sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 30

/

கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 30

கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 30

கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 30


ADDED : ஜன 26, 2022 03:56 PM

Google News

ADDED : ஜன 26, 2022 03:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமன், சீதையே உன் தந்தை, தாய்

வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தான் லட்சுமணன். அயோத்தியில் அநியாயம் நடக்கலாமா? அதுவும் அண்ணல் ராமனுக்கு எதிராக அதர்மம் நிகழலாமா? மிகவும் சாத்வீகமானவர் என்பதால் அவரிடம் எந்தவகை உரிமையையும், சலுகையையும் எடுத்துக் கொள்ளலாம் என நினைப்பதுதான் எத்தனை அலட்சியமான அகங்காரம்! அவருக்குதான் எவ்வளவு ஏமாற்றமாக இருந்திருக்கும்!

தன் இயல்புபடி ராமனிடம் சற்றே கோபமாக இது குறித்து பேசினான் லட்சுமணன்.

''தந்தையார் சொன்னார்... நான் செய்கிறேன். அவர் இப்படி ஆணையிட்டதற்கும் ஏதேனும் அர்த்தம் இருக்கும்'' என்று தம்பிக்கு பதில் சொன்னான் ராமன்.

''இதில் ஏதோ சூது இருப்பதாகத்தான் நினைக்கிறேன் அண்ணா. தந்தையாரை பரதனின் தாயார் கைகேயிதான் நிர்ப்பந்தப்படுத்தியிருக்கிறார். நிலைகுலைந்து வீழ்ந்திருந்த தந்தையார் முன்னிலையில் கைகேயி தாயார்தான், 'இது உன் தந்தையின் ஆணை' என்று தெரிவித்தார் என்று நீங்களே சொன்னீர்கள். உங்களைக் கானகத்துக்கு விரட்டத் துடிக்கும் அவரை நானாவது நான்கு கேள்வி கேட்டுவிட்டு வருகிறேன்'' என்று கோபத்தில் கொந்தளித்தான் லட்சுமணன்.

லட்சுமணனை சமாதானப்படுத்தினான் ராமன்.

பிறகு உறுதியாக, ''சரி, என்னால் நேரம் தாழ்த்த முடியாது. தந்தையாரின் உத்தரவை உடனே நிறைவேற்ற வேண்டும். நான் தாமதிப்பது அவரை அவமதிப்பது போலாகும்'' என்று சொன்னான்.

''உங்களை இனியும் மனமாற்றம் செய்ய முடியாது அண்ணா. நீங்கள் ஒன்றைத் தீர்மானித்து விட்டீர்களென்றால் அதன் பிறகு அதிலிருந்து உங்களை திசை திருப்ப முடியாது. விஸ்வாமித்திர மகரிஷியுடன் அவருடைய யாகத்தைக் காப்பதற்காகச் சென்றபோது வழியில் தாடகையைத் தாங்கள் வதைத்தீர்கள். அவருடைய சித்தாஸ்ரமத்தில் யாகத்தைக் குலைக்க வந்த சுபாகுவை அழித்தீர்கள், மாரீசனை கடலினுள் அமிழ்த்தி விரட்டினீர்கள். பிறகு மகரிஷி வழிகாட்டலில் சென்றபோது முனி பத்தினி அகல்யைக்கு சாப விமோசனம் அளித்தீர்கள். அடுத்து மிதிலைக்குச் சென்று சிவதனுசை எளிதாக முறித்து, அன்னை சீதையை மணந்து கொண்டீர்கள். தம்பதி சமேதராக அயோத்தி திரும்பும் வழியில் பரசுராமரின் கர்வத்தை அடக்கினீர்கள்...

எத்தனை எத்தனை பராக்கிரமங்கள்... ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தர்மத்தின் பக்கமே நின்றிருந்த தங்களோடு நானும் உடனிருந்திருக்கிறேன் என்பதைத் தாழ்மையுடன் நினைவுபடுத்துகிறேன். இப்போதும் அப்படித்தான். தந்தையாரின் கட்டளைக்கு அடிபணிய வேண்டியது உங்களுடைய தர்மம்! இதை மட்டும் எப்படி மீறுவீர்கள்? எனக்குப் புரிகிறது. ஆனால் முந்தைய சந்தர்ப்பங்களில் நான் உடனிருந்ததுபோல இப்போதும் என்னை அழைத்துச் செல்லுங்கள் என்றுதான் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். தங்களுடன் அண்ணியாரும் வருவதற்குத் தாங்கள் சம்மதித்திருக்கிறீர்கள் என்று அறிகிறேன். இருவருக்கும் நல்ல பாதுகாவலனாக, சிறந்த பணியாளனாக என் பொறுப்பை வனத்திலும் தொடர தாங்கள் அனுமதிக்கத்தான்வேண்டும்''

அந்தக் கோரிக்கையை ராமனால் தட்ட முடியவில்லை. ஆனாலும் வனத்தில் வசதிக் குறைவால் அவன் அசவுகரியப்படுவதில் ராமனுக்கு விருப்பம் இல்லை. ஆகவே அவனைத் தவிர்ப்பதற்காக இறுதி முயற்சி ஒன்றை மேற்கொண்டான்.

''லட்சுமணா, நீ இப்போது தனியன் இல்லை. உன் தாயார் சுமித்திரா தேவி, உன் மனைவி ஊர்மிளை இருவரும் உன் வாழ்வில் சம்பந்தப்பட்டவர்கள். நீ என்னுடன் வருவதற்கு அவர்கள் உடன்படவில்லை என்றால் அவ்வாறு அவர்களை வருத்தும் பாவம் என்னைத்தானே சேரும். ஆகவே அவர்களிடம் பேசிப்பார். அவர்கள் இருவரும் சம்மதித்தார்கள் என்றால்தான் என்னுடனும், சீதையுடனும் நீ வருவதில் நியாயம் இருக்கும்''

கொஞ்சம் தயங்கத்தான் செய்தான் லட்சுமணன். இருவரையும் எப்படி சம்மதிக்க வைப்பது.

நேராகத் தன் தாயார் சுமித்திரை எதிரே போய் விழுந்து வணங்கினான்.

அவனுடைய தோளைத் தொட்டுத் துாக்கி நிறுத்திய சுமத்திரை, கலங்கிய அவனது முகத்தைக் கண்டு மனம் சலனப்பட்டாலும் முகத்தில் அதைக் காட்டாமல் தவிர்த்தாள். எத்தகைய வேதனைக்கும் துவண்டுவிடாத மனதை அவளது முகம் பிரதிபலித்தது. சோதனைகள், அவமானங்களை ஏற்றுப் பழகி பக்குவப்பட்டுவிட்ட ஞானம் அதில் தெரிந்தது. ''அம்மா'' என லட்சுமணன் நடுங்கும் குரலில் அழைத்தான். ''அண்ணன் ராமனுக்கு மகுடாபிஷேகம் இல்லை என்று தந்தையார் சொல்லி விட்டார்'' விம்மலுடன் சொன்னான் அவன்.

''தெரியும்'' தெளிவாக பதில் சொன்னாள் சுமத்திரை.

''அண்ணன், பதினான்கு ஆண்டுகள் வனவாசம் மேற்கொள்ளவிருக்கிறார்''

''அதுவும் கேள்விப்பட்டேன். சரி...நீ என்ன செய்யப் போகிறாய்?'' சுமத்திரை நேரடியாக அவனிடம் கேட்டாள்.

''வந்து அம்மா...'' லட்சுமணன் கண் கலங்கினான்.

''இத்தனை நாள் எப்படி ராமனைப் பிரியாமல் இருந்தாயோ, அதேபோலத்தான் இனியும் இருக்க வேண்டும்.'' எந்தத் தயக்கமும் இன்றி தெளிவாகச் சொன்னாள் சுமத்திரை.

''அம்மா'' ஆனந்தமாய் அதிர்ந்தான் லட்சுமணன். ஆமாம்... எப்போதும் ராமனுடனேயே இருப்பதுதானே அவனது இயல்பு! தன்னை, தாய் துல்லியமாகப் புரிந்து வைத்திருக்கிறாள் என்பதை அறிந்து மகிழ்ந்தான்.

''ஆமாம்... லட்சுமணா! நீ ராமனுடன் இருப்பதைத்தான் நான் விரும்புவேன். ஒரு உண்மையை தெரிந்து கொள். ராமன் இருக்கும் இடம்தான் உனக்கு அயோத்தி. அவன் காட்டில் வாழ நேர்ந்தாலும், அந்த ஆரண்யமே அயோத்தியாகி விடும்! ராமனுடன் போவதுதான் எனக்கு தெரிந்தவரை சரியான முடிவு. இனி உன் தந்தை ராமன், தாய் சீதை''

லட்சுமணன் நெகிழ்ந்து போனான். பெருகிய கண்ணீர் தாயின் பாதத்தில் வீழ்ந்தது. ''அம்மா... அம்மா... உங்கள் சொற்கள் வெறும் சொற்கள் அல்ல. ஒரு பண்பட்ட தியாகியின் பவித்திரமான மந்திரம். உங்களிடம் எப்படிச் சொல்வது என்று தவித்து மருகிய எனக்கு உங்கள் வார்த்தைகள் புண்ணுக்குத் தடவும் மருந்தாக இருக்கிறது. ஆனால் அம்மா எனக்கு ஒரு சந்தேகம்''

கனிவாகப் பார்த்தாள் சுமத்திரை.

''வந்து, அம்மா... நானும் கானகம் போனபிறகு உங்களுக்கு இங்கே பிரச்னை ஏதும் வராமல்...''

''என்ன பிரச்னை வரும் என்று நீ கற்பனை பண்ணிக் கொள்கிறாய்'' சுமத்திரை கேட்டாள்.

''இத்தனை நாள் நான் எப்படி வாழ்ந்திருந்தேனோ அதேபோலத்தான் தொடர்ந்து இருக்கப் போகிறேன்...''

''அம்மா...'' கலங்கிய விழிகளுடன் அவளைப் பார்த்தான் லட்சுமணன்.

''உன்னை நான் எப்படி பிரிந்திருப்பேன் என்றுதானே யோசிக்கிறாய்'' சுமித்திரை தொடர்ந்தாள் ''ஒரு தாய் என்ற முறையில் உன்னைப் பிரிவதைப் பற்றி நான் வருத்தப்படப் போவதில்லை. ஏன் தெரியுமா''

''ஏன் அம்மா''

''நீ யாருடன் போகப் போகிறாய். ராமச்சந்திர மூர்த்தியுடன். அவனுடன் இருக்கும் வரையில் உனக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆகவே எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தன் மகன் எங்கு இருந்தாலும் நலமாக இருக்க வேண்டும் என்பதுதானே ஒரு தாயின் ஆதங்கமாக இருக்க முடியும். இங்கே மாமன்னர் தசரதர், அன்னையர் கோசலை, கைகேயியின் அரவணைப்பில் வாழ்ந்த நீ, இனி அந்த அன்புக்குச் சிறிதும் பங்கமில்லாத பாதுகாப்புடன் ராமன்-,சீதையின் நிழலில் வாழப் போகிறாய். உன் தாய்க்கு இதைவிட என்ன வேண்டும்? போய் வா...''

லட்சுமணன் நெகிழ்ந்து போனான். இந்த பக்குவம் உள்ள தன் தாயை யாருடைய, எந்தப் புறக்கணிப்பும் பாதிக்காது என்ற உறுதி அவனது உள்ளத்தில் ஊன்றியது. தாயைப் பற்றிய கவலை இனி இல்லை என்ற நிம்மதியுடன் மனைவி ஊர்மிளையை சந்திக்கப் புறப்பட்டான்.

-தொடரும்

பிரபு சங்கர்

prabhuaanmigam@gmail.com






      Dinamalar
      Follow us