ADDED : ஜூன் 27, 2019 10:29 AM

காஞ்சிப்பெரியவரின் பக்தர்கள் சிலர் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். சுவாமிகளுக்கு பிடித்த பண்டிகை எதுவாக இருக்கும் என்பது குறித்து பேச்சு எழுந்தது.
''மகாபெரியவருக்கு மகர சங்கராந்தியான பொங்கலைத் தான் பிடிக்கும். சூரியனுக்குரிய பண்டிகை அது. காயத்ரி மந்திரமே சூரிய உபாசனையாகத் தானே சொல்லப்படுகிறது?' என்றார் ஒருவர்.
''தீபாவளிதான் பிடிக்கும். நரகாசுரனை வதம் செய்த நாள் அல்லவா அது? பத்திரிகைகள் வெளியிடும் தீபாவளி மலருக்கு ஆண்டுதோறும் ஆசியுரை தருகிறாரே?'' என்றார் மற்றொருவர்.
''ராம நவமியைத்தான் விரும்புவார். ஏனெனில் ராம நாமத்தின் மகிமையை சகஸ்ரநாமத்தில் சிவபெருமானே சொல்லியிருக்கிறாரே?'' என்றார் வேறொருவர்.
''பொக்கிஷமான பகவத்கீதையை உபதேசித்த கிருஷ்ணர் அவதரித்த கோகுலாஷ்டமிதான் விருப்பமானதாக இருக்கும்'' என்றார் நாலாவது நபர்.
''காமாட்சியை உபாசிப்பதால் சுவாமிகளுக்கு நவராத்திரிதான் பிடித்த பண்டிகை'' என்றார் ஐந்தாமவர்.
சுவாமிகளிடம் நேரில் கேட்டால்தான் உண்மை புரியும் என்ற எண்ணத்துடன் மடத்திற்கு வந்தனர். அப்போது சுவாமிகளும் ஓய்வாக அமர்ந்திருந்தார்.
''சுவாமிகளுக்கு மிக பிடித்த பண்டிகை எது என்பதை அறிய எங்களுக்கு ஆசை?'' என தெரிவித்தனர்.
கலகலவென்று சிரித்தபடி 'சங்கர ஜெயந்தி தான் எனக்கு அதிகம் பிடித்த பண்டிகை'' என்றார் சுவாமிகள். பக்தர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
''நீங்கள் எதிர்பார்த்த பொங்கல், தீபாவளி எல்லாம் முக்கிய பண்டிகைகள் தான். ஆனால் ஆதிசங்கரர் அவதரிக்காவிட்டால், நாம் கொண்டாடும் பண்டிகைகள் எதுவும் இருந்திருக்காது. நம் சனாதன தர்மத்திற்குப் புத்துயிர் ஊட்டி 'ஷண்மத ஸ்தாபனம்' செய்து, பண்டிகை கொண்டாட வழிவகுத்தவர் சங்கரர் தான். எனவே அவர் அவதரித்த சங்கர ஜெயந்திதான் எனக்கு பிடித்தமான நாள்'' என்றார்.
பக்தர்களும் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர்.
காஞ்சி பெரியவர் உபதேசங்கள்
* காபி குடிப்பதை தவிருங்கள்.
* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.
* மனதை பாழ்படுத்தும் சினிமா, தொலைக்காட்சி தொடர்களை பார்க்காதீர்கள்.
மழை வர வருண காயத்ரி
ஓம் ஜலபிம்பாய வித்மஹே
நீல் புருஷாய தீமஹி
தன்னோ வருண பிரசோதயாத்
திருப்பூர் கிருஷ்ணன்