ADDED : ஜூலை 12, 2024 08:04 AM

முத்துக்குமாரசுவாமி - வைத்தீஸ்வரன்கோவில்
காரை நிறுத்தி விட்டு, லிப்டில் ஏறினான் யுகன். வெளியே வந்த யுகனின் பார்வை எதிரே இருந்த கூட்டத்தின் மீது விழுந்தது. பலரும் கூடி எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். யுகனை பார்த்ததும் பாட்டியும், தேவந்தியும் அவனை நோக்கி வந்தனர். மூவரும் உள்ளே வந்தார்கள்.
“என்ன தேவந்தி கூட்டமா நிற்கிறீங்களே...”
''ஒரு மணி நேரமா அங்க நின்னுட்டே இருந்ததுல ஒரே தலைவலிங்க. நான் போய் காப்பி போடுறேன். நீங்களே சொல்லிடுங்களேன் பாட்டி”
“ஒரு மணி நேரமா நின்னா கால் தானே வலிக்கும். ஏன் தலை வலிக்குது?” எனக் கேட்டாள் பாட்டி.
பேரன் கேட்ட கேள்விக்கு பாட்டி பதில் சொல்லத் தொடங்கினார்.
“42 ம் நம்பர் வீடு மூர்த்தியாமே அவருக்கு நாலு நாள் முன்னாடி மாரடைப்பு ஏற்பட்டு ஆம்புலன்ஸ்ல கொண்டு வந்து விட்டுட்டு போனாங்க. அதான் அவர ஒரு எட்டு பார்த்துட்டு பேசிட்டு வந்தோம்”
“வந்ததும் வராததுமா இப்படியா எல்லாரும் போவீங்க? நாளைக்கு போய் பார்த்தா போச்சு. ம்... மூர்த்தி என் பிரண்டு தான். ஒரு வருஷமாவே ஒன்னு மாத்தி ஒன்னு ஏதாவது உடம்புக்கு வந்துட்டே இருக்குன்னு சொன்னான். இப்ப இப்படி ஒரு மைல்ட் அட்டாக். நல்ல வேளை! கடவுள் அருளால நல்லபடி உயிர் பிழைச்சி வந்துட்டான்”
“அந்த மூர்த்திக்கு ஒரு 35 இருக்குமா?”
“அவ்வளவுதான் இருக்கும் பாட்டி. இப்பல்லாம் முப்பது வயசிலேயே பயப்பட வேண்டியிருக்கு”“சரியா சொன்ன. உடம்பு நல்லாயிட்டதும் உன் நண்பனை வைத்தீஸ்வரன்கோவிலை தரிசிக்கச் சொல்லு''
“இங்குள்ள மூலவர் வைத்தீஸ்வரன் தான் மருத்துவ கடவுள். அம்மன் தையல்நாயகி. இங்க இருக்கிற மூலவரை வழிபடுவோர் நோய் நொடியின்றி வாழ்வாங்க. இங்க இருக்கிற சித்தாமிர்த குளத்தில் நீராடி பின் வைத்தீஸ்வரரை வணங்கினால் நோய்கள் நீங்கும். முருகனுடன் சம்பாதி, சடாயு என்னும் கழுகு அரசர்கள் மூலவரான வைத்தீஸ்வரரை வழிபட்ட தலம் இது. 2000 வருஷம் பழமையானது. முருகன் தன் பெற்றோருடன் அமர்க்களமா இருக்கிற கோயில்டா இது. தனக்கிருந்த நோய்களை தீர்க்க பூலோகம் வந்த தன்வந்திரிக்கு மருத்துவம் பார்க்க சிவன் மருத்துவராகவும், அம்பிகை மருத்துவச்சியாகவும் இங்கு வந்தாங்க. அது மட்டுமில்ல, சூரியனும் இங்கு வழிபட்டிருக்காரு”
''பாட்டி நீ சொல்ற இந்த வைத்தீஸ்வரன் கோவில் நவக்கிரக கோயில்களில் ஒன்னு தானே”
''அதே கோயில் தான் கண்ணு. ஒருமுறை அங்காரகன் வெண்குஷ்ட நோயால பாதிக்கப்பட்டதால சிவபெருமான வேண்டினாரு. அவரும் இங்கு போகச் சொன்னாரு. அங்காரகனும் அப்படியே செய்ய நோய் போச்சு. இங்கு பிரசாதமா திருநீறும், திருச்சாந்து உருண்டையும் நோய் தீர்க்கும் மருந்தா தருவாங்க.
இந்த உருண்டைங்கிறது ஓம குண்டத்தில் இருந்து தயாரிக்கப்படுது. மிளகு, வெல்லம், உப்பை சித்தாமிர்தக் குளத்தில் வைத்து வேண்டுகின்றனர். கண்மலர், உடல் உறுப்பை காணிக்கையா செலுத்துறாங்க.
உன் நண்பன் மூர்த்தியை ஒருமுறை வைத்தீஸ்வரன்கோவிலுக்கு போகச் சொல்லு. ஒரு கல்லில் மூன்று மாங்காய் அடிச்ச திருப்தி கிடைக்கும்.”
“அது எப்படி?”
“அருணகிரிநாதரால திருப்புகழ் பாடப்பெற்ற முத்துக்குமாரசுவாமி ஒருபுறம், மூலவர் வைத்தியநாதசுவாமி ஒருபுறம், அப்படியே செவ்வாய் தோஷ நிவர்த்தின்னு இந்தக் கோயில்ல மூன்று சிறப்புகள் '' என்று சொன்ன பாட்டி தண்ணீர் குடித்து விட்டு மேலும் தொடர்ந்தார்.
''இங்குள்ள குளக்கரையில் சதானந்த முனிவர் தவம் செய்தாரு. அப்போ ஒரு பாம்பு தவளையை முழுங்க முயன்றது. அதைப் பார்த்த முனிவர், இந்த இரு ஜந்துக்களை சபித்து விட்டாரு. அதன் காரணமா இன்று வரை இந்த குளத்துல பாம்பு, தவளை வசிப்பதில்லை”
“ஆச்சரியமா இருக்கே பாட்டி. சில ஆன்மிக நடைமுறைகள் அறிவியலுக்கும் அப்பாற்பட்டு நிற்பது உண்மை தானே”
“நிக்க மட்டும் இல்ல இங்க ஓட்டமும் உண்டு.”
“அதென்ன ஓட்டம்?”
குழந்தையான முருகப்பெருமானை மகிழ்விக்க இங்கு 'யானை ஓட்டம்' என்ற விளையாட்டு நிகழ்வு நடைபெறும். இந்த கோயிலோட சங்க காலப் பெயர் வேளூர்வாயில். அதுக்கப்புறம் புள்ளிருக்கு வேளூர் எனப்பட்டது.
இதில் 'வேள்' என்ற சொல் முருகப்பெருமானையும் 'புள்' என்னும் சொல் கருடனையும் 'இருக்கு' என்னும் சொல் ரிக் வேதத்தையும் குறிக்கும். இப்போ வைத்தீஸ்வரன் கோவில் என அழைக்கப்படுது”
“சரி பாட்டி இந்த கோயில் எங்கே இருக்கு? நீ போயிருக்கியா?”
“ஓ... பலமுறை போய் இருக்கேன். இந்த கோயில் சிதம்பரத்தில் இருந்து 22 கி.மீ., தஞ்சையில் இருந்து 110 கி.மீ., தொலைவில் இருக்கு. சென்னையில் இருந்து மயிலாடுதுறை வரைக்கும் ரயில்ல வந்தும் கோயிலுக்கு வருவாங்க. இந்த கோயில் பிரகாரத்தில் உற்ஸவரான முத்துக்குமார சுவாமி பெரிய சன்னதியில் தேவியருடன் எழுந்தருளி இருக்காரு. அது மட்டுமில்ல மூலவரைக் காட்டிலும் உற்ஸவர் இங்கு பிரசித்தம். இவருக்கென தனியா பிள்ளைத்தமிழே பாடி இருக்காங்க”
“ஓ... முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழா? நானும் கேள்விப்பட்டு இருக்கேன். குமரகுருபரர் எழுதினது தானே”
“ஆமா, அவர் இங்கு தங்கிய போது இதைப் பாடினார்”
''அப்போ, நம்ம அருணகிரிநாதர் இந்த தலத்தோட முருகனை பற்றி திருப்புகழ் பாடி இருக்காரா?”
“இவ்வளவு சிறப்பு வாய்ந்த முத்துக்குமாரசுவாமியைப் பற்றி பாடாமல் இருப்பாரா? மொத்தம் ஆறு பாடல்கள். அதுல ஒரு நாலு வரி சொல்றேன் கேட்டுக்கோ.
சித்திடில் சிசி சீசி புத்திர மாய மாயைசிக்கினில் ஆயும் ஆயும் அடியேனைச்
சித்தினில் ஆடலோடு முத்தமிழ் வானரோது
சித்திர நான் பாதம் அருள்வாயே
இந்த திருப்புகழை பாடு.'' என்ற பாட்டி பேரனைப் பார்த்து விட்டு, “டேய் யுகா... உனக்கு ஏன் இப்படி வியர்த்து கொட்டுது?”
“கொஞ்ச நேரம் முன்னாடி கரண்ட் நின்னுதில்லையா! பேன் ஓடாததால் வியர்க்குது பாட்டி”
“சிக்கலில் வேல் வாங்கினதும் அந்த முருகப்பெருமானுக்கு வியர்க்கிற மாதிரியே வியர்த்து ஊத்துதே”
“சிக்கலில் இன்னைக்கும் முருகருக்கு வியர்க்குதா பாட்டி?”
“அடுத்த வாரம் சொல்றேன். இந்தா... கரண்ட் வர வரைக்கும் இந்த பனையோலை விசிறிய வச்சுக்கோ” என்றாள் பாட்டி. தேவந்தியும் தன் பங்குக்கு காபி டம்ளரை நீட்டினாள். ஒரு பக்கம் விசிறியை விசிறிக் கொண்டே காபியை குடித்தான் யுகன். இன்னும் அதிகமாக வியர்த்தது யுகனுக்கு.
-இன்னும் இனிக்கும்பவித்ரா நந்தகுமார்
94430 06882