sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஷிர்டி பாபா! (6)

/

ஷிர்டி பாபா! (6)

ஷிர்டி பாபா! (6)

ஷிர்டி பாபா! (6)


ADDED : ஜன 24, 2014 12:07 PM

Google News

ADDED : ஜன 24, 2014 12:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயிபாபாவை தமது தூப்காவன் கிராமத்திலிருந்து ஷிர்டிக்கு அழைத்துவந்த சாந்த்படீல், எதிர்பாராத ஒரு விஷயத்தை ஏற்றுக்கொண்டு ஜீரணிக்க வேண்டியிருந்தது....

பாபா, தாம் தூப்காவன் திரும்பப் போவதில்லை என்றும், ஷிர்டியிலேயே நிரந்தரமாய்த் தங்கப் போவதாகவும் உறுதிபடத் தெரிவித்துவிட்டார். ஷிர்டி செய்த அதிர்ஷ்டத்தை எண்ணி சாந்த்படீல் ஆச்சரியம் அடைந்தார். இனி கைலாசமாகவும், வைகுண்டமாகவும், கோகுலமாகவும், அயோத்தியாகவும் விளங்கப் போவது ஷிர்டி தான் என்பதை அவர் உள்மனம் புரிந்து கொண்டது.

அதனால் என்ன? இனி வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் அடிக்கடி ஷிர்டி வந்து இந்த விந்தையான யோகியைத் தரிசிக்க வேண்டியதுதான். அருகில்தானே இருக்கிறது ஷிர்டி? அதல்லாமல் தம் மனத்தில், பாபாவைப் பிரதிஷ்டை செய்து, அவரை நாள்தோறும் மனக்கண்ணால் கண்டு வழிபடுவதை யார்தான் தடுக்க இயலும்?

ஓடிப்போன தம் குதிரையை ஞான திருஷ்டியால் கண்டு பிடித்துக் கொடுத்தவரும், உட்கார்ந்த இடத்திலிருந்தே தாம் பருகத் தேவையான தண்ணீரை மண்ணிலிருந்து ஊற்றாய்ப் பெருகச் செய்தவருமான சாயிபாபாவின் பாதங்களில் தலைவைத்து வணங்கி விடைபெற்றார் சாந்த்படீல்.

தாய்ப்பசுவைப் பிரிந்த கன்றைப் போல அவர் கண்களில் கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. ஆனால், 'நான் எப்போதும் உன்னுடன் தானே இருக்கிறேன்!' என்பதுபோல் கையுயர்த்தி, ஆசி கூறிய பாபாவின் திருக்கரம் அவர் துயரத்தைத் துடைத்தது.

துறவிகள் ஒரே ஊரில் இருப்பதில்லை. பந்தபாசம் ஏற்படாமல் இருக்கவேண்டி ஊர்ஊராய்ச் சுற்றுவது வழக்கம்.

ஆனால், பாபா ஷிர்டியை விட்டு எந்த ஊருக்கும் செல்லவில்லை. காரணம் அவர் துறவியல்ல. பகவான்!

கடவுளால் ஒரே இடத்தில் இருக்கவும் முடியும். அப்படி இருந்துகொண்டே எல்லா இடங்களிலும் காட்சி தரவும் முடியும். அவ்விதம் எங்கும் நிறைபரப்பிரம்மம் ஷிர்டியில் மனித உரு எடுத்துத் தங்கியது. ஷிர்டியில் இரண்டு கிணறுகள் இருந்தன. ஒன்றில் தண்ணீர் வற்றி விட்டது. அதுதான் நல்ல தண்ணீர் தந்த கிணறு. இன்னொரு கிணற்று நீரோ கடல் நீரை விட அதிகமாக உப்புக் கரித்தது. அந்தக் கிணற்றில் நீர் எடுத்த பெண்கள் அதன் உப்புச் சுவையைக் கண்டு திகைத்தனர். இதுபற்றி பாபாவிடம் சொன்னால் என்ன?

சில பெண்மணிகள் பாபாவைத் தேடிப் போனார்கள். பஞ்ச பூதங்களையும் பாபா தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் என்பது அவர்களின் நம்பிக்கை. அப்படியிருக்க உப்பாய் இருக்கும் கிணற்றின் நீரைத் தித்திப்பாய் மாற்ற அவரால் முடியாதா என்ன?

குடங்களோடு தம்மைத் தேடி வந்த பெண்மணிகளிடம் பாபா, ''குடம் நிறையப் பிரச்னையோடு வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே?'' என்று சொல்லிச் சிரித்தார்.

பிரச்னை என்னவென்று பாபாவுக்குத் தெரியாதா? முக்காலமும் உணர்ந்தவர் அல்லவா அவர்! ஆனாலும், பக்தர்கள் கடவுளிடம் நேரடியாகப் பிரார்த்திக்க வேண்டும் என்பதல்லவா அவர் விருப்பம்?

தம்மை முற்றிலும் சரணடைந்திருப்பவர்களும், எளியவர்களுமான அந்தப் பெண்மணிகளின் மேல் பாபாவுக்குக் கருணை பொங்கியது.

''பல மூட்டை உப்பை அள்ளி யாரோ கிணற்று நீரில் கலந்ததுபோல் நீர் உப்புக் கரிக்கிறதே பாபா? நீங்கள் ஏதாவது செய்யக் கூடாதா?'' அவர்களின் அன்பான வேண்டுகோளை பாபா ஏற்றார்.

அருகே உள்ள நந்தவனத்தில்இருந்து கொஞ்சம் மலர்களைப் பறித்துவரச் சொன்னார். மலர்களைக் கையில் வைத்துக் கொண்டு கண்மூடிச் சற்றுநேரம் பிரார்த்தனை செய்தார். ''வாருங்கள்!'' என்று அவர்களை அழைத்துக்கொண்டு உப்புக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்.

கையிலுள்ள மலர்களைக் கிணற்று நீரில் அர்ச்சிப்பதுபோல் தூவினார். உடனே காற்று வெளியில் வருண பகவான் தோன்றியிருக்க வேண்டும். வருணனிடம் 'இந்தக் கிணற்று நீரை நன்னீராக மாற்று' என்று பாபா கட்டளையிட்டிருக்க வேண்டும்.

ஆனால், என்ன நடந்தது என்பதை அந்தப் பெண்கள் அறியவில்லை. அவர்கள் கண்மூடிப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்.

''இனிமேல் என்ன? உங்கள் பிரார்த்தனைதான் நிறைவேறிவிட்டதே?'' என்றவாறே நகைத்தார் பாபா. பெண்மணிகள் ஆச்சரியத்தோடு கிணற்று நீரைக் குடங்களில் எடுத்தார்கள். கொஞ்சம் வாயில் விட்டு பார்த்தார்கள். 'அடடா! முன்னர் பல மூட்டை உப்பு கலந்த கிணற்றில், இப்போது பாபா பல மூட்டை கல்கண்டை அல்லவா கலந்திருக்கிறார்!'

''ஜெய் சாயிநாத்!'' என்றவாறே பெண்மணிகள் பாபாவை வணங்கினார்கள். பாபா புன்முறுவல் பூத்தவாறே பேசலானார்:

''என் பக்தர்களது இல்லங்களில் உணவு உடை இவற்றிற்கு எந்தக் குறைவும் வராது. உங்கள் மனத்தை என்னிடமே எப்போதும் செலுத்துங்கள். அடியவர்களின் நலன்களை கவனிப்பதே என் வேலை. கீதையில் கிருஷ்ணரும் இதைத் தானே சொல்கிறார்!''

தாம் தங்கியிருந்த மசூதி நோக்கி நடந்தார் பாபா. அந்தப் பெண்மணிகள் நன்றிப் பெருக்கில் கண்கள் பளபளக்க தண்ணீர்க் குடத்தைத் தூக்கிக்கொண்டு திரும்பித் திரும்பி பாபாவைப் பார்த்தவாறே இல்லம் நோக்கி நடந்தார்கள். கண்ணனைப் பிரிய முடியாமல் தவித்த பக்தைகளான கோபிகைகளின் நிலையைப் போன்றிருந்தது அவர்கள் மனநிலை.

இவ்விவரம் கிராமம் முழுவதும் விறுவிறுவென்று பரவியது. அக்கம்பக்கத்துக் கிராமங்களிலும் கூட இந்தச் செய்தி பரவலாயிற்று. செய்தியின் உண்மைத் தன்மைக்குச் சாட்சியாக நேற்று வரை உப்புக் கரித்த கிணற்று நீர் அன்று தொட்டுத் தித்தித்தது. பாபாவை தியானித்த அடியவர்களின் மனமெல்லாம், அவரது அருட்கருணையை எண்ணி எண்ணித் தித்தித்தது.

பாபாவின் தீவிர பக்தரான கோபால்ராவ் குண்ட் என்பவருக்கு குழந்தைப் பேறு இல்லாதிருந்தது. அவர் பாபாவை மனமாரப் பிரார்த்தித்து மக்கட்செல்வம் அடையப் பெற்றார். தம் நன்றியைத் தெரிவிக்கும் முகமாக பாபா தங்கியிருந்த மசூதியில் உருஸ் விழா கொண்டாட விரும்பினார்.

உருஸ் விழாவை ராமநவமி அன்று கொண்டாடச் சொல்லி பாபா அனுமதி அளித்தார்.

''ஈஸ்வர அல்லா தேரே நாம்'' என்ற உண்மையைச் சொல்லி இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்ப்பதுதான் பாபா அப்படிச் சொன்னதன் பின்னணியாக இருக்க வேண்டும்.

சந்தனக் கூடு விழாவாகிய உருஸ் விழா விமரிசையாக நடந்தது. பாபாவின் மசூதியில் சுவரெல்லாம் சந்தனம் அரைத்துப் பூசப்பட்டது. பாபாவின் இந்து பக்தர்கள், ராமநவமி உற்சவத்தையும் கொண்டாட விரும்பினார்கள். பாபா சிரித்துக்கொண்டே அதற்கும் அனுமதி அளித்தார்.

ராம ஜனனத்தை உணர்த்தும் வகையில், பாபா முன்னிலையில் ஒரு தொட்டிலைக் கொண்டு வைத்தார்கள். ராமக்குழந்தை என்ற அந்தக் கருநீல மாணிக்கம் அவதரித்து, அந்தத் தொட்டிலில் படுத்திருப்பதான பாவனையில் ராம சரிதக் கீர்த்தனைகளை உணர்ச்சியோடு பாடலானார்கள்.

தொட்டிலையே பார்த்தவாறுஇருந்த பாபாவின் விழிகள் திடீரெனக் கோவைப் பழமாகச் செக்கச் செவேல் எனச் சிவந்தன. அவரிடமிருந்து அளவு கடந்த சீற்றத்தோடு உலகையே நடுங்கச்செய்யும் ஒரு கர்ஜனை புறப்பட்டது. அந்த கர்ஜனை சுற்றுப் புறங்களில் எல்லாம் எதிரொலித்தது. 'தாங்கள் என்ன தவறு செய்தோம், எதனால் பாபாவுக்கு இத்தகைய சீற்றம்?' என்றறியாமல் அடியவர்கள் திகைத்தார்கள்...

- அருள்மழை கொட்டும்

திருப்பூர் கிருஷ்ணன்






      Dinamalar
      Follow us