ADDED : ஜூலை 01, 2011 11:47 AM

மாணிக்கவாசகர்
மதுரை அருகே அமைந்துள்ள சிவத்தலம் திருவாதவூர். இங்கு வாழ்ந்த சம்புபாத இருதயர், சிவஞானவதி தம்பதியருக்கு சிவனருளால் ஆண்குழந்தை பிறந்தது. அவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனின் பெயரால் 'வாதவூரான்' என்று பெயர் சூட்டினர். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய வாதவூராரின் பெருமை பாண்டிய நாடெங்கும் பரவியது. அவரைப் பற்றி கேள்விப்பட்ட பாண்டியன் அரிமர்த்தனன், நாட்டின் தலைமை அமைச்சராக நியமித்தான்.
ஒருமுறை தன் குதிரைப் படையை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அரிமர்த்தனன் எடுத்துச் சொன்னான். அந்த உத்தரவை ஏற்று பெரும் பணத்துடன் வாதவூரார் புறப்பட்டார். அறந்தாங்கி அருகிலுள்ள திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்) வந்ததும், அங்குள்ள ஆத்மநாதர் கோயிலைக் கண்டு, அவரின் நெஞ்சில் பக்தி ஊற்றெடுத்தது. இறைவனைப் புகழ்ந்துபாடல்களைப் பாடினார். சிவனும் அவரைப் புகழ்ந்து, 'மாணிக்க வாசகர்' (மணியான பாடல்களைப் பாடியவர்) எனக்கூறி மறைந்தார்.
சிவதரிசனம் பெற்ற மாணிக்கவாசகர் சிவபக்தராக மட்டுமின்றி பித்தராகவே மாறிவிட்டார். தன்னுடன் வந்த படையினரிடம், ''குதிரைகளை விரைவில் வாங்கி வருவதாக மன்னனிடம் சொல்லி விடுங்கள்,'' எனச் சொல்லி மதுரைக்கு அனுப்பி விட்டு, மன்னரின் செல்வத்தை சிவன்கோயிலுக்கு செலவிட்டார்.
அமைச்சர் திரும்பி வரவில்லையே, என்று பாண்டியன், ஆள் அனுப்பி, மாணிக்கவாசகரிடம், ''குதிரை என்னாயிற்று?'' என விசாரிக்க அனுப்பினான்.
மாணிக்கவாசகர் அவர்களிடம், 'இன்னும் இரண்டு, மூன்று நாளில் குதிரை வந்து விடும்,' என சொல்லி அனுப்பினார்.
அவர்கள் மாணிக்கவாசகர் கொடுத்த வாக்குறுதியை தெரிவித்தனர். மாணிக்கவாசகர் சிவபெருமான் முன்பு நின்று, ''இறைவா. உன் மீதுள்ள பக்தியால், அரசாங்க சொத்தை செலவழித்து விட்டேன். இப்போது குதிரை வாங்க பணத்துக்கு எங்கு போவேன்? ராஜதுரோகம் பாவமாயிற்றே! இந்த இக்கட்டிலிருந்து என்னைக் காப்பாற்று,'' என கண்ணீர் விட்டார்.
இறைவன் அவர் முன்பு தோன்றி, ''மாணிக்கவாசகா! நீ சொன்னது போல, இரண்டொரு நாளில் குதிரைகள் வந்து சேரும், கவலை வேண்டாம்,'' என்றார். மாணிக்கவாசகர் மகிழ்வுடன் மதுரை வந்து சேர்ந்தார். ஆனால் குதிரைகள் வரவில்லை.
ஏமாற்றிய குற்றத்திற்காக மாணிக்கவாசகரை சிறையிலடைத்து கொடுமைப்படுத்தினான் பாண்டியன். சிவன் இதைக்கண்டு இரங்கினார். குதிரை வியாபாரி போல பாண்டிய நாட்டுக்கு கிளம்பினார்.
காட்டில் திரிந்த நரிகளையெல்லாம் பரிகளாக (குதிரைகள்) மாற்றினார். குதிரைகள் அரண்மனைக்கு வந்தன. பாண்டியனும் தன் தவறை உணர்ந்து, மாணிக்கவாசகரை விடுதலை செய்தான். அழகிய குதிரைகள் கிடைத்ததற்காக, மாணிக்கவாசகரை அவன் பாராட்டினான்.
சிவன் மீண்டும் தன் திருவிளையாடலைத் துவங்கினார். அந்த குதிரைகளெல்லாம் மீண்டும் தன் சுயரூபமான நரிகளின் வடிவெடுத்து ஊரையே நாசமாக்கின. மாணிக்கவாசகர் மீண்டும் விசாரிக்கப்பட்டார். அவரால் பதிலேதும் சொல்ல முடியவில்லை. திரும்பவும் சிறையில் அடைக்கப்பட்டு, சித்ரவதை அனுபவிக்க தொடங்கினார்.
சொக்கநாதர் அவரது துன்பத்தை நீக்க முன்வந்தார். வைகை நதியில் பெருவெள்ளம் வரச்செய்தார். எவ்வளவோ முயன்றும் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மக்கள் அனைவரும் வெள்ளத்தடுப்பு பணிக்கு வரவேண்டுமென்றும், வரஇயலாதவர்கள் கூலிக்கு ஆள் அனுப்ப வேண்டும் என்றும் மன்னன் ஆணையிட்டான்.
வந்தியம்மை என்ற மூதாட்டி, தனக்கு வயதாகி விட்டதால், கூலிக்கு ஆள் அனுப்பினாள். மதுரை சொக்கநாதரே வேடமணிந்து கூலி வேலைக்கு வந்திருந்தார்.
அரிமர்த்தன பாண்டியன் வைகைக் கரைக்கு வந்து பணியாட்களை கண்காணித்தான். வந்தியம்மையால் அனுப்பப்பட்ட கூலிக்காரன், படுத்து உறங்குவதைக் கண்டு கோபம் கொண்டான். பிரம்பால் முதுகில் அடித்தான்.
உலகத்தின் அனைத்து ஜீவராசிகளின் முதுகிலும் அந்த அடி விழுந்தது. அடி வாங்கிய சிவன், பரபரப்பாக எழுந்து, மண்கூடையுடன் ஓடிச்சென்று கரையில் மண்ணைக் கொட்டினார். ஒரு கூடை மண்ணிலேயே கரை உயர்ந்து வெள்ளம் கட்டுப்பட்டது.
ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்த மன்னன் அந்த மனிதனைத் தேடிப் போனான். ஆனால், காண முடியவில்லை. உடனே அசரீரி, நடந்த விபரங்களைத் தெரிவித்தது. ''மன்னா! உன் செல்வம் சிவகாரியத்திற்கே பயன்பட வேண்டும் என்ற விதி இருந்ததால், மாணிக்கவாசகர் மூலம் நானே கோயில் பணிக்குப் பயன்படிச் செய்து விட்டேன்,'' என்றது.
மன்னன் ஓடிப்போய், மாணிக்கவாசகர் காலில் விழுந்தான். அதன்பின், அரசுப்பணியை துறந்த மாணிக்கவாசகர், தன்னை இறைப்பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இவர் பாடிய திருவாசகப் பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை. 'திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கு உருகார்' என்னும் வாசகமே இதற்குச் சான்றாகும்.
