ADDED : ஆக 04, 2023 11:56 AM

காஞ்சி மடத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்கு பக்தர் ஒருவர் தன் மகளின் திருமண அழைப்பிதழை காஞ்சி மஹாபெரியவரிடம் சமர்ப்பித்து உதவி கேட்டார். அதைப் படித்ததும் சற்று காத்திருக்கும்படி சுவாமிகள் தெரிவித்தார். வரிசை நகர்ந்து கொண்டிருக்க சிறிது நேரத்தில் இன்னொரு நபர் திருமண அழைப்பிதழை சமர்ப்பித்து அவரும் உதவி கேட்டார். இவரையும் சற்று ஒதுங்கி நிற்குமாறு சுவாமிகள் தெரிவித்தார். அடுத்த அரை மணி நேரத்தில் மூன்றாவதாக ஒரு நபர் திருமண அழைப்பிதழுடன் உதவி கேட்டு வந்தார்.
மடத்தில் இருந்த சீடரின் மனதிற்குள், 'என்ன வரிசையா திருமணத்திற்கு உதவி கேட்டபடி இருக்காங்களே...' என ஆச்சரியப்பட்டார். பின் அந்த அழைப்பிதழ்களை படித்து விட்டு அதிர்ச்சியும் அடைந்தார். மூன்றும் ஒரே திருமணத்திற்கான அழைப்பிதழ். அவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
'இப்படி அற்ப புத்தியுடன் மனிதர்கள் நடக்கிறார்கள். மடத்தின் சார்பாக ஏழை பெண்களின் திருமணத்திற்கு சீதனமாக பொருட்கள் கொடுக்க முன் வந்தால், அதை தவறாக பயன்படுத்த நினைக்கிறார்களே... இனி உதவி செய்வதைக் கைவிடுவது தான் நல்லது என காஞ்சி மஹாபெரியவரிடம் வலியுறுத்தினார் அந்த சீடர். பொறுமையுடன் கேட்டு விட்டு, ''இதோ பார்... உலகத்தில் பலரும் பலவிதமாகத் தான் இருப்பார்கள்.
யாரோ சிலர் செய்யும் தவறுக்காக நியாயமான உதவி கிடைக்க வேண்டியவர்களுக்கு, நாம் கொடுக்காமல் இருப்பது சரியா... நல்லெண்ணத்துடன் செய்யும் செயல்கள் ஒருபோதும் தடைபடக் கூடாது. தவறு நேராமல் விழிப்புடன் இருப்பது நம் பொறுப்பு'' என்றார் மஹாபெரியவர். மேலும், ''வறுமையால் சிலர் இப்படி எல்லாம் நடக்கிறார்கள். அதை பெரிதுபடுத்தக் கூடாது'' என்று சொல்லி மணமகளின் தந்தையிடம் சீதனப் பொருட்களை வழங்கினார்.
தங்களை மன்னித்ததோடு, உதவியும் செய்த காஞ்சி மஹாபெரியவரின் கருணையை எண்ணி மூவரும் கலங்கினர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
எஸ்.கணேச சர்மா
ganesasarma57@gmail.com