ADDED : டிச 30, 2021 02:04 PM

விடை கொடு தாயே!
சற்று தொலைவில் ராமன் வந்து கொண்டிருப்பதை தன் இருப்பிடத்திலிருந்தே பார்த்து விட்டாள் கோசலை. என்ன கம்பீரமான ராஜநடை! பட்டாபிஷேக ராமனின் வீரநடை! கோசலை மகிழ்ந்தாள். தாயை நெருங்கிய ராமன், அவளது பாதம் தொட்டு வணங்கினான். தலையைத் தொட்டு ஆசியளித்தாள் கோசலை. அவன் கைபிடித்துத் தன்னருகே அமரச் செய்தாள். ''பட்டாபிஷேக ஏற்பாடெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என கேள்விப்பட்டேன் ராமா, என் மனம் பெரிதும் மகிழ்கிறது'' என ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.
''அம்மா...'' என்று மெல்ல அழைத்தான்.
''சொல் ராமா... என் செல்வமே, நாளை முதல் உனக்கு என்னுடன் பேச நேரமிருக்குமோ, இருக்காதோ... பேசு ராமா, பேசு...'' என்று தழுதழுத்தாள் கோசலை.
''நாளை முதல் தங்களுடன் பேச மட்டுமல்ல, தங்களைப் பார்ப்பதும் இயலாதே என்று வருத்தம் கொள்கிறேன் அம்மா...'' என தீர்க்கமாகப் பார்த்தபடி சொன்னான்.
''அந்தளவுக்கு ராஜாங்கப் பணிகள் உனக்கு இருக்குமா என்ன. உன் தந்தையார் அந்தளவுக்கா சுமை ஏற்றி வைப்பார். இதுவரை அவர் ஆட்சி செய்த பாதையில் நீ நடை பயின்றால் அதுவே போதுமே! நாட்டு மக்களின் மகிழ்ச்சி நீடித்தும், நிலைத்தும் இருக்க புதிதாக திட்டங்கள் வகுக்க வேண்டியிருக்கும் என்று கருதுகிறாயா''
''இல்லை அம்மா... நான் தங்கள் பார்வையிலிருந்தே விலகியிருக்க வேண்டியிருக்கும். அதை தான் சொன்னேன்''
கோசலை சற்றே குழம்பினாள். ''என்ன, என்ன சொல்கிறாய். என் பார்வையிலிருந்தே விலகி இருப்பாயா. ஏன், வேறு நாடு எதன் மீதாவது படையெடுத்துச் செல்லப் போகிறாயா. அதுவும் நாளைக்கேவா. இது என்ன வேடிக்கை! போர், படையெடுப்பு, ஆக்கிரமிப்பு என்றாலும் அதற்கு சில பல நாட்களின் திட்டமிடுதல் அவசியமல்லவா...''
மென்மையாகச் சிரித்தான் ராமன். ''நாளை முதல் என் வாழ்க்கை அயோத்தியில் இல்லை அம்மா, ஆரண்யத்தில்...''
வேதனையுடன் குழப்பம் அடைந்தாள் கோசலை. ''என்னப்பா சொல்கிறாய். ஆரண்யமா... ஏன், ஏன்''
''ஆமாம் அம்மா, தந்தையார் கொடுத்திருக்கும் வரம் அது''
''வரமா... தந்தையார் கொடுத்தாரா. என்னப்பா சொல்கிறாய். வரம் என்றால் நல்வினைக்கானதுதானே. அரியணையில் அமர வேண்டியவன் ஆரண்யத்தில் வாழப் போகிறேன் என்கிறாயே, இதுதான் நல்வினையா''
''ஆம் அம்மா, இளைய தாயார் கைகேயிக்கு அவ்வாறுதான் தந்தையார் வரம் அளித்திருக்கிறார். அதன்படி நான் வனம் செல்ல வேண்டியவனாக இருக்கிறேன். இப்போதுதான் கைகேயி அன்னையாரிடமிருந்து, அவரது வாய் மூலமாக, தந்தையாரின் ஆணையைப் பெற்று வந்தேன். தந்தையார் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரால் என்னிடம் நேரடியாகப் பேச இயலவில்லை. கைகேயி அன்னையார்தான் பேசினார்கள்...''
''என்ன.. தந்தையார் உடல் நலமின்றி இருக்கிறாரா..'' கோசலை துடித்தாள்.
''அவரைப் பார்த்துக் கொள்ள அரச மருத்துவருக்கு, அமைச்சர் சுமந்திரன் தகவல் சொல்லி அனுப்பியிருப்பார்... நான் இப்போது வந்ததற்கான முக்கிய காரணம் தங்களிடமிருந்து விடை பெறுவதுதான்...''
தசரதனையும் விஞ்சிய சோகத்தில், நிலைகுலைந்தாள் கோசலை. மனதில் பொங்கிய வேதனை விம்மலாக வெளிப்பட்டது. ''கைகேயிக்கு அவர் கொடுத்திருந்த வரத்தை இப்போதுதான் நிறைவேற்ற வேண்டுமா. அவ்வாறு நிறைவேற்றச் சொல்லி கைகேயி அவரை நிர்ப்பந்தப்படுத்தியதாலேயே உடல் நலிவுற்றிருப்பார். ராமா, கானகம் செல்லும் உன் திட்டத்தை ஒத்திப்போடு. தந்தையார் உடல்நலம் பெற்று வரட்டும். இந்தக் கடுமையான சூழ்நிலையில் உன் பிரிவு அவரை மேலும் பாதிக்கும். அது எத்தகைய பின்விளைவை ஏற்படுத்தும் என்பதை என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. நீ போகாதே..''
''தந்தையின் உத்தரவை, ஒரு சக்கரவர்த்தியின் ஆணையை, என்னால் மீற முடியாதம்மா. நான் போகத்தான் வேண்டும்... பதினான்கே வருடங்கள்தான்... பொறுத்துக் கொள்ளுங்கள். நான் மீண்டும் வந்துவிடுவேன்... அதுவரை நாளை பட்டமேற்கப்போகும் என் அருமைத் தம்பி பரதன் தங்களைக் கண்போலப் பார்த்துக் கொள்வான்...''
''என்ன, உனக்கு பதிலாக பரதன் அரசாள்வானா. இது எப்படி சாத்தியம். ராஜ பாரம்பரியத்தில் மூத்தவன்தானே பட்டம் ஏற்க முடியும்...'' அடுத்த அதிர்ச்சித் தகவலால் மேலும் தாக்குண்டாள் கோசலை.
''இதுவும் கைகேயி அன்னையாருக்கு தந்தையார் அளித்திருக்கும் இன்னொரு வரம்தான் அம்மா... நீங்கள் சிறிதும் வேதனையுற வேண்டாம். எனக்கும் மேலாக பரதன் தங்கள் மீது பாசம் பொழிவான். நான் இல்லாத குறையை ஒரு மகனாகவே போக்குவான்...''
''அப்படியே ஆனாலும், பதினான்கு ஆண்டுகள் என்பது எந்தக் குற்றமும் புரியாத உனக்கு மிகப் பெரிய தண்டனை ராமா'' கண்ணீர் பெருக்கெடுத்தோடியது கோசலைக்கு.
எந்த முகாந்திரத்தில் கைகேயிக்கு அந்த வரங்களை அளித்தார், எந்த சலுகையில் கைகேயி அவற்றை நிறைவேற்றிக்கொள்ள முனைந்தாள் என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க முடியவில்லை கோசலையால். அதனால் ''பரதன் ஆளட்டும், எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அதற்காக நீ வனத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன'' என்று கேட்டுக் கதறினாள்.
''இரண்டுமே கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டிய வரங்கள்தான் அம்மா. நான் புறப்படுகிறேன்.. எனக்கு விடை அளியுங்கள்''
''உன்னைப் பிரிவதில் எனக்குச் சிறிதும் உடன்பாடு இல்லை ராமா. அரண்மனை ராஜபோகத்தில் வாழ்ந்த உன்னால் எப்படி கடினமான கானக வாழ்க்கையை மேற்கொள்ள கொள்ள முடியும். உன் வாய்க்கு ருசியாக, உன் உடல்நலத்துக்கு ஏற்றதாக உணவுப் பொருட்களை நான் தேர்ந்தெடுத்துக் கொடுத்த நாட்கள் என் நினைவில் நிழலாடுகின்றன. இப்போது காட்டில் காய், கனி என்று புசிக்க வேண்டிய கட்டாயத்தில் உன் உடல் வருந்தாதா, இளைக்காதா, நோய் தாக்காதா. சரீர சுகம் கொடுக்கும் இனிய உறக்கம் இனி உண்டா. மரத்தடியில் அல்லது மிஞ்சிப்போனால் ஒரு அற்பக் குடிலில்தான் தங்கியிருக்க வேண்டியிருக்கும். விஷ ஜந்துகள் உன்னுடன் உறவு கொண்டாட ஓடோடி வருமே... அவற்றை எப்படி தவிர்ப்பாய். சீதையும் உடனில்லாமல் தனியனாக எப்படி பொழுதைக் கழிப்பாய். மகரிஷி விஸ்வாமித்திரருடன் அவருடைய யாகத்தைக் காப்பதற்காக நீ போனதை பெருமையாகவே கருதினேன். ஆனால் கானகத்திற்குப் போவதை என்னால் ஏற்க முடியாது. உன் உடல்நலத்தில் அக்கறை கொண்ட ஒரு பணியாளர், அதாவது தாய் தேவை. நான் உன்னுடன் வருகிறேன். தேவையானதை சமைத்துப் போடுகிறேன். மயில் தோகையால் விசிறி உறக்கத்தை அளிக்கிறேன்...'' பாசம் பொங்க அரற்றினாள் கோசலை.
''அம்மா...'' அன்பொழுக அழைத்தான் ராமன். ''என் மீது ஒரு தாயாக தாங்கள் அக்கறை காட்டுகிறீர்கள். ஆனால் நான் அடவிக்குச் செல்வது என்ற தந்தையின் ஆணையில் எவ்வளவு துாரம் அவருக்கு உடன்பாடு இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் கிட்டத்தட்ட மயங்கிய நிலையில் அவர் விழுந்திருக்க, அன்னை கைகேயிதான் மன்னரது ஆணையைப் பிறப்பித்தார்கள். ஆகவே அவர் என் பிரிவால் வாடக்கூடும் என்றே கருதுகிறேன். அவருக்குத்தான் இப்போது உற்ற துணை தேவை. ஒரு மனைவியைத் தவிர அவருடைய காயங்களுக்கு மருந்திட வேறு யாரால் இயலும். என்னைப்
பிரிந்திருப்பதாகிய அவருடைய துக்கத்தை நீங்கள்தான் அரவணைப்பால் போக்க வேண்டும் அம்மா. ஆகவே ஒரு தாயாக தாங்கள் எனக்கு சேவை புரிவதைவிட, ஒரு மனைவியாக என் தந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் ஒரு மனைவியின் கடமையும்கூட...''
நெஞ்சம் முழுவதும் துக்கம் அடைக்க மவுனமானாள் கோசலை. ராமன் அங்கிருந்து வெளியேறினான்.
-தொடரும்
பிரபு சங்கர்
prabhuaanmigam@gmail.com