sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

புதிய பார்வையில் ராமாயணம் (12)

/

புதிய பார்வையில் ராமாயணம் (12)

புதிய பார்வையில் ராமாயணம் (12)

புதிய பார்வையில் ராமாயணம் (12)


ADDED : அக் 23, 2019 02:52 PM

Google News

ADDED : அக் 23, 2019 02:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடனிருந்து உதவிய குறுமுனி

ராமனை ஒரு மானுடனாகவே பாவிக்கும் பட்சத்தில் அவனுடைய வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் எல்லாமே சராசரி மானுட சம்பவங்களாகவே தெரிகின்றன. அவன் வாழ்ந்த காலச்சூழல், பிற காலச்சூழலுடனும் ஒப்பிட முடியாததாக இருந்தாலும், சம்பவங்களின் சாராம்சத்தில் ஒற்றுமையைக் காண முடிகிறது. அந்தவகையில், பிற்காலத்தில் தனக்கு உதவும் வகையில் முன்னேற்பாடாக, அகத்திய முனிவரின் சந்திப்பு போன்ற சில சம்பவங்கள் நிகழ்வதை ராமனே உணர்ந்திருப்பானோ என்னவோ!

அகத்திய முனிவர் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறான் ராமன். ஒரு சமயம் கைலாயத்தில் நடந்த சிவ பார்வதி திருமணத்தில் பங்கேற்க ஒட்டு மொத்த பிரபஞ்சமே சென்றது. அதனால் பரத கண்டம் பாரம் தாங்காமல் வடக்குப் பக்கமாகத் தாழ்ந்து, தெற்கு பக்கமாக உயர்ந்தது. அதற்காக அகத்தியரை அழைத்து தெற்கு நோக்கிச் செல்லுமாறு பணித்தார் சிவன். அவரும் அவ்வாறே தெற்கு நோக்கி வர, பரத கண்டம் சமநிலை அடைந்தது. அத்தகைய ஆற்றல் மிக்க அகத்தியர், குறுகிய தோற்றம் கொண்டவர் என அறிந்த போது அவர் மீதான ராமனின் அபிமானம் மேலும் அதிகரித்தது. எத்தகைய பராக்கிரமம் இருந்தால், பிரபஞ்ச எடைக்குச் சமமாக அவரால் நிற்க முடியும்! 'உருவு கண்டு எள்ளாமை வேண்டும்' என்பதற்கு பொருத்தமான உதாரண புருஷர் என்பதும், தமிழ்ப்புலமை மிக்கவர் என்பதும், சந்தித்த முனிவர்கள் எல்லாம் அவர் குறித்து பெருமையாகச் சொன்னதும் அவர் மீதான ஈர்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில் ராம, லட்சுமணர், சீதையைக் கண்டு வரவேற்றார் சுதீட்சண முனிவர். மூவரும் காட்டில் வாழ வேண்டியதை கேள்விப்பட்டு வேதனைப்பட்டார். மாமுனிவர் அகத்தியரைக் காண வேண்டும் என்ற ராமனின் விருப்பத்தை அறிந்த அவர், 'ராமா! அகத்தியரை அடைந்த பின் எல்லாப் பேறுகளும் பெறுவாய்' என ஆசியளித்ததோடு அகத்தியர் வசிக்கும் பகுதிக்கு வழிகாட்டினார்.

அகத்தியரைக் கண்டதும் பரவசம் தொற்றியது. அகத்தியரின் பராக்கிரமத்தை அறிந்தவன் என்பதால், மரியாதையுடன் வணங்கினான் ராமன். மனித வடிவில் இருப்பது மஹாவிஷ்ணு என்பதை அறிந்த அகத்தியர் ஆசியளித்து கட்டியணைத்தார்.

அசுரர்களால் துன்பப்பட்ட தேவர்களின் கோரிக்கைக்காக, கடலையே உறிஞ்சிக் குடித்த பலசாலி அகத்தியர். அதே போல அவர்களுக்காக மீண்டும் கடலை உமிழ்ந்தவர். அது மட்டுமா அரக்கர்களான வாதாபி, இல்வலன் இருவரையும் பஸ்மமாக்கி அழித்தவர். சிவன் கற்பித்த தமிழை இலக்கண நுாலாக்கிய சேவை புரிந்தவர். .

முனிவரின் பாதத்தில் விழுந்து வணங்கினான் ராமன். சீதையும், லட்சுமணனும் அவனுடன் சேர்ந்து கொண்டனர். தீர்க்கதரிசனத்தில் ராமனுக்கு ஏற்பட உள்ள தீங்கினை உணர்ந்த அகத்தியர் ஆயுதங்கள், அம்பறாத்துாணியை வழங்கினார். எடுக்க எடுக்க அம்புகள் குறையாமல் வரும் அதிசயம் கொண்டது இந்த அம்பறாத்தூணி!

அடுத்த ஆயுதம் கச்சிதமாக எதிரிகளைத் தாக்கும் வாள். வீசி எறிபவனின் மனநிலைக்கேற்ப செயல்படும் தன்மை படைத்தது. இன்னொன்று ஒப்புயர்வற்ற ஓர் அம்பு. சிவபெருமான் மேருமலையை வில்லாக வளைத்து அதில் பூட்டி திரிபுரங்களையும் எரித்தது அது.

இந்த ஆயுதங்களைக் கண்ட லட்சுமணன் மனதிற்குள் ஆவேசம் கொண்டான். யாராலும் வெல்ல முடியாது என்ற உறுதி அவனுக்குள் உதித்தது. மானசீகமாக அகத்தியருக்கு நன்றி கூறினான்.

சீதையின் எண்ணம் வேறாக இருந்தது. இந்த ஆயுதங்களை பயன்படுத்தும் தேவை ஏற்படாமல் இருக்கவேண்டும் என வேண்டினாள். என்ன தான் ராமன் எதிரியை வெல்லக்கூடியவன் என்றாலும், அந்தச் செயலில் அவன் உடல் வருத்த வேண்டியிருக்கிறதே, அப்போது மனதில் வன்மம் வளர்கிறதே. அவசியம் என்றாலும் பிறரை துன்புறுத்த நேர்கிறதே என வேதனைப்பட்டாள். ஆனால் அவன் தர்மத்தை நிலைநாட்டவே போரிடுகிறான் என்பதால் ஓரளவு சமாதானம் கொண்டாள். அதே சமயம் எந்தக் கொடுமையும் நிகழாதபடி தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் ஏங்கினாள். சீதையின் மனம் அத்தனை மென்மையாக இருந்தது.

விருந்து அளித்த அகத்தியர் விடை கொடுத்தார். அவர்களை பஞ்சவடிக்குச் சென்று தங்குமாறு கூறினார். ரம்மியமான இடமான அங்கு பொழுதுபோக்க நாரைகள், அன்னப்பறவைகள் உள்ளன. அவை சீதையோடு விளையாடி மகிழும் என வர்ணித்தார்.

அவரிடம் விடைபெற்ற ராமன் பஞ்சவடி நோக்கிச் சென்றான்.

இதே அகத்தியர் தான் பின்னாளில் ராமனுக்கு உதவினார். எப்படி?

சீதையை அபகரித்த ராவணனுடன் போரில் ஈடுபட்டான் ராமன். அகத்தியரின் ஆயுதங்களை அந்தப் போரில் பயன்படுத்தினான். ஆனால் ஒரு கட்டத்தில் மனச்சோர்வுக்கு ஆளானான். அவனது பலமெல்லாம் குறைந்தது போல உணர்ந்தான். மனம், உடலால் தளர்வு அடைந்தான்.

ராமனுக்குப் பின்னால் நின்ற லட்சுமணன், சுக்ரீவன், அனுமன் மற்றும் வானர படையினர் அனைவரும் இதைக் கண்டு பரிதவித்தனர். வழிநடத்தும் தலைவன் சோர்வு அடைந்தால் படையினரும் பாதிப்பு அடைவர் அல்லவா?

இத்தருணத்தில் தான், அகத்தியர் அங்கு வந்தார். ''என்னாயிற்று ராமா, ஏன் நிலை குலைந்தாய்?'' என விசாரித்தார். குழப்பம் எதனால் ஏற்பட்டது என தெரியாத போது என்ன சொல்வது?

அகத்தியரும் பதிலை எதிர்பார்க்கவில்லை. உடனடியாக ராமனுக்கு ஊக்கசக்தி வேண்டும். அதை ஆயுதத்தால் அடைய முடியாது. ராமனின் மனதை பலப்படுத்த 'ஆதித்ய ஹ்ருதயம்' என்னும் சூரிய துதியை உபதேசித்தார்.

சூரிய குலத் தோன்றலான ராமனுக்கு சூரிய ஸ்லோகம் உபதேசிக்க வேண்டியிருந்தது. என்ன வேடிக்கை! குலதெய்வ வழிபாட்டை நினைவுபடுத்த தமிழறிந்த முனிவரின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.

ஸ்லோகம் சொல்லச் சொல்ல ராமனின் மனம் தெளிந்தது. வைராக்கியம் பிறந்தது. கைகளும், கால்களும் தினவு கொண்டன. உற்சாகமுடன் போரில் ஈடுபட்டு ராவணனை வென்றான்.

ராமனைப் போல சீதைக்கும் அகத்தியர் உதவினார்.

ராவணனால் கவரப்பட்ட சீதை அசோகவனத்தில், சிறை வைக்கப்பட்டாள். சுற்றிலும் அரக்கிகள் சூழ்ந்திருக்க தப்பிக்க முடியாத நெருக்கடியில் சிக்கினாள். அப்போது அவளுக்கு ஆறுதலாக ஒருத்தி இருந்தாள். அவள் திரிசடை, ராவணனின் தம்பியான விபீஷணன் மகள். இரக்க குணம் கொண்டவள். ராவணன் செய்தது அடாத செயல் என நேரடியாக வாதிடும் நல்லவனான விபீடணனின் மகள் அல்லவா அவள்?

சீதையை காவல் புரிவதோடு அவளது மனதை தன் பக்கமாக திருப்ப வேண்டும் என்றும் திரிசடைக்கு கட்டளையிட்டிருந்தான் ராவணன்.

திரிசடை அதை ஏற்காததோடு, ராமனால் சீதை மீட்கப்படுவாள் என்றும் நம்பினாள். ஆறுதல் சொல்லி சீதையின் நம்பிக்கைக்கு பலம் சேர்த்தாள். இவ்வாறு அவள் சீதையிடம் உரையாடியது தமிழில்!

மிதிலையில் பிறந்து, அயோத்தியில் வாழ்க்கைப்பட்டு, காட்டில் வாழ நேர்ந்த சீதைக்கு அகத்தியரின் அறிமுகம் கிடைத்த போது, ஆசிரமத்திலுள்ள அனைவரும் தமிழில் பேசினர். ஒரு கண்வீச்சில் அனைத்தையும் கவனிக்கும் ஆற்றல் கொண்டவள் சீதை. ஒரு நிதானிப்பில் எதையும் கிரகிப்பவள். தமிழ் சொற்கள் சீதையின் மனதில் தங்கி விட்டன. அதோடு பஞ்சவடியில் இருந்தபோது, அப்பகுதி மக்களுடன் பேசிப் பழகி, தன் தமிழ் அறிவை வளர்த்துக் கொண்டாள். அதனால் தான் அசோகவனத்தில் திரிசடையின் தமிழில் பேசிய ஆறுதல் மொழியால் நிம்மதி அடைந்தாள். இவ்வாறு அகத்தியரின் அன்பும், ஆசியும் சீதையைக் காப்பாற்றின.

தொடரும்

அலைபேசி: 72999 68695

பிரபு சங்கர்






      Dinamalar
      Follow us