sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

நல்லா கேளுங்க! நல்லதையே கேளுங்க!

/

நல்லா கேளுங்க! நல்லதையே கேளுங்க!

நல்லா கேளுங்க! நல்லதையே கேளுங்க!

நல்லா கேளுங்க! நல்லதையே கேளுங்க!


ADDED : செப் 16, 2014 04:48 PM

Google News

ADDED : செப் 16, 2014 04:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியோர் கூறும் நல்ல விஷயங்களைக் கேட்டால் நமக்குத் தானே நன்மை!

ஆனால், தீயகுணம் படைத்த ஒருவன் கடைசி காலத்தில் தன் மகன் ரவுகணேயனை அழைத்து,''மகனே! திருட்டுத் தொழிலில் நீ சிறந்து விளங்க வேண்டும். கோயில் பக்கம் போகாதே. போனாலும் அங்கு சொற்பொழிவு எதையும் கேட்டு விடாதே! அப்படி நடந்தால் காதை மூடிக் கொள்!'' என்று சொல்லி இறந்தான்.

மகனும் தந்தை சொல்லைப் பின்பற்றி, திருட்டுத் தொழிலை மேற்கொண்டான்.

ரவுகணேயன் என்ற பெயரைக் கேட்டால் ஊரே பயத்தில் நடுங்கியது.

ஒருநாள் அவன் சென்ற வழியில் மகாவீரர் உபதேசித்துக் கொண்டிருந்தார். திருடனும் தன் காதுகளை கையால் பொத்தியபடி நடந்தான். அவன் காலில் முள் ஒன்று குத்தியது. அதைப் பிடுங்கி எறிந்தான். அதற்குள்....

''தேவதைகளின் நிழல் தரையில் விழாது.

கால்களும் தரையில் பதியாது. சற்று உயரத்தில் தான் அவர்கள் நடப்பார்கள்'' என்ற மகாவீரரின் பேச்சு காதில் விழுந்தது. சட்டென்று காதைப் பொத்திக்கொண்டு நடையைக் கட்டினான்.

நாளுக்கு நாள் அவன் அட்டகாசம் அதிகரித்தது. ஒருநாள் காவலர்கள் கையில் அகப்பட்டான். ஆனால், அவன் தான் ரவுகணேயன் என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை.

ஏனென்றால், அவனை யாரும் பார்த்ததில்லை. 'இவன் தான் திருடன் ரவுகணேயன்' என்று யாரும் சாட்சி சொல்ல முன்வரவில்லை. திருடனும் தன் பெயரைச் சொல்ல மறுத்து விட்டான்.

கடைசி முயற்சியாக அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அறையில் படுக்க வைத்தனர். அவன் கண் விழித்தபோது, ஆடை, ஆபரணம் ஜொலிக்கும் தேவதை போன்ற பெண்கள் அவன் முன் நின்றிருந்தனர். அழகு மண்டபத்தில் மயக்கும் விதத்தில் இசையும் ஒலித்துக் கொண்டிருந்தது.

கண் விழித்த திருடன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.

அருகில் நின்ற பெண், ''ஐயா! இது சொர்க்கலோகம். இங்கு யாரும் பொய் சொல்லக் கூடாது. சொன்னால் மீண்டும் பூமிக்கே போக நேரிடும். நீங்கள் என்ன பெயரில் வாழ்ந்தீர்கள்?'' என்று கேட்டாள்.

ரவுகணேயன் வியப்புடன்,'' ஆகா! பூமியில் இறந்து,சொர்க்கம் வந்து விட்டேனா? தேவ கன்னியர் தான் என் முன் நிற்கிறீர்களா? '' என்று கேட்டு குனிந்து பார்த்தான். பெண்களின் நிழல் தரையில் தெரிந்தது. கால்களும் கீழே பதித்திருந்தது.

அப்போது பளிச்சென மகாவீரரின் உபதேசம் நினைவுக்கு வந்தது. மகாவீரர் சொல்படி பார்த்தால் தேவகன்னியரின் நிழல் தரையில் விழக்கூடாதே..! அப்படியானால் இவர்கள் தேவகன்னியரும் அல்ல. இந்த இடம் சொர்க்கமும் அல்ல!'' என்று தெரிந்து கொண்டான்.

அந்த அழகுப்பெண்களிடம், ''பெண்களே! நீங்கள் பொய் சொல்ல வேண்டாம். உண்மையை நானே ஒப்புக்கொள்கிறேன். நான் தான் ரவுகணேயன். விருப்பம் இல்லாமல் கேட்டாலும், மகாவீரரின் உபதேசம் எனக்கு நல்லறிவைத் தந்திருக்கிறது. விரும்பி கேட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்!'' என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினான்.

திருடனின் மனமாற்றம் கண்ட மன்னன், ரவுகணேயனை விடுதலை செய்தான். திருடனும் மகாவீரரின் சீடனாகி தொண்டு செய்து வாழ்ந்தான்.

நல்ல வார்த்தைகள் வாழ்வை நல்லநிலைக்கு உயர்த்தி விடும்.

நல்லதை விருப்பமுடன் கேட்போம்.

நாமும் வாழலாம்! நாடும் வாழும்!

பி.என்.பரசுராமன்






      Dinamalar
      Follow us