தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/இசைப்பூக்கள் (4) -காரைசங்கரா

இசைப்பூக்கள் (4) -காரைசங்கரா

இசைப்பூக்கள் (4) -காரைசங்கரா


ADDED : ஜூன் 17, 2011 09:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2011 09:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜயதேவர்

ஒடிசாவிலுள்ள பூரி அருகில் உள்ள ஊர் பில்வகாம். இங்கு வசித்த நாராயணசாஸ்திரி, கமலாபாய் தம்பதியருக்கு வியாசமுனிவரின் அம்சமாக ஒரு குழந்தை பிறந்தது. அவருக்கு ஜயதேவர் என பெயரிட்டனர். பிற்காலத்தில், இவரே யதி ராஜராகவும், தீர்த்தநாராயணராகவும் தோன்றியதாக கர்ணபரம்பரைக்கதைகள் வழங்குகின்றன.

'விளையும்பயிர் முளையிலே' என்னும் பழமொழிக்கேற்ப இவரின் ஒவ்வொரு செயலும் தெய்வீகத்தை வெளிப்படுத்தின. ஒழுக்கசீலராகவும், கல்வியில் சிறந்தவராகவும் வளர்ந்த ஜயதேவர், பத்மாவதி அம்மையாரை

மணந்தார். தான் கொண்டிருந்த பக்தியின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதத்தில் 'கீதகோவிந்தம்'' என்னும் காவியத்தை எழுதினார். ஊர்மக்கள் அப்பாடல்களைப் பெரிதும் போற்றினர். இதில் இடம்பெற்றுள்ள,'சாருசிலேப்பரியே' என்னும் பாடல் கண்ணன் மீது கொண்ட விரகதாபத்தின் உச்சநிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.

கண்ணன் மீது கொண்ட பக்தியால் உணர்ச்சிவசப்பட்டு பாடிவிட்டாலும், அந்தப் பாடலை கீதகோவிந்தத்தில் சேர்ப்பதில் ஜயதேவருக்கு விருப்பமில்லை. அந்த ஓலையைக் கிழித்து எறிந்து விட்டார். ஆனால், பகவானே அந்த அஷ்டபதியை ஏற்றுக்கொண்டு, கீதகோவிந்தத்தில் சேர்க்குமாறு சொன்னார்.

ஜகந்நாத ÷க்ஷத்திரத்தை ஆட்சி செய்த மன்னன் கலா ரசிகனாகவும், வடமொழியில் புலமை மிக்கவனாகவும் இருந்தான். பல கவிதைகளை எழுதினான். ஆனால், மக்கள் மத்தியில் ஜயதேவரின் பாடல்களே புகழ்பெற்றிருந்தன. இதன் காரணமாக ஜயதேவர் மீது அவனுக்குபொறாமை மேலிட்டது.

ஒருமுறை பூரியிலுள்ள ஜகந்நாதப்பெருமாள் கோயிலுக்குச் சென்ற அவர்கள், பெருமாள் முன்னால், ஜயதேவரின் பாடலையும், மன்னனின் பாடலையும் வைத்து அதில் உயர்ந்த பாடலை தேர்ந்தெடுக்கச் செய்ய தீர்மானித்தனர். இரவு பூஜை முடிந்ததும், இருவரின் பாடல்களையும் வைத்து விட்டு நடை சாத்தினர். மறுநாள் காலையில் நடைதிறந்த போது, ஜயதேவரின் பாடிய பாடல்களின் மீது ''ஏற்று உவந்தோம்'' என்று எழுதப்பட்டிருந்தது. மன்னன் இதைக் கண்டு மனம் வருந்தினான். அன்றிரவு அவன் கனவில் தோன்றிய ஜகந்நாதர், ''அரசனே! நீயும் என் அன்பன் தான் என்றாலும், மன்னன் என்ற செருக்கோடு இருந்தாய். அதனால் தான் உன் பாடலை நான் ஏற்கவில்லை. கர்வம் நீங்கி வாழ்வாயாக'' என்று அருள் புரிந்தார்.

பகவான் தாஸ் என்ற வியாபாரி ஜயதேவரிடம் உபதேசம் பெற விரும்பினார். ஜயதேவரும் அவரை சீடராக ஏற்று மந்திர உபதேசம் செய்தார். அந்த வியாபாரி குருதட்சணையாக அவருக்கு ஆயிரம் வராகன் பணமும், பட்டு, பீதாம்பர ஆடைகளும், பொன் ஆபரணங்களும் கொடுத்து அனுப்பினார். ஜயதேவர் அவற்றுடன் தனியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, கொள்ளையர் இருவர், ஜயதேவரிடம் இருந்த பொருளை கொள்ளை அடித்ததோடு, கை,கால்களை வெட்டி பாழும் கிணற்றில் தள்ளிவிட்டு ஓடினர்.

ஜயதேவர் நீலமேக சியாமளனான கண்ணனை நினைத்து உருகி தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.

அப்பகுதிக்கு வேட்டைக்கு வந்த கிரவுஞ்சன் என்ற மன்னன் கிணற்றுக்குள் ஜயதேவர் கிடந்ததைக் கண்டான். அவரை மீட்டு, ''உம்மை இந்த கதிக்கு ஆளாக்கிய கொள்ளையர்களுக்கு மரணதண்டனை விதிப்பேன்,'' என்று ஆவேசமாகக்

கத்தினான்.

''மன்னா! செய்த வினைப்பயனை அவரவர் அனுபவித்தே ஆகவேண்டும். குற்றத்தை யார் மீதும் சுமத்தத் தேவையில்லை. அவர்களை மன்னித்துவிடுவோம்,'' என்று ஜயதேவர் பதிலளித்தார்.

அருள் மனம் படைத்த அவருக்கு பணிவிடை செய்வதே வாழ்வின் பயன் என்று கிரவுஞ்ச மன்னன் தீர்மானித்தான். ஜயதேவரும் கிரவுஞ்சனை தன் சீடராக ஏற்றுக் கொண்டார்.

ஒருநாள் செல்வத்தைத் திருடிய கொள்ளையர் இருவரும், காவியுடை அணிந்து சாதுக்களைப் போல ஜயதேவரைக் காண வந்தனர். தனக்கு தீங்கு இழைத்த கயவர்கள் என்று கூட நினைக்காமல், அவர்களை மன்னித்ததோடு ஆசியும்

வழங்கினார்.ஆனால்,பொறுமை இழந்த பூமாதேவியோ, அவர்களை உயிருடன் வைத்திருக்க விரும்பவில்லை. பூமியை இரண்டாகப் பிளந்து அவ்விருவரையும் விழுங்க ஆரம்பித்தாள்.

ஜயதேவர், அவர்களைக் காப்பாற்ற முயன்றார். முடியவில்லை. அப்போது, அவ்விடத்தில் ஜோதிப்பிழம்பு ஒன்று தோன்றியது. அதிசயிக்கும் விதத்தில், ஜயதேவர் இழந்த கை,கால்கள் குணமாகி பழைய நிலையை அடைந்தார். பாதாளத்துக்குள் மூழ்கிப்போன திருடர்களுக்கு நற்கதி அருளும்படி இறைவனிடம் ஜயதேவர் வேண்டிக் கொண்டார். வாழ்வின் இறுதிக் காலத்தில், கிரவுஞ்சனுடன் சேர்ந்து வாரணாசி உள்ளிட்ட திருத்தலங்களுக்கு தீர்த்தயாத்திரை சென்றுவந்தார். தன் மனைவி பத்மாவதியோடு கண்ண பெருமானின் திருவடிகளை அடைந்து முக்திபெற்றார்.

'கீதகோவிந்தம்' மூலம் மக்கள் மத்தியில் இன்றும் ஜயதேவர் அழியாப்புகழோடு விளங்குகிறார். அஷ்டபதி என்ற பெயரும் இதற்குண்டு. ஒவ்வொரு பாடலும் ஒரு பல்லவியோடு, எட்டு சரணங்களைக் கொண்டதாக இருக்கும். 24 பாடல்கள் இந்நூலில் உள்ளன. 'ஆசியஜோதி' என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சர் எட்வின் அர்னால்ட், இதனை மொழிபெயர்த்தார். ஜீவாத்மாவாகிய உயிர்கள் பரமாத்மாவாகிய கடவுளை அடைய வேண்டும் என்பதே இந்நூலின் கருவாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us