ADDED : செப் 05, 2016 10:40 AM

பட்டர் விளக்கத்தை தொடர்ந்தார்.
அன்னையைப் போற்றும் லலிதா சகஸ்ரநாமம் அவளுக்கு பல வண்ணங்கள் இருப்பதாகவே கூறுகிறது. மூலாதார சக்கரத்தில் சிவப்பு, சுவாதிஷ்டானத்தில் ஆரஞ்சு, மணிபூரகத்தில் மஞ்சள், அநாகதத்தில் பச்சை, விசுத்தியில் நீலம், ஆக்ஞையில் சர்வ வர்ணங்கள் ஒளிர்கின்ற சோபிதையாக அம்பிகை அருளாட்சி செய்கிறாள். இதனை முறையே ரக்தவர்ணா, ஆரக்தவர்ணா, பீதவர்ணா, சயாமாபா, ஸ்ரீகண்டார்த்த சரீரிணி என்றும், சர்வ வர்ணோப சோபிதா என்றும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் தெளிவுபட விளக்குகின்றது. அதேபோல அம்பிகையை பஞ்சவத்ரா, அதாவது ஐந்து முகங்கள் கொண்டவள் எனவும், அவளே காயத்ரி வடிவானவள் என்றும் சகஸ்ரநாமம் கூறும்.
இதனை உணர்த்தவே செங்கலசம், செய்யாள் எனும் சொற்களால் சிவப்பு நிறத்தையும், பிங்கலை எனும் சொல்லால் மஞ்சள் நிறத்தாள் என்பதையும், நீலி எனும் குறிப்பால் நீலநிறம் உடையவள் என்பதையும், வெளியாள் என்று வெள்ளை நிறத்தையும், பசும்பெண் கொடியே என்று விளித்து பச்சை நிறமுடையவள் என்பதையும் சொல்லாமல் சொன்னேன்.” விளக்கம் கேட்டு மகிழ்ந்த மன்னர்,
“புலவரே! இச்செய்யுள் காயத்ரியைப் போற்றுவதாக உள்ளது. அவளது அவதார வரலாறை யாவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் கூறியருள வேண்டும்,” என்றார்.
அபிராம பட்டரும் கதையை ஆரம்பித்தார்.
“அன்பர்களே! பஞ்சமுகாசுரன் என்பவன் பிரம்மனை நோக்கி இமயமலையில் கடும்தவம் செய்தான். பிரம்மனும் காட்சி கொடுக்க, ஒரு வரம் கேட்டான்.
“பிரம்ம தேவா! எனக்கு நான்கு தலை உடைய ஆண் மற்றும் பெண்ணால் அழிவு வரக்கூடாது. மேலும் இரண்டு கால் உடைய எவரும் என்னை அழிக்க முடியாது என்று வரம் அளியும்!' என்று கேட்டான்.
பிரம்மாவும் இந்த வித்தியாசமான வரத்தைக் கொடுத்து விட்டார். வரம்பெற்ற அசுரன் செய்த கொடுமையால் மூன்று உலகோரும் பெரும் இம்சைக்கு ஆளாயினர்.
இதுபற்றி கலைவாணி பிரம்மனிடம் கேட்டாள். தன்னால் அவனை அழிக்க முடியும் என்று சூளுரைத்து அசுரலோகம் சென்றாள். சரஸ்வதியைக் கண்டு எள்ளி நகையாடிய பஞ்சமுகாசுரனுடன் பல நாள் போர் நிகழ்த்தினாள். வாணியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. பின் வாணி, திருமகள் மற்றும் துர்க்கை, நீலியை வேண்ட எல்லோரும் இணைந்து அவனுடன் போர் புரிந்தனர். ஆயினும் வெற்றி கிட்டவில்லை. எல்லோரும் ஒன்றாகச் சென்று பார்வதியை வேண்ட, உமையவள் ஓர் உபாயம் கூறினாள்:
'தேவிகளே! பஞ்சமுகாசுரன் பெற்ற வரத்தின் படி, நாம் ஐந்து முகம்கொண்ட காயத்ரி எனும் திருவுருவம் கொள்வோம். மூன்று வேதங்கள் நம் கால்களாகி நம்மை வழி நடத்தும். 24 தத்துவங்கள் நம் கழுத்தில் அட்சர மாலையாக அலங்கரிக்கும். எனவே ஐந்து தலைகளும், மூன்று கால்களும் உடைய காயத்ரியின் தோற்றத்தை இனி நாம் கொள்வோம்!' என்றாள். பிறகு சரஸ்வதி, மகாலட்சுமி, துர்க்கை, நீலி, பார்வதி ஆகிய ஐந்து தலைகளும் மூன்று கால்களும் கொண்ட காயத்ரி தேவி உருவானாள்.
அவள் 24 நாட்கள் காலை, மதியம், மாலை என்னும் மூன்று காலங்களிலும் போர் புரிந்தாள். பஞ்சாமுகாசுரனை அழித்தாள்.
காயத்ரி தேவியை உருவாக்கிய ஐவரும் ஒன்றுகூடி அவளை வாழ்த்தினர். பராசக்தி கூறியதாவது: 'காயத்ரி தேவியே! நீ சரஸ்வதி தேவியின் வடிவம் ஆவாய்.
எனவே பிரம்மனைச் சேர்ந்து அருள்வாய். இன்று முதல் பூர்புவஸ்வ: என்னும் சிரோ மந்திரம் தாங்கி 24 அட்சங்களைக்கொண்ட காயத்ரி மந்திரமாக பிரபஞ்சமெங்கும் ஒலிப்பாய்.
உன்னை காலை, மதியம், மாலையில் ஜபம் செய்வோர் சத்தியம், தர்மம், சாந்தி, அன்பு, அகிம்சை என்னும் ஐந்து நற்குணங்களும் பெற்று மோட்சகதி அடைவர்!' என்று அருளாசி செய்தாள்.
தெரியாத இந்தக் கதை கேட்டு மக்கள் ஆனந்தமடைந்தனர்.
அடுத்து,
“கொடியே! இளவஞ்சிக் கொம்பே! எனக்கு வம்பே பழுத்த
படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இனிப்பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே!”
என்று பாடிய பட்டர், “கொடி போன்ற தோற்றமுடைய அன்னையே! அடியேன் பற்றிப் படரும் உறுதியான இளங்கொம்பே! என் பசி தீர்க்கக் கனிந்த கனியே! வேத தத்துவ மலர்களின் மணமே! பனி நிறைந்த இமயத்தில் நடக்கும் பெண் யானை போன்றவளே! முப்பத்து முக்கோடி தேவர்களையும் ஈன்றவளே! அடியேனுடைய பிறப்பு இறப்பு எனும் மாயச்சூழல் மறையும்படியாக என்னை வந்து ஆண்டு கொள்வாயாக!” என்று விளக்கம் அளித்தார்.
இதையடுத்து மன்னர் “வேதங்களுக்கெல்லாம் தாயானவள் ஆதிபராசக்தி. ஆனால் அவளை வேதங்களில் பூத்த மலர்களின் பரிமளமே எனப் போற்றினீர்கள். வேதங்களில் பூத்த மலர்கள் எவையென விளக்க வேண்டும்,” என்றார்.
பட்டர் தொடர்ந்தார் “வேதங்களின் தாயான பராசக்திக்கு வேதநாயகி, வேத ஜனனி என்றும் நாமங்கள் விளங்குகின்றன. வேதங்களின் சாரங்களாக உள்ளவை
உபநிடதங்கள். அவற்றில் பொதிந்துள்ள மகாவாக்கியங்களே வேதங்களில் பூத்த மலர்கள். வேதங்கள் கொம்பினைப் போன்றவை. அதில் சுற்றிப் படரும் கொடிகளே உபநிடதங்கள். அக்கொடியில் பூத்த மலர்கள் மகாவாக்கியங்கள். அம்பிகை கொடியாகவும், கொம்பாகவும் ஆன வரலாற்றைக் கூறுகிறோம், கேளும்” என்ற பட்டர் மேலும் தொடர்ந்தார்.
''சிவபெருமானும், சக்தியும் ஒன்றிணைவதும் பிறகு மீண்டும் பிரிவதும் இப்பிரபஞ்சத்தின் தோற்றமும், ஒடுக்கமுமாகும். ஒருமுறை சிவத்தைப் பிரிந்த சக்தி, நாகவடிவில் சிவனைக் கூட முயன்றாள். நாகத்துடன் கூட புற்று தான் சிறந்தது. ஆனால் சிவன் நதியாய் மாறி ஓடினார். சக்தி மீன்வடிவம் தாங்கி நதியுள் துள்ளி விழ சிவபெருமான் சேறாகி நின்றார். சேற்றில் பூக்கும் தாமரையாய் அம்பிகை உருமாற, சிவன் மரமாக மாறினார். அம்பாள் அதில் மலராகப் பூக்க, சிவன் ஒரு கொம்பாகி மண்ணில் ஊன்றி நின்றார்.
உடனே அம்பிகை, “பெருமானே! அனைத்தும் தாங்களே! எவ்வடிவம் எடுத்தாலும் உம்மை அடைவது எனக்கு பெருமை. இதை மாற்றவோ தடுக்கவோ
தாங்களே நினைத்தாலும் நடக்காது. பின்பு ஏன் இந்த லீலை? நீங்கள் கொம்பாகி நின்றால் நான் கொடியாக மாட்டேனா? இதோ கொடியாகி உம்மீது தழுவிப் படர்வேன்!' என்று கூறி படரத் தொடங்கினாள். அப்போது கொடியின் பாரம் தாங்காதவரைப் போல் சிவனாகிய கொம்பு சாய்ந்தது. அம்பிகை சற்றே விலக, மீண்டும் எழுந்து நின்ற கொம்பில் தன் இலைகள், காய்கள், கனிகள் யாவற்றையும் உதிர்த்து பசும் கொடியாக கொம்பில் ஏறிச் சுற்றிப் படர்ந்தாள்.
இப்போது சிவனாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை; அமைதியாக நின்றார்.
சிவசக்தி சங்கமம் பரிபூரணமாக நிகழ்ந்தேறியது. இதைக் கொண்டு தான் கொடியே, இளவஞ்சிக் கொம்பே! என்று அம்பிகையைப் பாடினேன்,'' என்றார்.
லலிதா சகஸ்ரநாமத்தில் 'ஓம் அபர்ணாயை நம:' என அம்பிகை ஸ்தோத்திரம் உள்ளது, இதற்கு 'இலைகளற்ற கொடி' என்று பெயர். இலைகள் இருப்பின் எங்கே அவை எழுப்பும் சரசர ஒலியால் சிவனின் தியானம் கலைந்திடுமோ என்பதால் இலைகளற்ற கொடியாய் அம்பிகை சுற்றிப் படர்கின்றாள். இதனால் தான் துறவிகள் சிவமயம் பெற வேண்டி, இலைகளைக் கூடப் புசியாமல் கடும் விரதம் இருப்பர்,” என்று பட்டர் கூற அவையோர் எழுப்பிய கரவொலி அடங்க நீண்ட நேரம் பிடித்தது.
- இன்னும் வருவாள்
முனைவர் ஜெகநாத சுவாமி