sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

மகாபாரத மாந்தர்கள் - 17

/

மகாபாரத மாந்தர்கள் - 17

மகாபாரத மாந்தர்கள் - 17

மகாபாரத மாந்தர்கள் - 17


ADDED : நவ 29, 2021 10:19 AM

Google News

ADDED : நவ 29, 2021 10:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துரியோதனனாகிய நான்... (தொடர்ச்சி)

பொறாமை என் இயல்பான குணம். வஞ்சக வழிகளில் கண்ணன் பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார் என்று சொல்வர். அந்தப் பெருமை உண்மையில் எனக்கு தான் சொந்தம். ஏனென்றால் போருக்கு முன்பாக பல வஞ்சக திட்டங்களை செயல்படுத்தியவன் நான். சிறுவனாக இருக்கும் போதே பீமனுக்கு உணவில் விஷம் வைத்தது, பாண்டவர்களை அரக்கு மாளிகையில் தங்க வைத்து தீ வைத்தது, அவர்கள் வனவாசம் செய்தபோது துார்வாச மகரிஷியை அங்கு அனுப்பி அவர்களுக்கு சாபமளிக்கும்படியான சூழலை ஏற்படுத்தியது என்று பல விதங்களில் என் பொறாமை வெளிப்பட்டது. ஆக போருக்கு முன்பே பாண்டவர்களைக் கொல்வதற்காக பல திட்டங்களில் ஈடுபட்டு வந்தேன்.

இந்திரப்பிரஸ்தம் என்ற அற்புதமான நகரை பாண்டவர்கள் உருவாக்கிக் கொண்டதும் ராஜசூய யாகம் நடத்தி பல மன்னர்களை தங்கள் நண்பர்களாக்கிக் கொண்டதும் என் பொறாமையைக் கொழுந்து விட்டெரியச் செய்தது. இந்திரப்பிரஸ்த மாளிகையில் நான் செல்லும் போது மாயை காரணமாக ஒரு குளத்தில் நான் தடுக்கி விழ அப்போது சிரித்த திரவுபதி என் தன்மானத்தைப் பெரிதும் காயப்படுத்தினாள். இதற்கு சரியானபடி வஞ்சம் தீர்ப்பதற்கான ஒரு வாய்ப்பை என் மாமன் சகுனி விரைவிலேயே ஏற்படுத்திக் கொடுத்தார்.

அவருடன் பகடை விளையாடி தன்னுடைய ராஜ்யத்தை மட்டுமல்லாது தன்னை, தன் தம்பிகளை, தன் மனைவியை என்று அனைவரையும் வைத்து தோற்றான் யுதிஷ்டிரன். திரவுபதியை அரசவைக்கு இழுத்து வரச் சொன்னேன். அவள் ஆடைகளைக் களையச் சொன்னேன். என் தொடையில் அவளை உட்காரச் சொன்னேன். அப்போது போரில் என் தொடையைப் பிளப்பதாக பீமன் சபதம் செய்தான். முதலில் அவர்கள் பன்னிரண்டு வருட வனவாசத்தை முடித்த பிறகு அல்லவா போரைப் பற்றிப் பேச வேண்டும்! ஏளனமாகச் சிரித்தேன்.

வனவாசத்தின் போது பாண்டவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் அந்த கஷ்டத்தை நேரடியாக பார்த்து ரசிப்பது ஒரு தனி சுகமல்லவா. கர்ணனையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றேன். பாண்டவர்கள் தங்கியிருந்த ஆஸ்ரமத்திற்கு அருகே ஓரிடத்தில் தங்க நினைத்து என் படையினரை அங்கு விடுதிகளைத் தயார் செய்யச் ஆணையிட்டேன். ஆனால் அங்கே கந்தர்வன் சித்ரசேனனும் அவனது படை வீரர்களும் தங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என் படைவீரர்களைக் கூடாரம் கட்ட விடாமல் துரத்தி அடித்தனர். அவர்களுடன் நாங்கள் போர் புரிந்தோம். ஆனால் என்ன அவமானம்! சித்திரசேனன் என்னை உயிருடன் பிடித்துக் கயிற்றால் கட்டி தேரில் தொங்க விட்டான். கர்ணன் போர்க்களத்திலிருந்து அதற்கு முன்பாகவே ஓடிவிட்டான். இதை விட பெரும் அவமானம் அடுத்ததாக நிகழ்ந்தது. நான் தோற்றதை அறிந்த யுதிஷ்டிரன் 'என்ன இருந்தாலும் துரியோதனன் நம் தம்பி. அவனை மீட்க வேண்டும்' என்று தன் தம்பிகளுக்கு உத்தரவிட பாண்டவர்கள் வந்து என்னை விடுவித்தனர். அவர்கள் எனக்கு உயிர்ப் பிச்சை அளித்ததாக எனக்குத் தோன்றவில்லை. என்னை சிறுமைப்படுத்தியதாகத்தான் உணர்ந்தேன்.

என் அரண்மனையில் இருந்த மூத்த ஆலோசகர்கள் அனைவரும் மனதளவில் பாண்டவர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர். பீஷ்மர், துரோணர், கிருபர், விதுரர் இப்படி அத்தனை பேருமே தர்ம நெறி என்ற முட்டாள்தனமான ஒன்றைக் கட்டிக்கொண்டு அழுதனர். நியாயமான வழிமுறை என்று பிதற்றிக் கொண்டிருந்தனர்.

பன்னிரண்டு வனவாசமும் ஒரு வருடம் அஞ்ஞாதவாசமும் முடிந்து பாண்டவர்கள் திரும்பி வந்தனர். பாதி ராஜ்யத்தைக் கேட்டனர். முடியாது என்றேன். ஐந்து கிராமங்களைப் பிச்சை கேட்டான் யுதிஷ்டிரன். ஆணவத்துடன் மறுத்தேன். ஊசிமுனை நிலம் கூட கொடுக்க முடியாது என்றேன். மகாபாரதப் போர் தொடங்கியது. பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமன், கிருபர், கர்ணன் போன்ற போர்முறையில் வல்லுனர்கள் எங்கள் தரப்பில்தான். போதாக்குறைக்கு கண்ணன் இந்த போரில் ஆயுதத்தை எடுக்க மாட்டேன் என்று உறுதி கூறிவிட்டான். கர்ணன் அர்ஜுனனைக் கொன்று விடுவான். நான் பீமனைக் கொன்று விடுவேன். இப்படி மனக்கணக்குப் போட்டேன்.

ஆனால் எதிர்பாராதது நடந்தது. பாண்டவர்கள் பக்கமே வெற்றி என்றானது. ஒரு கட்டத்தில் கர்ணனும் இறந்துவிட அதிர்ச்சி அடைந்தேன். அப்போது கிருபர் என்னிடம் வந்து இப்போதாவது சமாதானமாகப் போய் விடு என்று கூறினார். மறுத்தேன். சல்லியனை படைத்தலைவராக கொண்டு போரைத் தொடர்ந்தேன்.

யுதிஷ்டிரன் தனது சக்தி ஆயுதத்தை வீசி சல்லியனைக் கொன்றான். சகாதேவன் சகுனியைக் கொன்றான். மனதின் வெப்பம் உடலையும் தகிக்க சற்று தள்ளியிருந்த ஒரு குளத்துக்குள் இறங்கினேன். பாண்டவர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். 'துரியோதனா, நீருக்குள் ஒளிந்து கொண்டு இருக்கிறாயா' என்றனர் கேலியாக. கதாயுதத்துடன் தண்ணீரில் இருந்து வெளிப்பட்டேன்.

எதிரில் பாண்டவர்கள் ஐவரும் இருந்தனர். என்றாலும் 'எங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனுடன் நீ போர் புரிந்தால் போதும்' என்றார் யுதிஷ்டிரன். கவுரவர் தரப்பில் பலர் ஒன்று சேர்ந்து ஒரே சமயத்தில் பாலகன் அபிமன்யுவை தாக்கி கொன்றது நினைவுக்கு வந்தது. அதனால் என்ன. பீமனுடன் மட்டுமே போரிட முன்வந்தேன். பீமனுக்கும் எனக்கும் கடும் கதாயுதம் நடந்தது. அதில் பீமன் என் தொடையைப் பிளந்து கொன்றான்.வெறுப்பை வளர்த்துக் கொண்டதாலும் விட்டுக்கொடுக்கும் மனம் இல்லாததாலும் என் வாழ்வு இப்படி முடிந்தது.

- தொடரும்

தென்னிந்தியாவில் துரியோதனனுக்கான கோயில் கேரளாவில் உள்ளது. பொருவழி பெருவ்ருத்த மலநாடா என இது அழைக்கப்படுகிறது. பொருவழி என்பது கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். குன்றில் அமைந்துள்ள இந்த கோயிலில் சிலை கிடையாது. உயர்த்தப்பட்ட ஒரு மேடை இருக்கிறது. இதை மண்டபம் என்கிறார்கள். இங்கு வருபவர்கள் துரியோதனனை எண்ணி மனதில் சங்கல்பம் செய்து கொள்கிறார்கள்.

பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக துரியோதனன் பல இடங்களுக்குச் சென்றான். அப்போது மலநாடா குன்றினை அடைந்தான். ஒரு கட்டத்தில் களைப்படைந்து அருகிலிலுள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்து தண்ணீர் வேண்டும் என்று கேட்டான். அது அந்தப் பகுதியின் பூஜாரி வாழ்ந்த வீடு. அவர்தான் அந்தப் பகுதியை ஆட்சி செய்தவரும் கூட. வந்திருப்பது மன்னர் என்பதை அறியாமலேயே அந்த வீட்டைச் சேர்ந்த ஒரு மூதாட்டி அவருக்கு சிறிது மது அளித்தாள் (மது அளிப்பது அந்த காலத்தில் மரியாதைக்கு ஓர் அடையாளம்). அந்த மூதாட்டி குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதை அவள் அணிந்திருந்த அணிகலன்கள் மூலமே தெரிந்து கொண்டான் துரியோதனன். அந்த மதுவை ஆனந்தமாக பருகினான். பிறகு அந்தக் குன்றின் மீது அமர்ந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டான். அவன் மனம் ஏனோ மிகவும் ஆனந்தத்தில் ஆழ்ந்தது. அங்கிருந்த பரப்பில் அதிகமான விவசாய நிலங்களை கொடையாகக் கொடுத்தான். இந்தப் பகுதியில் வசூலிக்கப்படும் நிலவரியைக் கூட துரியோதனன் என்றே குறிப்பிடுகிறார்கள். ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் இங்கு 'மாலாக்குடா' என்னும் பெயரில் விழா நடக்கிறது.

ஜி.எஸ்.எஸ்.






      Dinamalar
      Follow us