sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

புதிய பார்வையில் ராமாயணம் (3)

/

புதிய பார்வையில் ராமாயணம் (3)

புதிய பார்வையில் ராமாயணம் (3)

புதிய பார்வையில் ராமாயணம் (3)


ADDED : ஆக 26, 2019 09:26 AM

Google News

ADDED : ஆக 26, 2019 09:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காதலனே கணவன் ஆனான்!

ராமனுக்கு மணம் முடிக்கவே மிதிலைக்கு அழைத்து வந்திருக்கிறார் விஸ்வாமித்திரர் என்பதை அறிந்தான் லட்சுமணன். இதுநாள் வரை அண்ணனுக்கு சேவைகளை செய்த தான், இனி அண்ணியாருக்கும் சேவை செய்யப் போகும் பாக்கியம் பெறுவதை எண்ணி மகிழ்ந்தான்.

மிதிலை அரண்மனையில் மூவரையும் வரவேற்றார் ஜனகர். இளைஞர்களின் கம்பீரம் கண்டு பிரமித்தார். இவர்கள் தன் மருமகன்களாக வர மாட்டார்களா என்னும் எதிர்பார்ப்பு மனதில் எழுந்தது. ''ஜனகரே! இவர்கள் அயோத்தி மாமன்னர் தசரதனின் புதல்வர்கள். யாகம் நிறைவேற எனக்கு உதவிய இவர்களை உன் மருமகன்களாக ஏற்க வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்தார் விஸ்வாமித்திரர்.

''தாங்கள் சொல்லிய பிறகு ஆட்சேபணை ஏது? அயோத்தி மன்னருடன் சம்பந்தம் வைப்பதில் சந்தோஷம் தான். ஆனால்….'' என்றார் ஜனகர்.

''தயக்கம் ஏன்?'' எனக் கேட்டார் விஸ்வாமித்திரர்.

''தங்களுக்கு தெரியாததா? நான் ஏற்கனவே அறிவித்தபடி, என்னிடம் உள்ள சிவதனுசு வில்லை வளைப்பவர், என் மகள் சீதையை மணம் புரிய தகுதியானவர்'' என்றார்.

'' தெரியுமே'' என்று சிரித்தார் விஸ்வாமித்திரர்.

பிறகு அந்த வில்லின் வரலாறு பற்றி சொல்லத் தொடங்கினார். ''யாகம் ஒன்றை நடத்தினார் சிவனின் மாமனாரான தட்சன். ஆனால் அவர், மருமகன் சிவனை அழைக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட சிவன், யாகத்தை அழிக்க சக்தி மிக்க வில்லுடன் யாகசாலைக்குச் சென்றார். அங்கிருந்த அனைவரையும் அம்பு எய்து கொன்றார். பிறகு கோபம் தணிந்த அவர், இறந்தவர்களை உயிர்ப்பித்தார். அப்போது தனக்கு ஆதரவாக இருந்த ஜனகரின் முன்னோர்கள் ஒருவரிடம் வில்லை கொடுத்தார் சிவன்'' என்றார். சீதையின் அழகையும், ஜனகரின் நாட்டையும் அடைய விரும்பிய மன்னர்கள் பலர் வில்லை வளைக்க முயற்சி செய்து தோற்றனர்.

ராஜரிஷியான ஜனகர் 'மகாவிஷ்ணுவின் அவதாரமே ராமர்' என்பதை அறிந்து மகிழ்ந்தார். வழக்கமான உபசரிப்புகள் முடிந்தது. ''ராமன் அந்த வில்லை வளைக்கத் தயார்'' என அறிவித்தார் விஸ்வாமித்திரர். உடனே ராமனின் மனதில் தயக்கம் உண்டானது. வில்லை வளைப்பதற்கு அவன் அசரவில்லை, ஆனால், உப்பரிகையில் கண்ட அந்தப் பெண்ணே சீதையாக இருக்க வேண்டுமே என்பது தான் அவனது தயக்கம். ஆனாலும் விஸ்வாமித்திரர் வழி காட்டுவார் என்ற நம்பிக்கையில் தயாரானான்.

இதற்கிடையில் லட்சுமணன் ரகசியமாக, ''என்னால் வில்லை வளைக்க முடியும்'' என்றான். ராமன் - சீதை திருமணம் நடக்க வேண்டும் என்ற விதி இருப்பதால் வில்லை வளைக்கும் பொறுப்பை ராமன் ஏற்பதே சரியானது என புரிய வைத்தார் விஸ்வாமித்திரர்.

இந்த நேரத்தில் சீதையிடம் தோழிகள் ராமன் வருகையையும், அவன் வில்லை வளைக்கப் போவதையும் கூறினர். தான் உப்பரிகையிலிருந்து பார்த்த இளைஞனே ராமனாக இருக்க வேண்டும் என மனதிற்குள் வேண்டினாள்.

வில் இருந்த பேழையை சிரமப்பட்டு திறந்தனர் படைவீரர்கள். ராமன் அங்கிருந்த அனைவரையும் வணங்கி நின்றான். ஜனகர் அனுமதி அளித்ததுடன், பளிச்சென்று அந்த தனுசைத் தன் இடது கையால் துாக்கி, வலது கையால் நாணை இழுத்து வளைத்ததும் பட்டென்று உடைந்தது.

மண்டபமே ஆரவாரம் செய்தது. மறைவில் நின்ற சீதைக்கு மனம் பதைத்தது. வில்லை முறித்தவன் தான் பார்த்த இளைஞனாக இருக்க வேண்டுமே என பதறினாள். அறையிலிருந்தபடி கண்ணாடிகள் பொருந்திய தன் வளையல்களைப் பார்த்தாள். அதில் ராமனின் உருவம் பிரதிபலித்தது. அவனுடைய கம்பீரம் கண்டு மகிழ்ந்தாள் சீதை.

ஆனால், ராமனோ மனம் தவித்தான். தான் மணக்க உள்ள சீதை, தான் கண்ட அதே பெண்ணாக இருக்க வேண்டுமே என ஏங்கினான். அவளை எப்படி காண்பது? வேறொரு பெண்ணை தனக்கு முன் கொண்டு வந்து நிறுத்தி 'இவளுக்கு மாலையிடு' என சொன்னால் என்ன செய்வது?

அப்போது ராமன் பக்கவாட்டில் திரும்பினான். சற்று தொலைவில், தான் பார்த்த பெண் உப்பரிகையில் வளையல்களை அசைத்தபடி, தன்னையே உற்று பார்ப்பதைக் கண்டு மகிழ்ந்தான்.

ஜனகர் ஓடோடி வந்து ராமனைத் தழுவி, ''எனக்கு மருமகனாக வர கொடுத்து வைத்திருக்கவேண்டும்'' என்றார்.

விஸ்வாமித்திரர் தன் எண்ணம் ஈடேறியதால் மகிழ்ந்தார். லட்சுமணன் தன் அண்ணனின் வீரம் கண்டு பிரமித்தான்.

சீதை அரங்கிற்குள் வந்தாள். கையிலுள்ள மாலையை ராமன் கழுத்தில் அணிவிக்க முயன்றாள். ஆனால் ஏமாற்றம்! ராமனின் கழுத்தை அவளது கைகள் எட்டவில்லை. உடனே அண்ணியாருக்கு உதவும் விதமாக ராமனின் பாதத்தை தொட்டான் லட்சுமணன். அவனது தோள்களைத் தொட ராமன் குனிந்த போது, மாலையை அணிவித்தாள் சீதை.

மணவிழா ஏற்பாடுகள் மளமளவென நடந்தன. அயோத்திக்குத் தகவல் அனுப்பப்பட்டு தசரதன், மனைவியர், பரதன், சத்ருக்கனன் ஆகியோர் பரிவாரங்களுடன் மிதிலாபுரிக்கு வந்தனர்.

ராமனுக்கு சீதையை மணம் முடித்துத் தந்தார் ஜனகர். அத்துடன் இன்னொரு மகளான ஊர்மிளாவை லட்சுமணனுக்கும், தன் தம்பி குசத்வஜனின் மகள்களான மாண்டவி, சுகீர்த்தியை முறையே பரதன், சத்ருக்கனனுக்கும் மணம் செய்து வைத்தார்.

தொடரும்

அலைபேசி: 72999 68695

பிரபு சங்கர்






      Dinamalar
      Follow us