sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சரணம் ஐயப்பா - 18

/

சரணம் ஐயப்பா - 18

சரணம் ஐயப்பா - 18

சரணம் ஐயப்பா - 18


ADDED : ஏப் 19, 2022 02:53 PM

Google News

ADDED : ஏப் 19, 2022 02:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாண்டியனின் நேர்மை

“என் ஆருயிர் துணைவரே! உங்கள் முகக்குறிப்பு நீங்கள் கோபப்படுவதைக் காட்டுகிறது. கோபம் கொள்ளும் அளவு ரகசியம் ஏதும் என்னிடம் இல்லை. நீங்களும், நானும் மனமொத்து வாழ்ந்ததன் விளைவு, இப்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன். ஆனால் என் வயிற்றில் வளர்வது சாதாரண குழந்தையல்ல. பந்தள நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கப் போகிற குழந்தை. நான் பந்தள ராஜாவின் மகள். இந்த உண்மையை ஆரம்பத்திலேயே உங்களிடம் சொல்லியிருந்தால், ராஜ விவகாரம் நமக்கு எதற்கு என்று நீங்கள் என்னை திருமணம் செய்ய மறுத்திருக்கக்கூடும். அதனால் தான் என்னை சாதாரணமானவளாக உங்களிடம் காட்டிக் கொண்டேன். எனது அன்றைய சூழல் அப்படி...அது மட்டுமல்ல. நான் என் தந்தையிடம் பத்திரமாக போய் சேர்ந்திருந்தாலும் கூட, அவர் என்னை ஏற்க மறுத்திருப்பார். காரணம் நான் கொள்ளையர்களால் கடத்தப்பட்டேன். என்னை அவர்கள் கெடுத்திருக்கக் கூடும் என்று அவர் நம்பியிருப்பார். கற்பிழந்த பெண்ணை அரண்மனையில் சேர்க்க மாட்டார்கள். இதனால் தான் நான் ராஜகுமாரி என்ற ரகசியத்தை உங்களிடம் மறைத்தேன். தவறிருந்தால் மன்னியுங்கள்” என்றார்.

அந்த இளைஞனுக்கு அவள் சொன்னது நியாயமென பட்டது. அவன் கோபம் தணிந்தான். அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான். சில காலம் கழித்து அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் கழுத்தில் மணி ஒன்றை இளைஞன் கட்டினான். இதனால் அவனுக்கு மணிகண்டன் என்ற பெயர் ஏற்பட்டது. கண்டம் என்றால் கழுத்து. கழுத்தில் மணி கட்டியவன் எனப் பொருள்.

ஐயப்பன் என்ற பெயர் பின்னாளில் ஏற்பட்டது. ஐயன் என்றால் முதல்வன். அப்பன் என்றால் குடும்பத்தில் மூத்தவர். முதல்வனுக்கெல்லாம் முதல்வன் என்பது இதன் பொருள்.

அந்தக் குழந்தைக்கு ஐந்து வயதானதும், யோகாசனம், வில்வித்தை, வாள் வித்தை ஆகியவற்றை அவன் கற்றுத் தந்தான். பந்தள ராஜகுமாரியான அவனது தாய், மணிகண்டனுக்கு கல்வி அறிவைக் கொடுத்தாள். தாய், தந்தையே அவனது முதல் குருவாயினர். புராண வரலாற்றின்படி மணிகண்டன் 12 வயதே மனிதனாக பூமியில் வாழ்ந்தான். இங்கே 16 வயது வரை பெற்றோரிடமே வளர்ந்தான்.

ஒருநாள் மகனை அழைத்த தந்தை,“ மணிகண்டா! உன்னிடம் ஒரு ரகசியம் சொல்கிறேன். நான் தவவாழ்வு வாழ்கிறவன். இதை விட்டு என்னால் விலக முடியாது. சந்தர்ப்பவசத்தால் நான் உன் தாயை திருமணம் செய்தேன். அவள் பந்தள ராஜகுமாரி என்ற விபரம் பின்னாளில் தான் எனக்கு தெரிய வந்தது. எனவே நீ பந்தளத்தை ஆட்சி செய்ய கடமைப்பட்டவன். நான் கேள்விப்பட்ட வரையில், உன் தாத்தா தலைமறைவாக இருக்கிறார். பந்தளத்தை பாண்டியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்து வந்த சிலரும் ஆக்கிரமித்துள்ளனர். அவர்களிடமிருந்து உன் தாய் நாடான பந்தளத்தை நீ மீட்க வேண்டும். நீ என்ன சிரமப்பட்டாவது உன் தாத்தாவை சந்தித்து விடு. அவரது பேரன் என்பதை புரிய வை. ஒருவேளை அவர் உன்னை ஏற்க மறுத்தால் இங்கேயே திரும்பி விடு. சென்று வா” என வழியனுப்பி வைத்தான்.

மணிகண்டனும் பந்தளம் சென்றான். பலர் மூலமாக தாத்தா இருக்குமிடத்தை அடைந்தான். அவனைப் பார்த்ததும் தன் மகளின் முகம் போல அந்த இளைஞனின் முகம் இருப்பதை தாத்தா புரிந்து கொண்டார். அவரிடம், “நான் உங்கள் மகள் வயிற்றுப் பேரன்” என நடந்த விபரத்தை எடுத்துச் சொன்னான். தாத்தா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

“இது உன் நாடு. இதை மீட்டெடுப்பது உன் பொறுப்பு. ஆனால், அது சாதாரண விஷயமல்ல. உதயணன் என்ற கொள்ளைக்காரனிடம் நாட்டின் ஒரு பகுதி சிக்கிக் கிடக்கிறது. இன்னும் சில வெளிநாட்டவர் இங்கே உலா வருகின்றனர். அவர்கள் படை பலம் மிக்கவர்கள். நீ முதலில் படை திரட்டு. அதன்பின் அவர்களுடன் மோது. அவர்களை விட பலமான படைபலம் என்று கிடைக்கிறது என நீ நம்புகிறாயோ, அன்று போர் தொடுத்தால் போதும்” என தன் அரசியல் ஞானத்தை பேரனுக்கு போதித்தார். தாத்தாவின் யோசனை சரியென்று மணிகண்டனுக்கு பட்டது.

முதலில் அவன் பாண்டிய நாட்டவரிடம் இருந்து தன் நாட்டை மீட்பது பற்றி யோசித்தான். பாண்டிய தேசத்துக்கு சென்று மன்னரை சந்தித்தான்.

“மன்னா! நான் பந்தள ராஜகுமாரன் மணிகண்டன். நீங்கள் எங்கள் நாட்டை என்ன காரணத்துக்காக சிறை பிடித்தீர்கள். ஒருவர் ஆளும் பூமியை இன்னொருவர் ஆக்கிரமிப்பது பாவம் என்பதை அறிய மாட்டீர்களா! இந்தப் பாவம் உங்களை சும்மா விடாது. நீங்கள் எங்கள் நாட்டை பிடித்தீர்கள். உங்களை பிடிக்க சோழன் வலை வீசிக் கொண்டிருக்கிறான். இப்படி தேசங்களை கைப்பற்றுவதால் என்ன லாபம் கண்டீர்கள். என் கேள்வி நியாயமென்றால் பதில் சொல்லுங்கள்” என்றான்.

தன் முன்னால் நின்ற மணிகண்டனின் பிரகாசமான வீரம் மிக்க முகம் பாண்டிய மன்னரை வெகுவாகக் கவர்ந்தது.

“இளைஞனே! உன் கேள்வி நியாயமானதே. உன் நாட்டுக்கு வந்த எங்கள் வணிகர்களுக்கு உனது பாட்டனாரான பந்தள ராஜா பாதுகாப்பளிக்கவில்லை. கொள்ளையர்களை அவர் கைது செய்யவில்லை. இதனால் எங்கள் வணிகப் பாதுகாப்புக்காக உதயணன் என்ற படைத்தலைவனை அங்கு அனுப்பினேன். அவன் போர் நடைமுறைகளுக்கு மாறாக, பெண்களுக்கு துன்பம் செய்ததும், பந்தள தேசத்துக்கு தானே தலைவனாக வேண்டும் என்ற வெறியுடன் அரண்மனையை சூறையாடியதும் பின்னால் தான் எனக்கு தெரிய வந்தது.

அப்போது மணிகண்டன் குறுக்கிட்டான்.

“அப்படியானால் அவனை நீங்கள் திருப்பி அழைத்திருக்க வேண்டும் அல்லது தண்டித்திருக்க வேண்டும். ஏன் அதைச் செய்யவில்லை” என்று கேட்டான்.

பாண்டிய மன்னன் அவனிடம், “உன் கேள்வி சரியானதே! ஆனால் முழு விபரத்தையும் கேள். பந்தள தேசத்துக்கு செல்லும் வழியில் பாண்டிய படை வீரர்கள் காவல் காக்க வேண்டும். அப்படியானால் தான் வணிகர்களைக் காப்பாற்ற முடியும் என்று பல வீரர்களை அங்கு அனுப்பச் சொல்லி தகவல் அனுப்பினான். அதை நம்பி நான் பெரும் படையை அனுப்பினேன். அவர்களை அவன் தன் பாதுகாவலர்களாக நியமித்துக் கொண்டு, இஞ்சிக்கோட்டை என்ற இடத்தில் முகாமிட்டுள்ளான். ஒரு சிற்றரசன் போல செயல்படுகிறான். பந்தளத்தின் ராஜா ஆவதே அவனது நோக்கம். இது ராஜதுரோகம் என்பதால் அவனை அரசியல் குற்றவாளியாக பாண்டிய நாடு அறிவித்துள்ளது. காட்டின் அடர்ந்த பகுதியில் அவன் மறைந்திருப்பதால் அவனைக் கைது செய்ய முடியவில்லை. நீ பந்தள இளவரசன் தானே! அந்தக் காட்டைப் பற்றி நன்றாக அறிவாய். அவனைக் கைது செய், அல்லது கொன்று விடு. என் படையை உன்னுடன் அனுப்புகிறேன்” என்றார்.

பாண்டிய மன்னனின் நேர்மையை மணிகண்டன் மனதுக்குள் பாராட்டினான். இருப்பினும் மன்னரிடம்,“ மன்னா! உதயணனைப் பிடிக்க உங்கள் படை எனக்கு தேவையில்லை. மேலும் அவர்களுக்கு அந்தக் காட்டைப் பற்றி என்ன தெரியும்! நான் பந்தள காட்டைப் பற்றி அறிந்த வீரர்களைத் திரட்டி, உதயணனைப் பிடிப்பேன் அல்லது அழிப்பேன். இது நிச்சயம் நடக்கும்” என சபதம் செய்தான்.

உடனடியாக நாடு திரும்பிய அவனுக்கு, பந்தள தேசத்தின் விடுதலையில் அக்கறை கொண்ட மூன்று வீரர்கள் அறிமுகமாயினர்.

- தொடரும்

தி.செல்லப்பா

thichellappa@yahoo.com






      Dinamalar
      Follow us