sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

புதிய பார்வையில் ராமாயணம் (15)

/

புதிய பார்வையில் ராமாயணம் (15)

புதிய பார்வையில் ராமாயணம் (15)

புதிய பார்வையில் ராமாயணம் (15)


ADDED : நவ 14, 2019 10:20 AM

Google News

ADDED : நவ 14, 2019 10:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூழ்நிலை மனதை முரண்படச் செய்யும்

தன்னை நோக்கி ஓடி வந்த லட்சுமணனைப் பார்த்துத் திடுக்கிட்டான் ராமன். நான் பொன்மானைப் பிடித்துவிட்டேனா என எதிர்பார்த்து சீதையும் வரக் கூடும் என எட்டிப் பார்த்தான். ஆனால் சீதை இல்லை.

உடனே மனதுக்குள் சஞ்சலம் தோன்றியது. ''லட்சுமணா! ஏன் வந்தாய்? சீதையை பர்ணசாலையில் தனித்திருந்து துன்புறுவாளே!'' என கடுமையுடன் கேட்டான்.

தான் எவ்வளவோ சொல்லியும், சீதை தன்னை அங்கிருந்து விரட்டியதாகச் சொல்லி அழுதான் லட்சுமணன். கடுஞ்சொற்களால் அண்ணி ஏசியதையும் சொன்னான்.

'சீதா, லட்சுமணா' என்று அலறியபடியே மாரீசன் உயிர் துறந்ததில் சூழ்ச்சி இருப்பதை உணர்ந்தான் ராமன். ஒரே நேரத்தில் சீதை, லட்சுமணன் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டிருக்கும் என ஊகித்தான். இப்போது இங்கு லட்சுமணன் வந்திருப்பதைப் பார்த்தால், நிச்சயமாக சீதைக்கு தான் பாதகம் ஏற்பட்டிருக்க வேண்டும் எனத் தீர்மானித்தான்.

உடனே பர்ணசாலையை நோக்கி ஓடினான். தம்பியும் பின் தொடர்ந்தான்.

பர்ணசாலையில் இருள் சூழ்ந்திருந்தது. சீதை என்ற ஒளி அங்கிருந்து போன பின், இருள் என்ற அரக்கனுக்கு தான் எத்தனை குதுாகலம்!

எங்கே போயிருப்பாள்? சற்று துாரத்தில் இருக்கும் குளத்திற்கு அவள் செல்வாள். அல்லது அந்த எல்லைக்குட்பட்ட நந்தவனத்தில் மலர்கள் கொய்வாள். இது தவிர வேறெங்கும் அவள் சென்றதில்லை. ஆக....இது மாரீசனின் சதியாகத் தான் இருக்கும்.

அவ்வளவு தான். தன் முழு பலத்தையும் இழந்தது போல உணர்ந்தான் ராமன். பதினான்கு ஆண்டுகளை காட்டில் கழித்து விட்டு அயோத்தி சென்று விடலாம் எனக் கருதியிருந்த எண்ணத்தில் மண் விழுந்ததே! அவ்வப்போது அரக்கர்களை வீழ்த்துவது தவிர்க்க முடியாத சம்பவமாகத் தான் அமைந்ததே தவிர, மாரீச வதம் இத்தனை பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

விரக்தியுடன் ராமன், குடிலின் திண்ணையில் தலை குனிந்தபடி அமர்ந்திருந்தான். ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் தம்பியிடம், ''இனி இங்கிருப்பதில் அர்த்தமில்லை. சீதையை உடனே கண்டுபிடித்தாக வேண்டும். என் கணிப்புப்படி அவள் வெகு தொலைவிற்குப் போயிருக்க மாட்டாள். விரைவில் அவளைக் கண்டு விட முடியும் என்றே தோன்றுகிறது'' எனச் சொல்லியபடி வில்லுடன் புறப்பட்டான்.

லட்சுமணன் தலை குனிந்தபடி அண்ணனைத் தொடர்ந்தான். அது மரியாதை மட்டுமல்ல தன்னை சீதை இரக்கமின்றி, தீய எண்ணத்துடன் அவளருகில் நின்று கொண்டிருப்பதாகச் சொன்ன சுடுசொல்லாலும் தான். ஆனாலும் அண்ணனுக்கு தொண்டு செய்ய வந்திருப்பதால், எப்பழி தான் ஏற்றாலும் சரி தொடர்ந்து பாடுபடவேண்டும் என தீர்மானித்தபடி சென்றான்.

ராமனின் கணிப்பு சரியல்ல என்பதை செல்லும் வழியில் ஜடாயு உணர்த்தினார். ஆமாம், குற்றுயிரும், குலையுயிருமாக கிடந்த அவரைக் கண்ட ராம, லட்சுமணன் ஓடோடிச் சென்றனர். ராமன், அவரது இறுதி நேர நிலை கண்டு வருந்தினான்.

''ராமா! என்னுடைய இந்த நிலைக்குக் காரணம் ராவணன் தான். சீதையைக் கடத்திச் சென்றது அவன் தான்'' என குழறியபடி தெரிவித்தார் ஜடாயு.

ராம, லட்சுமணன் திடுக்கிட்டனர். மாரீச சதி என்ன என்று இப்போது புரிந்தது.

''புஷ்பக விமானத்தில் சீதையுடன் சென்றான் ராவணன். நான் அவனைத் தடுத்தேன். என் கூரிய நகம், அலகால் பிறாண்டினேன். ஓரளவு நான் வெற்றி பெற்றாலும் வாளால் என் இறக்கையை வெட்டினான். நிலைகுலைந்து கீழே விழுந்தேன். எப்படியும் உன்னைச் சந்திப்பேன் என உள்ளுணர்வு சொன்னது. அதனால் உயிர் பிரியாமல் இருந்தேன்'' என தழுதழுத்தார்.

உள்ளம் குமுறி அழுதான் ராமன். ''என்ன கொடுமை இது! என் மனைவியை மீட்பதற்காக எதிர்த்து நின்ற சான்றோனாகிய உம்மையும் கொன்றானே பாவி'' எனக் கதறினான்.

ஆனால் ஜடாயுவோ பதில் சொல்ல முடியாமல் உயிர் விட்டார். மோட்சத்தை அடைந்தார். உறைந்து போனான் ராமன்.

நெருங்கியவர்கள் ஒவ்வொருவராகத் தன்னை விட்டு நீங்குகிறார்களே என பயந்தான். லட்சுமணனும் அதிர்ச்சியடைந்தான்.

இனி சீதையைத் தேடுவதைத் தவிர வேறு பணியில்லை என முடிவெடுத்த ராமன், தன் தந்தைக்கு சமமான ஜடாயுவுக்கு ஈமச் சடங்குகளைச் செய்தான். பின்னர் தேடுதல் பணியில் இறங்கினான்.

எங்கே போவது, யாரை விசாரிப்பது, யாருடைய வழிகாட்டல் சரியானது என மனம் குழம்பினாலும், கால்கள் மட்டும் உறுதியுடன் தேடுதல் பணிக்குத் துணை நின்றன.

லட்சுமணனோ அவமானத்துடன் உடன் சென்றான். முகத்தை நேருக்கு நேர் பார்த்திராத சீதை தன்னை எப்படியெல்லாம் கேவலப்படுத்திவிட்டாள்! இதை ராமனிடம் சொன்னபோது அவனும் கூட பெரிது படுத்தவில்லையே! அண்ணனைத் தொடர்ந்து வந்த லட்சுமணன் ஓரிடத்தில் நின்றான். அதை உணர்ந்த ராமனும் திரும்பி பார்த்தான்.

''இனி என்னால் அலைய முடியாது. இனி அண்ணியார் கிடைப்பார் என தோன்றவில்லை. நாம் அயோத்திக்கு திரும்புவோம். ராவணன் எங்கிருக்கிறான் என்றே தெரியவில்லை. அவனிடமிருந்து அண்ணியாரை மீட்க இயலுமா என்றும் புரியவில்லை. நாம் சந்தித்த அரக்கர்களைப் போன்றவன் அல்ல அவன். மாய சக்தி கொண்டவன் போலிருக்கிறது வாருங்கள், திரும்பி போகலாம்.'' என இயல்பை மீறிப் பேசினான்.

ராமன் திடுக்கிட்டாலும், சுற்று முற்றும் பார்த்தான். அப்பகுதியில் வாசனை மனித இயல்புக்கு முரணானதாக இருந்தது. மரம், செடி, கொடிகள் கூட இயற்கைக்கு மாறாக மணம் வீசின.

''சரி... லட்சுமணா! அதோ ஒரு தடாகம் தெரிகிறது. அங்கே போய் என்ன செய்வது எனத் தீர்மானிக்கலாம்'' என கூறியபடி லட்சுமணனை அழைத்துச் சென்றான்.

குறிப்பிட்ட அந்தப் பகுதியைக் கடந்து தடாகக் கரையில் அமர்ந்தபோது ஏதோ கனவிலிருந்து விடுபட்டவன்போல லட்சுமணன் சிலிர்த்துக் கொண்டான். ''நான் தவறாக ஏதேதோ உளறினேனே, இது எனக்கு எப்படி சாத்தியமாயிற்று? என்ன அக்கிரமம் இது! என் உயிரினும் மேலான அண்ணனிடமா இவ்வாறெல்லாம் பேசினேன்?'' என்று அவதியுடன் அங்கலாய்த்தான்.

ராமன் மெல்லச் சிரித்தான். ''லட்சுமணா, ஏற்கனவே மனக் குழப்பத்தில் இருப்பவர்களை, அவர்கள் இருக்கும் இடம் குழப்புவதோடு, கடுஞ்சொல்லும் பேச வைக்கும். சூழ்நிலையோ மனதை முரண்படச் செய்யும். நீ என்னை நிந்தித்த போது நாமிருந்த இடத்தில் அரக்க வாசனை மிகுந்திருந்தது. உன்னுடைய முரண்பட்ட இயல்பிற்கும் அந்தக் கெடு சூழல்தான் காரணம். பரவாயில்லை, இப்போது நீ தெளிந்துவிட்டாய். இனி உன்னிடம் கெட்ட எண்ணம் தோன்றாது. வா, நம் பணியை முடிக்க ஆயத்தமாவோம்,'' என்று ஆறுதல்படுத்தினான்.

''என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணா,'' என சொன்னதோடு, புது உற்சாகத்துடன், அண்ணியாரை எப்படியாவது கண்டுபிடித்து அண்ணனுடன் சேர்த்துவிட வேண்டும் என்ற உத்வேகத்துடன் ராமனைப் பின் தொடர்ந்தான் லட்சுமணன்.

தொடரும்

அலைபேசி: 72999 68695

பிரபு சங்கர்






      Dinamalar
      Follow us