sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஷிர்டி பாபா (5)

/

ஷிர்டி பாபா (5)

ஷிர்டி பாபா (5)

ஷிர்டி பாபா (5)


ADDED : ஜன 08, 2014 11:36 AM

Google News

ADDED : ஜன 08, 2014 11:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கானகத்தில் தன் குதிரையைக் கண்டுபிடித்துக் கொடுத்த அந்த அதிசயப் பக்கிரியை பக்தியோடு வணங்கி எழுந்த சாந்த் படீலுக்கு, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. கடுமையான தாகம்.

''என்னப்பா! தண்ணீர் வேண்டுமா?'' பரிவோடு கேட்ட பக்கிரி, கையில் இருந்த சிறிய தடியால் தரையில் ஒரு தட்டுத் தட்டினார். அடுத்த கணம் தரையிலிருந்து நீர் ஊற்று குபீரெனப் பொங்கியது!

பஞ்சபூதங்களும் அவர் கட்டளைக்குப் பணிவதைப் பார்த்து சாந்த்படீலுக்கு மயக்கமே வந்தது. தங்களைப் படைத்தவருக்குத்தான் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்ற அந்தப் பஞ்சபூதங்கள் கட்டுப்படுகின்றன என்னும் ரகசியத்தை அவரால் உணர இயலவில்லை. ஆனால், தன் முன்னே அமர்ந்திருப்பவர் மாபெரும் ஆற்றல் படைத்த மெய்ஞ்ஞானி என்பதை மட்டும் அவர் புரிந்துகொண்டார்.

''ம்... தண்ணீரைக் குடி! முதலில் உன் தாகம் தீரட்டும்!'' என்றார் பக்கிரி. சாந்த்படீல் விழிகளால் புனிதப் பக்கிரியின் தெய்வீக அழகைப் பருகியவாறே, கைகளால் அள்ளி நீரைப் பருகினார். அது தண்ணீரா இல்லை அமிர்தமா? அப்படித் தித்தித்தது அது.

சாந்த்படீல் உடலில் புத்துணர்ச்சி தோன்றியது. முன் எப்போதும் இல்லாத நிம்மதியும் சாந்தியும் மனத்தில் எழுந்தன. அந்த அதிசயப் பக்கிரியைப் பார்க்கப் பார்க்கப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் போல் ஓர் ஏக்கமும் ஏற்பட்டது.

காந்தம் இரும்பை இழுப்பதுபோல் பரமாத்மா, ஜீவாத்மாவை இழுப்பது இயல்புதானே!

மனித வடிவில் இருக்கும் மூலப் பரம்பொருள் தான், தன்னிடம் பக்தி செய்யச் சொல்லித் தன்னை ஈர்க்கிறது என்ற உண்மையை சாந்த்படீலால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதேநேரம், அவரை தரிசித்துக்கொண்டே இருக்க வேண்டுமென்ற ஆவலையும் அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை.

''சுவாமி! என் இல்லத்திற்கு வாருங்களேன்!'' மிகுந்த பணிவோடும் பரம பக்தியோடும் அழைத்தார். தன் மனைவிக்கும் குடும்பத்தினர்க்கும் இவரது தரிசனத்தால் மங்கலங்கள் உண்டாகவேண்டும் என ஆசைப்பட்டார்.

பகட்டே இல்லாத எளிமையும், அப்பழுக்கற்ற தூய பக்தியும் குன்றாத ஆர்வமும் எங்கிருக்கிறதோ அந்த இடம்நோக்கித் தன்னிச்சையாக இறைவனின் திருப்பாதங்கள் நடக்கும் என்பது உண்மைதானோ!

சாந்த்படீல் தம்மை அழைத்ததும், ''அதற்கென்ன! போகலாமே!'' என்றவாறே அவருடன் நடந்தார் பக்கிரி. சாந்த்படீல் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

யசோதையின் இல்லத்தில் வெண்ணெய் திருடப் பதுங்கிப் பதுங்கி நடந்த பாதங்கள், கைகேயியின் கட்டளைப்படி வனத்தில் பதினான்கு ஆண்டுகள் கல்லிலும் முள்ளிலும் நடந்த பாதங்கள், இன்று அன்போடு அழைத்த சாந்த்படீலின் அழைப்பையும் ஏற்றுக்கொண்டன. தன்னுடன் வருவது தன்னிகரற்ற பரம்பொருளின் மானிட வடிவம் என்பதை அறியாவிட்டாலும் அவர் ஒரு புண்ணிய புருஷர் என்ற பக்தி உணர்வோடு அவரைத் தம் இல்லத்திற்குள் அழைத்துச் சென்றார் சாந்த்படீல்.

கோயிலில் இறைவன் உறைவான் என்றால், இறைவன் உறையும் இடமெல்லாம் கோயில் தானே! அன்று அந்த எளிய இல்லம் கோயிலாயிற்று. விதுரர் வசித்த குடிசைக்குக் கிருஷ்ணர் வருகை தந்ததுபோல், அந்தப் பக்கிரியும் அந்த இல்லத்திற்கு வருகை தந்தார்.

அவருக்கு விருந்துபசாரம் செய்து மகிழ்ந்தாள் சாந்த்படீலின் மனைவி. சாந்த்படீல் 'தூப்காவன்' என்ற அந்த கிராமத்தின் அதிகாரி. அங்கிருந்த மக்களெல்லாம் வியப்போடு அவர் இல்லத்திற்கு வந்து அந்த அதிசயப் பக்கிரியை தரிசித்தார்கள். அவரைப் பார்க்கும்போது மனத்தில் இனந்தெரியாத சாந்தி பிறப்பதை உணர்ந்தார்கள். தாம் பெற்ற புண்ணியம் மற்றவர்களுக்கும் கிட்டட்டும் என எல்லோரிடமும் சாந்த்படீல் இல்லத்திற்கு ஒரு யோகி வந்திருப்பதை அறிவித்தார்கள்.

அக்கம் பக்கமிருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூடத் தொடங்கியது. வைரக்கல்லைக் கண்ணாடிப் பெட்டியில் வைத்து மூட முடியுமா? அந்தப் பக்கிரி அந்த இல்லத்திற்குள் இருந்தாலும், அவரது புனிதப் பிரகாசம் சுற்றுப்புறத்தை எல்லாம் வெளிச்சப்படுத்தியது.

அவர் அருட்செல்வம் படைத்த ஆண்டவனின் மனித வடிவம் அல்லவா! அவர் படங்கள் இருக்கும் இல்லத்திலேயே இன்று ஏராளமான மங்கலங்கள் நடைபெறுகின்றன என்றால், அவர் மானிட உரு எடுத்துக் கொஞ்சகாலம் தங்கிய அந்த இல்லத்திற்கு மங்கலச் சேதிகள் உடனே வந்து எட்டாமல் இருக்குமா?

அப்படியொரு சேதி மிக விரைவில் அந்த இல்லத்தாரை எட்டியது. சாந்த்படீலின் மைத்துனனுக்குத் திருமணம் நிச்சயமாயிற்று.

பல காலமாகத் தள்ளிப் போன திருமணம் இப்போது உடனடியாகக் கூடிவந்தது, பக்கிரியின் அருளால்தான் என்று சாந்த்படீல் எண்ணினார்.

திருமணத்திற்கு வண்டி கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். ஏராளமான உறவினர்கள் கூட்டம் தூப்காவன் கிராமத்திலிருந்து திருமணத்தில் கலந்துகொள்வதற்காகப் புறப்பட்டது.

அந்தப் பக்கிரியையும் தங்களோடு வரவேண்டும் என சாந்தபடீல் பக்தியோடு வேண்டினார். முக்காலமும் உணர்ந்த பக்கிரி, எதுவுமே தெரியாதமாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, திருமணம் எங்கு நடக்கிறது என்று விசாரித்தார். மணப்பெண் ஷிர்டியைச் சேர்ந்தவள். திருமணம் ஷிர்டியில்தான் நடக்கிறது என்றார்கள் அவர்கள். இதைக் கேட்டவுடன் சப்தம் போட்டுச் சிரித்தார் அவர். அந்தச் சிரிப்பின் பொருள் யாருக்கும் புரியவில்லை. தம்மை ஷிர்டி நிரந்தரமாக அழைக்கிறது என்ற ரகசியம், அவருக்குத் தெரிந்ததுபோல் மற்றவர்க்குத் தெரிய வாய்ப்பில்லையே!

ஷிர்டி கிராமத்தின் எல்லையில், கண்டோபா தெய்வத்திற்கான ஆலயம் இருந்தது. திருமண கோஷ்டி சென்ற மாட்டு வண்டிகள், கண்டோபா கோயிலுக்கு வந்து சேர்ந்தன. ஒரு பெரிய ஆலமரத்தடியில் வண்டிகளை நிறுத்தி, ஷிர்டியின் உள்ளே செல்வதற்காக அனைவரும் இறங்கினார்கள். அந்தப் பக்கிரி தானும் ஷிர்டி எல்லையில் கால்பதித்து கம்பீரமாக நின்றார்.

அப்போது கண்டோபா கோயிலில் மங்கல ஆரத்தி நடந்து கொண்டிருந்தது.

ஆரத்தித் தட்டைக் கையில் ஏந்தியவாறு கோயிலுக்கு வெளியே வந்தார் கோயிலின் பூஜாரியான மகல்சாபதி. பக்கிரியைப் பார்த்த மாத்திரத்தில் அவர் விழிகளில் கரகரவென ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

''இந்தப் பெருமகனை வாழ்வில் இன்னொரு முறை தரிசிப்பேனா என்று தவமிருந்தேனே! சில ஆண்டுகளுக்கு முன் ஷிர்டியில் வேப்ப மரத்தடியில் தோன்றிய அதே பால யோகியல்லவா இவர்! ஆகா...! மறுபடியும் ஷிர்டி வந்துவிட்டார்! இவரின் வருகையால் ஷிர்டி புனிதமடையப் போகிறது!''

இறைவனுக்கான மங்கல ஆரத்தியை அந்தப் பக்கிரிக்குக் காட்டி, ''ஆவோ சாயி ஆவோ!'' என ஆனந்தக் கண்ணீர் மல்க வரவேற்றார் அவர். சாயி என்றால் 'சுவாமி'. 'பாபா' என்றால் 'அப்பா' என்ற பொருள்தரும் சொல்.

சாயிபாபா மீண்டும் ஷிர்டி வந்துள்ள செய்தி ஒரு கணத்தில் ஷிர்டி ஊர் முழுவதும் பரவியது. எல்லோரும் ஷிர்டி எல்லைக்கே வந்து வரவேற்றார்கள். திருமண வீட்டிற்குள் சாயிபாபா சென்றதும், அனைவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சாந்த்படீல், தங்கள் இல்லத்தில் தங்கியவர் முன்னரே ஷிர்டிக்கு வந்த யோகிதான் என்றறிந்து வியப்பில் ஆழ்ந்தார். தூப்காவன் மக்களும் ஷிர்டி மக்களும் 'சாயிபாபா கி ஜெய்!' என முழக்கமிட்டார்கள். அன்று தொட்டு அவர் சாயிபாபா ஆனார்.

அன்று அளவற்ற நிறைவில் ஆழ்ந்த சாந்த்படீல், திருமணம் முடிந்த பின்னர் எதிர்பாராத ஒரு விஷயத்தை ஏற்றுக்கொண்டு ஜீரணிக்க வேண்டியிருந்தது.....!

- அருள்மழை கொட்டும்

திருப்பூர் கிருஷ்ணன்






      Dinamalar
      Follow us