sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 44

/

கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 44

கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 44

கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 44


ADDED : மே 09, 2022 03:02 PM

Google News

ADDED : மே 09, 2022 03:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தெப்பம் கட்டிய தம்பி

கங்கையின் மறுகரைக்கு வந்த ராமன், புது இடம், புது சூழல், புது மணத்தை உளமாற உணர்ந்து மகிழ்ந்தான். தனக்கு இப்படி ஒரு வாய்ப்பை அளித்த அன்னை கைகேயிக்கு மானசீகமாக நன்றி சொன்னான். சீதையும் அவ்வாறே மகிழ்ந்தாள். லட்சுமணனுக்கும், தான் அண்ணலுடன் உடனிருப்பதில் உடன்பாடுதான் என்றாலும், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி மட்டும் அவனது மனதில் நீறு பூத்த நெருப்பாகவே கனன்றது.

குகன் காட்டிய வழியில் மூவரும் நடை பயின்றார்கள். அப்படி பிரயாக் நகரத்திற்கு சென்ற அவர்களை பரத்வாஜ முனிவர் அன்புடன் வரவேற்றார். அவரை வணங்கி ஆசி பெற்றார்கள் அம்மூவரும். இந்த பிரயாக் நகரம், குகனின் இருப்பிடமான சிங்கிபுரத்தைவிட மேம்பட்டிருந்தது. வாழ்வாதார வசதிகள் மிகுந்திருந்தன. அவர்களைத் தன் குடிலுக்கு அழைத்துச் சென்றார் பரத்வாஜர். களைப்பு நீங்க அவர்களுக்கு நீர், உணவு என்று அளித்த முனிவர், அவர்கள் காட்டுக்கு வந்த கதையைக் கேட்டறிந்தார். முனிவரல்லவா, அதனால் இவர்களுக்கு ஆதரவாகவும், இவர்களின் அபிமானத்தைப் பெறுவதற்காகவும், இவர்களுடைய இந்த நிலைக்குக் காரணமானவர்களை அவர் நிந்திக்கவில்லை, கோபிக்கவும் இல்லை. நிர்ச்சலனராகக் கேட்டுக் கொண்டார்.

பிறகு மென்மையாக, ''வாழ்க்கையில் எல்லாமே அனுபவம்தான். அந்த அனுபவத்தை சந்திக்கவும், அதனால் ஏற்படும் விளைவுகளை ஏற்கவும் தயாராக இருக்க வேண்டும். அந்த விளைவுகள் நமக்கு இன்பத்தையும் தரலாம், துன்பத்தையும் தரலாம். இன்பமானால் அதற்காக துள்ளி குதிக்காமலும், துன்பமானால் அதற்காக துவண்டு போகாமலும் இருக்க வேண்டும். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் பரிபூரண நிம்மதிதான்'' என்று அறிவுறுத்தினார் பரத்வாஜர். ''இந்தப் பக்குவம் உனக்கு அமைந்திருப்பதை அறியும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது ராமா. உன் வழிப்படியே உன் மனைவியும், இளவலும் நடைபயில்வதைக் காணவும் இனிமையாக இருக்கிறது''

ராமன் அமைதியுடன் புன்னகை பூத்தான்.

''பதினான்கு வருடங்களைக் கடப்பது அவ்வளவு எளிதானதல்லதான். அதுவே என்னைப் போன்றவர்கள் தவம் இயற்றுவதானால் வருடங்கள் எல்லாம் காலக் கணக்குக்கே உட்படாது. ஆனால் நீ குடும்பஸ்தன், உன்னைக் காத்துக் கொண்டு, உன்னைச் சார்ந்திருப்பவர்களையும் காக்க வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கிறது. ஆகவே வேறெங்கும் அலைந்து திரியாமல் நீ என்னுடனேயே, இந்த பிரயாக் நகரிலேயே தங்கிக் கொள்ளலாம். நாங்கள் மேற்கொள்ளும் யாகங்களில் பங்கேற்கலாம், நகர வீதிகளிலும், நந்தவனங்களிலும் உலாவி பொழுதை இனிதே செலவிடலாம். இது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் புனிதத் தலம். அமைதியும், ஆனந்தமும் நிரந்தரமாக நிலவும் புண்ணிய பூமி''

முனிவர் சொன்னதைப் பொறுமையாகக் கேட்ட ராமன், ''தங்களது அன்புக்கும், கனிவான யோசனைக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நான் இந்தப் பதினான்கு ஆண்டுகளையும் கானகத்தில்தான் செலவிட வேண்டும் என்பது என் தந்தையாரின் உத்தரவு. என் வசதி கருதி அதில் எந்த சலுகையையும் நானாகக் எடுத்துக் கொள்ள முடியாது. என்னை மன்னித்து விடுங்கள்'' என்றான்.

'நகரம் எதிலாவது வசிக்க நேர்ந்தால், அந்த நகர அரசரிடம் நட்பு பூண்டு, அவருடைய ஆதரவுடன் படை திரட்டி அயோத்தி மீது போர் தொடுத்துவிடுவோமோ என்ற பயத்தில்தானே கைகேயி தங்களை கானகத்திலேயே வசிக்குமாறு குரூரமாக நிபந்தனை விதித்திருக்கிறார்' என்று லட்சுமணன் மனதுக்குள் கோபமாக நினைத்துக் கொண்டான்.

தன்னை மிகுந்த மதிப்புடன் நோக்கிய முனிவரிடம், ''ஐயனே... நான் இங்கே தங்கியிருப்பதாக அயோத்தி மக்கள் அறிந்தார்களென்றால் அவர்கள் எந்த நேரத்திலும் இங்கே வந்து என்னைச் சூழ்ந்து கொள்ளக்கூடும், ஏன் என்னுடனேயே இங்கேயே வசிக்கவும் விரும்பலாம். அது அன்னையார் கைகேயிக்கும், இளவல் பரதனுக்கும் ஏற்புடையதாக இருக்காது. ஆகவே இன்னும் வெகு தொலைவுக்கு நான் செல்வதே சரியானது. அதற்குத் தாங்கள் அனுமதிக்க வேண்டும், தங்களது மேலான யோசனையையும் அருள வேண்டும்'' என்று பணிவுடன் கேட்டுக் கொண்டான்.

மெல்ல சிரித்தபடி அவன் தோள்களைத் தட்டிக் கொடுத்தார் பரத்வாஜர். ''உன் எண்ணம் புரிகிறது ராமா. உன் விருப்பப்படி நீ செல்லக் கூடிய பகுதி சித்திரகூடம்தான். அது வெகு தொலைவில் இருப்பதால் உன் மக்கள் உன்னைத் தேடி வருவதும் சந்தேகமே'' என்றார்.

''நானும் சித்திரகூடம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்பன் குகனிடமும் அந்த இடம் பற்றி விசாரித்திருக்கிறேன். நான் என் மனைவி, தம்பியுடன் அங்கே சென்று தங்குவதுதான் சரியாக இருக்கும்'' என்று பதிலளித்த ராமன், முனிவரை வணங்கிவிட்டு புறப்பட்டான்.போகும் வழியில் யமுனை நதி குறுக்கிட்டது. 'கங்கையைக் கடக்க குகன் உதவினான், இந்த யமுனையைக் கடக்க யார் உதவுவார்' என்று சிந்தித்தான் ராமன்.

அண்ணனுடைய மனதைப் படித்த லட்சுமணன் உடனே யமுனைக் கரையில் சற்றுத் தொலைவில் இருந்த மூங்கில் காட்டினுள் சென்றான். குட்டையாகவும், நெட்டையாகவும் பல மூங்கில் கழிகளை வெட்டி எடுத்தான். அருகில் படர்ந்திருந்த 'மாணை'க் கொடிகளை அறுத்து அந்த மூங்கில் கழிகளை ஒன்றோடு ஒன்றாகப் பிணைத்தான். அகலமான, கட்டுமரம் போன்ற தெப்பம் ஒன்றை உருவாக்கினான். அதை அப்படியே இழுத்துக் கொண்டு ராமனிடம் வந்தான். ''ஐயனே இதன் மூலம் யமுனை ஆற்றைக் கடக்கலாம்'' என்றான்.

அந்தத் தெப்பத்தைப் பார்த்து வியந்தான் ராமன். என்ன நேர்த்தியான வடிவமைப்பு! பருமனாகவும், ஒல்லியாகவும் பல மூங்கில் கழிகளை குறுக்கும், நெடுக்குமாகவும், நான்கு பக்கங்களிலும் எல்லை வகுத்தாற்போலவும், உள் பகுதி சற்றே குழிவாகவும் அமைத்திருந்த பாங்கு, அது போன்ற தெப்பம் கட்டுவதையே தொழிலாகக் கொண்டிருந்தவரின் தொழில் நுட்பத்தை பிரதிபலித்தது.

லட்சுமணன் எங்கே போய், யாரிடம், எப்படி இவ்வாறு தெப்பம் கட்டும் வித்தையைக் கற்றான்! பிரமிப்புடன் பார்த்தான் ராமன். சீதைக்கும் அதே ஆச்சரியம்.

அவர்களுடைய எண்ணத்தைப் புரிந்து கொண்ட லட்சுமணன், சற்றே நாணத்துடன், ''ஐயனே, குகன் நம்மை தன் படகில் ஏற்றி கங்கைக் கரையைக் கடக்க உதவுமுன் அவனுடைய படகுப் படையை நான் நோட்டம் விட்டேன். குகனைச் சார்ந்த படகோட்டிகள் விதவிதமான படகுகளைக் கையாண்டதைக் கண்டேன். அவற்றில் கட்டுமரம் போன்ற அமைப்பில் சிறு தெப்பங்களும் இருந்தன. அவை கட்டப்பட்டிருந்த விதத்தை உற்று நோக்கினேன். மூங்கில் கழிகளும், தாவரக் கொடிகளும் பயன்படுத்தப்பட்டிருந்தன. உள்ளீட்டற்ற மூங்கில் கழிகள் நீரில் மிதக்கும் தன்மை கொண்டவை. அதையும் பருமன் வாரியாகப் பிரித்து அடுத்தடுத்து கோர்த்தாற்போல கொடிகளால் பிணைத்தால் அது அதிக எடையையும் சுமந்து ஆற்று நீரில் மிதக்கும் ஆற்றல் கொண்டது என்பதையும் அறிந்து கொண்டேன். அந்த உத்தியில் உருவானதுதான் இந்தத் தெப்பம்''

ராமன் தம்பியை அப்படியே ஆரத் தழுவிக் கொண்டான்.

தெப்பம் யமுனை ஆற்றில் மிதந்தது. தெப்பத்தினுள் ராமனும் சீதையும் அமர்ந்திருந்தார்கள். தன் கரங்களாலும், கால்களாலும் ஆற்றில் நீந்தியபடி, நீரை விலக்கி, அதே சமயம் தெப்பத்தை முன்னோக்கி உந்தி ஆற்றைக் கடக்க உதவினான் லட்சுமணன்.

அவனது தொழில் நுட்ப அறிவும், புத்திசாலித்தனமும், அயராத முயற்சியும், ராமனை நெகிழச் செய்தன. 'என் தம்பி' என்ற பெருமித தோரணையில் சீதையைப் பார்த்தான். அவளும், 'என் மைத்துனன்' என்று அதே தோரணையில் ராமனைப் பார்த்து மகிழ்ந்தாள்.

- தொடரும்

பிரபு சங்கர்

prabhuaanmigam@gmail.com






      Dinamalar
      Follow us