sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சரணம் ஐயப்பா - 13

/

சரணம் ஐயப்பா - 13

சரணம் ஐயப்பா - 13

சரணம் ஐயப்பா - 13


ADDED : பிப் 22, 2022 12:42 PM

Google News

ADDED : பிப் 22, 2022 12:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகிஷியின் முற்பிறவி

“மகிஷியே! மனிதனாக பிறந்த ஒருவர் மரணமடைந்தே தீர வேண்டும். மனிதன் தன் குணத்தால் தான் நல்லவனாகவும், அசுரனாகவும் மாறுகிறான். நீ உன் முன்வினைப் பயனால் அசுர குணத்தை அடைந்தாய். நாம் முன் செய்த பாவ, புண்ணியங்களே நம்மை அழகற்றவனாகவும், அழகுள்ளவனாகவும் பிறக்க வைக்கின்றன. நீ செய்த ஏதோ கொடிய பாவத்தால் எருமை முகத்தை அடைந்துள்ளாய். ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன். இதற்கு முன் உன்னை எங்கோ பார்த்தது போல் நினைவுக்கு வருகிறது. பூர்வ ஜென்மத்தில், தங்களுக்குள் ஏதோ உறவு இருந்தவர்கள் தான்,'உங்களை எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே' என்பார்கள். பயணத்தின் போது நீ சிலரை சந்திக்கிறாய். அவரவர் இடம் வந்ததும் பிரிந்து விடுகிறீர்கள். இதுவே வாழ்க்கை. நாம் எங்கோ சந்தித்தோம். மீண்டும் சந்திக்கிறோம். ஒருவேளை நாம் கணவன், மனைவியாகவோ, காதலர்களாகவோ இருந்திருக்கலாம். விட்ட குறை, தொட்ட குறை என்பார்களே! அதுபோல் இந்த குறை உறவு பூரணம் அடையும் வகையில் தொடரும்” என்றவனை இடைமறித்தாள் மகிஷி.

“சுவாமி! தாங்கள் கூறுவது வாழ்க்கை சித்தாந்தம். எப்படியிருப்பினும் நமக்குள் உறவு இருந்தது என்பதை ஒப்புக்கொண்டீர்கள். அதுவரையில் எனக்கு மகிழ்ச்சியே! நான் கேட்டது நம் திருமணத்தைப் பற்றி... அதற்கு உங்கள் பதில் என்ன” மணிகண்டன் புன்னகை செய்தான்.

“பெண்ணே! நான் மட்டும் என் தாய்க்கு சத்தியம் செய்து தராமல் இருந்திருந்தால் உன்னைத் திருமணம் செய்வதில் எனக்கு தடை இருந்திருக்காது. ஆனால் நான் சில அரசியல் காரணங்களுக்காக, திருமணமே செய்வதில்லை என என் தாய்க்கு வாக்கு கொடுத்துள்ளேன். தாய் மீது செய்த சத்தியத்தை காப்பது மகனின் கடமை. எனவே உன்னைத் திருமணம் செய்ய இயலாது” என்றதும் மகிஷி அதிர்ந்தாள்.

அப்போது அங்கே எல்லா தேவர்களும் வந்தனர்.

“மணிகண்டா! மகிஷியிடம் பேசியது போதும். நீ வந்த வேலையை முடி! அவளை வதம் செய்” என்றனர்.

மகிஷி சிரித்தாள்.'இவரது கையால் நான் மரணம் அடைவதென்றால் அதை மகிழ்வுடன் ஏற்பேன். பிறந்தவர்கள் மடிந்தாக வேண்டும் என்ற நியதிப்படி, இந்த புண்ணிய புருஷனின் கையால் மடிவதில் பெருமை கொள்கிறேன். ஆனால், தேவர்களே! நான் சாகும் முன் முற்பிறப்பில் நாங்கள் யாராக இருந்தோம் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றதும், வாயுதேவன் முன்னால் வந்தான்.

“மகிஷியே! நீ சாதாரணமானவள் அல்ல. முப்பெரும் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோரின் அம்சமாக பிறந்தவள். லீலாவதி என்னும் அழகுப்பெண்ணாக இருந்தாய். இதோ நிற்கும் மணிகண்டன், பிரம்மா, திருமால், சிவன் ஆகியோரால் பூமிக்கு அனுப்பப்பட்டவன். இவனது பெயர் தத்தன். நீங்கள் இருவரும் கணவன், மனைவியாக இருந்தீர்கள். காலப்போக்கில் இல்லறத்தில் நாட்டம் குறைந்த தத்தனை, எருமையாக மாற நீ சபித்து விட்டாய். தத்தன் உன்னை பெண் எருமையாக மாற மறுசாபம் கொடுத்தான். நீங்கள் அவ்வாறே பிறந்து இணை பிரியாமல் இருந்தீர்கள். ஒருமுறை, மற்றொரு எருமை உன் மேல் ஆசைப்பட்டு, உன் எருமைக் கணவனைக் கொன்று விட்டது. நீ கோபத்துடன் திரிந்தாய். இப்போது தெய்வமகனான மணிகண்டனின் திருவடி பட்டதால் நற்குணங்களைப் பெற்றாய். உன் சாபம் நீங்கியது. உலக நியதிக்காக நீ சற்று நேரத்தில் மணிகண்டனால் வதம் செய்யப்படுவாய். அது முடிந்ததும் நீ அழகான பெண்ணாக மாறுவாய்” என ஆசிர்வதித்தான்.

மகிஷியின் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது. அது ஒரு ஆறாக மாறியது. அழுகையில் பிறந்த நதி என்பதால் அது அழுதா நதி எனப்பட்டது. மணிகண்டன் மகிஷியை தன் திருவடிகளாலேயே வதம் செய்தான். அவள் மரணமடைந்ததும், தேவர்கள் அழுதா நதியில் நீராடினர். மரண வீட்டுக்கு செல்பவர்கள் நீராடிய பிறகே இல்லம் திரும்ப வேண்டும் என்ற நியதிப்படி இது நடந்தது.

சற்று நேரத்தில் இறந்து கிடந்த மகிஷிக்கு தேவர்கள் உயிர் கொடுத்தனர். அவள் மீண்டும் லீலாவதியாக உருவெடுத்து நின்றாள்.

மணிகண்டனிடம்,“என்னை நீங்கள் திருமணம் செய்ய மாட்டீர்களா” என்று கண்ணீர் கொப்பளிக்க கேட்டாள்.

“லீலா! அது முடியாது என சொல்லி விட்டேனே! ஆனால் உனக்கு ஒரு சிறப்பிடத்தை தருவேன். நான் வந்தது மகிஷி வதத்திற்காகவே. வந்த இடத்தில் என் தாயின் தலைவலி போக்க புலிப்பால் கொண்டு செல்லும் பணியும் சேர்ந்து விட்டது. அது முடிந்ததும். நான் மனிதப்பிறப்பை முடித்து விடுவேன். இந்த கானகத்தில் சபரி என்ற பெண்மணி இருக்கிறாள். ஸ்ரீராமனின் அருளைப் பெற்ற அவள் வசித்த மலையில் நான் குடியிருக்கப் போகிறேன். அங்கே என் இடது பக்கத்தில் உனக்கு தனி இடம் அளிக்கிறேன். என்னைக் காண வருபவர்கள் உன்னையும் வணங்கிச் செல்வர். நீ அவர்களுக்கு அருள்பாலித்து வா” என்றார்.

சபரிமலையில் மாளிகைப்புறத்தம்மன் என்ற பெயரில் இந்த அம்பிகை அருள்பாலிக்கிறாள். மணிகண்டனின் ஒரு புறத்தில் அமர்ந்திருப்பதால் இவள் மாளிகைப்புறம் ஆனாள்.

ஆனாலும் லீலாவதி தன் முயற்சியைக் கைவிடவில்லை. “மணிகண்ட பெருமானே! நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இந்த உலகம் உள்ளளவும் நம் உறவு தொடர வேண்டும். அதற்கு நீங்கள் தான் அருள்புரிய வேண்டும்” என்று கண்ணீர் வடித்தாள்.

காதல் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டு பிரியாத உறவே காதல். அது வெறும் உடல் சங்கமம் அல்ல. மனங்களின் சங்கமம். இந்த உலகில் காதலுக்கு அழுத்தமான அச்சாரம் இட்ட முதல் பூலோகப் பெண்மணி லீலாவதி தான் என்றால் மிகையில்லை.

மணிகண்டன் அவளது மனஉறுதியை மனதுக்குள் பாராட்டினாலும் வெளிப்படையாக அதைக் காட்ட இயலாத நிலையில் இருந்தார்.

“உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நாம் இந்த மலையில் குடியிருக்கும் காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை முதல் தை வரை பக்தர்கள் இங்கே வருவார்கள். அவர்களில் முதன்முதலாக வரும் பக்தர்களை கன்னி சுவாமிகள் என்பர். இவர்கள் எந்த ஆண்டில் வரவில்லையோ அந்த ஆண்டு நமது திருமண ஆண்டாக இருக்கும். என்ன சொல்கிறாய்” என்றார்.

இந்த நிபந்தனையை மகிழ்வுடன் ஏற்றாள் லீலாவதி. எப்படியும் கன்னி சுவாமிகளை வரவிடாமல் தடுத்து விடலாம் என்ற நம்பிக்கை அவளிடம் இருந்தது. இன்று வரை அந்த நம்பிக்கையுடன் தான் அவள் தனது மணநாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் கன்னி சுவாமிகள் ஆண்டுதோறும் மணிகண்டனை தரிசிக்க சபரிமலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

லீலாவதி மணிகண்டனிடமும், தேவர்களிடமும் விடை பெற்று, சபரிமலைக்கு புறப்பட்டாள்.

அப்போது தேவர்கள் மணிகண்டனிடம்,“ஐயனே! உங்கள் பூலோக வாழ்வு முடிந்து விட்டது. பெற்றவளுக்கு செய்ய வேண்டிய புலிப்பால் சேவையை முடித்து விட்டு சபரிமலையில் ஐக்கியமாகி விடுங்கள்'' என்றனர்.

மணிகண்டனும் அதை ஏற்றான். இந்திரன் முன்னால் வந்து,“ ஐயனே! நான் புலியாக மாறுகிறேன். நீங்கள் என் மேல் ஏறிக் கொள்ளுங்கள். மற்ற தேவர்களும் புலியாக மாறுவார்கள். நீங்கள் எங்களை ஓட்டிக் கொண்டு பந்தளம் புறப்படுங்கள். அங்கு உங்கள் சேவையை நிறைவு செய்யுங்கள்'' என்றான்.

எல்லா தேவர்களும் புலியாக மாறினர். இந்திர புலி மீது நம் குட்டிப்புலியான மணிகண்டன் ஏறி அமர்ந்தான்.

- தொடரும்

தி.செல்லப்பா

thichellappa@yahoo.com






      Dinamalar
      Follow us