sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சரணம் ஐயப்பா - 12

/

சரணம் ஐயப்பா - 12

சரணம் ஐயப்பா - 12

சரணம் ஐயப்பா - 12


ADDED : பிப் 16, 2022 11:00 AM

Google News

ADDED : பிப் 16, 2022 11:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரண்டு திருவடிகள் சரணம்

மணிகண்டன் அவரிடம்,“ஐயா! எனது தாய் தீராத தலைவலியால் அவதிப்படுகிறாள். அவளது நோய் தீர்க்கும் மருந்தைக் கரைக்க புலிப்பால் வேண்டும் என வைத்தியர்கள் சொல்லி விட்டனர். அதைப் பெறவே இங்கு வந்தேன்” என்றதும் அந்த நபர் ஓவென சிரிக்க ஆரம்பித்தார். அவரது சிரிப்பு அடங்க நீண்ட நேரமாயிற்று.

“ஏனப்பா! புலிப்பாலா! நீ அறியாச்சிறுவன் என்பதைக் காட்டி விட்டாயே! புலியைப் பிடிப்பதாவது! பாலைக் கறப்பதாவது! புலி எப்படி இருக்குமென்றாவது உனக்கு தெரியுமா” என்று நகைத்தபடியே, “சிறுவா! நான் மீண்டும் சொல்கிறேன். இந்தக் காட்டுக்கு வந்த வீராதிவீரர்கள் கூட தப்பிச் சென்றதில்லை. அதிலும் இந்த வாபர் கண்ணில் பட்டவன் தப்பி பிழைத்ததாக சரித்திரமே இல்லை. நீ பாலகனாக இருப்பதால், உன்னை இங்கிருந்து அனுப்புகிறேன். ஓடி விடு” என்றார்.

“ஓ நீர் தான் வாபரா. புலிப்பாலை மட்டுமல்ல! உம்மைப் பார்ப்பதும் எனது பணி தான். நீர் மக்களிடம் கொள்ளையடித்து, அந்தப் பணத்தில் வாழ்பவர். கொள்ளையர்களைப் பிடிக்கவும் மன்னர் ராஜசேகர பூபதி எனக்கு ஆணையிட்டுள்ளார். நான் அவரது மணிகண்டன். கொள்ளையடித்த குற்றத்துக்காக உம்மைக் கைது செய்கிறேன்” என்றான் மணிகண்டன்.

வாபருக்கு கோபம் வந்து விட்டது.

“நீ தான் மணிகண்டனா. அரண்மனையில் என்னைக் கைது செய்ய நீங்கள் இட்ட திட்டம் எனக்கு ஒற்றர்கள் மூலம் தெரிந்து விட்டது. நீ என்னை கைது செய்ய புறப்பட்டு வந்ததையும் நான் அறிவேன். என்னைக் கைது செய்வதென்பது இயலாத காரியம். உன்னை இப்போதே கொன்று விடுவேன். இரக்கம் என்ற சொல்லைக் கூட நான் அறிந்தவன் அல்ல. இருப்பினும, ஒரு பாலகனைக் கொன்றவன் என்ற பழி எனக்கு வரக்கூடாது. அது மட்டுமல்ல! உன்னைக் கொல்லவும் என் மனம் ஏனோ மறுக்கிறது” என்றார்.

அதற்கு மணிகண்டன், “உம் இரக்கத்தைப் பெற நான் வரவில்லை. நீர் கோழை என்பதால் தான், என்னுடன் போர் புரிவதை தவிர்க்கிறீர் என நினைக்கிறேன். எடும் வாளை! நாம் போர் புரிவோம். வெற்றி பெற்றவர் இன்னொருவரை கைது செய்து கொள்ளலாம்'' என தன் வாளை எடுத்து போருக்கு தயாரானான். வாபரும் கடும் கோபம் கொண்டு போரிட்டான்.

இந்த நேரத்தில் அந்தக் காட்டில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. மரங்கள் சூழ்ந்து இருள் நிறைந்திருந்த அந்தக் காடு பிரகாசமானது. வானத்தில் இருந்து முப்பத்துமுக்கோடி தேவர்களும் அங்கு வந்து இறங்கினர். அவர்களைப் பார்த்ததும், வாபரின் கர்ண கொடூரமான குணங்கள் மறைந்தன. கொள்ளையடிப்பது சுக வாழ்வுக்காக. ஆனால் அந்த வாழ்வு நிலையற்றது என்ற ஞானம் ஏற்பட்டது. அவரது வலிமை குறைந்தது. வாள் நழுவி கீழே விழுந்தது. அவர் மயக்கமடைந்து விட்டார்.

தேவர்களைத் தொடர்ந்து மும்மூர்த்திகளும் அங்கு வந்தனர்.

மணிகண்டனிடம்,“மணிகண்டா! நீ பூலோகத்தில் பிறந்ததன் நோக்கத்தை அடையும் நேரம் வந்து விட்டது. மகிஷி வதத்திற்காகவே இங்கு வந்தாய். அவளை அழித்தால் தான் மூன்று உலகத்தில் உள்ளவர்களும் நிம்மதியாக இருப்பர். அவளை அழிப்பது சுலபமான செயல் அல்ல. அவளது ஒரு துளி ரத்தம் கீழே விழுந்தால், அதிலிருந்து நுாறு மகிஷிகள் உற்பத்தியாவர். அவள் அடர்ந்த ரோமம் கொண்ட காடடெருமை உடலைக் கொண்டவள். ரோமங்கள் உதிர்ந்தால், அதிலிருந்து ஆயிரக்கணக்கில் மகிஷிகள் உருவாவர். இத்தனை பேரையும் கொல்வதென்பது இயலாத ஒன்று. எனவே, மகிஷியின் மூக்கை உன் கால்களால் அழுத்தி மர்த்தனம் செய்து விடு. அவளை மூச்சு விட முடியாமல் செய்து கொன்று விடு” என்றனர்.

மர்த்தனம் என்றால் 'பிசைவது' என பொருள். மாவை பிசையும் போது அழுத்தம் கொடுப்பது போல மூக்கை அழுத்தி விட்டால் ஒருவனால் செயல்பட முடியாது. மூச்சு விட முடியவில்லை என்றால் அவன் இறந்து விடுவான். மற்றபடி கத்தியையோ, வாளையோ மகிஷியைக் கொல்ல பயன்படுத்த முடியாது. அது எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும்.

எனவே தேவர்கள் மணிகண்டனிடம், “மகிஷியின் மூக்கை அழுத்த போதிய பலம் வேண்டும். நாங்கள் எங்கள் சக்தியில் ஒரு பகுதியை உனக்கு தருகிறோம். இதைப் பயன்படுத்தி அவளைக் கொன்று விடு” என்றனர். அதன்படி தேவர்களும், மும்மூர்த்திகளும் தங்கள் சக்தியை அளித்தனர்.

இவ்வாறு மகிஷி வத திட்டம் உருவாகிக் கொண்டிருந்த விஷயத்தை அசுரர்களின் குரு சுக்ராச்சாரியார், தன் ஞான திருஷ்டியால் உணர்ந்து விட்டார். அவர் மகிஷியைத் தேடிச் சென்றார். அவள், தன் காதலனான சுந்தர மகிஷத்தின் உறவில் மயங்கிக் கிடந்தாள். அவளை எழுப்பிய சுக்ராச்சாரியார்,“ மகிஷி! நீ கேட்ட வரத்தின்படி ஒரு மனிதன் பூலோகம் வந்தான். அவன் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்தவன். 12 வருடம் பூலோகத்தில் வாழ்ந்து விட்டான். அவனை அழிக்காவிட்டால் அவன் உன்னை அழித்து விடுவான், நீ உடனே சென்று அவனைக் கொன்று விடு” என்றார்.

கோபமடைந்த மகிஷி ஆவேசமாக ஓடி வந்தாள். மணிகண்டன் அவளை அழுத்திப் பிடித்தான். அவளது கொம்புகளைப் பிடித்து தரையில் சாய்த்தான். அவளது மூக்கில் தனது திருவடிகளை வைத்து அழுத்தினான். மணிகண்டனின் திருவடிகள் பட்டதோ, இல்லையோ மகிஷி தன்னையே மறந்து விட்டாள். அந்த பாறை நெஞ்சுக்குள்ளும் பரவசம் ஊற்றெடுத்தது.

கடவுளுக்கு ஐந்து முகம், பத்து முகம், 25 முகம், 16 கைகள் என்றெல்லாம் விதம் விதமாக இருக்கும். ஆனால் எத்தனை முகம் கொண்ட கடவுளாக இருந்தாலும் திருவடிகள் மட்டும் இரண்டே இரண்டு தான் இருக்கும். காரணம் தெரியுமா. பக்தனுக்கு இரண்டே கைகள் தான். அவன் சுவாமியின் திருவடிகளில் விழுந்து, இரண்டு கைகளாலும் பற்றிக் கொள்வதற்கு வசதியாகவே, சுவாமி நமக்கு இவ்வாறு திருவருள் புரிந்திருக்கிறார். 'சிக்கென பிடித்தேன், எங்கெழுந்து அருளுவது இனியே' என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடுவது கூட இதைப் பின்பற்றியே!

சுவாமியின் திருவடிகளில் சரணடைந்து விட்டால் எவ்வளவு கெட்டவனும் நல்லவனாகி விடுவான். ஆரம்பத்தில் மகிஷி, மணிகண்டனுடன் கடுமையாகப் போரிட்டுப் பார்த்தாள். ஆனால் மணிகண்டன் அவளை கீழே விழச்செய்து, திருவடிகளால் அழுத்தியதும் அவள் மனம் மாறி விட்டாள்.

“என்னை ஆளவந்த தெய்வமே!” என போற்றினாள். இந்த காட்சியைக் காண எல்லா தேவர்களும் வந்தனர்.

இந்த நேரத்தில் அவளோடு வாழ்க்கை போராட்டம் நடத்திக் கொண்டிருந்த சுந்தர மகிஷமும், தனது சாபம் நீங்கப் பெற்றது. அங்கு வந்த மும்மூர்த்திகளுடனும் அது கலந்து விட்டது.

மணிகண்டனின் திருவடி ஸ்பரிசம் பட்டதால் மனம் மாறிய மகிஷி,“ மகாபிரபு! தங்கள் திருவடி ஸ்பரிசத்தால் என் மனம் நிம்மதியடைந்தது. எனக்கு அழகான வடிவம் தந்து என்னை நீங்களே திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்றாள்.

இந்த வேண்டுகோளுக்கு மணிகண்டன் அளித்த பதில் அவளுக்கு அதிர்ச்சியை அளித்தது.

- தொடரும்

தி.செல்லப்பா

thichellappa@yahoo.com






      Dinamalar
      Follow us