sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

மகாபாரத மாந்தர்கள் - 22

/

மகாபாரத மாந்தர்கள் - 22

மகாபாரத மாந்தர்கள் - 22

மகாபாரத மாந்தர்கள் - 22


ADDED : ஜன 07, 2022 09:42 AM

Google News

ADDED : ஜன 07, 2022 09:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அர்ஜுனனாகிய நான்...

பாண்டுவின் மூன்றாவது மகனாக அறியப்பட்டவன் நான். அன்னை குந்திதேவி தெய்வீக மந்திரத்தைக் கூறி இந்திரனைத் துதித்ததால் அவர் அம்சமாகப் பிறந்தவன்.

யார் என்று அறியாமலேயே கடவுள் சக்திகளுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது என் பாக்கியம். திருமாலின் அவதாரம் என்று அறியாமலேயே கண்ணன் என் தோழன் ஆனார். குருக்ஷேத்திரத்தில் என் குழப்பங்களை தீர்க்க அவர் விஸ்வரூபம் எடுத்த போதுதான் அவர் யார் என்பதையும், நான் எத்தனை அதிர்ஷ்டசாலி என்பதையும் அறிந்து கொண்டேன்.

சிவபெருமானிடமிருந்து பாசுபதாஸ்திரத்தை நான் பெற்றுக் கொண்டதும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு.

வனவாசத்தின் போது பாண்டவர்களாகிய நாங்கள் சும்மா இருக்கவில்லை. கவுரவர்களுடன் பின்னர் போர் நிகழும் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை. அந்தப் போருக்காக எங்களை அப்போது தயார் செய்து கொள்ள தீர்மானித்தோம். தெய்வாஸ்திரங்களைப் பெறுவதற்காக இந்திரனை மனதில் நினைத்தேன். அவர் வந்தார். 'மகனே, சிவபெருமானைக் குறித்து தவம் செய். அவரிடம் திவ்ய அஸ்திரங்கள் தேவை என்று வரம் கேள்' என்று கூறி அனுப்பினார்.

சிவபெருமான் குறித்து நீண்ட காலம் தவம் இருந்தேன். அப்போது காட்டுப் பன்றி ஒன்று வந்தது. அதை அம்பு எய்து கொன்றேன். ஆனால் அதன் உடலில் இரண்டு அம்புகள் தைத்து இருந்தன. மற்றொரு அம்பை எய்த வேடன் ஒருவன் 'இந்த வனம் எங்களுக்கு சொந்தமானது. இந்தப் பன்றியை நான்தான் கொன்றேன் என்று ஒப்புக்கொள். இல்லையென்றால் சண்டையில் என்னை ஜெயித்து காட்டு' என்றான்.

என் தன்மானம் சிலிர்த்து எழுந்தது.அடுத்தடுத்து அந்த வேடன் மீது அம்புகளை செலுத்தினேன். எந்தப் பலனும் இல்லை. அவனுடன் முஷ்டி யுத்தம் செய்யத் தொடங்கினேன். ஆனால் ஒருகட்டத்தில் அந்த வேடன் என்னை மார்போடு இறுகக் கட்டிக்கொண்டு என்னை முழுக்க செயலற்றுப் போகச் செய்தான்.

இது என்ன சோதனை! சிவபெருமானை தியானித்தேன். அடுத்த நொடியில் உண்மை விளங்கியது. வேடன் வேடத்தில் வந்தது சிவபெருமான்தான். அவர் காலில் விழுந்தேன். சிரித்தபடி பாசுபதாஸ்திரத்தை அளித்தார். கூடவே பல்வேறு வரங்களையும் அளித்தார்.

விந்தையான சூழலின் பின்னணியில் திரவுபதியை பாண்டவர்களாகிய நாங்கள் அனைவரும் மணந்து கொள்ள நேரிட்டது. எங்களில் ஒருவரிடம் திரவுபதி தனித்திருக்கும் போது மற்ற நால்வரும் எந்த விதத்திலும் இடையூறாக இருக்கக் கூடாது என்ற ஒப்பந்தம் உருவானது. ஆனால் அரக்கன் ஒருவனை உடனடியாகக் கொல்வதற்காக அண்ணன் யுதிஷ்டிரனும், திரவுபதியும் இருந்த அறைக்குள் சென்று ஆயுதங்களை உடனடியாக சேகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படி நடந்தால் ஒப்பந்தத்தை மீறியவர் ஒரு வருடம் தனியே வனத்தில் காலத்தை கழிக்க வேண்டும் என்ற நியதியை மேற்கொண்டேன்.

இந்தக் காலகட்டத்தில் மூன்று பெண்களை நான் அடுத்தடுத்து மணந்து கொண்டேன். நாக வம்சத்தைச் சேர்ந்த உலுாபி இவர்களில் முதலாமவள். அவள் மூலமாக அரவான் என்ற குழந்தை பிறந்தது. மணிபுரத்தைச் சேர்ந்த சித்ராங்கதை என்பவளை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். அவள் மூலமாக எனக்குப் பிறந்தவன் பப்ருவாகனன். மூன்றாவதாக கண்ணனின் தங்கையான சுபத்ரையையும் திருமணம் செய்து கொண்டேன். அபிமன்யு பிறந்தான்.

இப்படிப் பல பெண்கள் மீது மையல் கொண்டதற்கு எனது தோற்றத்தோடு இசை, நடனம் போன்ற கலைகளில் நான் தேர்ச்சி பெற்றிருந்ததும் ஒரு காரணம்.

நான் மணந்த பெண்களின் பட்டியலைப் பகிர்ந்து கொண்டேன். அதற்காக என்னைப் பெண் பித்தன் என்று எண்ணி விட வேண்டாம். என் மீது மையல் கொண்ட ஒரு பெண்ணையும் எனக்காக திருமணம் பேசப்பட்ட ஒரு பெண்ணையும் நான் ஏற்க மறுத்ததும் உண்டு.

இந்திர உலகத்திற்குச் செல்லும் போது என்னை தேவலோக நடனமணியான ஊர்வசி விரும்பினாள். ஆனால் அவள் விருப்பத்துக்கு இணங்க மறுத்தேன். என் தந்தை இந்திரனின் மனம் கவர்ந்த அவள் என் தாய்க்குச் சமமானவள் என்றேன். கோபம் கொண்ட ஊர்வசி 'நீ ஆண்தன்மையை இழப்பாய்' என்று சாபமிட்டாள். விவரம் அறிந்த இந்திரன் என் தரப்பு நியாயத்தை அறிந்து கொண்டார். 'ஊர்வசி அளித்த சாபம் ஒரு வருடத்துக்கு மட்டும் செல்லும். அந்த ஒரு வருடம் எது என்பதை நீயே பின்னர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்' என்று கூறினார்.

பகடை விளையாட்டில் கவுரவர்களிடம் தோற்ற பிறகு 12 வருட வனவாசமும், ஒரு வருட அஞ்ஞாத வாசமும் இருக்க வேண்டியதாயிற்று. அஞ்ஞாத வாசம் என்றால் பிறர் எங்களை யாரென்று அறிந்து கொள்ளாமல் வாழ வேண்டும். அதற்கு ஊர்வசி அளித்த சாபம் எனக்கு உதவிகரமாக இருந்தது. பிருஹன்னளை என்ற பெயரில் ஆணும் அற்ற பெண்ணும் அற்ற வடிவில் விராட மன்னனின் அந்தப்புரத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அவர் மகளுக்கு நடனம் கற்றுக் கொடுத்தேன். காலம் எப்படி எல்லாம் விளையாடுகிறது! ஒரு வருடம் முடியும் தருவாயில் நாங்கள் விராட நாட்டில் இருக்கக்கூடும் என்பதை யூகித்து துரியோதனன் அந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தான். பயந்து நடுங்கிய விராட மன்னனின் மகன் உத்தரனுக்குத் தேரோட்டியானேன். என் சிறப்பு அஸ்திரங்களைப் பயன்படுத்தி கவுரவர்களைத் தோற்கடிக்க செய்தேன்.

இதற்கு நன்றியாகத் தன் மகள் உத்தரையை எனக்கு திருமணம் செய்து கொடுக்க முன்வந்தார் விராட மன்னன். நான் மறுத்தேன். நடனம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் என்பதால் அவளுக்கு நான் தந்தை போன்றவன் என்று கூறி என் மகன் அபிமன்யுவுக்கு அவளைத் திருமணம் செய்து வைத்தேன். என் வாழ்வின் வேறு சில திருப்புமுனைகளை அடுத்த இதழில் பகிர்ந்து கொள்கிறேன்.

-தொடரும்

எட்டாம் நுாற்றாண்டைச் சேர்ந்த அர்ஜுனன் கோயில் இந்தோனேசியாவில் மத்திய ஜாவா பகுதியில் உள்ள டியெங் பள்ளத்தாக்கில் உள்ளது. இங்கு எட்டு சிறு ஹிந்து கோயில்கள் உள்ளன. இவற்றைக் கட்டிய மன்னன் குறித்து எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை.

அர்ஜுனன் கோயில் மலைகளும் குன்றுகளும் சூழப்பட்ட இயற்கை அழகு மிக்க பகுதியில் உள்ளது. இங்குள்ள நான்கு கோயில்களில் வடக்கு முனையில் உள்ளது அர்ஜுனன் கோயில். மீதி மூன்று கோயில்களோடு ஒப்பிடும்போது இது சற்றுப் பெரிதாகவும் சிதிலம் அடைந்ததாகவும் உள்ளது.

கோயிலில் ஒரே சன்னதிதான். நுழைவாயிலின் மேற்புறத்தில் இந்தோனேசிய கட்டுமானங்களை நினைவுபடுத்துவது போல ஒரு டிராகனின் தலை காணப்படுகிறது.

ஹரியானாவில் உள்ள குருக்ஷேத்திரத்தில் உள்ள ஜோதிஸர் என்ற பகுதியில் கிருஷ்ணர், அர்ஜுனர் கோயில் உள்ளது. ஸ்ரீபிரபுபாதர் என்னும் சுவாமிஜியின் விருப்பப்படி இந்த கோயில் இஸ்கான் அமைப்பால் கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தார். (மகாபாரதத்தில் பீஷ்ம பர்வத்தில் 23 ல் இருந்து 40வது அத்தியாயம் வரை பகவத்கீதையை காணலாம். 700 பாடல்களாக அமைந்தது. ஒவ்வொன்றும் இரண்டு வரிகள் கொண்டது. ஆக மொத்தம் 1400 வரிகள்)

ஆறு ஏக்கர் நிலத்தில் அமைந்தது இந்த கோயில் இதற்கான அஸ்திவாரக் கல் 2015 ஆகஸ்ட் மாதத்தில் நிறுவப்பட்டது.

ஜி.எஸ்.எஸ்.

aruncharanya@gmail.com






      Dinamalar
      Follow us