sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

புதிய பார்வையில் ராமாயணம்! (1)

/

புதிய பார்வையில் ராமாயணம்! (1)

புதிய பார்வையில் ராமாயணம்! (1)

புதிய பார்வையில் ராமாயணம்! (1)


ADDED : ஆக 12, 2019 09:48 AM

Google News

ADDED : ஆக 12, 2019 09:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கவுசல்யையின் மகனே கண் வளராய்!

''உன் கண்கள் இரண்டையும், இப்போதே பிடுங்கிக் கொடு'' என்பதைப் போலத் திடுக்கிட்டார் தசரதர். அவர் உடம்பே நடுங்கியது. கண்களில் நீர் தளும்பியது. எதிரே நின்ற விஸ்வாமித்திரரின் பார்வை,'ராம, லட்சுமணரை என்னுடன் அனுப்பி வைப்பாயா மாட்டாயா?' என்று கேட்டபடி ஊடுருவியது.

யாகத்தைக் காவல் புரியும் பணிக்காக அழைத்துச் செல்வதாகக் கூறியது, தசரதரின் மனதை உலுக்கியது.

முனிவர் காட்டில் பர்ணசாலை அமைத்து, அங்கே யாகமும் நடத்தப்போகிறார். முனிவர் யாராவது யாகம் நடத்தினால் மூக்கில் வியர்த்தது போல அசுரர்கள் வந்து தாக்குவார்கள். அவர்களுக்கு எதிராக நின்று, யாகத்தை நிறைவேற்ற உதவ வேண்டுமாமே இந்தக் குழந்தைகள்! இவர்களை எப்படி அசுரர்களுக்கு எதிராக களம் இறக்க முடியும்?

அப்படியே இடிந்து உட்கார்ந்தார் தசரதர். விஸ்வாமித்திரரோ அழைத்துச் செல்வதில் முனைப்பாக இருந்தார்.

யாராவது ஆதரவாகப் பேச மாட்டார்களா என்று தசரதர் சுற்றுமுற்றும் பார்த்தார். 'பட்டு மஞ்சத்தில் துாங்கும் இவர்கள், ஆசிரமத்தில் எங்கே துயில்வார்கள்? வெறும் காய், கனியை எப்படி சாப்பிடுவார்கள்! மாற்றுடைக்கு எங்கே போவார்கள்…'

வசிஷ்டர் சலனம் இன்றி விஸ்வாமித்திரரையும், தசரதரையும் பார்த்தார். தன்னிடம் பயின்ற ராஜகுமாரர்களின் ஆற்றலை நிரூபிக்க நல்ல வாய்ப்பு வந்திருக்கிறது. இவர்களின்

திறமையை யாராலும் சந்தேகப்பட முடியாது. அப்பழுக்கற்ற, திடமான பயிற்சியை மேற்கொண்டிருப்பவர்கள் இவர்கள்…ஒரு நல்ல ஆசான் என்ற முறையில் ராம, லட்சுமணர் செல்வதில் பெருமை கொண்டார். ஏனெனில் இவர்களின் ஆற்றல் அவருக்குத் தான் தெரியும்.

அவையிலிருந்த எல்லோரையும் சுற்றிப் பார்த்தார் விஸ்வாமித்திரர்.

'இவர் கோபக்கார முனிவர். தான் கேட்டுக் கொண்டபடி அனுப்பாவிட்டால், ஏடாகூடமாக சபிப்பாரோ' என்று எல்ேலார் மனதிலும் பயம் எழுந்தது.

ராமனுடைய அன்னையான கவுசல்யாவிடம் வந்து பார்வையை நிறுத்தினார் விஸ்வாமித்திரர். அவர் கண்களில் ஓர் ஏக்கம். 'அம்மா நீயும் மறுத்தால் தசரதன், உன்னைக் காரணம் காட்டியே அனுப்ப மறுப்பான். ஒரு நல்ல நோக்கம் ஈடேறவே உன் பிள்ளையை என்னுடன் அனுப்புமாறு வேண்டுகிறேன், தயவு செய்து மறுக்காதே'' என்று கண்களால் கெஞ்சினார்.

கவுசல்யா புன்னகைத்தாள். அவள் மனதில் உறுதி இருந்தது. ராமன் தோல்வியையே தொடாதவன். அவன் கண்டதெல்லாம் வெற்றி தான். ஆகவே அவனது பாதுகாப்பு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. கூடவே விஸ்வாமித்திரர் என்ற சிங்கம் இருக்கும் போது அதற்கு அர்த்தமே இல்லை. குழந்தைகளை காட்டிற்கு முனிவர் அழைக்கிறார் என்றால் நிச்சயம் காரணம் இருக்கும். கவுசல்யாவின் பார்வையிலேயே சம்மதம் பெற்ற விஸ்வாமித்திரர், இனி தனக்குத் தடையாக யாருமில்லை என நிம்மதியடைந்தார்.

தசரதனை நெருங்கி, ''மகன் என்ற உறவுக்கும் அப்பால், ராமன் அனைவருக்கும் பொதுவானவன் என்பதை நீ உணர வேண்டும் தசரதா. அரண்மனைக்குள்ளேயே அவனை வளர்த்தால், அனுபவம் எப்படி தெரியும்? உனக்குப் பிறகு மக்களை நிர்வகிக்கும் பக்குவம் இது போன்ற அனுபவங்களால் தான் கிடைக்கும். தடை சொல்லாதே, இப்போதே என்னுடன் உன் மகன்களை அனுப்பி வை'' என்று கேட்டார்.

அவரது குரலில் தொனித்த உறுதி கண்டு நிமிர்ந்தார் தசரதர். வசிஷ்டரும் ஆமோதிக்கிறார். இவருக்கு, தன் மாணவன் பராக்கிரமானவன் என்று புகழப்படுவதில் ஆசிரிய கர்வம் இருக்கலாம். ஆனால் கவுசல்யா தாய் அல்லவா? அவள் எப்படி கண்களால் சம்மதிக்கிறாள்? துஷ்டர்களை எதிர்க்கப் போகும் தன் மகனின் உடல்நலம் பற்றி கவலையில்லையா? ஒருவேளை அவளும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்க விரும்புகிறாளோ?

தசரதன் சுற்றிலும் இருப்பவர்களின் கண்களில் மகிழ்ச்சி ஒளிரக் கண்டார். விஸ்வாமித்திரரின் கைகளைப் பற்றினார். ஆனாலும் பாசத்தால் அவர், ''குழந்தைகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் முனிவரே!'' என்றார். அவரது முதுகில் தட்டி ஆறுதல் அளித்து விட்டு ராம, லட்சுமணரைப் பார்த்தார் விஸ்வாமித்திரர்.

அவர்கள் ஏற்கனவே வில், அம்பறாத் துாணிகளுடன், புது அனுபவம் பெற பரவசத்துடன் காத்திருந்தனர். முனிவர், அவர்களைத் தன் பக்கத்துக்கு ஒருவராக தோள் மீது கைகள் வைத்தபடி அழைத்துச் சென்றார்.

காட்டில் பர்ணசாலை அமைத்தார் முனிவர். சகோதரர்கள் இருவரும் உதவி செய்தனர். முனிவர் வியந்து போனார். ராஜகுமாரர்களான இவர்கள், எங்கிருந்து இந்த சூட்சுமங்களை கற்றனர். பர்ணசாலை அமைக்க சகமுனிவர்களும் ஒத்துழைப்பு அளித்தாலும், தசரதரின் மகன்கள் தாங்களாகவே உதவினார்களே, இந்த வித்தையை யாரிடமிருந்து கற்றார்கள்? என்று விஸ்வாமித்திரர் எண்ணிக் கொண்டார்.

இரண்டு நாளில் யாககுண்டம் அமைத்தார் விஸ்வாமித்திரர். அவரை லட்சுமணன் கவனித்து வந்தான். தங்களை பாசமுடன் நடத்தியவிதம், 'கோபமுனி' என்று பெயர் வாங்கிய அவரிடமிருந்து ஒரு சுடுசொல்லும் வராதது, தன்னையும், ராமனையும் காலையில் துயில் எழுப்புவது... அதில் என்ன சிறப்பு...?

ஒருநாள் லட்சுமணன் அதிகாலையில் படுக்கையருகே மெல்லிய சந்தடியை கவனித்தான். ஆனால் அவன் கண்களை திறக்க வில்லை.

விஸ்வாமித்திரர், 'கவுசல்யா சுப்ரஜா, ராமா…' என்று சங்கீதமாக எழுப்பினார்.

தொடர்ந்து இதைக் கவனித்த லட்சுமணனுக்கு ஒரு சந்தேகம். ராமனை உதவிக்கு அனுப்பிய தசரதருக்கு நன்றி செலுத்தும் வகையில் 'தசரத சுப்ரஜா...' என்றல்லவா அழைக்க வேண்டும்? ஆனால் 'கவுசல்யா சுப்ரஜா...' என்கிறாரே!

இதை உணர்ந்த முனிவர், ''லட்சுமணா! உன் சந்தேகம் நியாயமானது தான். குழந்தைகளைத் துயில் எழுப்புவது தாயாரின் கடமை தான். அந்த வகையில் 'கவுசல்யாவின் மகனே' என்று சொல்லி எழுப்புகிறேன்''

ஆனாலும் அவன் சந்தேகம் தீரவில்லை.

முனிவர் சிரித்தபடி, ''உங்களை என்னுடன் அனுப்பி வைக்க தசரதனுக்கு விருப்பமில்லை. அதே சமயம், கவுசல்யாவும் மறுப்பு சொன்னால், அயோத்தியை விட்டு நீங்கள் வந்திருக்க முடியாது. அந்த நன்றியால் தாயை பெருமைபடுத்தினேன்'' என்றார். லட்சுமணன் மனநிறைவு பெற்றான்.

அரக்கியான தாடகையை வதம் செய்து ராம, லட்சுமணர்கள் யாகத்தை நிறைவேற்றினர்.

தொடரும்

அலைபேசி: 72999 68695

பிரபு சங்கர்






      Dinamalar
      Follow us