sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

மகாபாரத மாந்தர்கள் - 15

/

மகாபாரத மாந்தர்கள் - 15

மகாபாரத மாந்தர்கள் - 15

மகாபாரத மாந்தர்கள் - 15


ADDED : நவ 16, 2021 02:14 PM

Google News

ADDED : நவ 16, 2021 02:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திரனாகிய நான் ...

நா ன் தேவர் உலகத்தின் தலைவன். ரிக் வேதத்தில் என்னைப் பற்றி மிக அதிகமாக கூறப்பட்டிருக்கிறது. நான் மழைக்கு அதிபதியும் கூட.

மகாபாரதத்தில் அர்ஜுனன் பங்கு மகத்தானது என்னும்போது அதில் என் பங்கும் இணைந்திருக்கிறது. குந்திதேவி எனக்கான மந்திரத்தைக் கூறியதனால் பிறந்தவன் அவன். இதைத் தவிரவும் கூட மகாபாரதத்தில் நான் பெரிதும் பிணைந்து இருக்கிறேன்.

மன்னன் பாண்டு இறந்தவுடன் ஹஸ்தினாபுரத்தின் அரியணை யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. அடுத்து ஆளப்போவது பாண்டுவின் மகன்களான பாண்டவர்களா அல்லது பாண்டுவின் கண்ணிழந்த சகோதரன் திருதராஷ்டிரரின் மகன்களான கவுரவர்களா. இரு தரப்பினருக்கும் போர் மூண்டு விடக்கூடாதே என்ற அச்சத்தில் தொலைதுாரத்தில் இருந்த காண்டவப்பிரஸ்தம் என்ற பகுதியை பாண்டவர்களுக்கு அளித்து அங்கு அவர்களை ஆட்சி செய்யச் சொன்னான் திருதராஷ்டிரன். சம்மதித்த யுதிஷ்டிரன் அங்கு மன்னனாக முடி சூட்டிக் கொண்டான். அந்த முடிசூட்டு விழாவுக்கு வந்திருந்தார் கண்ணன்.

விழா முடிந்த பிறகு கண்ணனும், அர்ஜுனனும் யமுனை நதிக் கரையோரமாக நடந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பிராமணன் அவர்களை அணுகி தனக்கு மிகவும் பசி எடுப்பதாகவும் தன் வயிறு நிறைய உணவை அவர்கள் அளிக்க வேண்டும் என்றும் வேண்டினார். அப்படி அளிப்பதாக அர்ஜுனன் உறுதிமொழி அளித்தவுடன் அந்த பிராமணன் தன் உண்மையான வடிவத்துக்கு மாறினார். அவர் அக்னிதேவன்!

அருகில் ஒரு அடர்ந்த காடு இருந்தது. அதைக் காண்டவ வனம் என்பார்கள். அந்தக் காட்டை தன்னுடைய ஜுவாலைகளால் எரிய வைத்து அதில் உள்ள உயிரினங்களை தனக்கு உணவாக்கிக் கொள்ள வேண்டுமென்று அக்னிதேவன் விரும்பினார். ஏற்கனவே அவருக்கு உதவுமாறு வாக்களித்ததால் அர்ஜுனன் இதற்கு ஒத்துக் கொண்டான். அவன் இதற்கு ஒத்துக் கொண்டதற்கு வேறொரு காரணமும் இருந்தது.

நாகங்கள் பலவும் அந்த காட்டில் வசித்து வந்தன. அவை அவ்வப்போது வெளியே வந்து பொதுமக்களுக்குத் தீங்கு விளைவித்தன. தவிர தீயவர்களுக்கும் அந்தக் காடு புகலிடமாக இருந்தது. ஆட்சிப் பொறுப்பில் உள்ளதால் காண்டவப்ரஸ்தத்தின் ஒரு பகுதியாக இருந்த அந்த வனத்தில் உள்ள தீமைகளை அழித்து மக்களைக் காப்பதும் பாண்டவர்களின் கடமைதானே!

ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் அந்தக் காட்டில்தான் நாக வம்சத்தைச் சேர்ந்த தட்சகன் என்ற எனது நண்பன் வசித்துக் கொண்டிருந்தான். அவன் நாகங்களின் அரசன்.

எனவே எப்போது அக்னிதேவன் அந்த கானகத்தைப் பற்றிக் கொள்ளத் தொடங்கினாலும் நான் மழை பெய்வித்து அதை அணைக்கச் செய்து விடுவேன். இதனால்தான் அக்னி தேவன் தந்திரமாக அர்ஜுனனின் உதவியை நாடினார்.

'அக்னி தேவா, உன் கோரிக்கைக்கு உடன்பட்டால் நாங்கள் இந்திரனை எதிர்க்க வேண்டி இருக்கும். அப்படி எதிர்ப்பதற்கு எங்களுக்கு தெய்வீக ஆயுதங்கள் தேவைப்படுமே' என்றான் அர்ஜுனன். உடனே அர்ஜுனனுக்கு ஓர் அற்புதமான வில்லை அளித்தார் அக்னிதேவன். அதுதான் பின்னர் காண்டீபம் என்று அழைக்கப்பட்டது. தவிர ஒரு மிகச் சிறப்பான ரதமும் அவனுக்கு அளிக்கப்பட்டது.

அக்னிதேவன் காண்டவ வனத்தைப் பற்றத் தொடங்கினார்.

செய்தியை அறிந்ததும் நான் துடித்துப் போனேன். அந்த வனத்தில் இருந்த என் நண்பன் தட்சகன் என்ன ஆனானோ. உடனடியாக மழையைப் பொழிய விட்டேன். ஆனால் அர்ஜுனன் தனது அஸ்திரத்தின் மூலம் ஒரு பெரிய நெருப்புப் படலத்தை காண்டவ வனத்துக்கு மேல் பகுதியில் குடை போன்று உருவாக்கினான். மழை நீர் அதில் பட்டவுடன் ஆவியானது. இதனால் காண்டவ வனம் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது.

உடனே எனது வெள்ளை யானையான ஐராவதத்தில் ஏறி நேரடியாக நான் என் படையுடன் அங்கு சென்றேன்.

என் படையுடன் மோதத் தயாரான அர்ஜுனனைப் பார்த்ததும் திகைத்து விட்டேன். அவன் என் மகன் அல்லவா. என்றாலும் என் எதிரியாக அப்போது விளங்கும் அக்னி தேவனுக்கு ஆதரவாக அல்லவா அவன் இருக்கிறான். எனவே அர்ஜுனனுடன் போரிடத் தொடங்கினேன். என் அஸ்திரங்களினால் காயம் ஏற்பட்டபோதும் அர்ஜுனன் தொடர்ந்து போராடினான். என் சேனையைத் தோற்கடித்தான். வேறுவழியின்றி நான் என் வஜ்ராயுதத்தை அவன்மீது செலுத்த முயற்சி செய்தேன்.

அப்போது வானிலிருந்து ஒரு குரல் கேட்டது. 'இந்திரனே, உன்னுடைய நண்பன் தட்சகன் அந்த வனத்தை விட்டுப் பாதுகாப்பான ஒரு இடத்திற்கு ஏற்கனவே சென்று விட்டான். அவன் குறித்து கவலைப் படாதே. கண்ணனிடம் மன்னிப்புக் கோரி விட்டு நீ தேவருலகத்துக்குச் சென்று விடு' என்றது அந்த அசரீரி. நான் போரை நிறுத்தினேன். அர்ஜுனன் என்னைப் பணிந்து புதிதாக உருவாகவுள்ள அவர்களின் தலைநகருக்கு என் பெயரையே வைப்பதாகக் கூறினான். தேவருலகச் சிற்பி விஸ்வகர்மா மிக அழகிய நகர் ஒன்றைப் பாண்டவர்களுக்காக உருவாக்கினார். இதற்கு இந்திரப்ரஸ்தம் என்று எனது பெயர் சூட்டப்பட்டது.

என் மகன் அர்ஜுனன் குறித்து எனக்கு மிகப் பெருமை உண்டு. வில்வித்தையில் நிகரில்லாதவனாக இருந்தான். அவனைத் தனது தலை சிறந்த மாணவன் என்று துரோணாச்சாரியாரும் கூறினார். ஆனால் கர்ணனின் ஆயுதப் பயிற்சி எனக்குக் கவலை அளித்தது. அவன் சூரியனின் அம்சம் என்ற உண்மை எனக்கு தெரிந்ததால் அச்சம் பிறந்தது. அதுவும் பிறக்கும் போதே கவச குண்டலங்களுடன் அவன் பிறந்தான் என்பதையும் அர்ஜுனனை அழிப்பதாக அவன் துரியோதனனிடம் வாக்களித்திருக்கிறான் என்பதையும் அறிந்ததும் என் கவலையைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்தது.

எனவே அந்தக் கவச குண்டலங்களை அவனிடம் இருந்து நீக்க விரும்பினேன். இதற்காக ஒரு உபாயத்தைக் கையாண்டு முதியவன் போல வேடமிட்டு கர்ணன் இருக்கும் இடம் தேடி நடக்கத் தொடங்கினேன். அவனது ஞானத் தந்தை சூரியன் இதைப் புரிந்து கொண்டார். கர்ணனிடம் இதுகுறித்து முன்னதாகவே எச்சரித்தார்.

கர்ணனிடம் சென்று யாசகம் வேண்டினேன். அவன் சம்மதிக்க, அவனுடைய கவசத்தையும் குண்டலங்களையும் எனக்குத் தருமாறு கேட்டேன். அவன் புன்னகைத்தவாறே 'நீங்கள் இந்திர தேவன் என்பதும் அர்ஜுனனுக்கு சாதகமாக இப்படிக் கேட்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். என்றாலும் என்னிடம் யாசகம் கேட்கும் யாரையும் நான் கைவிடமாட்டேன்' என்றபடி தன் கவச குண்டலங்களை அறுத்து என்னிடம் தந்தான். பிள்ளைப் பாசம் காரணமாக இப்படி ஒரு செயலை நான் செய்ய நேர்ந்தது எனக்கு ஒரு களங்கம்தான்.

-தொடரும்

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் அமைந்திருக்கிறது இந்திரனுக்கான கோயில். ஹிந்து மதத்தில் மட்டுமல்ல புத்த மதம் மற்றும் சமண மதங்களில் கூட இந்திரனுக்குத் தனி இடம் உண்டு. இந்திரனின் உத்தரவின் பேரில்தான் தேவசிற்பியான விஸ்வகர்மா பாங்காங் நகரையே படைத்தான் என்று அவர்கள் நம்புகிறார்கள் இதன் காரணமாகவே அதை 'சாக்க தத்திய விட்சனுகம் ப்ராஸிட்' என்கிறார்கள்.(தாய் நாட்டின் மொழியில் சாக்கா என்பது இந்திரனையும் விட்சனுகம் என்பது விஸ்வகர்மாவையும் குறிக்கின்றன. தத்திய என்றால் உத்தரவு. ப்ராஸிட் என்றால் உருவாக்கம்).

பாங்காக் நகரில் பிரபல பிரம்மன் கோயில் அமைந்துள்ள அதே சாலையில் இந்திரனுக்கான கோயிலும் அமைந்துள்ளது. அளவில் பெரிதாகக் காட்சிதருகிறார் இந்திரன். ஒருவித பச்சை வண்ணத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறார். நான்கு கரங்கள் கொண்டவராக தோற்றமளிக்கிறார். சக்கரம், வஜ்ராயுதம், திரிசூலம் ஆகியவற்றைத் தாங்கி அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். மூன்று தலைகள் கொண்ட வெள்ளை யானையான ஐராவதத்தின் மீது அமர்ந்திருக்கிறார்.

இந்தியாவைப் பொருத்தவரை மகாராஷ்டிராவில் உள்ள வகாதி என்ற கிராமத்தில் இந்திரனுக்கு கோயில் உள்ளது. சுற்றிலும் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது. இது ஒரு குன்றின் மேல் எழுப்பப்பட்டிருக்கிறது.

அந்த கிராமத்தில் ஒரு காலத்தில் கடும் பஞ்சம் நிலவியது. அப்போது அவர்கள் மழைக்கு அதிபதியான இந்திரனை மனமுருகி வழிபட்டனர். அதைத் தொடர்ந்து கனமழை பெய்து அந்த கிராமம் செழிக்கத் தொடங்கியது. இதனால் அந்த கிராம மக்கள் நன்றியோடு இந்திரனுக்கு கோயில் எழுப்பியிருக்கிறார்கள்.

ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீகாகுளம் என்ற பகுதியில் அரசவல்லி எந்த இடத்தில் அமைந்திருக்கிறது சூரிய நாராயணர் கோயில். இங்கு சூரியனுக்கு ஒரு அழகிய சிலை உள்ளது. அருகிலுள்ள புஷ்கரிணி என்ற புனிதக் குளம் இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் உருவாக்கியது என்று கூறப்படுகிறது.

இமாச்சல பிரதேசத்தில் ரேணுகா ஏரியின் கரையில் அமைந்துள்ள காயத்ரிதேவி கோயிலில் இந்திரனின் ஒரு சலவைக்கல் உருவம் காணப்படுகிறது.

ஜி.எஸ்.எஸ்.






      Dinamalar
      Follow us