
துவாபரயுகம் முடிந்து கலியுகம் துவங்கிய வேளை... உலகமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாயினர். பெண்கள் கணவனுக்கு கட்டுப்பட மறுத்தனர். கணவர்களோ மனைவியரை துன்புறுத்தினர். பிள்ளைகள் பெற்றோரை வெறுத்தனர். நண்பர்கள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்தனர். உறவினர்கள் பொறாமையால் எதிரிகளாயினர். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை அதிகரித்தது. அதன் விளைவாக கொலை, கொள்ளை, பலாத்காரம் என உலகமே தத்தளித்தது.
கலியுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகளைக் கொண்டது. ஆரம்பமே இப்படியிருந்தால், போகப் போக என்னாகுமோ. திருமால், பிரம்மா, சிவன் ஆகியோர் நினைத்தாலும் இந்த கொடுமைகளைத் தடுக்க இயலாது. காரணம் இது இயற்கையின் நியதி. காலச்சக்கரத்துக்கு அவர்களும் கட்டுப்பட்டவர்களே! ஆனால் அவர்களால் இந்த அவலத்தைக் குறைக்க முடியும். அவர்கள் ஒன்று கூடி ஒரு தெய்வமகனை உருவாக்கினர். அவனுக்கு 'தத்தன்' என்று பெயரிட்டனர். 'தத்தன்' என்றால் 'கவனமாக உருவாக்கப்பட்டவன்'. தெய்வங்களுக்கே தத்துப்பிள்ளை என்பதால் தான் இவனை தத்தன் என்று சொல்கின்றனர். இந்தக் குழந்தையை மும்மூர்த்திகளும் காட்டில் கொண்டு போய் விட்டனர்.
அந்நேரத்தில் பூலோகத்தில் தனக்கு நீண்டகாலமாக குழந்தை இல்லை என்ற வருத்தத்தில் காலவன் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். முப்பெரும் தேவியரிடம்,“தாய்மார்களே! உங்களுக்கு குழந்தைகளாய் இந்த உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு ஒரு குழந்தை இல்லையே!” என கண்ணீருடன் பிரார்த்தித்தார். ஒருநாள் கடும் பசியால் கனி பறிக்க சென்ற வேளையில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. முனிவர் பதறிப்போய் அங்கு சென்று பார்த்தார். குழந்தையை எடுத்து வந்து தன் ஆஸ்ரமத்திலுள்ள தாதியரின் பொறுப்பில் விட்டு விட்டார். குழந்தை கிடைத்தாலும் தன் வயிற்றில் ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்பதில் காலவரின் மனைவி உறுதியாக இருந்தாள்.
காலவர் தவத்தை தொடர்ந்தார். அந்த தவத்தின் பலனாக முப்பெரும் தேவியரும் ஒரு பெண் குழந்தையை உருவாக்கி காலவர் மனைவியின் வயிற்றில் கருவாக வைத்தனர். அவளுக்கு அழகே வடிவாய் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு லீலாவதி என பெயரிட்டனர். காலம் சென்றது. தத்தனுக்கும், லீலாவதிக்கும் திருமண வயது வந்தது. ஒரே ஆஸ்ரமத்தில் வளர்ந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். காலவருக்கும் இது சரியென்று படவே இருவருக்கும் கோலாகலமாக திருமணத்தை நடத்தி வைத்தார்.
கணவன் மனைவி களிப்புற்று வாழ்ந்தனர். ஒரு கட்டத்தில் தத்தனுக்கு குடும்ப வாழ்க்கை வெறுத்தது.
தன் மனைவியிடம்,“எனக்கு இல்லறம் வெறுத்து விட்டது. நான் தவ வாழ்வில் ஈடுபடப் போகிறேன். உனக்கும் விருப்பமிருந்தால் உன் தாயைப் போல, ஒரு ரிஷிபத்தினியாக இருந்து எனக்கு சேவை செய்யலாம். வருகிறாயா” என்றான்.
லீலாவதிக்கு அதிர்ச்சியும் ஆத்திரமும் ஒருசேர ஏற்பட்டது.
“என்ன சொல்கிறீர்கள். இந்த இளவயதிலேயே துறவறமா. இதில் எனக்கு உடன்பாடில்லை. தாம்பத்யத்தில் எனக்கு மிகுந்த நாட்டமுண்டு. அதில் சிறுபகுதியைக் கூட நாம் அனுபவிக்கவில்லை. அதற்குள் தவம், யாகம் என்றெல்லாம் சொல்லாதீர்கள். நாம் இன்பமாக வாழ்வோம். எனக்கு என்று இல்லறம் வெறுக்கிறதோ அன்று நாம் ஆன்மிகத்திற்குள் செல்லலாம்” என்றாள்.
தத்தன் இதை ஏற்கவில்லை. தனது முடிவில் உறுதியாக நின்றான்.
லீலாவதி தொடர்ந்தாள்.
“அன்பரே! உங்களை நான் தடுக்கவில்லை. ஆனால் தாம்பத்யத்தில் எத்தனை வகை சுகங்கள் உண்டோ, அவை அனைத்தையும் எனக்கு அளித்த பிறகு நீங்கள் இங்கிருந்து செல்லலாம். இது ஒரு மனைவியின் நியாயமான கோரிக்கையே! சாஸ்திரங்கள் கூட மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவது கணவனின் கடமை என்றே சொல்கின்றன. எனவே நீங்கள் என் விருப்பங்கள் பூர்த்தியாகும் வரை என்னோடு இருந்தாக வேண்டும்” என்று தன் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தாள்.
தத்தனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“அட பிசாசே! அழியும் இந்த உடல் கேட்கும் சுகத்துக்காக, என் ஆன்மிக பயணத்தை தடுக்க எண்ணுவாயா. அரக்க குலத்தினர் தான் வயது வரம்பின்றி, கட்டுப்பாடின்றி தங்கள் சுகத்தை பூர்த்தி செய்து கொள்வர். அத்தகைய குணத்தைக் கொண்டிருக்கும் நீயும் ஒரு அரக்க குலத்தில் பிறப்பாயாக. நீ அழகாக இருக்கும் மமதையில் தானே இத்தகைய சுகங்களைக் கேட்கிறாய். அந்த மமதை அழியும் வகையில் நீ மகிஷியாக எருமைத்தலையுடன் பிறப்பாயாக! பிறகு உன் அருகில் எவர் வருவர். பார்க்கிறேன்” என சாபமிட்டான்.
லீலாவதியும் விட்டாளில்லை.
“மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றாத நீயெல்லாம் ஒரு ஆண்மகனா. நான் எருமை முகத்துடன் பிறக்கத் தயார். அப்படி பிறந்தாலும் நீயும் ஆண் எருமையாய் பிறந்து என்னுடன் உறவாடி என் இச்சைகளைத் தீர்த்த பிறகே சுயவடிவம் பெறுவாய்” என மறுசாபம் இட்டாள்.
இருவரும் வார்த்தைகளை கடுமையாக உதிர்த்த பிறகே கோபம் தணிந்து தங்கள் சுயநிலைக்கு திரும்பினர். லீலாவதி பணிவுடன் தத்தன் அருகே சென்று,“நாம் ஒருவரை ஒருவர் சபித்துக் கொண்டோம். இதை மாற்ற இயலாது. எனக்கு இவ்வளவு கோபம் வந்திருக்கக் கூடாது. கணவரின் விருப்பத்தை மதித்து நடந்திருக்க வேண்டும். எனக்கு சாப விமோசனம் அளியுங்கள்” என்றாள்.
“லீலா! எல்லாம் கடவுளின் சித்தப்படியே நடக்கிறது. நம் தலையில் அவன் எழுதியதை நாம் அனுபவித்தே தீர வேண்டும்.
இதில் நல்லவர், கெட்டவர், கோபக்காரர், குணமுள்ளவர், பாவம் செய்தவர், புண்ணியம் சேர்த்தவர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. நாம் கோபத்தால் இந்நிலைக்கு ஆளானோம். கோபம் எத்தகைய கொடும் விளைவுகளை உயிர்களுக்கு ஏற்படுத்தும் என்பதை நம் சரித்திரத்தைக் கேட்டு உலகம் உணரட்டும். நாம் செய்த பாவத்தை நாமே அனுபவிப்போம்” என்றான் தத்தன்.
பிறகு லீலாவதி எருமை வடிவில் காட்டுக்கு சென்றாள். ஒரு கட்டத்தில் தனது உயிரை இழந்தாள். தன் விருப்பப்படியே தத்தன் தவவாழ்வு வாழ்ந்து தன் பிறப்புக்கு காரணமான மும்மூர்த்திகளை சென்றடைந்தான்.
இந்த நேரத்தில் அரக்கர்களுக்கு தலைவனான கரம்பனும், அவனது தம்பி ரம்பனும் காடுகளில் வலம் வந்து கொண்டிருந்தனர்.
--தொடரும்
தி. செல்லப்பா
thichellappa@yahoo.com