ADDED : மே 09, 2022 03:10 PM

குசேலனாகிய நான்...
என் பெயர் சுதாமன்தான். குசேலன் என்ற வார்த்தை அழகற்ற (அதாவது கிழிந்துபோன) உடையை உடுத்துபவன் என்று பொருள்.
நான் கண்ணனின் இளவயதுத் தோழன். சாந்தீபனி முனிவரின் குருகுலத்தில் நாங்கள் இருவரும் கல்வி பயின்றோம்.
நான் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவன். என் அப்பாவின் பெயர் மடுகர். அம்மாவின் பெயர் ரோசனா தேவி.
கண்ணன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் வளர்ந்ததும் செல்வாக்கு மிக்க யாதவ குலத்தில். நான் ஏழ்மையான பின்னணியைக் கொண்டிருந்தவன்.
குருகுலத்தில் எல்லா மாணவர்களும் ஆசிரியரின் இருப்பிடத்திலேயே தங்கிப் படிப்பது வழக்கம். மாணவர்களுக்கிடையே எந்த வேற்றுமையும் இருக்காது. குறிப்பாக கண்ணனும் நானும் உயிர் நண்பர்கள்.
காலம் கடந்தது. குருகுலக் கல்வி முடிந்தது. கண்ணன் துவாரகைக்குச் சென்றான். அங்கு மன்னனாக ஆட்சி புரிந்தான். அதேநேரம் என்னைச் சுற்றிலும் துயரமான சூழல்தான் இருந்தது.
என் மனைவியாக சுசீலை துயரமான சூழலிலும் குடும்பத்தை முடிந்த அளவுக்கு சிறப்பாகக் கொண்டு சென்றாள். ஆனால் குழந்தைகளுக்குப் போதிய உணவைக் கூட அளிக்க முடியாத நிலை வந்ததும் அவள் உடைந்து போனாள்.
'உங்கள் நண்பர் கண்ணனைச் சென்று பார்த்து வரலாமே. அவர் உதவுவாரே' என்று கூறினாள் சுசீலை. ஆனால் இளவயது நண்பனிடம் எந்த ஆதாயத்தையும் பெற எனக்கு மனம் இல்லாமல் போனது. ஒரு கட்டத்தில் 'சுசீலை, நான் கண்ணனை சென்று பார்க்கிறேன். ஆனால் அவனிடம் நான் வறுமையில் வாடுகிறேன் என்ற சூழலை வெளிப்படுத்த மாட்டேன். எந்த ஆதாயமும் கேட்கமாட்டேன். சரியா?' என்றேன். என் மனைவி இதற்கு ஒத்துக் கொண்டாள்.
கண்ணன் என் நண்பன் என்றாலும் மன்னனும் கூட. வெறும் கையோடு அவனைச் சென்று பார்க்க முடியுமா? என் மனைவி ஒரு வேட்டியில் அவலைக் கட்டிக் கொடுத்தாள். அவளிடம் முன்னொரு முறை கண்ணனுக்கு அவல் பிடிக்கும் என்பதைக் கூறியிருக்கிறேன். தவிர குடும்பம் இருந்த ஏழ்மையான சூழலில் அதைத் தவிர வேறு எதுவும் எடுத்துச் செல்லவும் முடியாமல் போனது.
நாள் கணக்கில் நடந்து துவாரகை அடைந்தேன். அங்கு மக்கள் எல்லோரும் இளமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வது தெரிந்தது. அரண்மனையை அடைந்ததும் வாயிற்காப்போன் என்னைத் தடுத்து நிறுத்தினான். நான் யார் என்று கேட்டான். 'கண்ணனின் இளவயதுத் தோழன் நான். அவரைப் பார்க்க வந்திருக்கிறேன்' என்று கூறினேன். என் தோற்றத்தைக் கண்ட அவன் இதை நம்ப மறுத்தான்.
நான் வந்ததை எப்படித்தான் உணர்ந்தானோ, கண்ணனே வேகவேகமாக அரண்மனை வாயிலுக்கு வந்தான். என்னைக் கட்டிக் கொண்டான். என் கைகளைப் பற்றியபடி அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான். கண்ணனின் மனைவி ருக்மணி என்னை மரியாதையுடன் வரவேற்றாள். எனக்கு ஆசனம் அளித்தனர். வெதுவெதுப்பான நீரினால் என் கால்களைக் கழுவினர். எனக்கு நெகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது. பின் அறுசுவை உணவு வழங்கினர்.
வீட்டில் குழந்தைகள் பசியுடன் இருக்க எனக்கு விருந்தா? அதை மறுக்கத் தோன்றியது. ஆனால் ஒரு புறம் நண்பனின் வற்புறுத்தல், மறுபுறம் மறுத்தால் அதற்கான காரணத்தை கூற வேண்டுமே என்ற தவிப்பு இரண்டுமாகச் சேர்ந்து என்னை அந்த விருந்தை உட்கொள்ளச் செய்தது.
இருவரும் எங்கள் சிறுவயது நாட்களைப் பற்றி பேசியபடியே உற்சாகம் கொண்டோம்.
பின்னர் 'நெடுந்தூரம் நடந்து வந்திருக்கிறார். அவர் ஓய்வெடுத்துக் கொள்ளட்டுமே' என்றாள் ருக்மிணி. 'தாராளமாக ஓய்வெடுத்துக் கொள்ளட்டும். அதற்கு முன்னால் எனக்காக தன் வேட்டியில் எதையோ மூட்டை கட்டிக்கொண்டு வந்திருக்கிறான் குசேலன். அதை முதலில் எனக்குக் கொடுக்கட்டும்' என்றான் கண்ணன் புன்னகையுடன்.
எனக்கு அவமானமாக இருந்தது. இப்படி ஒரு செல்வத்தில் திளைக்கும் கண்ணனுக்கு நான் கொண்டுவந்த அற்பமான அவலை எப்படி அளிப்பது?
என்றாலும் கண்ணன் உரிமையுடன் அந்த மூட்டையைப் பறித்து முடிச்சை அவிழ்த்தான். அவலை பார்த்ததும் அவன் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. ஒரு பிடி அவலை சாப்பிட்டான். இரண்டாவது பிடி அவலை எடுத்த போது 'போதுமே. குசேலருக்கு தேவையான எல்லாம் கிடைத்து விட்டது' என்றாள். இது எனக்கு குழப்பத்தை தந்தது. எனக்களித்த அறுசுவை விருந்தின் காரணமாக எனக்கு எல்லாமே கிடைத்து விட்டதாக இவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள்! என் குடும்பத்தைப் பற்றி இவர்களிடம் எதை கூறுவது? எப்படி கூறுவது?
அன்று அரண்மனையில் ஓய்வெடுத்துக் கொண்டு அடுத்த நாள் என் வீட்டுக்குக் கிளம்பினேன். கண்ணனிடம் ஆதாயம் கேட்க முடியாவிட்டால் என்ன? அவனை சந்தித்ததே என்னை ஆனந்தம் கொள்ள வைத்தது.
என் வீட்டை அடைந்தபோது அதிர்ச்சி உண்டானது. குடிசையாக இருந்த வீடு அரண்மனை போல தோற்றம் அளித்தது. என் குழந்தைகள் எல்லாம் அப்பா... அப்பா... என்று ஓடி வந்தனர். அவர்கள் விலை உயர்ந்த உடைகளை அணிந்திருந்தனர். வீட்டுக்குள் நுழைந்ததும் சுசீலை மகிழ்ச்சியுடன் வரவேற்றாள். அவள் ஒரு ராணி போலத் தோற்றமளித்தாள்.
'நீங்கள் கண்ணனிடம் என்ன கேட்டீர்கள்? அவர் இவ்வளவு வசதிகளை நமக்கு செய்து கொடுத்து விட்டாரே' என்று நெகிழ்ந்தாள் சுசீலை. நான் எதைக் கேட்டேன்? கேட்காமல் அளித்தவன் அல்லவா கண்ணன்? அவனல்லவா நட்புக்கு எடுத்துக்காட்டு!
- தொடரும்
குஜராத்திலுள்ள போர்பந்தரில் தான் சுதாமர் எனப்படும் குசேலர் கோயில் உள்ளது. கோயில் வளமையாக பிங்க் வண்ண சலவைக் கல்லில் தோற்றமளிக்கிறது. 1902ல் எழுப்பப்பட்ட இக்கோயில் சோலைக்கு நடுவே உள்ளது.
நட்புக்கு ஓர் அடையாளமான இக்கோயிலில் பிரமாண்ட மண்டபம் நுழைவாயிலில் தென்படுகிறது. இதில் அழகிய வேலைப்பாடுகள் தென்படுகின்றன. சலவைக் கற்களால் செய்யப்பட்டிருக்கிறது இந்த மண்டபம். சுற்றிலும் ஒரு அழகிய நந்தவனம். அங்கே விநாயகருக்கு சிறிய கோயில் காணப்படுகிறது. ராம் தேவ்ஜி ஜேத்வா என்பவரின் சிலை ஒன்றும் காணப்படுகிறது. அந்த மன்னரின் ஆட்சியில் தான் சுதாமா கோயில் எழுப்பப்பட்டது. குசேலரின் எளிய வீடு ஒரு காலத்தில் இந்த இடத்தில் இருந்ததாகக் கருதப்படுகிறது. கண்ணனுக்கு அளித்த உணவை நினைவுபடுத்தும் வகையில் இங்கு பிரசாதமாக அவல் தரப்படுகிறது.
ஜி.எஸ்.எஸ்.
aruncharanya@gmail.com

