ADDED : செப் 16, 2016 09:44 AM

இதையடுத்து 23வது பாடலைப் பாடினார் அபிராம பட்டர்.
“கொள்ளேன் மனதில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே! களிக்கும் களியே! அளிய என் கண்மணியே!”
இதையடுத்து,“அன்னையே! உன்னுடைய எழில்கோலம் அல்லாது என் மனதில் வேறு எதையும் துதிக்க மாட்டேன். உன்னைச் சரணடையும் பக்தர் கூட்டத்தை விட்டுப் பிரிய மாட்டேன். மாற்று வழி காட்டும்
வேறு சமயங்கள் எவற்றையும் விரும்பமாட்டேன். பூலோகம், புவர்லோகம், சுவர்க்கலோகத்திலும், அவற்றுக்கு அப்பாலும் இருப்பவளே! என் தியானத்தின்
ஆழத்தினுள்ளே வடியும் அமுதமே! எனக்கு பேரானந்தம் தருபவளே! என் கண்ணின் மணியே!” என்று பொருள் சொல்லி விட்டு ஆழ்ந்த அமைதியில் ஆழ்ந்தார்.
மன்னர் வினவினார், “பக்திப் பரவசத்தில் மவுனமாகி விட்டீர்களே.. காரணம் என்ன?” என்றார்”
“மன்னா! இது வெறும் பாடல் அல்ல; அன்னை தந்த வரத்தால் பாடிய பாடல்!” என்றார் அபிராமபட்டர்.
அடுத்து மிகவும் பிரபலமான,
“மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருத்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே!”
என்று பாடலைப்பாடி விளக்கமளித்தார்.
“நவரத்தினங்களின் ஒளியே! மணிகளால் கோர்க்கப்பட்ட ஆபரணங்கள் உன் அழகால் பெருமை பெற்றன. உன்னை வணங்காதவர்களுக்கு நோயாகவும்,
எவரொருவர் உன்னைச் சரணடைகிறார்களோ அவர்களுக்கு மருந்தாகவும் விளங்கக் கூடியவளே! தேவர்களுக்கு மகிழ்வூட்டுபவளே! உன் தாமரைப் பாதம்
சரணடைந்த பின் வேறு எவரையும் சென்று நான் பணியமாட்டேன்” என்றார்.
மன்னர் அவரிடம், “ஐயனே! அணியும் அணிக்கழகே என்ற அற்புதமான உவமையைத் தந்தீர்கள். அதற்கு நன்றிகள். ஆயினும், அணுகாதவர்க்குப் பிணியே என்று ஓர் அபாண்டத்தை அன்னை மீது தாங்கள் சாற்றுவது எப்படிப் பொருந்தும்? அந்த அன்னை தன்னை நாடினாலும், நாடாவிட்டாலும் எல்லோருக்கும் அருள் புரிபவள் அல்லவா?” என்று சந்தேகம் கேட்டார்
பட்டர் தனது அருளுரையைத் தொடர்வார்;
“மன்னா! நீர் தொடுத்த வினா நியாயமானதுதான். ஆனால், ஒரு விஷயத்தை நாம் நினைவு கூரவேண்டும். சூரியன் அஷ்ட திக்குகளிலும் தன் கதிரொளியை வீசிப் பரப்புகிறான். ஆனால் பூமியோ ஒரு பக்கம் வெளிச்சத்தை வாங்கி மறுபக்கம் இருளாகிப் போகும் படியல்லவா திரும்பிக் கொள்கிறது. சூரியனை நோக்கித் திரும்பும் பகுதி பகலாகவும், சூரியனுக்கு எதிராக விலகிக்கொண்ட பகுதி இருளாகவும் ஆகிவிடுகிறதே? அது சூரியனின் குற்றமா? இல்லையே! அதுபோலத்தான் அன்னையை நெருங்கிச் சென்று சரணடைவோர் அருள்நிலை அடைவர். அவளை விட்டு விலகிச் செல்வோர் பிணியில் உழல்வர். அவள் கருணா சாகரி ஆனதால் விலகிச் சென்றோரே மீண்டும் அணுகி வந்தால் அவர்களுக்குப் பிணி தீர்க்கும் மருந்தாக அவளே ஆகின்றாள்!
மேலும் இங்கு பிணியெனக் கூறப்பட்டது. பிறவிப் பிணியென்றே கொள்ளவேண்டும். அம்பிகையைச் சரணடையும் ஆன்மாக்கள் பிறப்பு, இறப்பு சுழற்சிகளிலிருந்து விடுபடுவர். ஓர் உண்மைச் சம்பவம் கூறுகிறேன், கேளுங்கள்,” என்றவர் ஒரு கதையைச் சொன்னார்.
ஒரு நகரத்தில் பிரபல துணி வணிகரின் குடும்பம் வசித்து வந்தது. அவர் கிராமத்திலிருந்து நகருக்கு இடம் பெயர்ந்தவர். மிக எளிமையான நிலையில் இருந்து படிப்படியாக முன்னேறியவர். எந்த விசேஷமாக இருந்தாலும் முதற்காரியமாக ஓர் விலை உயர்ந்த வஸ்திரத்தை தனது குலதெய்வமான கிராம தேவதையான பராசக்திக்கு அர்ப்பணிப்பார். அவரது குலதெய்வக் கோவில் அடர்ந்த காட்டில் இருந்தது. இருப்பினும் சிரமம் பாராமல் அடிக்கடி சென்று வருவார்.
காலம் உருண்டு வயது முதிர்ந்தது. அவரது மூத்தமகன் வியாபாரப் பொறுப்பை ஏற்றான். முன்பை விட பல மடங்கு வியாபாரம் உயர்ந்தது. ஆனால், புதிய தலைமுறையினர் கிராமத்தில் இருந்த தங்கள் குலதெய்வத்தை மறந்து விட்டனர். பெரியவர் காலமானார். மகனுக்கும் இன்னதென்று விளக்க முடியாத நோய் ஏற்பட்டது. மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த இளைய மகன் சத்யன் தலையெடுத்தான். ஆனால் அதற்குள் கூட்டுக் குடும்பம் பல துண்டுகளாக உடைந்து போனது. பங்காளிகள் சண்டை இட்டுக்கொண்டனர்.
வியாபாரம் படுத்து விட்டது. மெல்ல அந்த குடும்பத்தை வறுமை வாட்டலாயிற்று. சத்யன் கடன் வாங்கி குடும்பத்தைக் காப்பாற்ற முயற்சி செய்தான். இறுதியில் அவனும் நோய்வாய்ப்பட்டான். தாயும் படுத்த படுக்கையானாள். கட்டிய மனைவி பிரிந்து சென்று விட்டாள்.
ஒருநாள் சத்யனின் வீட்டிற்கு ஒரு பெரியவர் வந்தார். அவர் சத்யனின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்து விட்டு, “சத்யா, உனது ஜாதகத்தில் சனி பகவானின் காலம் நடக்கிறது. இத்தகைய சோதனையான காலங்களில் நம்மைக் காப்பாற்றும் சக்தி பூர்வ புண்ணியத்திற்குத்தான் உண்டு. உனது ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி நீச்சம் பெற்றுள்ளதால் நீ உனது குலதெய்வத்தையும் மறந்து போனாய் உடனே உனது குலதெய்வ கோவில் சென்று இயன்ற வழிபாடுகளைச் செய். உன் கஷ்டம் தீரும்!” என்றார்.
ஆனால் சத்யனுக்கு குலதெய்வம் எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை.
தன் அம்மாவிடம் சென்று , “அம்மா! நமது குலதெய்வம் எதுவென்று தெரியுமா?” என வினவினான். தாயும் முனகியபடி பதிலளித்தாள்,
“சத்யா! அங்கெல்லாம் நாம் போய் வெகுகாலமாகி விட்டது. அது ஒரு பெண் தெய்வம். ஏழுவயது கன்னிகை தெய்வாமாகி விட்டதாக உன் பாட்டனார் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அந்த மனுஷன் தான் ஒரு நாளும் கிழமையும் வந்துவிட்டால் நமக்கு வாங்கித் தருகிறாரோ இல்லையோ, அந்த
குல சாமிக்கு பட்டுப் பீதாம்பரத்தில் பாவாடை தைத்து வெள்ளித் தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு போவார். பிற்காலத்தில் உன் அப்பா அந்த வழக்கமெல்லாம் வேண்டாம் என்று விட்டு விட்டார். ஏனென்றால் அந்த சாமி இருப்பது ஒரு வனத்துக்குள்! அங்கு போவது ரொம்ப சிரமம். காலங்கள் எவ்வளவு மாறிப்போனாலும் இன்னும் அந்த இடம் காடாகவே இருப்பதாகக் கேள்வி. நீ அங்கேயெல்லாம் போய் சிரமப்படாதே! ”என்று கூறி கண்களை மூடி அயர்ந்தாள்.
சத்யன் அப்போதே குலதெய்வ கோவிலுக்குப் போவதென்று முடிவு செய்து விட்டான். தன் கையிலிருந்த பணத்திற்கு கடைவீதி சென்று ஒரு பச்சை பட்டுப் பாவாடை, சட்டை வாங்கிக்கொண்டான். அவனது மனதுக்குள் எப்படியாவது தன் குலதெய்வத்தை தரிசித்தாக வேண்டும் என்ற உறுதி இருந்தது. அன்றிரவே தன் தாயாரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டான். மறுநாள் மாலை அந்த முன்னோர் வாழ்ந்த கிராமத்தை வந்தடைந்தான் சத்யன். கிராமத்தில்
உள்ளவர்களிடம் கோவிலுக்கு வழி கேட்டான். அவர்கள் தெளிவாகக் கூறவில்லை. எனவே ஒற்றையடிப்பாதையில் நடக்கலானான். இருள் கவியத் தொடங்கிய வேளை. மெல்ல மெல்ல அடர்ந்த கானகத்துள் வந்துவிட்ட சத்யன் பாதையைத் தவறவிட்டுவிட்டான். கற்களும், முட்களும் கால்களில் கிழித்து ரத்தம் கசியத் தொடங்கியது.
ஒரு மரத்தடியில் களைப்புடனும், மயக்கத்துடனும் உட்கார்ந்து விட்டான்.
அவனையறியாமல் அவனது கரங்கள் கூப்பின, மனம் பிரார்த்தனையில் லயித்தது.
- இன்னும் வருவாள்
முனைவர் ஜெகநாத சுவாமி