள் ஒருவருக்கு அன்பளிப்பு தரும் போது, அவர் ஏற்க மறுத்தால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார்.
'எங்கள் பொருள் தானே. அதை நாங்களே வைத்துக் கொள்வோம்'என்றனர்.
சிரித்த புத்தர், 'நீங்கள் சொன்ன வார்த்தைகளை நான் ஏற்கவில்லை. உங்களிடமே திருப்பி தந்து விட்டேன். இப்போது அவை யாருக்கு சொந்தம்...? எச்சில் துப்பி ஆகாயத்தை அழுக்காக்க முடியாது. மாறாக துப்பியவரையே அது களங்கப்படுத்தும்' என்ற புத்தரின் விளக்கம் கேட்ட அவர்கள் மன்னிப்பு கேட்டதோடு, அடியவர்களாக மாறி அவரைத் தொடர்ந்தனர்.
கம்பராமாயணத்தில் இருந்து ஒரு உதாரணம் பாருங்கள்.
'வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவாக் கேற்ப தாரணி மவுலி பத்தும்
சங்கரன் கொடுத்த வாளும் வீரமும் களத்தே போட்டு
வெறுங் கையோடு இலங்கை புக்கான்'
என்று அனைத்தையும் இழந்து நின்ற ராவணனிடம் ராமர் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா,
'இன்று போய் நாளை வா!'
வில் இழந்து, வீரன் என்ற சொல் இழந்து, நடை இழந்து, சதுரங்கப்படை இழந்து வெறுங்கையனாய் நின்ற ராவணனை வினாடி நேரத்தில் வீழ்த்தி விடலாம். ஆனால் அவனையும் மன்னிக்கிறார்.
'போர் என்றால் நாளை வா! சமாதானம் என்றால் சாயங்காலமே வா'
என்பது தான் ராமர் கூறிய வாசகத்தின் பொருள் என்பார் வாரியார் சுவாமிகள்.
'ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கி
தீது புரியாத தெய்வமே' - என்றும்
பிழை பல பொறுக்கும் சாமி! சரவண தகப்பன் சாமி' என்று நம் அருளாளர்கள் பாடுவதில் இருந்து ஆண்டவனின் அருள் குணம் 'மன்னித்தல்' என்பது விளங்கும்.
'மறப்போம்! மன்னிப்போம்' என்பது தான் மனிதகுலத்தின் உச்சகட்ட நாகரிகம் என்பதை உணர்ந்தால் அகிலத்தில் அமைதி செழிக்கும்.
தொடரும்
அலைபேசி: 98411 69590
- திருப்புகழ் மதிவண்ணன்