ADDED : ஜூலை 10, 2014 02:15 PM

ஜூலை 14 சிவானந்தர் முக்தி தினம்!
1887 செப்.8ல், திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் வெங்கு ஐயர், பார்வதியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சிவானந்தர். இவரின் நிஜப்பெயர் குப்புசாமி. தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியாரின் வகுப்புத்தோழர். தஞ்சை மருத்துவக்கல்லூரியில் படித்து மருத்துவரான இவர் மலேசியாவிற்கு பணியாற்றச்
சென்றார். திடீரென வாழ்வையே துறந்து இமயமலைநோக்கிப் புறப்பட்டார். அங்கு சுவாமி விஸ்வானந்தரிடம் தீட்சை பெற்று 'சிவானந்தர்' ஆனார். 'தொண்டு செய், அன்பு செய், தானம் செய்' என்ற உயர்ந்த கொள்கைகளைப் பின்பற்றும்படி உபதேசித்தார். லட்சியத் துறவியாக வாழ்ந்த இவர் 1963 ஜூலை 14ல் உலக வாழ்வை நீத்தார்.
பகவத்கீதை கூறும் 'நிமித்த மாத்திரம் பவ' என்று வாக்கிற்கு இணங்க கடவுளின் கையில் செயல்படும் ஒரு கருவியாகவே தம்மை கருதி தெய்வீக வாழ்வு நடத்தினார். சமயம், தத்துவம், உளவியல், மருத்துவம், கல்வி, ஆயுர்வேதம் என பல துறைகளில் 300க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். இவர் எழுதிய எண்ணத்தின் ஆற்றல், மனஒருமைப்பாடும் தியானமும், பிரம்மச்சரிய ரகசியம், வீட்டு வைத்தியம், மனதின் அற்புதசக்தி ஆகிய புத்தகங்கள் பல மொழிகளிலும் பல பதிப்புகளைக் கண்டவை.
''எல்லா துறவிகளும் அவரவர் பெயரில் ஸ்தாபனம் அமைக்கும் நிலையில், நீங்கள், 'தெய்வீக வாழ்க்கைச் சங்கம்' என்ற பெயரில் அமைக்க காரணம் என்ன?'' என்று சிவானந்தரிடம் கேட்ட போது, ''எல்லாச் சமயங்களின் அடிப்படை நோக்கம் மனித வாழ்வை தெய்வீக மயமாக்குவது தான். எனவே, அமைப்பின் பெயரை விட அதன் குறிக்கோளே முக்கியம்'' என்றார்.
'என்னைத் தேடி யாராவது வருகிறார் என்றால் அவருக்கான உணவு போன்ற வசதிகளை ஏற்கனவே கடவுள் இங்கே அனுப்பியிருக்கிறார் என்பது தான் உண்மை' என்று சொன்ன சிவானந்தர், தன்னை நாடி வந்த யாருக்கும் அனுமதி மறுத்ததில்லை. பரந்த உள்ளமும், பெருந்தன்மையும் கொண்ட இவர் தபால் மூலம் கூட சீடர்களுக்கு தீட்சை, சந்நியாசம் அளித்த தனிப்பெரும் துறவி.
'பாவத்தை வெறு, பாவியை அல்ல' என்ற கொள்கையை கடைபிடித்து வந்தார். ஒருமுறை ஆசிரமத்தில் தன்னைத் தாக்க வந்த முரடனுக்கும் அடைக்கலம் கொடுத்ததோடு, பின்னாளில் சந்நியாச தீட்சையையும் வழங்கிய கருணை வள்ளல் அவர்.
'மனிதன் கடவுளாக முடியுமா?' என்று பக்தர் ஒருவர் அவரிடம் கேட்ட போது, ''மனிதன் பெறுகிறான். மறந்து விடுகிறான். கடவுள் கொடுக்கிறார். மன்னிக்கிறார். எப்போது மனிதனும் கொடுக்கவும், மன்னிக்கவும் செய்கிறானோ அப்போது அவன் தெய்வத்தன்மையை அடைகிறான்'' என பதிலளித்தார்.
சிவானந்தர் சம்பூர்ண யோகத்தைப் போதித்தார். இதில் ஆசனம், தியானம், ஜபம், தொண்டு ஆகியவை அடங்கியுள்ளது. அன்றாட வாழ்வை ஆன்மிக மயமாக்குவதே சிவானந்தர் காட்டிய தெய்வீகப்பாதை. அந்தப் பாதையில் நாமும் நடப்போம்.
சுவாமி ஸ்வரூபானந்தா

