
அந்தப் பெண்ணின் உடல் பருமனாக இருந்தது. அவளை அனைவரும் திகைப்புடன் பார்த்தனர்.
'பார்ப்பவர் கண்ணுக்கு காட்சிப் பொருளாகி விட்டோமே' என்ற கூச்சப்பட்டாள்.
மருந்து சாப்பிட்டும் பருமன் குறைவதற்கான வழி தெரியவில்லை.
காஞ்சி மஹாபெரியவரை தரிசித்தால் இதற்கு தீர்வு கிடைக்கும் என நம்பினாள். காஞ்சி மடத்திற்கு புறப்பட்டாள். வரிசையில் தலைகுனிந்தபடி நின்றாள். அவளது முறை வந்ததும் கீழே விழுந்து நமஸ்கரிக்க முயன்றாள். முடியாததால் தரையைத் தொட்டுக் கும்பிட்டாள்.
''நமஸ்காரம் பண்ற மாதிரி பாவனை பண்ணினாலே, நீ நமஸ்காரம் பண்ணினதாகவே அர்த்தம், கவலைப் படாதே'' என்றார் மஹாபெரியவர் பரிவுடன்.
''சுவாமி... நான் என்ன செய்தாலும் பருமன் குறையவில்லையே'' என அழுதாள்.
''டாக்டரைப் பார்த்தாயோ'' என கேட்டார் சுவாமிகள்.
''பலரை பார்த்தும் பலன் இல்லை''
''டாக்டர் ஏதாவது எக்சர்சைஸ் பண்ண வேண்டும் என்று சொல்லியிருப்பாரே?''
''ஆமாம்...ஒருநாளைக்கு ஒரு மணிநேரமாவது நடக்க வேண்டும் என்றார்''
''டாக்டர் சொன்னபடி நடந்தாயா?''
''எங்கே ஒருமணி நேரம் நடப்பது? பத்து நிமிடம் நடப்பதற்குள்ளேயே எனக்கு மூச்சு வாங்குகிறது''
''அதுசரி. உன் வீட்டுப் பக்கத்தில் ஏதாவது கோயில் இருக்கிறதா''
''பெரிய சிவன் கோயில் இருக்குது''
''பிறகென்ன...காலை, மாலையில் கோயிலை பிரதட்சிணம் பண்ணு. ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் ஆறு தடவையாவது பிரதட்சணம் செய்ய வேண்டும், ஒவ்வொரு சுற்று முடியும் போதும் முடிந்தளவு குனிந்து நமஸ்காரம் செய்ய வேண்டும், ஒரு மண்டலம் (48 நாட்கள்) இப்படி செய். அதன் பிறகு தொடர்ந்து நீ செய்வாய். அடுத்த முறை என்னைப் பார்க்க வரும்போது நன்றாக நமஸ்காரம் செய்வாய் என்ன தெரிந்ததா?''
''கட்டாயம் நீங்கள் சொன்னதைச் செய்கிறேன் சுவாமி'' என கை கூப்பினாள். டாக்டர் சொன்னதை தான் காஞ்சி மஹாபெரியவரும் சொன்னார் ஆனால் ஆன்மிகம் கலந்து சொல்லியிருக்கிறார். அதை வேத வாக்காக கருதிய அந்த பெண்
சிவன் கோயிலை தினமும் சுற்றி வந்தாள். அத்துடன் தன் வீட்டில் இருந்த மஹாபெரியவரின் படத்தின் முன் பத்து நமஸ்காரம் செய்தாள்.
அவளது உடல் மெலியத் தொடங்கியது. ஆன்மிக மருத்துவரான மஹாபெரியவர் சொன்ன மருத்துவம் பலித்தது.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* எல்லோருக்கும் நல்ல நாளாக அமைய கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இருமுறையும் இஷ்ட தெய்வத்தை வாய்ப்பு கிடைக்கும் போதும் தரிசியுங்கள்.
* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.
* இன்று செய்த நன்மை, தீமைகளை உறங்கும் முன் சிந்தியுங்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
'ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்' என தினமும் 108 முறை சொல்லுங்கள்
திருப்பூர் கிருஷ்ணன்