sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஷிர்டி பாபா (18)

/

ஷிர்டி பாபா (18)

ஷிர்டி பாபா (18)

ஷிர்டி பாபா (18)


ADDED : ஏப் 25, 2014 01:43 PM

Google News

ADDED : ஏப் 25, 2014 01:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அங்கே அவரது முதலாளி கவலையோடு, அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

''அப்பனே! வந்தாயா?'' என்று கட்டியணைத்துக் கொண்டார்.

''என் கடிதம் கிடைத்ததா?'' என்று கேட்டார்.

''எந்தக் கடிதமும் கிடைக்கவில்லையே!'' என்றார் காகா.

''உன்னை எதிர்பார்த்துத் தான் காத்திருக்கிறேன்!'' என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் முதலாளி.

காரணம் இதுதான். அலுவலகத்தின் மானேஜர் திடீரென நோய்வாய்ப்பட்டு விட்டார். நிர்வாகத்தில் பெரும் சிக்கல். மானேஜர் செய்துவந்த வேலைகளை எப்படி நிர்வகிப்பதென யாருக்கும் தெரியவில்லை.

மானேஜர் பொறுப்பு, உடனடியாக காகாவிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது.

இடைக்கால மானேஜர் பொறுப்பைச் செம்மையாக நிறைவேற்றினார் காகா. முழுமனதோடு அந்தப் பணியைச் செய்தார். நிரந்தர மானேஜர் செய்த பணி நேர்த்தியை விட, தற்காலிக மானேஜர் செய்த பணியின் நேர்த்தி மேலும் சிறப்பாக இருந்தது!

இடர்ப்பாடு ஏற்பட்ட காலத்தில் கைகொடுத்தமைக்காக அவருக்கு விரைவிலேயே பதவி உயர்வு தரப்பட்டது. பாபாவின் அருளால் கிட்டிய பதவி உயர்வு என நெகிழ்ந்தது காகாவின் உள்ளம். அலுவலகத்திலிருந்து காகாவை உடனே மும்பை திரும்புமாறு, முதலாளி ஷிர்டிக்கு அனுப்பிய கடிதம், இரண்டு நாட்கள் கழித்து ஷிர்டியைச் சென்றடைந்ததும், அது பின்னர் காகாவின் மும்பை முகவரிக்கே திரும்ப அனுப்பப்பட்டதும் பிறகு நடந்த சம்பவங்கள்.

எப்படி மும்பையில் ஒரு தனியார் அலுவலகத்தில் நேர்ந்த சிக்கல், பாபாவுக்கு முன்கூட்டியே தெரிய வந்தது?

'ஏன் தெரிய வராது? கடவுளால் அறிய இயலாத விஷயம் என்று உலகில் ஏதும் உண்டா என்ன?'

பதவி உயர்வு கிடைத்த பின், காகா ஷிர்டி வந்து, பாபாவின் தாமரைப் பாதங்களைக் கண்ணீரால் கழுவினார். பாபா சிரித்துக் கொண்டே அவரது கன்னங்களைத் துடைத்து விட்டார். 'அடியவர்களுக்கு நன்மை செய்வதைத் தவிர எனக்கு வேறென்ன வேலை?' என்று பரிவோடு கேட்டன பாபாவின் அருள்பொங்கும் விழிகள்.....

நாசிக்கைச் சேர்ந்த முலே சாஸ்திரி கைரேகை பார்ப்பதில் கைதேர்ந்தவர். ஆசார அனுஷ்டானங்கள் நிறைந்தவர். பிற மதத்தவரின் பக்கம் அவர் தலைவைத்தும் படுப்பதில்லை. அவர் நாள்தோறும் செய்யும் ஜபதபங்கள் ஏராளமாக உண்டு.

காலஞ்சென்ற கோலப் ஸ்வாமிதான் அவரின் குரு. குரு காலமாகி விட்டால் தான் என்ன? அவரைத் தவிர இன்னொருவரை குருவாக ஏற்க சாஸ்திரியின் மனம் ஒப்பவில்லை. கோலப் ஸ்வாமியின் படத்தை வைத்து, தினமும் வழிபாடு செய்து வந்தார். குருவே சரணம் என அவரது பாதங்களையே மனத்தில் பற்றி வாழ்ந்து வந்தார். நாசிக்கைச் சேர்ந்த மாபெரும் செல்வந்தர் பாபு சாஹேப் பூட்டி. அவர் சாஸ்திரியிடம் கைரேகை பார்ப்பதுண்டு. அவர் ஷிர்டி சென்றிருந்த சந்தர்ப்பத்தில், அவரது அழைப்பின் பேரில், அவரைச் சந்திக்க ஷிர்டிக்கு வந்தார் சாஸ்திரி. பூட்டியைச் சந்திப்பதைத் தவிர, சாஸ்திரிக்கு ஷிர்டியில் வேறு வேலை

எதுவுமில்லை.

மசூதியில் பாபா என்றொரு மகான் இருப்பதாகப் பலர் சொல்லி அவர் கேட்டதுண்டு. அவரோ ஆசார சீலர். மசூதிக்கு அவர் ஏன் செல்ல வேண்டும்? அவர் தாம் தங்கியிருந்த இல்லத்தில், ஜபதபங்களில் கடுமையாக ஈடுபட்டிருந்தார்.

மசூதிப் பக்கம் திரும்பவே இல்லை.

ஆனால், என்ன சங்கடம் இது! தம் நண்பர் பூட்டியைச் சந்திக்க அவர் போனபோது, பூட்டி, தாம் பாபாவைச் சந்திக்கச் செல்வதாகக் கூறி சாஸ்திரியையும் அழைத்துச் சென்று விட்டார்! வேறு வழியில்லாமல், சாஸ்திரியும் பூட்டியுடன் மசூதி நோக்கி நடந்தார்.

பாபாவைப் பார்த்த சாஸ்திரி, தன் வியப்பையோ, மரியாதையையோ ஒருசிறிதும் புலப்படுத்தவில்லை. பாபாவை நோக்கித்

தன் மனம் சாய்ந்தாலும், 'கோலப் ஸ்வாமியைத் தவிர தனக்கு வேறு குரு கிடையாது' என்று அவர் மறுபடி மறுபடி, தம் மனத்தில் உறுதிப்படுத்திக் கொண்டார்.

பாபா சாஸ்திரியையே கனிவோடு உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வை சாஸ்திரியின் மனத்தை அள்ளி விழுங்கியது. ஆனால், ஏதொன்றும் பேசாமல் அமர்ந்திருந்த சாஸ்திரி, தாம் தொழில் ரீதியாகத்தான் பாபாவைச் சந்திக்கிறோம் என்று பொருள் தருவதுபோல், ''பாபா, தங்கள் கைரேகையை நான் பரிசோதிக்க அனுமதி உண்டா?'' எனக் கேட்டார்.

பக்தர்களுக்கெல்லாம் கைகொடுப்பவர்தான் பாபா. ஆனால், அவருக்குக் கைகொடுக்க அவர் தயாராக இல்லை. பிட்சை வேண்டும் என்று பல வீடுகளில் கை நீட்டுபவர்.

ஏனோ, கைரேகை சாஸ்திரியிடம் கைநீட்ட மறுத்துவிட்டார்.

சாஸ்திரிக்கு சில வாழைப்பழங்களைப் பிரசாதமாகக் கொடுத்தார். சாஸ்திரி அவற்றை வாங்கிக் கொண்டு, தாம் தங்கியிருந்த

இடம் நோக்கி நடந்தார். பின் குளித்துவிட்டு தமது வழக்கமான ஜபதபங்களில் ஈடுபடலானார்.

அப்போது, மசூதியில் இருந்த பாபா, ''குங்குமப் பூ நிற உடையை எடு, நாம் இன்று அந்த வண்ணத்தில் உடை உடுத்தலாம்!'' என்றார். அந்த உடையின் பின்னணியில் என்ன திட்டம் உள்ளது என்று யாருக்கும் புரியவில்லை.

குளிக்கச் சென்ற பாபா, குளித்துவிட்டு வரும்போது, குங்குமப் பூ நிற உடையில் காட்சியளித்தார். பக்தர்கள் பரவசத்தோடு அந்தப் புதிய கோலத்தை தரிசித்தார்கள். பாபா ஆசனத்தில் அமர்ந்தார். அடியவர்கள் அவரை வழிபடலானார்கள். ஆரத்தியும் தொடங்கியது.

திடீரென பாபா செல்வந்தரான பூட்டியை அழைத்தார்.

''போய் முலே சாஸ்திரியிடமிருந்து எனக்கான தட்சணையைக் கேட்டு வாங்கிவா!'' என்றார். பூட்டி மாபெரும் செல்வந்தர். பாபாவுக்கு எத்தனை தட்சணை வேண்டுமானாலும் அவரால் கொடுத்துவிட முடியும். ஆனால், பாபா யாரிடம் தட்சிணை கேட்கிறாரோ, அவரிடம் கேட்டு தட்சிணை வாங்கிவர வேண்டும் என்ற நியதி இருப்பதை அவர் அறிவார்.

பூட்டி எழுந்து, முலே சாஸ்திரி தங்கியிருந்த இல்லம் நோக்கி நடந்தார். பாபா அவரிடம் தட்சணை கேட்டதாக சாஸ்திரியிடம் தெரிவித்தார். சாஸ்திரிக்கு எரிச்சல்.

பாபாவுக்குத் தாம் ஏன் தட்சணை தரவேண்டும்? தம் குரு கோலப் ஸ்வாமி தான். அப்படியிருக்க மசூதியிலிருக்கும் ஒருவருக்கு தாம் தட்சணை கொடுப்பதாவது? ஒருகணம் யோசித்தார் சாஸ்திரி. ஆனால், கேட்டிருப்பவரோ ஷிர்டியில் பலரால் மகானாகக் கொண்டாடப்படுபவர்.

வந்திருப்பவரோ பெரிய கோடீஸ்வரர். எனவே, நேரில் போய் தட்சணை கொடுப்பதுதான் மரியாதை என்ற முடிவுக்கு வந்தார்.

கையில் தட்சணையை எடுத்துக் கொண்டு, பூட்டியோடு மசூதி நோக்கி நடந்தார். மசூதிக்குள் சென்ற அவர், சற்றுத் தொலைவில் நின்றவாறே கொஞ்சம் மலர்களை எடுத்து, பூட்டி செய்ததுபோல், தாமும் பாபா மேல் அந்த மலர்களை அர்ச்சனை செய்வதுபோல்

வீசினார்.

அடுத்த கணம் நிகழ்ந்தது அந்த அற்புதம்....குங்குமப் பூ நிறத்தில் பாபா அன்று ஏன் உடை அணிய விரும்பினார் என்பது அந்த அற்புத நிகழ்ச்சிக்குப் பின்னர் தான் எல்லோருக்கும் தெரிந்தது.....

- அருள்மழை கொட்டும்

திருப்பூர் கிருஷ்ணன்






      Dinamalar
      Follow us