
ஒருநாள் மாலை தியாகராஜ சுவாமிகள் தன் வீட்டுத் திண்ணையில் தியானத்தில் இருந்தார்.
''நமஸ்காரம்'
குரல் கேட்டு விழித்த தியாகராஜர், ஒரு பெரியவர் நிற்க கண்டார். அருகில் அவரது மனைவி, இளைஞன் ஒருவன் இருந்தனர். அவர்களின் முகத்தில் களைப்பு தெரிந்தது.
அவர்களை வணங்கினார் தியாகராஜர்.
''நாங்க ரொம்ப துாரத்திலிருந்து தீர்த்த யாத்திரை போயிட்டு வர்றோம். இப்போ ராமேஸ்வரம் போறோம். இன்னிக்கு உங்க வீட்டுல தங்க விரும்புகிறோம்!''
''தாராளமா'' என்றவர் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். மனைவியிடம் சமைக்கும்படி வேண்டினார்.
''நமக்கே சாப்பாட்டுக்கு வழியில்லை! இதில இவங்களை எப்படி உபசரிக்கிறது? சரி… யாரிடமாவது அரிசி வாங்கி வரேன்!'' என புறப்பட்டார் மனைவி.
அதை கவனித்த பெரியவர், ''என்கிட்ட தேனும், தினை மாவும் இருக்கு. நாம சேர்ந்தே சாப்பிடுவோம்!'' என்றார்.
சாப்பிட்டு முடிந்ததும் தாழ்வாரத்தில் படுத்தனர். விருந்தாளிகளிடம் தியாகராஜர் யாத்திரை பற்றி பேசினார்.
கோழி கூவிற்று. ''அடடா… பொழுது விடிஞ்சாச்சா?'' என எழுந்தார் பெரியவர். அவரது மனைவியும், இளைஞனும் கூட எழுந்தனர். ''நாங்க அப்படியே காவிரியில் நீராடி யாத்திரைக்கு கிளம்பறோம்!'' என்றார் பெரியவர்.
வழியனுப்ப வந்த தியாகராஜர், கண்ணிற்கு தெரியும் வரை அவர்களையே பார்த்தார். சட்டென பெரியவர் வில்லுடன் ராமராகவும், மனைவி சீதையாகவும், இளைஞர் அனுமனாகவும் காட்சியளித்து மறைந்தனர்.
நெஞ்சில் மின்னல் அடிப்பதை உணர்ந்தார். பரவசத்தால் ஆனந்தக் கூத்தாடினார்.
''ராமா...வந்தது நீயா?... என் தெய்வமே! நீண்ட துாரம் நடந்ததா சொன்னியே... பேசிப் பேசியே நான் உன்னைத் துாங்க விடலையே...பாவி! கால் அமுக்கி பணிவிடை செய்யாமல் பேசிக் கொண்டே இருந்தேனே. சாப்பிட உணவும் கொடுத்தியே! என் வீட்டுல ஏதுமில்லைன்னு தெரிஞ்சு தான் என் பசி போக்கினாயோ.'' என அழுதார். அப்போது அவர் பாடிய கீர்த்தனை தான் வசந்தா ராகத்தில் உள்ள 'சீதம்மா மாயம்மா...'