ADDED : மார் 09, 2018 12:04 PM

சிவனடியாரான நந்தனார், சிதம்பரம் நடராஜரை தரிசிக்க செல்ல அனுமதி கேட்டபோதெல்லாம், 'நாளை போகலாம்' என்று ஏதாவது வேலை ஏவிக் கொண்டிருந்தார் முதலாளி.
வயலே கதி என்றிருந்த நந்தனாருக்கு களத்து மேட்டில் இருந்த நெற்குவியல் கூட சிவலிங்கமாக தெரிந்தது. அந்த பக்கமாக வந்த வண்டிக்காரன் ஒருவன், ''ஏ... உன்னைத் தான்....!''என கத்தினான். ஆனால் நந்தனார் கவனிக்கவில்லை. மீண்டும் அவன், ''ஏ... சிதம்பரம் போகும் பாதை இது தானா?'' என்றான்.
'சிதம்பரம்' என்ற சொல் தேனாக காதில் விழுந்தது. அப்படியே வண்டியை நோக்கி ஓடினார் நந்தனார். வேலியோரம் படர்ந்த பூசணிக்காய்கள் திருநீறு பூசிய சிவனடியாராக தோன்றியது. வண்டிக் காரனை குருநாதராக எண்ணி மகிழ்ந்த நந்தனாரின் கால்கள் 'தையா தக்கா' என நடனமாட, கண்ணீர் பெருகியது. 'அடியேன் வாழ்வில் நற்கதி அடைந்தேன்” என சொல்லி மகிழ்ந்தார்.
ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பாடிய பாட்டில் இந்த குறிப்பு உள்ளது. சிதம்பரம் என ஒரு தரம் கேட்டதுமே, மனதால் சிதம்பரத்தை அடைந்த நந்தனாரின் பக்தியை விளக்க வார்த்தையில்லை.