sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

புதிய பார்வையில் ராமாயணம் (16)

/

புதிய பார்வையில் ராமாயணம் (16)

புதிய பார்வையில் ராமாயணம் (16)

புதிய பார்வையில் ராமாயணம் (16)


ADDED : நவ 21, 2019 02:24 PM

Google News

ADDED : நவ 21, 2019 02:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகத்தின் பின்விளைவுகள்!

ராவணனால் கடத்தப்படுவதை உணர்ந்த சீதை பதறினாள். அப்போதே உயிர் தன்னை விட்டுப் பிரியவில்லையே என ஏங்கினாள். தான் வளர்ந்த மிதிலா புரியிலும் சரி, திருமணமாகி வாழ்ந்த அயோத்தியிலும் சரி எந்தக் குறையும் இல்லை என்பது தான் சீதையின் அனுபவமாக இருந்தது. அதனால் தனக்கு இன்னது தேவை எனக் குறிப்பிட்டு எதன் மீதும் ஆசை வைக்க அவளுக்கு வாய்ப்பு ஏற்படவில்லை. ஆனால் மாறுபட்ட காட்டு வாழ்வில் அதிசயிக்கும் அம்சங்களை அவள் அனுபவித்தாள். மலை முகட்டிலிருக்கும் புதுமையான மலர், மரத்தின் நெடிதுயர்ந்த உச்சியில் கனிந்திருக்கும் பழம் -- இப்படி பல அதிசயங்களைக் கண்ட போதெல்லாம் வேண்டும் என தெரிவித்ததும் ராமன் அதை நிறைவேற்றினான். அந்த வகையில் சீதை அதீத எதிர்பார்ப்பில் பொன்மானை பிடித்துத் தர வேண்டினாள். ராமன் மானை நோக்கி ஓரடி வைத்தால், அது பத்தடி தள்ளிச் சென்று வேடிக்கை காட்டியதே தவிர பிடி கொடுக்கவில்லை. தன் கணவனால் எதுவும் சாத்தியம் என பெரிதும் நம்பினாள்.

மானைத் துரத்திய ராமன், 'லட்சுமணா, சீதா...' என மிக தீனமாகக் கத்தியதை அவள் எப்படி அது ராமனின் குரல் தான் எனத் தீர்மானித்தாள்? அவனது வீரத்தை இந்த கட்டத்தில் மட்டும் சீதையால் எப்படி குறைவாக மதிப்பிட முடிந்தது?

அது மட்டுமா...ராமன் தனியே தவிப்பதாகவும், அவரைக் காப்பாற்றச் செல்லுமாறும் லட்சுமணனை விரட்ட வேண்டிய அவசியம் உண்டாயிற்றே! விருப்பமின்றி அந்த இடத்தை விட்டு லட்சுமணன் அகன்றதும், சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த ராவணன் முனிவராக உருமாறி வந்ததும், அவனுக்கு சீதை உபசாரம் செய்ததும் தான் எத்தனை கொடுமை! அவனது சுயரூபம் தெரிந்ததும் ஏற்பட்ட துயரத்தை என்னவென்று சொல்வது?

இது போதாது என காக்க வந்த ஜடாயுவையும் அல்லவா ராவணன் வெட்டி வீழ்த்தினான்! அந்த அப்பாவி ஜடாயு எவ்வளவோ மன்றாடியும் கொஞ்சமாவது செவி சாய்த்தானா? இல்லையே!

''இந்தக் கொடிய விளைவுக்கெல்லாம் மாயமான் மீது வைத்த மோகம் தானே காரணம்! பகட்டாகத் தோன்றும் எதிலும் சூழ்ச்சி இருக்கும் என்பது தெரியாமல் போனேனே! மானைத் துரத்திச் சென்ற என் கணவனை இழந்தேனே! காவல் புரிந்த கொழுந்தனையும் சுடு சொல்லால் விரட்டினேனே! உதவிக்கு வந்த ஜடாயுவையும் இறக்கச் செய்தேன்! எப்பேர்பட்ட பாவி நான்!'' என வருந்தினாள் சீதை.

''ராவணன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று கொடுமைப் படுத்துவானே... இனி எந்தக் கவர்ச்சிக்கும் அடிமையாகாமல், ராமன் வந்து மீட்கும்வரை தவத்தில் ஈடுபட வேண்டும். அந்த தவத்தீயால் ராவணனும் நெருங்க முடியாதபடி விலகி நிற்க வேண்டும்'' என உறுதி கொண்டாள் சீதை.

இந்நிலையில் சீதை, தான் கடத்தப்படும் பாதையை ராமன் அறியும் வகையில் புடவைத் தலைப்பைக் கிழித்து, அதில் தன் நகைகளை முடிந்து வீசியெறிந்தாள்.

கீழே மலை முகட்டில் விளையாடிய வானரங்கள்

சில திடீரென்று துணி முடிச்சு விழுந்ததைக் கண்டு பரபரப்பு அடைந்தன. அதை தொடப் பயந்து வேடிக்கை பார்த்தன. சிறிது நேரம் கழிந்தது. இனி ஆபத்து நேராது என உணர்ந்தன. பிறகு முடிச்சை எடுத்து தங்களின் மன்னரான சுக்ரீவனிடம் சேர்த்தன.

இதற்கிடையில் சுக்ரீவனின் நட்பைப் பெற்ற ராமன், அவனது அண்ணன் வாலியிடம் இழந்த ராஜ்யம், மனைவியை மீட்டுத் தருவதாக வாக்களித்திருந்தான். அந்த சந்தோஷத்தில் சுக்ரீவன் இருந்த நேரத்தில், வானரப் படை கொடுத்த நகை முடிச்சை ராமனிடம் கொடுத்தான். கூடவே, சீதை அபகரிக்கப்பட்டதை வானரங்கள் பார்த்ததாகவும் தெரிவித்தான்.

நகைகளைக் கண்ட ராமனுக்கு கண்ணீர் பெருகியது. துக்கத்தை வெளிப்படுத்தினான். லட்சுமணனும் தலை குனிந்து வருந்தினான். ''லட்சுமணா இதோ இந்த தலைச்சுட்டியைப் பார், இது சீதைக்கு உரியது தானே?'' என கேட்டான்.

லட்சுமணன் தயக்கத்துடன் ''தெரியவில்லையே அண்ணா!'' என்றான்.

திடுக்கிட்ட ராமன் தோடுகள், மூக்குத்திகளைக் காட்டினான். லட்சுமணனுக்கு அடையாளம் தெரியவில்லை.

பின் அவளது கைகளை அழகுபடுத்திய வங்கிகள், வளையல்கள், மேகலை என ஒவ்வொன்றாகக் காட்ட எதுவுமே அடையாளம் தெரியவில்லை என பதிலளித்தான் லட்சுமணன்.

ஒரு நகையைக் கூட லட்சுமணனால் அடையாளம் காட்ட முடியவில்லையே என நொந்தான் ராமன்.

திடீரென லட்சுமணன், ''அண்ணா... இதோ இது அண்ணியாருடையது தான்'' என்று சொல்லி ஒரு நகையை காட்டினான். அது காலில் அணியும் சிலம்பு.

''என்ன லட்சுமணா, இத்தனை நகைகளைப் பற்றி அறிந்திராத நீ சிலம்பை மட்டும் அடையாளம் கண்டது எப்படி?'' என அதிசயித்தான்.

''அண்ணா! என் தாயாகவே அண்ணியாரை பாவித்து அவரது பாதங்களை மட்டுமே வணங்கியவன் நான்! என் கண்களில் பட்டவை சிலம்பு மட்டுமே!'' என்றதும் தம்பியை ஆரத் தழுவினான் ராமன். அப்போதே சீதையை மீட்க பலம் கிடைத்ததாக உணர்ந்தான் ராமன்.

தொடரும்

அலைபேசி: 72999 68695

பிரபு சங்கர்






      Dinamalar
      Follow us