ADDED : மே 08, 2022 04:52 PM

திரவுபதியாகிய நான்... தொடர்ச்சி
முன்னொரு காலத்தில் இந்திரன் பாகீரதி நதிக்கரையில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது அதில் தங்கத்தாமரை ஒன்றைக் கண்டான். அந்தத் தாமரையை நதிநீர் அடித்துச் சென்று கொண்டிருந்தது. எங்கிருந்து அந்த தங்கத்தாமரை வந்திருக்கும்? இப்படி ஒரு கேள்வியோடு அவன் நதியின் தொடக்க இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். அங்கே ஒரு பெண்ணைக் கண்டான். அவள் தன் பானையில் நதிநீரை சேகரித்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். அந்த கண்ணீர்த் துளிகள் நதியில் பட்டதும் அவை தங்கத் தாமரைகளாக மாறிவிட்டன.
அந்தப் பெண்ணின் பின்னால் இந்திரன் நடக்கத் தொடங்கினான். அவள் இமயமலையை நோக்கி நடந்தாள். அதன் உச்சியில் ஓர் இளைஞர் இளம் பெண் ஒருத்தியுடன் பகடை ஆடிக்கொண்டிருந்தார். இந்திரன் வந்ததை அவர் பொருட்படுத்தவில்லை.
கோபம் கொண்ட இந்திரன் 'என்னையா அலட்சியப்படுத்துகிறாய்? இந்த உலகமே என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது' என்று குரல் எழுப்பினான். அந்த இளைஞன் இதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆடவே இந்திரனுக்கு கடும் கோபம் வந்தது. 'நான்தான் இந்த உலகின் அதிபதி என்பதைப் புரிந்து கொள்' என்று கத்தினான்.
பார்வதி தேவியுடன் பகடை ஆடிக் கொண்டிருந்தது சிவபெருமான். அவர் இந்திரனின் திமிரால் எரிச்சல்பட்டு அவனைக் கோபமாகப் பார்த்தார். உடனே இந்திரன் உடல் இயக்கம் இழந்து ஒரு கல்லைப் போல நின்றான். சிவ பெருமான் தன் பகடை ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடினார். அழுதுகொண்டிருந்த பெண்ணிடம் 'இந்திரன் இனி ஒருபோதும் கர்வப்படாதபடி நான் நடவடிக்கை எடுக்கிறேன். அவனைத் தொடு' என்றார்.
இயக்கம் இழந்து சிலை போல நின்று கொண்டிருந்த இந்திரனை அந்தப் பெண்மணி தொட்டாள். உடனே இந்திரன் கீழே விழுந்தான். பின் மூர்ச்சை தெளிந்தான். சிவபெருமான் அங்கிருந்த ஒரு குகைக்கு அவனை அழைத்துச் சென்றார். அதன் நுழைவாயிலை மூடி இருந்த கல்லை நீக்கிவிட்டு உள்ளே பார்க்கச் சொன்னார். அப்படிப் பார்த்த போது இந்திரன் மிகவும் வியப்படைந்தான். உள்ளே தன்னைப் போலவே நான்கு பேர் உட்கார்ந்திருப்பதைக் கண்டான்.
சிவபெருமான் விளக்கினார். 'இவர்கள் நால்வரும் பல்வேறு காலகட்டங்களில் தேவலோகத்தை உன்னைப் போலவே ஆண்டவர்கள். கர்வப் பட்டதால் இந்த குகைக்குள் அடைக்கப் பட்டார்கள். இப்போது நீ ஐந்தாவதாக தலைச் செருக்கு கொண் டாய். நீங்கள் அனைவரும் உலகில் பிறந்து சிறிது காலம் வாழ்ந்த பிறகு மீண்டும் தேவ லோகத்துக்கு வந்து சேர்வீர்கள்' என்றார்.
தேவர் உலகத்தை ஆட்சி செய்வது இந்திரன் என்று கூறப்பட்டாலும் இந்திரன் என்பது அந்தப் பதவியின் பெயர்தான். இந்திர பதவி வகிக்கும் ஒருவர் பெரும் தவறு இழைத்தாலோ, ஒரு மனுவந்த்ரம் என்கிற கால அளவுக்கு ஆட்சி செய்தாலோ அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அடுத்தவர் இந்திர பதவிக்கு வருவார். ஒவ்வொரு இந்திரனுக்கும் ஒரு பெயர் உண்டு. மேற்படி குகையில் அடைக்கப்பட்ட நான்கு இந்திரர்களின் பெயர்கள் விஸ்வபுக், புவாதமன், சிவி மற்றும் சண்டி. அவர்கள் ''ஈசனே, உங்கள் கட்டளைப்படி நாங்கள் பூமியில் பிறக்கிறோம். எங்களின் ஞானத் தந்தையராக தர்மர், வாயு மற்றும் அஸ்வினி சகோதரர்கள் இருக்கட்டும்'' என்று வேண்டினார்கள்.
அப்போதைய இந்திரன் (அவன் பெயர் தேஜஸ்வின்) மேலும் ஒரு வேண்டுகோளை விடுத்தான். 'என்னுடைய ஒரு பகுதி பூமியில் பிறக்கவும், மறுபகுதி தேவர் உலகத்தை ஆட்சி செய்யவும் நீங்கள் அருள் செய்ய வேண்டும்' என்று கெஞ்சினான்.
அதை ஏற்றுக் கொண்டார் சிவபெருமான். கூடவே 'தற்போதைய இந்திரனை என்னிடம் அழைத்து வந்த பெண் தெய்வ அம்சம் பொருந்தியவள். பூமியில் நீங்கள் பிறக்கும் போது உங்கள் அனைவருக்கும் அவள் ஒருத்தியே மனைவியாவாள்' என்றும் கூறினார்.
அந்த ஐந்து இந்திரர்களும்தான் பாண்டவர்களாகப் பிறந்தார்கள். அர்ஜுனர் இந்திரனின் ஒருபகுதியாக விளங்கினார். நான் திரவுபதியாக யாகத்தீயில் பிறந்து அவர்களை மணந்தேன். பாண்டவர்கள் ஒவ்வொருவருடனும் ஒரு வருடம் என முறை வைத்துக் கொண்டு இல்லற வாழ்வை நடத்தினேன். பிரதிவிந்தியன், சுதசோமன்,
ஸ்ருதகர்மன், சதானிகன், ஸ்ருதசேனன் என்று ஐந்து மகன்கள் முறையே தர்மர், பீமர், அர்ஜுனர், நகுலர், சகாதேவர் ஆகியோருக்கும் எனக்கும் பிறந்தனர். இவர்கள் உபபாண்டவர்கள் என அழைக்கப்பட்டனர்.
பகடை விளையாட்டில் சகுனி வஞ்சகமாக செயல்பட்டான். அவன் சூழ்ச்சியை அறியாமல் யுதிஷ்டிரர் தன் சொத்துக்களையும் தம்பிகளையும் தன்னையும் என்னையும் சூதாட்டத்தில் வைத்து இழந்தார். துரியோதனன் என்னை அழைத்து வருமாறும் தன் வீட்டை நான் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் விதுரரிடம் கூறினான். விதுரர் மறுத்தார். உடனே தனது தேரோட்டி பிரதிகாமியை அழைத்த துரியோதனன் என்னை கூட்டி வரச் சொன்னான்.
நடந்ததை அறிந்த நான் திடுக்கிட்டேன். அவனிடம், 'தருமர் முதலில் தன்னை பந்தயத்தை வைத்து தோற்றாரா? அல்லது என்னைப் பந்தயத்தில் வைத்துத் தோற்றாரா என்பதை அறிந்து வா' என அனுப்பினேன். தன்னையே தோற்ற ஒருவரால் வேறு யாரை பந்தயத்தில் வைக்க முடியும் என்பது எனது கேள்வி.
ஆனால் இதனால் ஆத்திரமடைந்த துரியோதனன் தன் தம்பி துச்சாதனனை அனுப்பி என்னை அழைத்து வரச் சொன்னான். என் கூந்தலைப் பற்றி சபைக்கு இழுத்து வந்தான் துச்சாதனன். நான் அந்த சபையில் நியாயம் கேட்டேன். அங்கிருந்த மாபெரும் ஞானிகள் அவமானத்தில் தலை குனிந்தனர். கர்ணன் கூறத் தகாத வார்த்தைகளைக் கூறினான். ஆனால் கவுரவர்களில் ஒருவனான விகர்ணன் என் தரப்பு நியாயத்தை ஆதரித்தான். ஆனால் அவனையும் கர்ணன் அடக்கினான். ஒருகட்டத்தில் துச்சாதனன் என் ஆடையைப் பிடித்து அவிழ்க்கத் தொடங்கினான். 'கண்ணா அபயம்' என்று கைகளை மேலே உயர்த்தி கதறத் தொடங்கினேன். கண்ணனின் அருளால் துச்சாதனன் இழுக்க இழுக்க எனது அங்கத்தின் சிறுபகுதி கூட வெளியே தெரியாமல் புடவை வளர்ந்து கொண்டே இருந்தது.
துச்சாதனன் களைத்துப் போய் தரையில் உட்கார்ந்தான். போரில் துச்சாதனனின் மார்பைப் பிளந்து அவன் ரத்தத்தை குடிக்கப் போவதாக பீமன் சபதம் இட்டார். என்ன செய்து என்ன, பாண்டவர்களும் நானும் பன்னிரு வருடம் வனவாசமும் ஒரு வருடம் அஞ்ஞாத வாசமும் இருக்கும் நிலை நேர்ந்தது.
என் வாழ்வில் பல துயரங்களை அனுபவித்தேன். காம்யக வனத்தில் இருந்த போது துரியோதனனின் மைத்துனன் ஜயத்ரதன் என்னைத் தன் தேரில் கவர்ந்து சென்றான். அவனை பீமன் கர்வபங்கப்படுத்தினார். என்றாலும் தங்கையின் கணவன் என்பதால் அவனது சிகையை மட்டும் மழித்து அவனுக்கு உயிர்ப் பிச்சை அளித்து விரட்டினார். அஞ்ஞாத வாசத்தில் சைரந்திரி என்ற பெயரில் விராட மன்னனின் மனைவி சுதேஷனாவின் பணிப்பெண்ணாக இருக்க நேரிட்டது. அப்போது அவளின் சகோதரன் கீசகன் எனக்கு பெரும் தொல்லை கொடுக்க, பீமன் அவரைக் கொன்றார்.
மகாபாரதப் போரில் எங்கள் பக்கம் வெற்றி உண்டானது உண்மைதான். ஆனால் அந்தப் போரில் என் தந்தை, சகோதரன் மற்றும் ஐந்து மகன்களைப் பறி கொடுத்தேன்! ஒரே முக்கிய ஆறுதல் என்னை ராஜசபையில் அவமானப்படுத்திய துச்சாதனன் மற்றும் துரியோதனனின் இறப்புகள்தான்.
போரின் ஒரு கட்டத்தில், துச்சாதனனின் கழுத்தை ஒடித்து அவனது முதுகுப்புறமாக திருப்பிய பீமன், அவனது தொடைகளைப் பிடித்து இழுத்தார். குற்றுயிராகக் கிடந்த அவனது கைவிரல்களை பிடித்தபடி 'இந்த விரல்கள்தானே என் திரவுபதியைத் தொட்டன' என்றவாறே அவற்றை ஒடித்துத் தள்ளினார். கோபவெறி தாங்காமல் அவனது ரத்தத்தையும் அவர் குடிக்க முயன்றபோது கண்ணனால் தடுக்கப்பட்டார்.
போருக்குப் பிறகு அஸ்வமேத யாகம் செய்து ஹஸ்தினாபுரத்தின் அரியணையில் யுதிஷ்டிரரும் நானும் அமர்ந்தோம். முப்பத்தாறு வருடங்கள் நல்லாட்சி செய்த பிறகு வாழ்க்கை போதும் என்று தீர்மானித்தனர் பாண்டவர்கள். அவர்களுடன் இமயமலையை நோக்கி நடந்தேன். அங்கு எனக்கு இறப்பு நேரிட்டது.
சென்னையில் வேதஸ்ரேணி என்று முன்பு அழைக்கப்பட்ட வேளச்சேரியில் திரவுபதிக்காக எழுப்பப்பட்டுள்ள கோயில் இருக்கும் சாலையே அதன் பெயரைத் தாங்கி நிற்கிறது - திரவுபதி அம்மன் கோவில் தெரு. வேளச்சேரியில் உள்ள தண்டீஸ்வரம் காலனியில் காந்தி சிலைக்கு எதிரே உள்ளது இந்தத் தெரு.
காளியின் அவதாரமாக கருதப்படும் இவள் இப்பகுதியின் காவல் தெய்வம். சிலருக்கு குலதெய்வம். முக்கியமாக ஆத்ரேய கோத்திரத்தை சேர்ந்தவர்கள் வழிபடுகிறார்கள்.
300 ஆண்டுகள் பழமையான இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு 2010ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.. கருவறையில் அம்மன் நின்ற நிலையில் காட்சி தருகிறார். தோளில் ஒரு கிளி உள்ளது.
இப்போது கருவறை உள்ள இடத்தில்தான் அம்மனின் சிலை கண்டெடுக்கப்பட்டது. வராகி, விஷ்ணு துர்கை, பிராமி, வைஷ்ணவி, கவுரி அம்மனுக்கும் சன்னதிகள் உள்ளன. மண்டபத் துாண்களில் பஞ்ச பாண்டவர்கள், அனுமன், ராதாகிருஷ்ணரை தரிசிக்கலாம். சித்திரை மாதம் பத்து நாள் திருவிழா நடக்கிறது. இதில் தீமிதித் திருவிழா முக்கியமானது.
ஜி.எஸ்.எஸ்.
aruncharanya@gmail.com

