ADDED : ஜன 07, 2022 07:14 PM

உத்தரபிரதேசத்தில் சுவாமி விவேகானந்தர் ரயிலில் பயணம் செய்து கொண்டிக்கும்போது அவருடன் செல்வந்தர் ஒருவர் பயணம் செய்தார். செல்வந்தருக்கு 'சாதுக்கள் என்றால் சோம்பேறிகள்' என்ற எண்ணம் இருந்ததால் விவேகானந்தரை ஏளனமாக பார்த்தார். ஸ்டேஷன் ஒன்றில் ரயில் நின்றது. அப்போது 'எங்காவது குடிநீர் உள்ளதா' என விவேகானந்தர் தேடிய போது எங்கும் இல்லை.
''சுவாமிஜி... இந்த காலத்தில் குடிநீர் வாங்குவதற்குகூட பணம் வேண்டும். உங்களிடம் உள்ளதா.. இனியாவது உழைத்து வாழுங்கள்'' என கேலி செய்தார். பின்னர் கடை ஒன்றில் தண்ணீர் வாங்கி குடித்தார் செல்வந்தர். அப்போது அங்கு அதிசயம் ஒன்று நிகழ்ந்தது.
சாப்பாடு, தண்ணீர், படுக்கை விரிப்பு ஒன்றை கொண்டுவந்த ஒருவர், விவேகானந்தரை சாப்பிட அழைத்தார். அவரிடம், ''நீங்கள் யார்... எங்கிருந்து வருகிறீர்கள். நான் உங்களை இதற்கு முன்பு பார்த்தது இல்லையே...'' என்றார் விவேகானந்தர்.
''நான் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவன். நேற்று இரவு எனது கனவில் பகவான் ராமரே தோன்றி உங்களை உபசரிக்கும்படி கூறினார். என்னால் நம்பமுடியவில்லை. மீண்டும் அதிகாலையில் அதே கனவு வந்தது. அதனால் உங்களைக் காண ஓடோடி வந்தேன்'' என்றார்.
இதை கேட்ட செல்வந்தர் உடனே விவேகானந்தரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இதுவும் அந்த பகவான் ராமரின் விளையாட்டு என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தார் விவேகானந்தர்.
பார்த்தீர்களா... மகான்கள் அனைவரும் ஒவ்வொரு நிமிடமும் கடவுளை நம்பிக்கையோடு வணங்குகின்றனர். இந்த நம்பிக்கை உங்களிடம் உள்ளதா... நிச்சயம் உங்களுக்கும் அருள்புரிவார் ராமர்.